அறிய இயலாதவரை அறிந்து கொள்ளுதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பணிவான முறையில் தன்னுணர்வு பெற்றவர்களிடமிருந்து பரம புருஷ பகவானின் புகழினைக் கேட்காத வரையில், யாராலும் அவரைப் புரிந்துகொள்ள இயலாது.

 

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

தேவர்களோ மஹா ரிஷிகளோகூட என்னுடைய வைபவங்களை அறிவதில்லை; ஏனெனில், எல்லா விதங்களிலும், தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நானே மூலமாவேன்.

(பகவத் கீதை 10.2)

அறிய முடியாத கிருஷ்ணர்

இங்கே பகவான் கிருஷ்ணர் யாரும் தன்னை அறிய முடியாது என்று கூறுகிறார். உயர் லோகங்களில் வாழும் தேவர்களுடைய அறிவு மனிதர்களின் அறிவைக் காட்டிலும் மேம்பட்டதாக இருந்தாலும், அவர்களாலும் கிருஷ்ணரை அறிய முடியாது. துருவ லோகத்திற்கு அருகில் வாழும் ஏழு மஹா ரிஷிகளும்கூட (மஹர்ஷய:) அவரை அறியாதவர்கள்.

தேவர்களும் ரிஷிகளும்கூட கிருஷ்ணரை ஏன் அறிவதில்லை? கிருஷ்ணர் விளக்குகிறார், அஹம் ஆதிர் ஹி தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஷ:, ஏனென்றால், கிருஷ்ணரே தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆதி மூலம். கிருஷ்ணர் எல்லாருக்கும் தந்தை, அவரே இந்த பிரபஞ்சத்தின் தோற்றுவாய். இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவெடுத்தது, பிரம்மா எவ்வாறு தோன்றினார், பிரம்மாவிலிருந்து ரிஷிகள் எவ்வாறு தோன்றினார்கள், மனித வர்க்கம் எவ்வாறு அதிகரித்தது என பல தகவல்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் மிகவும் அருமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன.

பகவான் கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆதிமூலம். வேதாந்த சூத்திரம் கூறுகிறது, ஜன்மாத்யஸ்ய யத:, “அனைத்தும் அவரிடமிருந்தே தோன்றுகின்றன.” இந்த கூற்று, பிரம்மஜோதிக்கும் பரமாத்மாவிற்கும் மூலமும் அவரே என்பதைக் கூறுகின்றது. அதே விஷயத்தினை கிருஷ்ணர் இங்கே ஸர்வஷ: என்னும் வார்த்தையின் மூலம் உறுதி செய்கின்றார், நானே எல்லாவற்றின் ஆதிமூலம்.” எனினும், பரம புருஷ பகவான் யாரும் அறிய இயலாத அளவிற்கு மிகவும் உயர்ந்தவராக உள்ளார்.

எவ்வாறு அறிவது?

அறிய முடியாத அவரை எவ்வாறு அறிந்துகொள்வது? தேவர்களாலும் மஹா ரிஷிகளாலும்கூட அறிய இயலாத நபரை நம்மால் அறிய முடியுமா? முடியும், பரம புருஷ பகவானே உங்களிடம் நேரடியாக தன்னைப் பற்றி வெளிப்படுத்தும்போது, அவரை உங்களால் அறிய இயலும். உங்களுடைய குறைபாடுகளுடைய புலன்களைப் பயன்படுத்தி அவரை அறிய முடியாது. அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை: நமது புலன்கள் குறைபாடுகள் உடையவை என்பதால், புலன்களின் சக்தியை நாம் செயற்கையாக அதிகரித்தாலும் சரி, பல கோடி வருடங்கள் கற்பனை செய்தாலும் சரி, நம்மால் அவரை அறிய முடியாது.

ஆனால், ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத:, பணிவான குணங்களுடன் நீங்கள் பகவானின் திருநாமங்களை உச்சரிக்கும்போது அவரை அறிய முடியும். ஜிஹ்வாதௌ என்ற சொல், பரமனை உணர்தல் நாவிலிருந்து தொடங்குகிறது என்பதைக் குறிக்கிறது. நாவின் செயல் உண்பதும் ஒலியெழுப்புவதும் ஆகும். எனவே, நாம் இந்த இரண்டு செயல்களில் நாவினை உபயோகிக்கின்றோம்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிப்பதிலும் கிருஷ்ண பிரசாதத்தை ஏற்பதிலும் நாவினை ஈடுபடுத்துகிறோம். உங்களுடைய நாவினை எதை வேண்டுமானாலும் சுவைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. கிருஷ்ண பிரசாதத்தை மட்டும் ஏற்று உங்களுடைய நாவினை நீங்கள் கட்டுப்படுத்தி, ஹரே கிருஷ்ண என்னும் ஆன்மீக ஒலியை எழுப்புவதில் நாவினை ஈடுபடுத்தினால், ஒருநாள் கிருஷ்ணர் உங்களுக்கு தன்னை வெளிப்படுத்துவார். நாவினை பணிவுடன் முழுமையாக பரம புருஷ பகவானின் தொண்டில் ஈடுபடுத்தும்போது, கிருஷ்ணரை உணர்தல் எளிதில் சாத்தியமாகிறது.

நாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்த முடியும். நாவைக் கட்டுப்படுத்தத் தவறினால், எந்த புலன்களையும் கட்டுப்படுத்த இயலாது. நாவானது ருசிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது, அது காண்பதையெல்லாம் சுவைக்க எண்ணுகிறது. ஆனால் உங்கள் நாவை எதை வேண்டுமானாலும் ருசிக்க அனுமதிக்கக் கூடாது. கிருஷ்ணர் மிகவும் கருணையான முறையில் நமக்கு பலவிதமான பிரசாதங்களை அளிக்கிறார். அதை ஏற்பதால், நமது விருப்பங்கள் பூர்த்தியடைவது மட்டுமின்றி, ஆன்மீக முன்னேற்றமும் அடைகிறோம்.

எங்கும் பயிற்சி செய்யலாம்

இந்த முறையை எங்களுடைய சங்கங்களில் (கோயில்களில்) மட்டும் பயிற்சி செய்ய வேண்டும் என்பது அவசியமல்ல, நீங்கள் இந்தக் கலையை உங்கள் இல்லங்களில்கூட பயிற்சி செய்யலாம். உங்களது இல்லத்தில் சுவையான காய்கறிகளைக் கொண்டு அருமையான பதார்த்தங்களை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யலாம். இது கடினமானதல்ல. தினந்தோறும் உணவு பதார்த்தங்களை சமைத்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும்போது நாங்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்கிறோம்,

நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மண ஹிதாய ச

ஜகத் திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:

இந்த வழிமுறை கடினமானதல்ல. அனைவரும் தங்களது உணவு பதார்த்தங்களை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து அதனை குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் சேர்ந்து உண்ணலாம். பிறகு, நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி கிருஷ்ணரின் திருவுருவப் படத்தின் அருகில் அமர்ந்து ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று கீர்த்தனம் செய்யலாம். இதுபோன்ற தூய்மையான வாழ்க்கையை உங்களால் வாழ இயலும். முயன்று பாருங்கள், பலனைப் பாருங்கள்.

கிருஷ்ணரை அறியும் இந்த கொள்கையை இல்லங்களில் வாழும் ஒவ்வொருவரும் பின்பற்றினால், இந்த முழு உலகமும் வைகுண்டமாக மாறும். வைகுண்டம் என்றால் கவலைகளே இல்லாத இடம் என்று பொருள். இப்போது உலகம் முழுவதும் கவலைகளால் சூழப்பட்டுள்ளது. நாம் அனைவரும் கவலைகளின்றி வாழ நினைக்கின்றோம், ஆனால் யாரும் அஃது எவ்வாறு என்பதை அறிவதில்லை. போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதால் கவலைகளிலிருந்து விடுபட முடியாது. போதையானது மயக்கத்தை உருவாக்குகிறது. சில நேரத்திற்கு சுய உணர்வை இழக்கச் செய்கிறது. இந்த முறை உங்களுக்கு உதவாது. கவலைகளிலிருந்து விடுபட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு சேவை செய்வதால் பூரண அறிவும் ஆனந்தமும் உடைய நித்திய வாழ்வு சாத்தியமாகிறது. அந்த சேவையை முதலில் நாவிலிருந்து தொடங்க வேண்டும்.

ஸ்ரீமத் பாகவதம் இதே கருத்தினை பல இடங்களில் விளக்குகிறது.

ஜ்ஞானே ப்ரயாஸம் உதபாஸ்ய நமந்த ஏவ

ஜீவந்தி ஸன்-முகரிதாம் பவதீய-வார்தாம்

ஸ்தானே ஸ்திதா: ஷ்ருதி-கதாம் தனு-வாங்-மனோபிர்

யே ப்ராயஸோ 'ஜித ஜிதோ 'ப்யஸி தைஸ் த்ரி-லோக்யாம்

இந்த ஸ்லோகத்தில் (10.14.3) பகவானை யாராலும் வெல்ல இயலாது என்று கூறப்படுகிறது. பகவானின் திருநாமங்களில் ஒன்று அஜித, அதாவது, யாராலும் வெல்ல இயலாதவர். இருந்தாலும், அந்த அஜிதர் இங்கே வெல்லப்படுகிறார். பகவான் அறியப்படவோ வெல்லப்படவோ இயலாதவராக இருப்பினும், அவரை உங்களால் வெல்ல முடியும், எப்படி?

மனக் கற்பனை வேண்டாம்

நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் இருந்து கொண்டே (ஸ்தானே ஸ்திதா) கிருஷ்ணரை வெல்லுதல் சாத்தியமாகும். ஆனால் சில கொள்கைகளை நீங்கள் முதலில் பின்பற்ற வேண்டும். ஜ்ஞானே ப்ரயாஸம் உதபாஸ்ய, கோடிக்கணக்கான புத்தகங்களிலிருந்து பெறப்பட்ட முட்டாள்தனமான மனக் கற்பனைகளை நீங்கள் கைவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் எழுதப்படுகின்றன, அவையனைத்தும் வீணே. ஆறு மாதங்களுக்கு பிறகு தூக்கி எறியப்படுகின்றன. எனவே, உங்களுடைய மனதில் பல இடங்களுக்கு திசைதிருப்பும் மனக் கற்பனையினை தேர்வு செய்யாதீர்கள்.

நமது மனமும் புலன்களும் வரம்பிற்கு உட்பட்டவை, இவற்றைக் கொண்டு பரம்பொருளை எவ்வாறு அறிய இயலும்? உங்களுடைய மனதின் திறனைவிட என்னுடைய மனதின் திறன் அதிகமாக இருக்கலாம், மற்றவருடைய திறன் என்னுடைய மனதின் கற்பனைத் திறனைவிட அதிகமாக இருக்கலாம், ஆனால் ஒருவருடைய மனதின் கற்பனை திறனையும் வைத்து பரம புருஷ பகவானை அறிய முடியாது. இங்கே பகவத் கீதையில் கிருஷ்ணர் அதனைத் தெளிவாகக் கூறுகின்றார், ந மே விது: ஸுர கணா, “தேவர்களும் ரிஷிகளும்கூட என்னை அறிய முடியாது.” மனக்கற்பனையால் தேவர்களும் ரிஷிகளும்கூட கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள இயலாது என்னும் பட்சத்தில், மனிதர்களான நம்மைப் பற்றி என்ன சொல்வது?

எனவே, பிரம்மதேவர் கூறுகின்றார், ஜ்ஞானே ப்ரயாஸம் உதபாஸ்ய, “மனக்கற்பனையின் ஆராய்ச்சி முறையை தூக்கி எறியுங்கள்.” மேலும், நமந்த ஏவ, “பணிவாக மாறுங்கள்.” உங்களுடைய புலன்கள் குறைபாடுகள் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பௌதிக இயற்கைக்கும் கூட கட்டுப்பட்டவர்கள், அப்படியிருப்பின் கடவுளைப் பற்றி என்ன சொல்வது. நாம் அனைவரும் பரம புருஷரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளோம் (மயாதக்க்ஷேன ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம்). யாருமே கடவுளுக்கு இணையானவராகவோ அல்லது உயர்ந்தவராகவோ இருக்க இயலாது. எனவே, அவரை அறிவதற்கான தகுதி, பணிவாக இருப்பதாகும். உங்கள் நேரத்தை மனக்கற்பனையில் செலவிடாதீர்கள், பணிவுடையவராக மாறுங்கள்.

நாம் சமைக்கும் உணவினை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக உண்டால், புலன்கள் கட்டுப்படுத்தப்படும்.

அதிகாரபூர்வமான நபரை அணுகுதல்

மேலும் இந்த ஸ்லோகம் கூறுகிறது, ஸன்-முகரிதம் பவதீய வார்தாம், “தன்னுணர்வு பெற்ற நபர்களிடமிருந்து பரம புருஷரின் புகழினைக் கேட்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.” அதிகாரபூர்வமற்ற நபர்களிடம் ஆன்மீக உபதேசங்களைக் கேட்பதற்காகச் செல்ல வேண்டாம். உங்களால் எவ்வாறு அதிகாரபூர்வமற்ற அல்லது அதிகாரபூர்வமான நபர்களை வேறுபடுத்தி அறிய முடியும்? இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. பகவான் கூறுகிறார், ஏவம் பரம்பரா ப்ராப்தம், அதிகாரத்தன்மை குரு-சீடப் பரம்பரையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அதிகாரத்தை அர்ஜுனனுக்கு வழங்கினார், அர்ஜுனன் கிருஷ்ணரை பரம புருஷராக ஏற்றவர். அர்ஜுனனின் முறையை நாமும் பின்பற்றினால், அர்ஜுனன் கிருஷ்ணரைப் புரிந்து கொண்டதுபோல அவரைப்ப›ுரிந்துகொள்ள நாமும் முயற்சித்தால், உண்மையான அதிகாரபூர்வமானவர் யார் என்பதை நம்மால் அறிய முடியும். இதில் கடினம் ஏதுமில்லை.

எனவே, நீங்கள் அந்த அதிகாரபூர்வமான நபரைக் கண்டறிய வேண்டும், அவ்வளவே. அவரைக் கண்டறிந்து பணிவான முறையில் அவரிடமிருந்து கேட்டறிய வேண்டும். அப்போது, ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத:, கிருஷ்ணர் உங்களுக்கு தன்னை வெளிப்படுத்த ஆரம்பிப்பார்.

கடவுள் எப்போதும் தன்னை வெளிப்படுத்தத் தயாராக உள்ளார். ஆனால் அவர் எப்போது வெளிப்படுத்துவார்? நீங்கள் பணிவாகவும் பக்தனாகவும் ஆகும்போது அவர் தன்னை வெளிப்படுத்துவார். நீங்கள் கிருஷ்ண உணர்வைப் பெற்று ஆன்மீக குருமார்கள் மற்றும் தூய பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். பிறகு அனைத்தையும் அறிவீர்கள். தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அறியப்பட முடியாதவராக கிருஷ்ணர் இருந்தாலும், அவர் உங்களால் உங்கள் வீட்டில் அறியப்படுவார். அவர் யாராலும் வெல்லப்பட இயலாதவராக இருப்பினும், இந்த முறையினை மேற்கொண்டால், அவரை நீங்கள் வெற்றிகொள்ளலாம். இதற்கு வேறு வழியே இல்லை.

கிருஷ்ண உணர்வின் வழிமுறை

கிருஷ்ண உணர்வின் இந்த வழிமுறையினைப் பின்பற்றினால், கிருஷ்ணரை சந்தேகமின்றி அறிய முடியும். உங்களை நாங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றச் சொல்லவில்லை, இந்த கொள்கைகளைப் பின்பற்றும்போது, நீங்கள் கடவுளை நிச்சயம் உணருவீர்கள். முறையாக உணவருந்தும்போது, நீங்கள் பலமும் திருப்தியும் பெறுவதை உங்களால் நேரடியாக உணர முடியும். நீங்கள் யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. அதுபோலவே, நீங்கள் சரியான ஆன்மீகப் பாதையினைப் பின்பற்றும்போது, உங்களால் முன்னேற்றத்தை நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும். கிருஷ்ணர் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தில் (9.2) கூறுகின்றார், ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸு ஸுகம், இந்த வழிமுறை எளிமையானதும் மகிழ்ச்சிகரமானதும் ஆகும்.

அஃது என்ன வழிமுறை? நாங்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை கீர்த்தனம் செய்கிறோம், இனிமையான இசைகளைக் கேட்கிறோம், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்கிறோம், பகவத் கீதையின் தத்துவங்களைப் படிக்கிறோம். இது கடினமானதா? அல்ல. பகவான் கிருஷ்ணராலும் வேத சாஸ்திரங்களாலும் பரிந்துரைக்கப்படுகின்ற குரு சீடப் பரம்பரையில் கொடுக்கப்படும் கிருஷ்ண உணர்வின் வழிமுறையை மட்டும் பின்பற்றுங்கள். அங்கீகரிக்கப்பட்ட மூலத்திலிருந்து அறிவைப் பெறுங்கள்.

அப்போது உங்களுடைய அனைத்து பாவங்களும் அழிந்து விடும். கிருஷ்ணரின் தொடர்பினால் உங்கள் வாழ்வை பயனுள்ளதாக மாற்றுங்கள். மிக்க நன்றி.
(தமிழாக்கம்: லவ-குஷ தாஸ்)

கிருஷ்ண உணர்வு கடினமானதல்ல. நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்யலாம், தூய்மையான வாழ்வை வாழ்ந்து பலனைப் பாருங்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives