கிருஷ்ண உணர்வில் உறுதியடைதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தவத்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பற்றுதல், துறவு ஆகிய இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்ட உன்னதமான நிலையினை கிருஷ்ண பக்தர்கள் அடைகின்றனர் என்பது குறித்த ஸ்ரீல பிரபுபாதரின் உரை.­­

புலனின்பமும் துறவும்

ஒருவன் பௌதிக செல்வத்தின் மிகவுயர்ந்த நிலையை அடையும்போது, துறவிற்கான மனோபாவம் இயற்கையானதாகும். பௌதிக உலகில் இரண்டு விதமான மனோபாவங்கள் உள்ளன–போக (புலனின்பம்), மற்றும் த்யாக (பௌதிக உலகைத் துறத்தல்). இருப்பினும், வழிகாட்டுதல் இல்லாவிடில், துறவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஒருவரால் அறிய இயலாது. ஒருவன் முதலில் இன்பமடைய விரும்புகிறான்; இன்பத்தில் அவன் விரக்தியடையும்போது, அவன் அதனை துறக்க முயல்கிறான். மீண்டும், துறவில் களைப்படையும்போது, அவன் அனுபவிக்க விரும்புகிறான்; சுவர் கடிகாரத்தின் ஊசலைப் போல அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்கிறான். இவ்வாறாக, புலனின்பத்தின் தளத்திற்கும் துறவின் தளத்திற்கும் இடையே நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.

பலனை எதிர்பார்த்து செயல்படுபவர்களான கர்மிகள் இவ்வுலகை அனுபவிக்கவும் அதன் பழங்களை பறிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக, அவர்கள் பௌதிக இன்பத்தில் ஈடுபடுவதற்காக இரவு, பகல் பாராது இடைவிடாமல் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்து கொண்டுள்ளனர். மறுபுறம், இவை எதையும் விரும்பாத மற்றொரு பிரிவினர் உள்ளனர்; அவர்களில் பெரும்பாலோர் விரக்தியுற்ற இளைஞர்களாவர். இவ்வாறாக, இந்த உலகமானது போகத்தில் ஈடுபட்டவர்களையும் தியாகத்தில் ஈடுபட்டவர்களையும் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த பாதைகளில் எதைப் பின்பற்றினாலும் நாம் மகிழ்ச்சியடையப் போவதில்லை; ஏனெனில், அனுபவிப்பது, துறப்பது ஆகிய இரண்டுமே நம்முடைய முறையான நிலையல்ல.

துறவு என்பது பைத்தியக்காரத்தனம்

அனைத்தும் கிருஷ்ணருக்கு சொந்தமானது என்பதாலும் எதுவும் வேறு யாருக்கும் சொந்தமானதல்ல என்பதாலும், நம்மிடம் உள்ள அனைத்தும் உண்மையில் கிருஷ்ணருடைய சொத்தாகும் (ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம்). மரங்கள், செடிகள், நீர், நிலம் என எதுவுமே நாம் உற்பத்தி செய்தது அல்ல என்பதால், நாம் அவற்றை உரிமை கொண்டாட முடியாது. நம்முடையது என உண்மையில் ஏதும் இல்லாத காரணத்தினால், நம்மால் எதையும் துறக்க இயலாது. இவ்வுலகிற்கு வரும்போதும் நிர்வாணமாக வருகிறோம், இதிலிருந்து போகும்போதும் நிர்வாணமாகவே போகிறோம் என்னும் கூற்று இங்கு நன்றாகப் பொருந்துகிறது. இவற்றிற்கு இடைப்பட்ட காலத்தில், “இஃது என்னுடைய நாடு, இஃது என்னுடைய வீடு, இவள் என்னுடைய மனைவி, இவர்கள் என்னுடைய குழந்தைகள், இவை என்னுடைய செல்வங்கள், இஃது என்னுடைய வங்கி இருப்பு,” என பலவற்றிற்கு போலியாக உரிமை கொண்டாடுகிறோம். இத்தகு உரிமைகள் எல்லாம் பொய்யானவை; ஏனெனில், நாம் இந்த உலகிற்கு வரும்போது, வெறும் கையோடு வருகிறோம், போகும்போதும் வெறும் கையோடு போகிறோம். இவ்வாறு இருக்கும்பட்சத்தில், போக, தியாக என்பவற்றின் பொருள் என்ன? உண்மையான தகவல்களின் பார்வையில், இவற்றிற்கு உண்மையான பொருள் ஏதுமில்லை. போக என்பது திருட்டுத்தனமாகும், ஒருபோதும் நமக்குச் சொந்தமில்லாத ஒன்றைத் துறக்கும் தியாக என்பது பைத்தியக்காரத்தனமாகும்.

உண்மையான துறவு

இதுதொடர்பாக கிருஷ்ணர் நமக்கு வழிகாட்டுகிறார்: ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. (பகவத் கீதை 18.66) போகத்தையும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டு நாம் பல்வேறு மதங்களை உருவாக்கியுள்ளபோதிலும், அவையனைத்தையும் விட்டுவிட்டு கிருஷ்ணரிடம் சரணடையுமாறு நாம் இங்கே அறிவுறுத்தப் படுகிறோம். அனுபவிப்பதற்கான உரிமையோ துறப்பதற்கான உரிமையோ நம்மிடம் இல்லை. பகவத் கீதையில் துறவு பரிந்துரைக்கப்படும்போது, அது நாம் பொய்யாக உரிமை கொண்டாடும் அனைத்தையும் துறப்பதையே குறிக்கும்.

ஒரு குழந்தை தன்னுடைய தந்தையிடமிருந்து நூறு டாலர் நோட்டை எடுத்துக் கொண்டு, அதை எவ்வாறு உபயோகிப்பது என்பதை அறியாதபோதிலும், அதனை தன்னிடமே வைத்துக்கொள்ள முயற்சிக்கும். “அன்பு மகனே, தயவுசெய்து அதை என்னிடம் கொடுத்து விடு” என்று தந்தை குழந்தையிடம் கெஞ்சலாம். பணமானது உண்மையில் தந்தைக்கு சொந்தமானது என்பதை குழந்தை அறிவதில்லை; அதை தந்தையிடம் கொடுப்பதே சிறந்தது என்பதும் அவனுக்குத் தெரியாது; மேலும், அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பதும் அவனுக்குத் தெரியாது. அதுபோலவே, “உன்னுடைய செயல்களை எனக்காக துறப்பாயாக. உன்னுடைய செல்வங்களையும் உடைமைகளையும் எனக்காக துறப்பாயாக,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். கிருஷ்ணர் ஒன்றும் பிச்சைக்காரர் அல்ல; அனைத்தும் அவருக்குச் சொந்தமானதாகும், ஆனால் அவர் நம்மை சிறு குழந்தைகளைப் போன்று நடத்துகிறார். அவருடைய வேண்டுகோளின்படி எல்லாவற்றையும் அவருக்குக் கொடுப்பதே த்யாக, அல்லது துறவு எனப்படுகிறது. கிருஷ்ண உணர்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு இதுவும் ஒரு வழியாகும். தவம், பிரம்மசரியம், அமைதி, தானம் ஆகியவை அனைத்தும் இறுதி உண்மை அல்லது பூரண உண்மையை அறிவதற்கு தேவைப்படுகின்றன. கிருஷ்ண உணர்வு என்பது சார்ந்த உண்மையைப் பற்றியதல்ல, பூரண உண்மையைப் பற்றியதாகும். பூரண உண்மையை உணர்வதற்குத் தேவையான இக்குணங்களைப் பயிற்சி செய்ய வேண்டியது பிராமணர்களின் கடமையாகும்.

பிராமணரின் தன்மைகள்

தூய்மை, வாய்மை, மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், எளிமை, வேதங்களில் குறிப்பாக பகவத் கீதையில் நம்பிக்கையை வளர்த்தல் ஆகியவற்றை பயிற்சி செய்து பிராமணர்கள் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். “நானே முழுமுதற் கடவுள்,” என்று கிருஷ்ணர் கூறும்போது, நாம் அவரை நம்பிக்கையுடன் ஏற்க வேண்டும். அது முட்டாள்தனமாக அல்லாமல், முழு அறிவோடு இருக்க வேண்டும், ஏற்கும் தகவலை தினசரி வாழ்வில் பிரயோகிக்க வேண்டும். ஒரு பிராமணன் பிறப்பினால் உருவாக்கப்படுவதில்லை; மாறாக, கல்வியாலும் பயிற்சியாலும் அறிவாலும் உருவாக்கப்படுகிறான். இது பிறப்பைச் சார்ந்தது அல்ல, கிருஷ்ணர் பகவத் கீதையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இது குணத்தைச் சார்ந்ததாகும்:

 

சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ:

தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யகர்த்தாரம் அவ்யயம்

 

“மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயலுக்கு அப்பாற்பட்டவனாக அறிந்துகொள்.” (பகவத் கீதை 4.13)

 

ஒருவனிடம் பிராமண குணங்கள் இருந்தால் மட்டும் போதாது, அவன் பிராமணனாக செயல்படுவதும் அவசியமானதாகும்; ஏனெனில், ஒருவனுடைய குணங்கள் அவனது செயல்களால் சோதிக்கப்படுகின்றன. ஒருவன் தேர்ச்சி பெற்ற பொறியியல் வல்லுநராக இருந்துகொண்டு, ஆனால் செயல்படாமல் வீட்டில் அமர்ந்திருந்தால், அதனால் என்ன பயன்? அதுபோலவே, ஒருவன் பிராமணனாக செயல்படாதவரையில், “நான் ஒரு பிராமணன்” என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை. எனவே, பர பிரம்மனான கிருஷ்ணரின் சேவையில் முழுமையாக ஈடுபடுவதன் மூலமாக ஒருவன் பிராமணனாக செயல்பட வேண்டும்.

பூரண உண்மைக்கான சேவையை எவ்வாறு செய்வது? யமேன நியமேன ச: யோகப் பயிற்சி எனப்படும் பரமனுடனான இணைப்பானது விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும். கட்டுப்பாடு இல்லாமல் விதிமுறைகளை செயல்படுத்த முடியாது என்பதால், ஒருவன் சிந்தனைமிக்கவனாக இருந்து தன்னை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற விரும்புபவன் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பள்ளியின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், படிப்பதில் சிறிது கஷ்டப்பட வேண்டும்; அப்போது அவன் படிப்படியாக வெற்றியை அடைவான். பகல் முழுக்க தெருவில் விளையாடி விட்டு வெற்றியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எனவே, சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ள முறையில் முதல் தேவை தபஸ். நெறிமுறைகளும் பிரம்மசரியமும் கடினமாகத் தோன்றும். ஆனால் நாம் இதனை ஒழுங்குபடுத்திவிட்டால், எது கடினமாகத் தோன்றியதோ அது நாளடைவில் சுலபமாகிவிடும்.

தீரனாக இருத்தல்

இருவகையான மனிதர்கள் உள்ளனர்: நிதானமுடையவர் (தீர), நிதானமற்றவர் (அதீர). எவனொருவன் கோபம் மற்றும் மனக்குழப்பத்திற்கு இடையில் சஞ்சலமடையாமல் நிலைத்து இருக்கிறானோ, அவனே தீர என்று அழைக்கப்படுகிறான். இதற்கு ஒரு நல்ல உதாரணம்: ஹரிதாஸ தாகூர்.

 

ஹரிதாஸ தாகூருக்கு இடையூறு அளிக்க விரும்பிய சிலர், ஓர் இளம் வேசியை அவரிடம் அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற அவள், ஹரிதாஸ தாகூரிடம் உடலுறவு கொள்ளும் ஆசை தனக்கு இருப்பதாக அவரிடம் கூறினாள். இதைக் கேட்ட அவர், “உன்னுடைய திட்டம் நன்றாக உள்ளது. இங்கேயே சிறிது நேரம் அமர்ந்திரு. நான் என்னுடைய ஹரி நாம ஜபத்தை முடித்த பிறகு இரண்டு பேரும் இன்புறலாம்” என்றார். ஆனால், அவர் தொடர்ந்து ஜபம் செய்து கொண்டிருக்க, பொழுது விடிந்துவிட்டது. வேசி பொறுமையிழக்க, ஹரிதாஸ தாகூரோ, என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய ஜபத்தை என்னால் முடிக்க முடியவில்லை. இன்று இரவு மீண்டும் வாருங்கள்” என்றார். இவ்வாறாக அந்த வேசி மூன்று நாட்கள் தொடர்ந்து வந்தாள். ஆனால் மூன்றாவது நாள் இரவு அவள் தன்னுடைய செயலுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டாள்: “உங்களுடைய எதிரி ஒருவர் என்னை இவ்வாறு செய்யுமாறு தூண்டினார். என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்,” என்றாள். அதற்கு ஹரிதாஸ தாகூர், “எனக்கு எல்லாம் தெரியும். நான் உன்னை மூன்று நாட்கள் இங்கு அனுமதித்ததற்கு காரணம், நீ எப்படியாவது திருந்துவாய் என்பதால்தான். இப்பொழுதே ஒரு ஜப மாலையை எடுத்துக் கொண்டு ஜபம் செய்ய தொடங்குவாயாக. நான் இந்த இடத்தை விட்டு புறப்படுகிறேன்.” இவ்வாறாக, மனம், சொல், உடல் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்திய தீரனுக்கு ஹரிதாஸ தாகூர் மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

பக்தியினால் தூய்மையடைதல்

நாம் தொன்றுதொட்டு பாவச் செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். அதை எப்பொழுது தொடங்கினோம் என்பதுகூட நமக்குத் தெரியாது. ஆனால் அதுபோன்ற தவறுகளைத் திருத்திக்கொள்வதற்காகவே இந்த வாழ்க்கை அமைந்துள்ளது. நிலத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற செடி கொடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும் எரிந்து சாம்பலாகி விடுவதைப் போலவே, கடுமையான நெறிமுறைகளினாலும் தவங்களினாலும் பாவச் செயல்களை கரைத்து ஒருவன் தன்னைத் தூய்மைபடுத்திக் கொள்ளலாம். இருப்பினும், சுகதேவ கோஸ்வாமி இதற்கு வேறொரு வழியைக் கூறுகிறார்:

 

கேசித் கேவலயா பக்த்யா வாஸுதேவ-பராயணா:

அகம் துன்வந்தி காத்ஸன்யேன நீஹாரம் இவ பாஸ்கர:

 

பொதுவாக, கடுமையான நெறிமுறைகள், தூய்மையான பிரம்மசரியம், சமத்துவம், தானம் போன்றவற்றை ஒருவன் மேற்கொண்டால், அவனை மக்கள் புனிதமான மனிதன் என்று அழைப்பர். ஆனால் வெறும் கிருஷ்ண உணர்வினனாக ஆவதன் மூலமாக, ஒருவன் தன்னுடைய முந்தைய பாவச் செயல்களின் விளைவுகளை அழிக்கலாம். சூரியன் உதயமானதும் பனி மறைந்துவிடுவதைப் போலவே, ஆயிரம் சூரியன்களின் பிரகாசத்துடன் பக்தனின் இதயத்தில் கிருஷ்ணர் உதயமாகும்போது, அனைத்து களங்கங்களும் மறைந்துவிடுகின்றன. (ஸ்ரீமத் பாகவதம் 6.1.15)

பக்தி அதிர்ஷ்டமானவர்களுக்கே

பக்தியின் இந்த வழிமுறையானது அதிர்ஷ்டசாலிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்: ப்ரமாண்ட பிரமிதே கோன பாக்யவான் ஜீவ, குரு–க்ருஷ்ண–பிரஸாதே பாய பக்தி–லதா–பீஜ, “பல்வேறு உடல்களில் அகிலம் முழுவதும் திரிந்த அதிர்ஷ்டசாலி மனிதன், கிருஷ்ணரின் கருணையாலும் ஆன்மீக குருவின் கருணையாலும் இறுதியாக பக்தித் தொண்டின் விதையைப் பெறுகிறான்.” கிருஷ்ண உணர்வானது அதிர்ஷ்டசாலிகளுக்கே; ஏனெனில், இந்த எளிமையான வழிமுறையை ஏற்றுக்கொள்பவன், கடுமையான நெறிமுறைகள், துறவு, பிரம்மசரியம் போன்றவற்றின் இன்னல்களை சுலபமாக கடக்கலாம். எனவே, சுகதேவ கோஸ்வாமி கூறுகிறார்: “மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே தூய்மையான பக்தித் தொண்டை ஏற்றுக்கொள்வர்.” கேவல பக்தி என்பது, ஆசை என்பதே இல்லாத களங்கமற்ற தூய பக்தித் தொண்டையே குறிக்கிறது. அந்த பக்தி கிருஷ்ணரை திருப்திபடுத்துவதற்கானது, தன்னுடைய வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக பக்தித் தொண்டை மேற்கொள்ளக் கூடாது. நாம் இன்பமாக இருப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால் கிருஷ்ண உணர்வில் இன்பம் தானாகவே கிடைத்துவிடுவதால், நாம் பணத்தை ஒதுக்கிவிடுவோம். பணம் தானாகவே வரும், இன்பமும் வரும். இவற்றிற்காக நாம் முயற்சி செய்யத் தேவையில்லை.

ஆசைகளை வேண்ட வேண்டாம்

“நான் எவ்வளவு பெரிய முட்டாள், பௌதிக இலாபத்தை அடைவதற்கான ஆசையுடன் பக்தித் தொண்டை ஏற்றுக் கொண்டேனே” என்று துருவ மஹாராஜா கவலைப்பட்டிருக்கிறார். பொதுவாக, பௌதிக இலாபத்தைப் பெற விரும்புவோர்கள் அனைவரும், தன்னுடைய முதலாளியிடம், பணக்கார மனிதர்களிடம், அல்லது தேவர்களிடம் செல்வதுதான் வழக்கம். ஆனால் பக்தர்களோ பௌதிக ஆசைகளிருந்தாலும் கிருஷ்ணரிடமே செல்வார்கள். பௌதிக நன்மை வேண்டி கிருஷ்ணரிடம் செல்பவன், துருவ மஹாராஜாவைப் போல, அந்த பௌதிக ஆசையை மறக்கப் போவது உறுதி. “ஒரு பணக்காரனை திருப்திப்படுத்திய பிறகு, அவனிடம் சிறிதளவு அரிசி தருமாறு கேட்பது எவ்வளவு தாழ்வானதோ, அதுபோலவே நான் கிருஷ்ணரிடம் பௌதிக நன்மைகளைக் கேட்டேன்”, என்று துருவ மஹாராஜா வருத்தப்படுகிறார். பணக்காரன் என்ன வேண்டுமானாலும் கொடுப்பதற்கு இசைந்துவிட்ட சூழ்நிலையில், நாம் அவனிடம் சிறிதளவு அரிசியைக் கேட்டால், அது புத்திசாலித்தனமா? கிருஷ்ணரை பௌதிக இலாபத்திற்காக அணுகுவதும் இதைப் போலவே. ஒருவர் கிருஷ்ணரிடம் சென்று பௌதிக இன்பத்தை கேட்க வேண்டியதில்லை, அது தானாகவே அவரது காலடியில் வந்து விழுந்து, என்னை தயவுசெய்து எடுத்துக்கொள்ளுங்கள், என்னை தயவுசெய்து எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றபடி உருளும்.

 

கிருஷ்ண உணர்வை மேற்கொள்பவர்கள் பௌதிக செல்வங்களாகிய மனைவி, குழந்தைகள், இன்பம், வீடு போன்ற எதையும் எதிர்பார்ப்பதில்லை; ஏனெனில், அவையெல்லாம் கிருஷ்ணரால் தானாகவே அளிக்கப்படுகின்றது. அவரிடம் பௌதிகப் பொருட்களை கேட்க வேண்டிய அவசியமில்லை. “தயவுசெய்து என்னை தங்களுடைய சேவையில் ஈடுபடுத்துங்கள்”, என்று பணிவுடன் கேட்க வேண்டும். அவருடைய சேவையில் ஈடுபடுவோருக்கு, அவர் தேவையானவற்றை கொடுப்பதோடு மட்டுமின்றி, முழுமையான பாதுகாப்பையும் வழங்குகிறார். எனவே, அவரைச் சார்ந்து வாழ்வோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives