அயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தில் தான் ஓர் இளைஞனின் உடலை எடுப்பேன் என்பதை ஒரு குழந்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதனுடைய அறியாமையினால் உண்மை மாறிவிடப் போகிறதா? அவன் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அதனால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அதுபோலவே, நவீன கால அயோக்கியர்கள், “நான் மறுபிறவியை நம்புவதில்லை,” என்று கூறினால், அவர்களின் அறியாமை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அயோக்கியர்களும் பைத்தியக்காரர்களும் இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கலாம், ஆனால் உண்மை என்பது இயற்கையின் சட்டம் என்பதுஅப்படியேதான் இருக்கும்.

நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ, எத்தகைய குணத்தை வெளிப்படுத்துகிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல மறுபிறவியில் நீங்கள் உடலை ஏற்க வேண்டும். இந்த அயோக்கியர்கள் தங்களுடைய ஆன்மீக அறிவின்மைக்கு ஏற்றாற்போல வேறோர் உடலை ஏற்க வேண்டிவரும் என்பது வாஸ்தவமான உண்மை. அவர்கள் இதை நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம், அதனால் எதுவும் மாறப் போவதில்லை.

சீடர்: “நீங்கள் எங்களை தொழிற்சாலையைச் சார்ந்த நாகரிகத்திலிருந்து விலகி மறுபிறவிக்கு தயார் செய்வதற்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் விவசாயத்தையும் கிராமத்தையும் அடிப்படையாகக் கொண்ட நாகரிகம் எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. நாங்கள் தொழிற்சாலைக்குச் சென்று எட்டு மணிநேரம் வேலை செய்து வீட்டிற்குத் திரும்பி, வாழ்க்கையை அனுபவிக்கவே விரும்புகிறோம்,” என்று யாரேனும் ஆட்சேபம் தெரிவித்தால், அவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது?

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் எவ்வாறு வாழ்க்கையை அனுபவிக்கின்றோமோ, அதுபோல நீங்களும் வாழ்க்கையை அனுபவிக்கலாம். நாங்களும் உண்கிறோம், உறங்குகிறோம், இதர பணிகளையும் செய்கிறோம். ஆனால் நீங்கள் உங்களுடைய வாழ்வின் உண்மையான தொழிலான ஆன்மீக முன்னேற்றத்தினை மறக்கும் விதத்தில் வாழ்வை அனுபவிப்பீர்கள்இது புத்திசாலித்தனமா? நீங்கள் தற்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளீர்கள், உங்களுடைய மறுபிறவியை முன்னேற்றிக்கொள்வதே உங்களின் உண்மையான தொழில், உண்மையான ஆன்மீக ரூபத்தை மீண்டும் பெற்று ஆன்மீக உலகத்திற்குத் திரும்பிச் செல்வதே உங்களுடைய உண்மையான தொழிலாகும்.

எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நிச்சயம் மறுபிறவி உண்டு. உங்களுடைய தற்போதைய செயல்களின் காரணத்தினால் மறுபிறவியில் நீங்கள் ஒரு நாயின் உடலில் பிறவியெடுப்பதாக எடுத்துக்கொள்வோம். அது வெற்றிகரமானதா? நீங்கள் உண்மையான விஞ்ஞானத்தை அறிதல் மிக அவசியம்: நாய்களுடன் சங்கம்கொள்ளும் நிலைக்குப் பதிலாக கடவுளிடம் சங்கம்கொள்ளும் நிலையை எவ்வாறு அடைவது? அதுவே புத்திசாலிதனம். அதுவே வெற்றி.

சீடர்: ஆனால் இந்தப் பிறவியில் சிறந்த வாழ்க்கை என்பது எது? விளக்கெண்ணையைக் கொண்டு ஒளி பெறுவதா? பூமியைத் துளையிட்டு பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு ஒளி பெறுவதா? பெட்ரோலியம் உபயோகிப்பதில் என்ன தவறு? ஆமணக்கு விதைகளை வளர்ப்பது, பெட்ரோலியத்திற்காக துளையிடுவதைக்காட்டிலும் சிறந்ததா?

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்கு ஒளி தேவை. அந்த பணியினை எளிமையான முறையில் உடனடியாக முடித்து விடுவது சிறந்ததாகும். மீதமுள்ள நேரத்தினை மிச்சப்படுத்தி தன்னுணர்வினை வளர்த்து பக்குவமடைய முடியும். ஆத்மாவைப் பற்றியும் பரமாத்மாவுடனான உங்களுடைய உறவைப் பற்றியும் அப்போது அறிந்துகொள்ளலாம். இதுவே சீர்மிகு வாழ்க்கையாகும்.

இந்தக் குழந்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இவன் எப்போதும் விளையாடவே விரும்புகிறான், கல்வி கற்பதற்கோ பண்பாட்டை வளர்ப்பதற்கோ விரும்புவதில்லை. தன்னுடைய பொம்மைகளிலும் பந்து விளையாட்டிலும் சில முன்னேற்றங்களைக் காண்பதற்கு மட்டுமே அவன் விரும்புகிறான். இது புத்திசாலித்தனமா?

சீடர்: இல்லை. கல்வியின் பார்வையிலிருந்து பார்த்தால் அவன் தன்னுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளான், ஆனால் நேரத்தை வீணடிப்பதைப் பொருத்தவரையில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளதே?

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய குடும்பத்திற்கென்று சிறிய அளவில் சுமார் நான்கு ஏக்கர் நிலம் இருக்குமானால், அப்போது நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. வசந்த காலத்தில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்கள் விதைப்பதற்காகவும் அதன் பின்னர் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்கள் அறுவடைக்காகவும் செலவழித்தால் போதும். இத்தகைய எளிமையான வாழ்வைக் கைவிட்டு மின்சார ஏற்பாடுகளை அதிகரிப்பதே சிறந்தது என்று நீங்கள் நினைத்துக் கொண்டால், நாங்கள் அதனை ஆட்சேபிப்பதில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய உண்மையான ஆன்மீகத் தொழிலினைக் கைவிடுவது புத்திசாலித்தனமா?

சீடர்: இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே எங்களுடைய வாதம். இறையுணர்வு, கடவுள் உணர்வினை அடைவதே உங்களுடைய வாழ்வின் உண்மையான தொழில். நீங்கள் வெறுமனே உங்களுடைய பௌதிக நிலையை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் செலுத்தி, உண்மையான ஆன்மீகத் தொழிலை மறந்துவிடுவீர்களேயானால், அது புத்திசாலித்தனமானதா?

இந்த நவீன கால பெயரளவு புத்தியானது துஷ்க்ருதி என்று அறியப்படுகிறது. க்ருதி என்றால் வளமான தன்மை“, துஷ் என்றால்பாவகரமான அல்லது தீங்கிழைக்கக்கூடியஎன்று பொருள். நீங்கள் உங்களுடைய வளமான தன்மையை தீங்கிழைக்கக்கூடிய செயல்களுக்காக செலவிடுகிறீர்கள். உதாரணமாக, நவீன காலத்தில் மாமிசம் உண்பவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். காட்டில் வாழும் நாகரிகமற்ற மக்கள் ஏதேனும் உண்ண விரும்பினால், அவர்கள் ஏதேனும் ஒரு மிருகத்தின் மீது அம்பினை எய்துகின்றனர் அல்லது ஈட்டியை வீசுகின்றனர். மிருகம் மரணமடைகிறது, அவர்கள் அதன் மாமிசத்தினை உண்கின்றனர். இந்த நவீன கால மாமிசம் உண்ணும் மக்கள் ஈட்டியை எய்தி மிருகத்தை நேரடியாக கொல்வதற்குப் பதிலாக, கசாப்புக்கூடங்களை நிறுவி மிருகங்களைக் கொல்வதற்காக வசதியான இயந்திரங்களை உருவாக்கியுள்ளனர்.

நீங்கள் இதனை முன்னேற்றம் என்று நினைக்கலாம். “நாங்கள் தற்போது ஈட்டியை எய்துவதற்கு பதிலாக வசதியான இயந்திரங்களை உபயோகிக்கின்றோம். பழங்கால வழிமுறை அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் எங்களால் ஒரு மணி நேரத்தில் எண்ணிலடங்காத மிருகங்களைக் கொல்ல முடியும்.” இதுதான் உங்களுடைய முன்னேற்றமா?

மக்கள் எந்தளவிற்கு முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் மாறியுள்ளார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். கசாப்புக்கூடங்களை நிறுவுவதை அவர்கள் முன்னேற்றம் என்றும் நாகரிகத்தின் மைல்கல் என்றும் நினைக்கின்றனர். “நாங்கள் நாகரிகமற்றவர்களாக இருந்தபோது, சில மிருகங்களைக் கொன்று அவற்றின் பிண்டங்களை உண்டு வந்தோம். தற்போதும் நாங்கள் அதே விஷயத்தினைச் செய்கிறோம் அப்பாவி மிருகத்தைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணுதல் ஆயினும், கொலை செய்வதற்கான எங்களுடைய திறனை நாங்கள் வளர்த்துக் கொண்டுள்ளோம்.” இவையாவும் நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதனை உண்மையான நாகரிக வளர்ச்சி என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இங்கே நீங்கள் இந்த பண்ணையில் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் இதுவே உண்மையான நாகரிகம். பசுவைக் கொல்வதற்கு பதிலாக நீங்கள் அவளுடைய பாலைப் பருகுகிறீர்கள் இங்கே கொலை என்பது இல்லை. பாலிலிருந்து வெண்ணெய், தயிர், மோர், மற்றும் பலதரப்பட்ட சுவையான பதார்த்தங்களை உருவாக்குகிறீர்கள். இதுவே நாகரிகமாகும்.

ஆனால், கொலை செய்வது என்பது பாவகரமானதாகும். எந்தவொரு உயிர்வாழியையும் கொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை ஓர் எறும்பைக்கூட; ஏனெனில், உங்களால் அந்த உயிரினத்திற்கு மீண்டும் உயிரளிக்க இயலாது. எனவே, கொலை செய்வது இயற்கையின் சட்டத்திற்கு, கடவுளின் சட்டத்திற்கு எதிரானதாகும்.

சாஸ்திரங்களில் கடவுள் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார், “கொல்லுதல் என்பது என்னுடைய சட்டத்திற்கு எதிரானது. அப்பாவி மிருகங்களைக் கொலை செய்வது மிகவும் பாவகரமான செயல். மனிதர்களுக்கென்று வழங்கப்பட்டுள்ள வளமான தன்மையினை இந்த பாவகரமான செயலைச் செய்வதற்கு நீங்கள் உபயோகப்படுத்தினால், அப்போது மறுபிறவியில் நீங்கள் துன்பப்பட வேண்டும்.”

சீடர்: ஆனால் நவீன கால மக்கள் தங்களுடைய கசாப்புக்கூடங்களை பாவகரமானது என்று நம்புவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: “நாங்கள் நம்புகிறோம்…” நாங்கள் நம்புவதில்லை…” — இவையனைத்தும் அபத்தமான கூற்றுகள். கடவுளின் அடிப்படையான விதிகளை மீறினால், நீ ஓர் அயோக்கியன். அவ்வாறிருக்கையில் நீங்கள் நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் என்ன வேற்றுமை? எப்படிப் பார்த்தாலும் நீ ஓர் அயோக்கியனே.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment