கல்லின் சுமையை இறக்கி வைக்கலாமே?

வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

இன்றைய சமுதாயத்தில் நாம் நம்முடைய பிரச்சனைக்கான காரணம் தெரியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிரச்சனை என்ன என்பதும் அதற்கான தீர்வும் இங்கே ஒரு கதையின் வடிவில் விளக்கப்படுகிறது. கதையினை கவனமாகப் படியுங்கள்.

ஆற்றங்கரையில் இரு கிராமங்கள்

ஒரு பெரிய ஆற்றின் இரு கரைகளிலும் இரு கிராமங்கள் அமைந்திருந்தன. இரண்டு கிராமத்தினரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். அதாவது, கரையின் ஒரு பகுதியில் ஒரு பிரிவினரும், கரையின் மற்றொரு பகுதியில் வேறு பிரிவினரும் வாழ்ந்து வந்தனர். இடது கரையில் வாழ்ந்த மக்கள் எப்பொழுதும் தங்களுடைய முதுகில் பெரிய கருங்கற்களைத் தூக்கியபடியே இருந்தனர். அவ்வாறு தூக்குவதற்கு அவர்களுக்கு எந்த தேவையும் இருக்கவில்லை, எந்த இலாபமும் இல்லை, யாரும் அவர்களுக்கு அதுபோன்ற தண்டனையை விதிக்கவில்லை; எனினும், அதுவே அவர்களுடைய வழக்கமாக இருந்து வந்தது. அவர்களில் சிலர் பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிச் செல்வது வழக்கம். வேறு சிலரோ தமது சக்திக்கு தகுந்தாற்போல் சுமைகளை தூக்கிச் செல்வர்.

கற்களை தூக்கிப் பழகிய அம்மக்கள் கற்களைத் தூக்குவது ஓர் அவசியமற்ற சுமை என்பதை உணரவே இல்லை. அவ்வாறு கற்களைத் தூக்குவது தங்களது கடமை என்று கூறி, பெரிய கற்களைத் தூக்குபவர்களுக்கு அங்கீகாரமும் வழங்கி வந்தனர். கற்களின் சுமைகளைத் தூக்கிச் செல்வதால் எந்த பலனும் இல்லை என்று சிலருக்கு தெரிந்தபோதிலும், “எல்லாரும் தூக்குகிறார்களேஎன்ற எண்ணத்தினால், அவர்களும் கல்லின் சுமையைத் தூக்கிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

வலது கரையில் வசித்த கிராம மக்கள்

அந்த ஆற்றின் வலதுகரையில் வசித்தவர்கள் இடதுகரையில் வசித்தவர்களிடமிருந்து மாறுபட்டு காணப்பட்டனர். அவர்கள் யாரும் கற்களின் சுமைகளை சுமக்கவில்லை, அவர்களிடம் எந்த பாரமும் இல்லை. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான முறையில் ஆடிப்பாடி ஆனந்தமாக வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவர்கள் இடதுகரையில் வசிப்பவர்களைப் பார்த்து, “ஏன் இப்படி கற்களை தூக்கிச் சிரமப்படுகிறீர்கள்? இதனால் எந்தப் பலனையும் நீங்கள் அடையப் போவதில்லை. இந்தப் பக்கம் வந்து எங்களுடன் ஆனந்தமாக வாழலாம், வாருங்கள்,” என்று அவ்வப்போது அழைப்பர்; ஆயினும், இடதுகரையில் வசித்தவர்கள் அதைப் பற்றி சற்றும் பொருட் படுத்தாமல் தங்களுடைய பாரத்தை வழக்கம்போல் சுமந்து செல்வதில் கவனம் செலுத்தி வந்தனர்.

ஏன் சுமக்கிறோம், எதற்காக சுமக்கிறோம், சுமப்பதன் பயன் என்ன என்பதை அறியாமல், எல்லாரும் சுமக்கிறார்கள் என்பதற்காகவும் சுமக்காவிட்டால் ஏளனம் செய்வர் என்பதற்காகவும் அனைவரும் கற்களைச் சுமக்கின்றனர்.

வலது கரைக்குச் செல்ல சிலர் முயற்சி செய்தல்

வலதுகரையில் இருப்பவர்களின் தொடர்ந்த அறிவுரைகளால், கற்களை சுமக்கும் இடதுகரையில் வசித்த சில புத்திசாலி நபர்கள், “நாம் ஏன் இவ்வாறு சுமைகளைத் தூக்கிக் கொண்டு இருக்கிறோம்? அந்த கரையில் உள்ள நபர்கள் எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றார்கள். நாமும் அந்த கரையை நோக்கிச் செல்லலாம்என்று எண்ணினர். அவர்கள் மறுகரையை அடைய முயற்சி செய்தபோது, அவர்களுடன் இருப்பவர்கள் அவர்களை நோக்கி கூறினர், “நீங்கள் என்ன காரியம் செய்யத் துணிகிறீர்கள்? உங்களுடைய அம்மா, அப்பா, தாத்தா, மூதாதையர்கள் மற்றும் வம்சத்திலுள்ள அனைவரும் இந்த கற்களை சுமந்தபடியே வாழ்ந்தனர், இதுவே நமது ஊர் வழக்கம். நீங்கள் இங்கிருந்து மறுகரைக்குச் செல்லக் கூடாது. நம்முடைய வம்சத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவதே உங்களுக்கு புகழைச் சேர்க்கும்.” இவ்வாறு தங்களுடைய பரம்பரையின் பெருமைகளைக் கூறி இடதுகரையில் வாழ்ந்தவர்கள் மற்றவர்களையும் வலதுகரைக்குச் செல்ல விடாமல் தடுத்து விடுவர். அதனால், வலதுகரைக்குச் செல்ல முயற்சி செய்தவர்களும் அந்த அறிவுரைகளுக்கு செவி சாய்த்து, மீண்டும் வழக்கம்போல கற்களின் சுமைகளுடன் வாழ்ந்து வந்தனர்.

கதையின் தத்துவம்

மேற்கூறிய உருவகக் கதையின் உண்மையான பொருள்:

கல்லின் சுமை நமது பௌதிக ஆசைகள்.

இடதுகரையில் வசிப்பவர்கள் ஆசைகள் என்னும் (சூட்சும) பாரத்தை சுமந்து செல்லும் ஜடவுலக மக்கள்.

வலதுகரையில் வசிப்பவர்கள் பௌதிக ஆசைகள் ஏதுமின்றி, இந்த உலகம் தற்காலிகமானது என்றும் துன்பம் நிறைந்தது என்றும் தெரிந்து கொண்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றி ஆனந்தமாக பக்தித் தொண்டினைப் பயிற்சி செய்யும் பக்தர்கள்.

வலதுகரைக்குச் செல்ல விரும்புவோர் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்ய விரும்பும் சராசரி மக்கள்.

அவர்களைத் தடுப்பவர்கள் ஜடவுலக வாழ்விலே முற்றிலும் மூழ்கிய உறவினர்கள்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் தங்களுடைய கல்லின் சுமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை தாங்களே மதிப்பிட்டுக்கொள்ளலாம். நாம் ஒவ்வொருவரும் பல்வேறு ஆசைகள் என்னும் சுமையினைத் தூக்கியபடியே வாழ்கிறோம். இந்த சுமைகளுடன் வாழ்வதே வாழ்க்கை என்று நம்பி வாழ்கிறோம். இந்த கற்களின் சுமையினால் எந்த பயனும் இல்லை என்றபோதும், இதனை இறக்கி வைக்க நாம் தயாராக இல்லை.

ஆனால், இந்த கல்லின் சுமையை இறக்கி வைத்துப் பாருங்கள். நீங்கள் மிகவும் இலகுவாக உணர்வீர்கள். அப்பொழுது நாம் செய்யக்கூடிய பக்தித் தொண்டானது மிகவும் உன்னதமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.

கிருஷ்ண பக்தியில் மகிழ்ச்சியுடன் இருப்பதே எல்லா ஜீவன்களின் உண்மையான நிலையாகும்.

பாரம் குறையுமா?

நாம் சுமக்கும் கல்லின் பாரத்தைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், இந்த பௌதிக ஆசைகள் என்றும் முடிவடைவதாகத் தோன்றவில்லை. கல்லின் பாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளதை நாம் கண்கூடாகக் காண முடியும். நம்முடைய மனமானது கல்லின் பாரத்தை அதிகரிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றதாக உள்ளது. “நீ அதை அடைந்தால் மகிழ்ச்சியடைவாய், இதை அடைந்தால் மகிழ்ச்சியடைவாய், புகழ் பெற்றால் மகிழ்ச்சியடைவாய், பணம் பெற்றால் மகிழ்ச்சியடைவாய், சமுதாயத்தில் உயர்ந்த நபராக மாறினால் மகிழ்ச்சியடைவாய்,” என பல திட்டங்களை (அதாவது, கல்லின் பாரத்தை எவ்வாறு அதிகரிப்பது என்னும் திட்டங்களை) நம்முடைய மனம் எப்போதும் தீட்டிக் கொண்டிருக்கும்.ஆனால் மனதினை நாம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் கல்லின் பாரம் பெருமளவில் குறைந்து காணப்படும். (மனதை நிலைநிறுத்துவதற்கு ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை பயிற்சி செய்ய வேண்டும்.)

பெரும்பாலான மக்களின் நிலை

இன்றைய சமுதாயத்திலுள்ள பெரும்பாலான மக்கள் தாங்கள் சுமக்கும் பாரத்தைப் பற்றி ஏதுமறியா வண்ணம் மாயையானது அவர்களை நன்றாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் தங்களுடைய பாரத்தைதான் இந்த அளவிற்கு துன்பப்படுகின்றோம் என்பதைஅறியாத அளவிற்கு வாழ்ந்து வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. நம்முடைய உண்மையான ஸ்வரூபம் இதுபோன்று கற்களை சுமப்பதல்ல. மாறாக, நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஆன்மீக வாசஸ்தலத்தில் ஆனந்தமாக இருக்கக்கூடியவர்கள். அந்த உண்மையை மறந்த நாம் இங்கு ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு இருக்கின்றோம்.

கட்டுண்ட ஜீவன்களை விடுவிப்பதற்காக தோன்றிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நித்யானந்த பிரபு.

கல்லின் சுமையை இறக்கி வைக்கலாமே

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) இதுபோன்று கல்லின் பாரத்தைச் சுமக்கும் நபர்கள் தங்களுடைய சுமையை இறக்கி வைக்க உதவுகின்றது. மறுகரையில் வசிப்பவர்கள் ஏன் ஆனந்தமாக இருக்கின்றனர்? அவர்கள் எப்போதும் பகவானின் நாமத்தை ஆடிப்பாடி அவருடைய சரித்திரத்தை விவாதிப்பதில் ஆனந்தமடைகின்றனர். இந்த இயக்கத்தை ஆரம்பித்த ஸ்ரீல பிரபுபாதர் உலகம் முழுவதிலும் உள்ள கட்டுண்ட ஜீவன்களை கல் பாரம் சுமக்கும் தொழிலிலிருந்து விடுதலையளித்தார் என்றால் அது மிகையாகாது.

இஸ்கான் என்று அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமானது மக்களிடையே பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியினை பிரச்சாரம் செய்து வருகின்றது. ஸ்ரீல பிரபுபாதரைப் பின்பற்றி அவருடைய சீடர்களும் அதனை சீரிய முறையில் நடத்தி வருகின்றனர். பௌதிக ஆசைகளின் சுமையினை உணரும் புத்திசாலியான நபர்கள், அச்சுமையினை இறக்கிவிட்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாட்டில் ஈடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை அடைவதற்கு இஸ்கான் உதவுகிறது.

மகிழ்ச்சியாக இருப்பதே நமது பணி

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (15.7), அனைத்து ஜீவராசிகளும் தன்னுடைய அம்சம் என்று கூறுகிறார். எனவே, பகவானின் அம்சங்களான ஜீவன்களும் பகவானைப் போன்றே ஆனந்தமாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் பகவானின் மீதான சிறிய பொறாமையினாலும் தனியாக அனுபவிப்பதற்கான விருப்பத்தினாலும், நாம் நினைவிற்கெட்டாத காலம்தொட்டு இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து கொண்டுள்ளோம்.

இருப்பினும், பகவான் கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருந்து, நம்முடைய எல்லா செயல்களுக்கும் சாட்சியாக இருந்து வருகிறார். கல் சுமக்கும் பணியினைக் கைவிட்டு, பகவத் பக்தியில் ஈடுபட நாம் விரும்பினால், நிச்சயம் பரமாத்மா நமக்கு உதவி செய்வார். “ஏன் கல்லை சுமக்க மறுக்கிறாய்?” என்று பலரும் உங்களைச் சாடலாம், கிண்டல் செய்யலாம். “சுமப்பதே நமது பாரம்பரியம்,” என்று வாதிடலாம். அவர்களுடைய வாதங்களைக் கேட்டு, மீண்டும் கற்களைச் சுமப்பதற்கு இசைந்து விடாதீர்கள். புத்தியுடன் நன்கு யோசித்து, கற்களைச் சுமப்பது நமது பணியல்ல என்றும் மகிழ்ச்சியாக இருப்பதே நமது பணி என்றும் உணர்ந்து அதன்படி செயல்படுங்கள்.

மகிழ்ச்சியான வாழ்விற்கு வழி

நம்முடைய கல் சுமக்கும் தொழிலை உடனடியாக விட்டு விடுவோம். ஒரு சிலருக்கு இதனை உடனடியாக கைவிட மனதில் தைரியம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான ஆனந்தம் வேண்டும் என்று நினைக்கக்கூடிய அனைத்து நபர்களும் கண்டிப்பாக இந்த கல்லின் சுமையை இறக்கி வைக்க வேண்டும். உண்மையில், இங்கு நாம் செய்ய வேண்டியது மிகவும் சுலபம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மைப் போன்ற கட்டுண்ட ஜீவன்களை விடுவிப்பதற்காக சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு வங்காளத்திலுள்ள நவத்வீபம் என்ற இடத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றி, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை பிரச்சாரம் செய்து, உண்மையான மகிழ்ச்சியினை வளர்க்கும் வழிமுறையை நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை அடிப்படையாகக் கொண்டு, இஸ்கான் இயக்கம் உலக மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றது.

இந்த இயக்கத்தில் ஜாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடும் கிடையாது. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: உடனடியாக உங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோயிலுக்குச் செல்லுங்கள் (முகவரிகள் கடைசி பக்கத்தில் உள்ளன), அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள், தினசரி ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்யுங்கள், பகவத் கீதை உண்மையுருவில் உட்பட ஸ்ரீல பிரபுபாதரால் வழங்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களை படித்து தன்னுணர்வு பாதையை அடையுங்கள். இதற்காக நாங்கள் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கல்லின் பாரத்தை இறக்கி வைப்போம்! உண்மையான ஆனந்தத்தை அடைவோம்!!

பின்குறிப்பு: இக்கட்டுரை தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவினைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

2016-10-28T00:42:59+00:00June, 2016|தத்துவம்|1 Comment

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

One Comment

  1. venkatesan August 5, 2016 at 1:44 pm - Reply

    இது பக்தி விகாஸ ஸ்வாமி உபந்யாஸமாகும்

Leave A Comment