கிருஷ்ண கதைகளைக் கேட்டல்

வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

 

கேட்கணும், கேட்கணும், கேட்டுக் கொண்டே இருக்கணும்–இதுவே இன்றைய மக்களின் மனோநிலை. வானொலி, தொலைக்காட்சி, கைபேசி, இணையம், முகநூல் என எங்கும் எப்போதும் எல்லாரும் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஏதேதோ விஷயங்களைக் கேட்கும் நம்முடைய காதுகளை எவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவது என்பதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

பாரம்பரிய பாரத பண்பாடு

பாரதத் திருநாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பகவான் விஷ்ணுவின் கோயில்கள், இதர தேவர்களின் கோயில்கள், மற்றும் பல்வேறு பஜனைக் கோயில்களும் இருந்து வந்தன. அந்நாளில் மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அச்சமயத்தில் மாலை நேரங்களில், அவர்கள் கோயில்களில் நடைபெறும் கதா காலட்சேபங்கள், இராமாயண, மகாபாரத சொற்பொழிவுகள் மற்றும் ஹரி பஜனைகளைக் கேட்டுத் தங்களுடைய மனித வாழ்வினைப் புனிதப்படுத்திக் கொண்டனர். மக்களுக்கு இருந்த முக்கியமான பொழுதுபோக்கு ஆன்மீக விஷயங்களைக் கேட்பதுதான். அந்த அளவிற்கு பாரத நாட்டில் ஆன்மீகம் தழைத்தோங்கி இருந்தது.

 

வீட்டிலிருந்த வயதான பெரியவர்கள் தங்களுடைய பேரன் பேத்திகளுக்கு உணவு ஊட்டும்போது, இராமாயணம், மகாபாரதத் திலிருந்து நற்பண்புகளை எடுத்துச் சொல்லி வளர்த்து வந்தனர். பகவான் இராமரின் சரிதத்தையும், பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் சிறு வயதிலிருந்தே கேட்ட குழந்தைகளுக்கு, அவை பசுமரத்தாணிபோல் அவர்களுடைய இதயத்தில் பதிந்துவிட்டன. அவர்கள் பெரியவர்களாக ஆனபோதிலும் தவறான வழியில் நடக்காதவாறு அவை வழிநடத்தி வந்தன. அப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் சமுதாயத்தில் நல்ல ஒழுக்கமுள்ள நபர்களாக இருந்து வந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

நவீன பாரதத்தின் சூழ்நிலை

நவீன பாரத நாடானது பக்தியற்ற மகிழ்ச்சியை அடைவதில் ஆர்வம் காட்டுகிறது, விஞ்ஞானத்தில் முன்னேற்றமடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறது. இன்றைய அரசியல் தலைவர்களும் மக்களுக்கு அதிக மான புலனின்பங்களைக் கொடுக்கின்றோம் என்னும் பெயரில் அவர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். எல்லார் வீடுகளிலும் தொ(ல்)லைக்காட்சி இருக்கின்றது, பட்டிதொட்டிகளில் இருக்கின்ற பாமர மக்கள் உட்பட அனைவரும் கைபேசி வைத்துக் கொண்டிருக்கின்றனர், முகநூல், இன்டர்நெட், இரவு விடுதிகள், கிளப், சாராயக் கடைகள், டிஸ்கோதே என இன்னும் எண்ணற்ற விஷயங்கள் மக்களிடம் புகுந்து, அவர்களின் மனதை ஆன்மீக விஷயங்களிலிருந்து விலக்கி வைக்கின்றன.

இன்றைய மக்கள் இரயில், பஸ், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என எதில் பயணம் செய்தாலும், முழங்கை அளவிற்குக் கைபேசி ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அதில் இயர்போன் மாட்டிக் கொண்டு சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டே உள்ளனர், சிலரோ சிறு குழந்தைகளைப் போல வீடியோ கேம்ஸ் விளையாடுகின்றனர். மனித வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றியோ நாம் இவ்வுலகில் மிகவும் துன்பப்படுவதைப் பற்றியோ எவ்விதக் கவலையும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எந்த அளவிற்கு நம்முடைய புலன்களைத் திருப்திபடுத்த முடியுமோ, அந்த அளவிற்கு புலனின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே.

புலன்களின் அதிபதியை திருப்தி செய்தல்

புலன்களை திருப்தி செய்வதற்கு மக்கள் பெருமளவில் முயற்சி செய்யும்போதிலும், அதில் அவர்களுக்கு என்றுமே திருப்தி கிடைக்காது. ஏனெனில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் இந்த உலகத்தை து:காலயம் அஷாஸ்வதம் (துன்பம் நிறைந்த தற்காலிகமான இடம்) என்று வர்ணித்துள்ளார். புலன்களின் உண்மையான திருப்தி, நம்முடைய புலன்களைக் கொண்டு புலன்களின் அதிபதியான ரிஷிகேசரை (கிருஷ்ணரை) திருப்தி செய்யும்போது மட்டுமே கிடைக்கும். நம்முடைய புலன்களுக்கு நிச்சயம் இன்பம் கிடைப்பது உறுதி. பகவான் கிருஷ்ணருக்கு எண்ணற்ற திருநாமங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று ரிஷிகேசர், இதற்கு “புலன்களின் அதிபதி” என்று பொருள். நம்முடைய புலன்களை புலன்களின் அதிபதியான கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தும்பொழுது, அதுவே புலன்களை ஈடுபடுத்துவதற்கான சரியான வழியாகும். இது பக்தி என்று அழைக்கப்படுகிறது.

ஒன்பது விதமான பக்தி

ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ:

ஸ்மரணம் பாத-ஸேவனம்

அர்சனம் வந்தனம் தாஸ்யம்

ஸக்யம் ஆத்ம-நிவேதனம்

 

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்டல், பேசுதல், அவரை நினைத்தல், தாமரைத் திருவடிகளுக்கு சேவை செய்தல், பூஜித்தல், பிரார்த்தனை செய்தல், அவரது சேவகனாக இருத்தல், நண்பனாக இருத்தல், அனைத்தையும் அவரிடம் அர்ப்பணித்தல் என்னும் ஒன்பது விதமான பக்தி முறைகளை ஸ்ரீமத் பாகவதம் (7.5.23) பரிந்துரைக்கின்றது. இந்த ஒன்பது முறைகளில், முதல் இரண்டும் (கிருஷ்ணரைப் பற்றி கேட்பதும் பேசுவதும்) மிகமிக முக்கியமானவை. ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், ஹரே கிருஷ்ண கீர்த்தனைகள் போன்றவற்றை நம்முடைய காதுகளின் மூலம் கேட்டு, காதுகளை நாம் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்த முடியும், இது ஷ்ரவணம் எனப்படுகிறது. அடுத்ததாக, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல், பாடுதல், பகவத் விஷயங்களைப் பேசுதல் போன்றவற்றின் மூலமாக நம்முடைய நாவினை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்த முடியும், இது கீர்த்தனம் எனப்படுகிறது. ஷ்ரவணம், கீர்த்தனம் ஆகிய இரண்டும் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், பகவானைப் பற்றிய நினைவு தானாக இருக்கும். எளிமையான இந்த வழிமுறை பரம புருஷரை நோக்கி ஒருவனது சிந்தனையைத் திருப்பக் கூடியதாகும்.

பலனளிக்கும் கிருஷ்ண கதைகள்

கிருஷ்ண கதைகள் இரு வகைப்படும்: கிருஷ்ணர் கூறிய விஷயங்கள் (பகவத் கீதை), கிருஷ்ணரைப் பற்றி கூறப்பட்ட விஷயங்கள் (ஸ்ரீமத் பாகவதம்). இந்த இரண்டு கிருஷ்ண கதைகளைக் கேட்டதன் மூலமாகப் பயன் பெற்றவர்கள் ஏராளம். ஸ்ரீமத் பாகவதத்தைத் தொடர்ந்து ஏழு நாள்கள் கேட்ட பரீக்ஷித் மஹாராஜர் தன்னுடைய கேட்கும் சக்தியினைச் சீரிய முறையில் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தினார். சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்டறிந்த சூத கோஸ்வாமியிடமிருந்து சௌனகரை தலைமையாகக் கொண்ட ரிஷிகள் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்டனர். அதே போல, விதுரர் மைத்ரேய ரிஷியிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்டறிந்தார். மைத்ரேய ரிஷியோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகப் பிரிய பக்தரான உத்தவரிடத்தில் கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களைக் கேட்டறிந்தார்.

 

பகவான் தன்னுடைய அவதாரம் முடிந்து ஆன்மீக உலகிற்குத் திரும்பிச் சென்றவுடன் தன்னுடைய இலக்கிய அவதாரமாக ஸ்ரீமத் பாகவதத்தை இந்த உலகிற்கு விட்டுச் சென்றார். அந்த ஸ்ரீமத் பாகவதம் நாம் தினமும் படித்துக் கேட்க வேண்டிய காவியமாகும்.

புண்ய-ஷ்ரவண-கீர்தன:

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி புரிந்துகொள் வதற்கான வழிமுறை ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.17) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

 

ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண:

புண்ய-ஷ்ரவண-கீர்தன:

ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி

விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம்

 

“அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும் உண்மையான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை முறையாகக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தரக்கூடியதாகும். அச்செய்திகளைக் கேட்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து, ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அவரே அகற்றிவிடுகிறார்.”

 

அனைவரின் இதயங்களிலும் உறையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னைப் பற்றிக் கேட்பதில் இடையறாது ஈடுபட்டுள்ள பக்தனிடம் மிகச்சிறந்த நண்பனைப் போன்று செயல்பட்டு அவனைத் தூய்மைப்படுத்துகிறார். இவ்விதமாக, தன்னுள் உறங்கிக் கொண்டிருக்கும் திவ்ய ஞானத்தை பக்தன் இயற்கையாகவே வளர்த்துக் கொள்கிறான். பாகவதத்திலிருந்தும் பக்தர்களிடமிருந்தும் கிருஷ்ணரைப் பற்றி மேன்மேலும் கேட்பதால், பகவானின் பக்தித் தொண்டில் பக்தன் உறுதியாக நிலைபெறுகிறான். பக்தித் தொண்டின் வளர்ச்சியினால் ரஜோ குணத்திலிருந்தும் தமோ குணத்திலிருந்தும் விடுபடுகிறான், அதன் மூலம் காமமும் பேராசையும் அழிந்துவிடுகின்றன. இவ்விதமாக பக்தி யோகம் ஜடப் பற்றதலிருந்து ஒருவனை விடுவித்து, பரம பூரண உண்மையான முழுமுதற் கடவுளை அறியும் நிலைக்கு அவனை உடனடியாக உயர்த்துகின்றது.

தூய பக்தர்களிடம் மட்டுமே கேட்டல்

கிருஷ்ண கதைகளை எந்தவித பிரதி பலனையும் எதிர்பார்க்காத தூய வைஷ்ணவர்களிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும். இதயத்தில் பௌதிக ஆசைகள் உடைய நபர்களிடமிருந்து கேட்கும் கிருஷ்ண கதையினால் எந்தவித ஆன்மீக ஞானமும் கிடைக்க வாய்ப்பில்லை. பாம்பினால் தீண்டப்பட்ட பால் எவ்வாறு விஷமாக மாறுகின்றதோ, அதுபோல பௌதிக ஆசைகள் உள்ள நபர்களிடமிருந்து கிருஷ்ண கதையினைக் கேட்டல் மிகவும் ஆபத்தானது என்று நம்முடைய முந்தைய ஆச்சாரியர்களும் ஸ்ரீல பிரபுபாதரும் எச்சரித்துள்ளனர். இன்றைய நவீன சமுதாயத்தில், ஊடகங்களின் மூலம் சிலர் பிரபலமாக்கப்படுவதையும் அவர்களின் கதாகாலட்சேபங்கள் மிகுந்த ரஸ பாவங்களுடன் இருப்பதையும் நாம் காண்கிறோம். ஆனால் இத்தகைய கிருஷ்ண கதைகளால் மக்கள் ஆன்மீகப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

 

சாதாரண காபி, தேநீர் போன்றவற்றைக்கூட கைவிடாத நபர்கள், கிருஷ்ணரின் எந்தவொரு லீலைகளையும் விவரிக்கத் தகுதியற்றவர்கள். பலரும் தங்களை கிருஷ்ணரின் அவதாரமாக மக்களிடம் காட்டிக் கொள்கிறார்கள், சாதாரண மக்களும் (பகவத் கீதை, பாகவதம் போன்ற சாஸ்திரங்களின் ஞானமில்லாத காரணத்தினால்) இவர்களின் காலட்சேபங்களில் பங்கேற்றுத் தாங்களும் ஆன்மீகத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் முறையான பக்தர்களிடமிருந்து கேட்காவிடில், கேட்பவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

 

ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் அவருடைய நேரடி சீடர்களிடமிருந்து கேட்கப்படும் கிருஷ்ணரைப் பற்றிய செய்திகள் கலி யுகத்தில் இருக்கும் கட்டுண்ட ஜீவன்களுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய வையாகும். மேற்கத்திய நாடுகளில், முற்றிலும் வீழ்ச்சியுற்று, புலனின்பத்தில் அதிகமாக மூழ்கியிருந்த நபர்களைக்கூட மாபெரும் ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய உபதேசங்களின் மூலமாகத் தூய வைஷ்ணவர்களாக மாற்றியமைத்தார். அதற்கான மிக முக்கியமான காரணம், அவர்கள் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து கிருஷ்ணரின் தத்துவங்களையும் லீலைகளையும் கேட்டதேயாகும்.

தூய பக்தர்களின் செயல்கள்

பகவத் கீதையில் (10.9) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன, அவர்களது வாழ்க்கை எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும், என்னைப் பற்றித் தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் இவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்,” இதுவே தூய பக்தர்களின் செயல்களாகும். இவர்கள் எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றி பேசிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உண்மையான ஆனந்தத்தினை அடைகின்றனர்.

இஸ்கானில் கிருஷ்ண கதை

 

ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கான் இயக்கத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கிருஷ்ணரின் லீலைகளைத் தொடர்ந்து கேட்பதற்காக, ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவத் கீதை உபன்யாச நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார். அது மட்டுமின்றி, தினசரி 16 சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜபம் செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளார். வார இறுதியில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் ஹரி நாம பஜனைகள், வாராந்திர நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

 

மேலும், ஸ்ரீல பிரபுபாதரின் பல்வேறு புத்தகங்களைத் தொடர்ந்து படிப்பதால், கேட்டல் என்னும் சேவையினை எல்லா தரப்பட்ட மக்களும் தங்களது பல்வேறு அலுவல்களுக்கு மத்தியிலும் செயல்படுத்த முடியும். இதன் மூலம் நாம் நம்முடைய உண்மையான உணர்வான “கிருஷ்ணரின் நித்திய தாஸன்” (ஜீவேர ஸ்வரூப ஹய க்ருஷ்ணேர நித்ய தாஸ்) என்னும் நிலையை அடைந்து பகவானின் திருநாட்டிற்கு ஏற்றம் பெறலாம்.

2016-10-28T00:43:15+00:00September, 2015|தத்துவம்|0 Comments

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment