கர்தம முனிவரின் துறவு

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், இருபத்துநான்காம் அத்தியாயம்

சென்ற இதழில் கர்தமரின் மகிழ்ச்சியான இல்வாழ்க்கைப் பற்றியும் தேவஹூதியின் வேண்டுகோளைப் பற்றியும் அறிந்தோம். கபிலதேவரின் அவதாரத்தையும் கர்தமர் துறவு மேற்கொள்வதையும் இப்போது காணலாம்.

கர்தமரின் அறிவுரைகள்

கர்தம முனிவர் தன் மனைவி தேவஹூதியிடம் அன்பும் இரக்கமும் கொண்டு கூறினார், “போற்றத் தகுந்த மனுவின் புதல்வியே! வருந்த வேண்டாம். மாசற்ற  பரம புருஷ பகவான் உனது கருப்பையில் விரைவில் வருவார். உனது புனிதமான விரதங்களால், பகவானின் ஆசி உனக்கு கிடைக்கும். அதனால் நீ உனது புலன்களைக் கட்டுப்படுத்தி, மதநெறிகளைக் கடைபிடித்து, தவம் மற்றும் தானங்களைச் செய்து, மிகுந்த நம்பிக்கையுடன் பகவானை வழிபட வேண்டும். அவர் நமது மகனாகத் தோன்றி நம்மை புகழ் பெறச் செய்வார். மேலும், உனக்கு ஆன்மீக அறிவை வழங்கி, உனது இதயத்திலிருந்து பயத்தையும் வருத்தத்தையும் போக்குவார்.”

ப்ரஜாபதிகளில் ஒருவரான கர்தம முனிவரை கணவராக அடைந்திருந்த தேவஹூதி மிகவும் உண்மையாகவும் மரியாதையாகவும் கணவரின் அறிவுரைகளைப் பின்பற்றி, எல்லோர் இதயத்திலும் வீற்றிருக்கும் பகவானை வழிபடத் துவங்கினாள்.

கபிலதேவர் அவதரித்தல்

பற்பல ஆண்டுகளுக்கு பிறகு, தேவஹூதியின் வழிபாட்டால் மகிழ்ந்த பரம புருஷ  பகவான், கர்தமரின் மூலமாக அவளிடமிருந்து தோன்றினார். அவர் பூமியில் அவதரித்தபொழுது தேவர்கள் வானில் இசைக்கருவிகளை இசைக்க, கந்தர்வர்கள் அவரது புகழ்பாட, அப்ஸரஸ்கள் பரவசமாக நடனமாடினர். பகவான் கபிலர் அவதரித்ததால், சித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள் பூமியின் மீது பூமாரி பொழிந்தனர்.

புனித சரஸ்வதி நதியால் சூழப்பட்ட கர்தமரின் ஆஸ்ரமத்திற்கு பிரம்மதேவர், மரீசி மற்றும் பிற முனிவர்களுடன் வருகை தந்தார். தேவஹூதியின் கர்ப்பத்தில் கபில தேவர் அவதரித்திருக்கும் விஷயத்தை, பகவானின் குண அவதாரமான பிரம்ம தேவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆதலால் மிக்க மகிழ்ச்சியடைந்த பிரம்மா தூய மனதுடன் பகவானை வழிபட்ட பிறகு அந்த அதிர்ஷ்டசாலிகளான தம்பதியிடம் பின்வருமாறு பேசினார்:

கபிலரின் பிறப்பிற்குப் பின்னர் கர்தமர் இல்லற வாழ்வினைத் துறந்து செல்லுதல்

பிரம்மதேவரின் அறிவுரை

பிரம்மதேவர் கர்தமரிடம் கூறினார், “அன்பு மகனான கர்தமரே! நீங்கள் என் அறிவுரைகளை எவ்வித வஞ்சகமும் இன்றி, தகுந்த மரியாதையுடன் முழுமையாக ஏற்றுக் கொண்டதன் மூலம் என்னை சரியான முறையில் திருப்தி செய்திருக்கிறீர்கள். மகன்கள் தந்தைக்கு இந்த அளவில் துல்லியமாக தொண்டு செய்ய வேண்டும்.ஒருவர் தன் தந்தை மற்றும் ஆன்மீக குருவின் கட்டளைகளை வாதாடாமல் நன்மதிப்புடன் “ஆம் ஐயா” என்று கூறிப் பணிந்து நடக்க வேண்டும்.

“உமது ஒன்பது புதல்விகளும் அழகிலும் கற்பிலும் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள், அப்பெண்களின் மனநிலை மற்றும் ரசனைக்கு ஏற்றபடி அவர்களை முதன்மை பெற்ற முனிவர்களுக்கு மணம் செய்வியுங்கள். அவர்களது சந்ததியினரால் உங்கள் புகழ் பரவும். கர்தமரே, பரம புருஷ பகவான் இப்பொழுது அவரது அந்தரங்க சக்தியால் கபிலதேவராக உங்கள் மனைவியின் கர்ப்பத்தில் அவதரித்துள்ளார். அவரது கண்கள் தாமரை இதழ்கள் போன்று எழிலாக விளங்கும். அவரது கேசம் பொன்வண்ணத்தில் மின்னும். அவரது திருப்பாதங்களில் தாமரை மலரின் அடையாளம் இருக்கும்.

“அவர் போதிக்கும் ஸாங்கிய தத்துவத்தைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் ஜடவுலகில் ஆழ்ந்து வேரூண்டிருக்கும் ஆசைகளிலிருந்து விடுபட முடியும். கற்றறிந்த ஆச்சாரியர்கள் அவரையும் அவரது தத்துவத் தையும் போற்றுவர். மனுவின் மகளே தேவஹூதி! மகிமை மிக்க உன் மகனது செயல்களால் உனது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.”

புதல்விகளின் திருமணம்

இவ்வாறு பேசிய பின் பிரம்மதேவர் நைஷ்டிக பிரம்மச்சாரிகளான நான்கு குமாரர்கள் மற்றும் நாரதருடன் தமது இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றார். அதன்பின் கர்தம முனிவர், பிரம்மதேவரின் கட்டளைப்படியே தமது ஒன்பது புதல்விகளையும் சிறந்த முனிவர்களுக்கு மணம் செய்து வைத்தார்.

அதன் விவரம் பின்வருவமாறு:

மரீசி முனிவருக்கு கலாவையும், அத்ரிக்கு அனுசூயாவையும், அங்கிரருக்கு ஸ்ரத்தாவையும், புலஸ்தியருக்கு ஹவிர்பூவையும், புலஹருக்கு கதியையும், கிரதுவிற்கு கிரியாவையும், பிருகுவிற்கு கியாதியையும், வஸிஷ்டருக்கு அருந்ததியையும், அதர்வாவிற்கு சாந்தியையும் மணம் முடித்து வைத்தார்.

அதன்பின் ஒன்பது முனிவர்களும் தத்தம் மனைவியருடன் மகிழ்ச்சியுடன் தங்களது ஆஸ்ரமங்களுக்கு திரும்பினர்.

கர்தமரின் வழிபாடு

அதன்பின், கபிலதேவர் தேவஹூதியின் திருவயிற்றிலிருந்து அவதரித்தார். அவரைத் தனியான இடத்தில் அணுகிய கர்தமர் தம் வணக்கங்களை தெரிவித்து பின்வருமாறு கூறினார், “கட்டுண்ட ஆத்மாக்களை கரையேற்ற தாங்கள் இப்பூமிக்கு வந்தமையால் தேவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். யோகிகள் தங்கள் பாத கமலங்களை தரிசிப்பதற்காக பற்பல கடினமான தவங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் பக்தர்களின் புகழை எப்போதும் அதிகரிப்பதற்காக எங்கள் குறைகளைப் பொருட்படுத்தாமல் பக்தவத்ஸலரான தாங்கள் கருணையோடு இங்கு அவதரித்துள்ளீர். (பகவான் ஒருபோதும் ஞான வத்ஸலர் அல்லது யோகி வத்ஸலர் என வர்ணிக்கப்படுவதில்லை.)

“தங்களுடைய உருவம் பௌதிகமானதல்ல. பக்தர்களை மகிழ்விப்பதற்காக தாங்கள் தங்களுடைய நித்தியமான, திவ்யமான எண்ணற்ற அற்புத வடிவங்களில் அவதரிக்கிறீர்கள். உண்மையில் பூரண சத்தியத்தை தேடுபவர்கள் தங்களது தாமரைத் திருவடிகளை சரணடைய வேண்டும். தாங்கள் பூரண சுதந்திரமான சக்தி படைத்தவரும் உன்னதமானவரும், பரம புருஷரும், ஜடத் தோற்றத்தின் மூலமும், உன்னதமானவரும் ஆவீர். நீங்களே நித்தியமான காலம், அனைத்தையும் அழிப்பவர், அண்டசராசரங்களை பரிபாலிப்பவர், ஜட பிரபஞ்ச அழிவிற்குப் பிறகு அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பவரும் ஆவீர். செல்வம், புகழ், அழகு, அறிவு, வீரம், துறவு எனும் ஆறு ஐஸ்வர்யங்களை உடைய பகவானாகிய தங்களிடம் நான் சரணடைகிறேன்.

“தங்களை என் புதல்வனாகப் பெற்றதால் எனது இல்லறக் கடமைகளை நிறைவேற்றிவிட்டதாக உணர்கிறேன். தங்கள் கருணையால் எனது விருப்பங்கள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன. இப்போது, தங்கள் அனுமதியுடன் இல்லற வாழ்வினைத் துறந்து தங்களை மனதில் இடையறாது நினைத்துக் கொண்டே பல இடங்களுக்கு பிரயாணம் செய்து தங்கள் புகழைப் பரப்பும் துறவற வாழ்வை ஏற்க விரும்புகிறேன்.”

கபிலரின் ஆசி

கர்தம முனிவரின் வழிபாட்டையும் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்ட பகவான் கபிலதேவர் கூறினார், நேரடியாகவோ புனித நூல்களின் வாயிலாகவோ நான் கூறும் வார்த்தைகள் அதிகாரம் வாய்ந்தவை ஆகும். உம்மிடம் நான் மகனாகப் பிறப்பேன் என்று நான் முன்பு கூறியதை இப்போது நிறைவேற்றியுள்ளேன். ஸாங்கிய தத்துவமானது தன்னை உணர்தலுக்கான சிறந்த வழியாகும். அது புரிந்துகொள்ள கடினமானது. காலப்போக்கில் மறைந்தும் போயிற்று. அத்தத்துவத்தை எனது அன்னைக்கு உபதேசித்து மண்ணுலகின் எல்லா அச்சங்களிலிருந்தும் அவளையும் அதனைப் பின்பற்றும் அனைவரையும் விடுவிப்பேன்.

“நீங்கள் விண்ணப்பித்தபடி துறவறம் மேற்கொண்டு என்னை வழிபட்டு, எல்லா உயிர்களின் இதயத்திலும் பரமாத்மாவான என்னை உணர்ந்து நித்தியமான எனது இருப்பிடத்தை அடைவீர்கள்.”

கர்தமரின் பக்குவநிலை

இவ்வாறு கபிலதேவரின் ஆசியைப் பெற்ற கர்தம முனிவர், அவரைச் சுற்றி வந்து வணங்கிய பின் அமைதியான நல்ல மனோநிலையுடன் உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் தன் மனதை முழுவதுமாக பகவான் மீது ஒருமுகப்படுத்துவதற்காக மௌன விரதத்தை மேற்கொண்டு, ஓரிடத்தில் தங்காமல், சமைத்த உணவை உண்ணாமல், பற்பல இடங்களுக்கு பிரயாணம் செய்தார்.

பகவானின் நாமம், ரூபம், குணங்கள், லீலைகள் போன்றவற்றை இடையறாது சிந்தித்தவாறு கர்தம முனிவர் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டார். இவ்வாறு படிப்படியாக பொய் அஹங்காரம், உலகப் பற்றுதல்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டார். எல்லா உயிர்வாழிகளின் இதயங்களிலும் பரம புருஷ பகவான் இருப்பதை அவரால் காண முடிந்தது. எல்லாவித விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, எல்லா உயிர்களையும் சமநோக்கில் பாவித்து பக்தியின் பக்குவநிலையை அடைந்த கர்தமர் பகவானின் திருநாட்டிற்கு திரும்பிச் சென்றார்.

இனிவரும் இதழ்களில் கபிலதேவரின் உபதேசங்களைக் காணவிருக்கிறோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives