ஆதிமூலத்தை அறிந்து கொள்ளுதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

தத்துவ உணர்வு கொண்ட மனதை உடையவன் எல்லா படைப்புகளுக்கும் ஆதி என்ன என்பதை அறிவதில் ஆர்வமுடையவனாக இருக்கிறான். இரவில் அவன் வானத்தைக் காணும்போது, இயற்கையாகவே, இந்த நட்சத்திரங்கள் யாவை, எங்கு அமைந்துள்ளன, அங்கு யார் வாழ்கின்றனர் போன்ற கேள்விகளை அவன் கேட்கின்றான். இவ்வெல்லா கேள்விகளும் மனிதர்களுக்கு மிகவும் இயற்கையானதே; ஏனெனில், அவன் மிருகங்களைக் காட்டிலும் உயர்ந்த உணர்வை வளர்த்துக் கொண்டுள்ளான். அத்தகு கேள்விகளை நேர்மையுடன் கேட்கும் நபர்களுக்கு ஸ்ரீமத் பாகவதம் பதிலளிக்கின்றது: எல்லா படைப்புகளுக்கும் பகவானே ஆதிமூலம், அவர் படைப்பாளி மட்டுமல்ல, இந்த பிரபஞ்ச தோற்றத்தைப் பராமரிப்பவரும் அவரே, அதனை அழிப்பவரும் அவரே. இவ்வெல்லா செயல்களுக்குப் பின்னால் அவருடைய விருப்பமே மூல காரணமாக அமைந்துள்ளது.

 

பலதரப்பட்ட நாஸ்திகர்கள் “படைப்பாளி” என்று ஒருவர் இருக்க முடியும் என்பதை நம்பாதவர்களாக உள்ளனர், ஆனால் இஃது அவர்களுடைய அறிவுப் பற்றாக்குறையையே காட்டுகிறது. ஏனெனில், முழுமுதற் கடவுளே அனைத்திற்கும் ஆதியாக உள்ளார். நாம் எதைக் காண நேரிட்டாலும், அது முழுமுதற் கடவுளிடமிருந்து தோன்றியதேயாகும். இது வேத இலக்கியத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது: யதோ வா இமானி பூதானி ஜாயந்தே. இமானி பூதானி, அதாவது, படைக்கப்பட்டுள்ளவை அனைத்திற்கும் ஆதிமூலம் ஒன்று உள்ளது.

அந்த மூலம் பிரம்மன் எனப்படுகிறது. வேதாந்த சூத்திரத்தின் முதல் சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது: அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, “எனவே, ஒருவன் பிரம்மன் அல்லது பரம்பொருளைப் பற்றி வினவ வேண்டும்.” பிரம்மன் என்றால் என்ன? இது இரண்டாவது சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது, ஜன்மாத் யஸ்ய யத:, எதிலிருந்து அனைத்தும் தோன்றியதோ அதுவே பரம்பொருள் (பிரம்மன்).”

 

அந்த பரம்பொருள், அனைத்திற்கும் உன்னதமான நபர் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் மேலும் விரிவாக விளக்கப்படுகிறார்: ஜன்மாத் யஸ்ய யதோ ன்வயாத் இதரதஷ் சார்தேஸ்வபிஜ்ஞ ஸ்வராட். எல்லாவற்றிற்கும் ஆதிமூலமாக இருக்கும் அவருடைய தகுதிகள் யாவை? ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, அபிஜ்ஞ, அவர் உணர்வுடையவர். முதல் தகுதி என்னவெனில் அவர் உணர்வுடையவர். ஆதிமூலம் என்பது உணர்வற்றதாக இருக்க முடியாது. ஏன்? ஏனெனில், நாம் அனைவரும் உணர்வுடைய நபர்கள்தானே.

உயிர்வாழிகளான நாம் முழுமுதற் கடவுளிடமிருந்து தோன்றியவர்களே. சில உயிர்வாழிகள் நகருகின்றன, சில உயிர்வாழிகள் நகர இயலாதவையாக உள்ளன. மரங்கள், மலைகள், குன்றுகள் இவையனைத்திற்கும் உயிர் உள்ளது, ஆனால் அவை நகருவதில்லை. மனிதர்கள், பூனைகள், நாய்கள், எறும்புகள் மற்றும் இதர உயிரினங்கள் நகரக் கூடியவையாக உள்ளன. ஆனால் நகருபவை அல்லது நகராதவை ஆகிய இரண்டுமே உணர்வுடையவை. எனவே, எல்லாப் படைப்பிற்கும் ஆதிமூலமாக இருக்கும் பரம்பொருள் உணர்வுடையவராக இல்லையெனில், உணர்வு என்பது எங்கிருந்து வந்திருக்க முடியும்? உணர்வானது ஜடப் பொருட்களின் கலவையினால் தோன்றியதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்றுவரை எந்த ஒரு விஞ்ஞானியும் வேதியியல் பொருட்களின் கலவையினால் உணர்வினை உருவாக்கி அதனை நிரூபிக்கவில்லை. மாறாக, எல்லாவற்றின் ஆதிமூலமாக இருப்பது உணர்வுடையது என்று ஸ்ரீமத் பாகவதம் மிகவும் அருமையாக விளக்குகின்றது. அவர் உணர்வுடையவர். பகவத் கீதையில், வேதாஹம் ஸமதீதானி வர்தமானானி சார்ஜுன, “கடந்த காலம் அனைத்தையும் நான் அறிவேன், நிகழ் காலத்தையும் நான் அறிவேன், மற்றும் வருங்காலத்தையும் நான் அறிவேன்,” என்று கிருஷ்ணர் கூறுவதை நாம் காண்கிறோம்.

 

இந்த அறிவின் அடிப்படையில் கிருஷ்ணர் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் கூறுகிறார், “நீயும் நானும் இங்கு குழுமியிருக்கக்கூடிய அனைவரும் கடந்த காலத்தில் தனித்தனி நபராக இருந்தோம், தற்போதும் தனித்தனி நபராக இருக்கிறோம், வருங்காலத்திலும் தனித்தனி நபராக இருப்போம்.”

படைப்பின் முதல் உயிரியான பிரம்மாகூட சுதந்திரமானவர் அல்ல, பிரம்மாவின் இதயத்தில் ஞானத்தை வழங்கியவர் கிருஷ்ணரே.

பகவான் இரண்டு வழிகளில் உணர்வுடையவராக உள்ளார்: (அ)ன்வயாத் இதரதஷ் ச, நேரடியாகவும் மறைமுகமாகவும். கடவுள் என்பவர் எல்லா சக்திகளும் கொண்ட பரம உணர்வு உடையவராவார். எனவே, அவர் நேரடி உணர்வுடனும் மறைமுக உணர்வுடனும் திகழ்கிறார். ஒரு சிக்கலான கட்டிடப் பணியின் தலைமை பொறியாளர் கட்டிடத்தின் எல்லா பகுதிகளிலும் நேரடியாக பங்குகொள்வதில்லை, ஆனால் அவர் கட்டிடத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கினையும் அறிந்துள்ளார்; ஏனெனில், அனைத்தும் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் நடைபெறுகிறது. அதுபோலவே, பிரபஞ்சப் படைப்பின் பரம கட்டிடக் கலைஞரான முழுமுதற் கடவுள் படைப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கினையும் அறிந்துள்ளார். அவர் சின்னஞ்சிறு தகவல்கள் அனைத்தையும் உணர்ந்தவராக உள்ளார்.

 

அடுத்த கேள்வி, அந்த உணர்வு அவருக்கு எங்கிருந்து வந்தது? நாம் அனைவரும் நம்முடைய உணர்வினை முழுமுதற் கடவுளான ஆதிமூலத்திடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் அந்த முழுமுதற் கடவுள் தன்னுடைய உணர்வினை எங்கிருந்து பெற்றார்? ஸ்ரீமத் பாகவதம் கூறுவது யாதெனில், அவர் ஸ்வராட். ஸ்வராட் என்றால், சுதந்திரமானவர் என்று பொருள். அவருடைய உணர்வானது மற்றவர்களின் உணர்வைச் சார்ந்தது அல்ல. வேறுவிதமாகக் கூறினால், கடவுள் எல்லா அறிவும் கொண்டவர். அறிவைப் பெறுவதற்காக நாம் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்கிறோம். ஆனால் கடவுள் எங்கிருந்து அறிவைப் பெறுகிறார் என்று நாம் கேட்டால், பாகவதம் பதிலளிக்கிறது: ஸ்வராட், அவர் தன்னுள் திருப்தியுடையவர், பூரண ஞானமுடையவர். இதுவே கடவுளுக்கும் இதர உயிர்வாழிகளுக்கும் இடையிலான வேற்றுமையாகும்.

 

மக்கள் வாதிடலாம்: “படைப்பில் முதன்முதலில் தோன்றிய பிரம்மாவைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அவர் எங்களுக்கு வேத அறிவைக் கொடுத்துள்ளார், அவரே முதன்முதலில் தோன்றியவர். அவர் ஸ்வராட், அல்லது சுதந்திரமானவராக இருக்க வேண்டும். கடவுள் மட்டும்தான் சுதந்திரமானவரா, முதலில் பிறந்த இந்த உயிர்வாழியும் சுதந்திரமானவர்தானே. அவர் சுதந்திரமானவராக இல்லாவிடில், அவரால் வேத ஞானத்தை எவ்வாறு வழங்கியிருக்க முடியும்?”

 

பதில் என்னவெனில், “இல்லை. தேனே ப்ரஹ்ம ஹ்ருதயா, பிரம்மதேவர் சுதந்திரமானவர் அல்ல; ஏனெனில், அவர் தன்னுடைய அறிவை முழுமுதற் கடவுளிடமிருந்து பெற்றுள்ளார். அஃது எவ்வாறு? அவர் முதலில் தோன்றிய உயிர்வாழியாக இருக்கும்போது, அவர் எவ்வாறு கடவுளிடமிருந்து அறிவைப் பெற்றார்? தேனே ப்ரஹ்ம ஹ்ருதயா, உங்களால் முழுமுதற் கடவுளை இதர வழிமுறைகளினால் புரிந்துகொள்ள முடியாது.

முழுமுதற் கடவுளை அவரது நித்திய இருப்பிடத்துடன் இணைந்து வணங்குவதே நமது குறிக்கோள்.

அந்த முழுமுதற் கடவுள், தாம்ன ஸ்வேன ஸதா. ஸதா என்றால் எப்பொழுதும் அல்லது நித்தியமாக என்று பொருள். தாம்ன ஸ்வேன என்றால் தனது சொந்த இருப்பிடத்தில் என்றும் பொருள்படுகிறது. தாம்ன ஸ்வேன ஸதா நிரஸ்த குஹகம். நிரஸ்த குஹகம் என்றால் அறியாமை இல்லாத இடம் என்று பொருள். இங்குள்ள ஒவ்வொன்றும் குஹக, அறியாமை நிறைந்தது. இங்குள்ளவை அனைத்தும், நிலம், நீர் போன்ற தற்காலிகமான பொருட்களால் நிரம்பியது. இவ்வுலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் பொம்மைகளைப் போன்றவை. சில சமயங்களில் பெரிய கடைகளில் ஒரு அருமையான பெண்ணின் பொம்மை உடையுடுத்திக் கொண்டு நின்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். அந்த பெண் குஹகம், ஒரு மாயையாகும். இதனை அறிந்தவர்கள், “ஓ இது வெறும் பொம்மைதான்,” என நினைப்பர். இதனை அறியாதவர்களோ அதனை அழகிய பெண்ணாக நினைப்பர். இதுவே அறிவுடன் இருக்கும் மனிதனுக்கும் அறியாமையில் இருக்கும் மனிதனுக்கும் உள்ள வேற்றுமையாகும்: அறியாமையில் இருப்பவன் இந்த ஜடமான பொம்மையினை ஏற்றுக்கொள்கிறான், அதாவது இந்த ஜடவுலகத்தினை முற்றிலும் உண்மையானதாக ஏற்றுக்கொள்கிறான். அதுவே பௌதிகவாதமாகும். அறிவு நிரம்பியவர்களோ, “இல்லை, இது வெறும் பொம்மை, இது மாயை, உண்மை இதிலிருந்து வேறுபட்டது,” என்று நினைக்கின்றனர். இருப்பினும், ஸதா நிரஸ்த குஹகம், பொம்மையின் அந்த மாயை பகவானின் உலகத்தில் இருப்பதில்லை. அங்கு பரம உண்மை மட்டுமே நிலைபெற்றுள்ளது, ஸத்யம் பரம் தீமஹி.

 

எனவே, முழுமுதற் கடவுளை அவரது நித்திய இருப்பிடத்துடன் இணைத்து நமஸ்கரிப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அருவவாதிகள் “அனைத்தும் கடவுள்” என்று எடுத்துக் கொண்டு பரம்பொருளை எந்த விதத்தில் வேண்டுமானாலும் அணுகலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அத்தகு கருத்து இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில் ஏற்கப்படுவதில்லை. இங்கே தெளிவாகக் கூறப்படுகிறது: ஸத்யம் பரம் தீமஹி, நித்தியமான முழுமுதற் கடவுளின் ஆன்மீகப் பகுதி வழிபடப்பட வேண்டும், தற்காலிகமான ஜடத் தோற்றம் அல்ல.

 

நம்முடைய உடல்களில்கூட ஆன்மீகப் பகுதி (ஆத்மா), பௌதிகப் பகுதி (ஜடவுடல்) என இரண்டு பகுதிகள் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன நாகரிகத்தைச் சார்ந்த மக்கள் உடலின் பௌதிகப் பகுதியின் மீது அதிக அக்கறை செலுத்துகின்றனர். அவர்களிடம் உடலின் ஆன்மீகப் பகுதியைப் பற்றிய தகவல் ஏதுமில்லை. ஆனால் உண்மையில் ஒருவன் உடலின் ஆன்மீகப் பகுதிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலின் பௌதிகப் பகுதி என்பது இரண்டாம் பட்சமே. நாம் நம்முடைய உடலை ஆன்மீகத் தன்னுணர்வைப் பெறுவதற்குப் பராமரிக்கலாம், ஆனால் உடற்தேவைகளின் மீது அதிக கவர்ச்சி கொண்டு ஆன்மீகத் தேவைகளை தியாகம் செய்துவிடக் கூடாது.

 

இதுவே நவீன நாகரிகத்தின் தோல்வியாகும்: அவர்களிடம் முறையான அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஏதுமில்லை, இதனால் அவர்கள் உடலின் ஆன்மீகப் பகுதியைப் பொருட்படுத்துவதில்லை. சில கனவான்களைச் சந்தித்து வாழ்வின் ஆன்மீகத் தேவைகளைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தவுடனேயே, அவர்கள் நினைக்கின்றனர், “ஓ ஸ்வாமிஜி, ஏதோ அபத்தமாக பேசுகிறார், நாம் இங்கிருந்து சென்றுவிடலாம்.” ஆனால் நீங்கள் அரசியல் மற்றும் இதர உலகாயத விஷயங்களைப் பேசினால் அவர்கள் மிகவும் ஆர்வமுடையவர்களாகின்றனர்.

 

யஸ்யாத்ம புத்தி: குணபே த்ரிதாதுகே. இந்த உடலின் உறவில், நாம் பல்வேறு உடற்தேவைகளை உருவாக்கியுள்ளோம். எனவே, பாகவதம் கூறுகிறது, தஸ்ய ப்ரமத நிதனம் பஷ்யன் அபி ந பஷ்யதி. ப்ரமத, மக்கள் பைத்தியமாக, பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர். அனைத்தும் அழிவு பெறுவதை அவர்கள் காணும்போதிலும், அவர்கள் அதைக் காணாமலேயே வாழ்கின்றனர். ஏன்? அவர்கள், ப்ரமத்த:, பைத்தியம் பிடித்தவர்கள். பௌதிகத்தில் மூழ்கியிருக்கும் இத்தகு மக்கள் அனைவருக்கும் பாகவதம் வழங்கும் பட்டம் என்னவெனில், ப்ரமத்த:, அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள்.

 

தஸ்ய ப்ரமத்த நிதனம் பஷ்யன் அபி ந பஷ்யதி. என்னுடைய தந்தையின் தந்தை மடிந்துள்ளார், என்னுடைய தந்தை மடிந்துள்ளார், நானும் மடியப் போகிறேன். அதுபோலவே, என்னுடைய மகனும் மடியப் போகிறான், என்னுடைய பேரனும் மடியப் போகிறான். நான் மீண்டும் இதே உடலில் திரும்பி வரப்போவதில்லை. இந்த உடல் அழிவுற்றவுடன், இது மீண்டும் வரப்போவதில்லை. இது கடலில் தோன்றும் குமிழிகளைப் போல நிரந்தரமாக அழிவுற்றுவிடுகிறது. இருப்பினும், மக்கள் இந்த உடலின் செயல்களில் ஆர்வமுடையவர்களாக உள்ளனர். எனவே, அவர்கள் அனைவரும் ப்ரமத்த: என்று வர்ணிக்கப்படுகின்றனர். ப்ர என்றால் விசேஷமான என்றும், மத்த: என்றால் பைத்தியம் என்றும் பொருள்படுகிறது, இவர்கள் அனைவரும் விசேஷ பைத்தியங்கள். எனவே, பஷ்யன் அபி ந பஷ்யதி, அவர்கள் காணும்போதிலும் உண்மையைக் காண்பதில்லை. அனைத்தும் அழியப்போகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டே உள்ளோம். கடந்த காலத்தில் மிகப்பெரிய பேரரசுகள்–எத்தனையோ நெப்போலியன்கள், எத்தனையோ சுபாஷ் சந்திர போஸ்கள், எத்தனையோ காந்திகள்–அனைவரும் வந்தனர், அழிந்தனர். எனவே, சுபாஷ் சந்திர போஸ் அல்லது காந்தி அல்லது நெப்போலியன் அல்லது ஹிட்லர் என மிகச்சிறந்த அரசியல்வாதியாக மாறுவதால் என்ன பயன்? இதை விடுத்து ஆன்மீக உணர்வில் ஈடுபட்டு வாழ்வின் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தேடுவோமாக.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment