குரு என்றால் என்ன?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு ஸ்ரீல பிரபுபாதர் அளித்த இந்த பேட்டியில், ஆர்வமுள்ள ஒருவர் உண்மையான ஆன்மீகப் பாதையினைக் காட்டும் உண்மையான குருவிற்கும் ஓர் ஏமாற்றுக்காரருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று விளக்குகிறார்.

 

நிருபர்: ஸ்ரீல பிரபுபாதர் அவர்களே! எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அதிகப்படியான மக்கள் ஆன்மீக வாழ்க்கையை நாடுவதாகத் தோன்றுகிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக வாழ்விற்கான விருப்பம் முற்றிலும் இயற்கையானதே, நாம் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள் என்பதால், இந்த பௌதிக சூழ்நிலையில் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, நீரிலிருந்து மீனை வெளியே எடுத்து விட்டால். தரையில் அது மகிழ்ச்சியாக இருக்க முடியாது; அதுபோலவே, ஆன்மீக உணர்வின்றி நம்மால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இன்றைய மக்களில் பலரும் விஞ்ஞான முன்னேற்றத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் ஆர்வத்துடன் உள்ளனர், ஆனால் அவை அவர்களை மகிழ்ச்சியாக வைப்பதில்லை; ஏனெனில், இவை வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் அல்ல. இதை உணரும் இளைஞர்கள் பலரும் பௌதிக வாழ்க்கையை நிராகரிக்கின்றனர், ஆன்மீக வாழ்வைத் தேடுவதற்கு முயல்கின்றனர். உண்மையில் இதுவே சரியான தேடல். கிருஷ்ண உணர்வுதான் வாழ்க்கையின் சரியான குறிக்கோள். கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்தாலொழிய நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இதுவே உண்மை. எனவே, எங்களின் இந்த இயக்கத்தை ஆராய்ந்து அறியும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

 

நிருபர்: சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் முதல் முறையாக இந்திய யோகி ஒருவர் வந்தார், அவர் வந்த பிறகு திடீரென எங்கிருந்தோ பல குருமார்கள் தோன்றியுள்ளனர். சில வேளைகளில் அவர்கள் அனைவரும் உண்மையான குருமார்கள் அல்ல என்று எனக்கு தோன்றுகிறது. எனவே, ஆன்மீக வாழ்க்கையை ஏற்க நினைக்கும் மக்கள் உண்மையான குருவை உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரிப்பது அவசியம் என்று தோன்றுகிறது, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். உண்மையில், குருவைத் தேடுவது நல்ல விஷயமே. ஆனால் நீங்கள் மலிவான குருவை விரும்பினால் அல்லது ஏமாற்றப்பட விரும்பினால், அப்போது பல ஏமாற்றும் குருக்களை நீங்கள் காணலாம். ஆனால் நீங்கள் சிரத்தையுடன் இருக்கும் பட்சத்தில், உண்மையான குருவைக் கண்டுபிடிக்கலாம். எல்லாவற்றையும் மலிவாகப் பெறுவதற்கே மக்கள் விருப்பப்படுவதால், அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். நாங்கள் எங்களுடைய மாணாக்கர்களை தகாத உடலுறவு, மாமிச உணவு, சூதாட்டம், போதைப் பழக்கம் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவற்றைக் கைவிடுவது மிகவும் கடினமானது, தொந்தரவு வாய்ந்தது என்று மக்கள் நினைக்கின்றார்கள். மாறாக, யாராவது ஒருவர், “நீங்கள் விரும்பும் எல்லா அபத்தங்களையும் செய்யலாம், என்னுடைய இந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறினால், அப்போது மக்கள் அவரை விரும்புவார்கள். விஷயம் என்னவெனில், மக்கள் ஏமாற்றப்பட விரும்புவதால், ஏமாற்றுபவர்கள் வருகின்றனர். எவரும் சில சிரமங்களை ஏற்பதற்கு விரும்புவதில்லை. மனித வாழ்க்கையில் சிரமங்களையும் விரதங்களையும் அனுசரிக்க வேண்டும். ஆனால் யாரும் சிரமமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தயாராக இல்லை. அச்சமயத்தில் ஏமாற்றுக்காரர்கள் கூறுகின்றனர், “எந்தவித கட்டுப்பாடுகளும் தேவையில்லை. நீங்கள் விரும்புவதைச் செய்யலாம். எனக்கு தர வேண்டியதை மட்டும் தாருங்கள். நான் உங்களுக்கு சில மந்திரங்களைத் தருகிறேன். அடுத்த ஆறு மாதங்களில் நீங்கள் கடவுளாக மாறுவீர்கள்.” இதுதான் நடைபெற்று வருகிறது.

 

நிருபர்: ஆன்மீக வாழ்க்கையை உணர்வதில் தீவிர விருப்பம் கொண்டுள்ளவர் தவறான குருவினை அடைவதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு சாதாரண கல்வியைப் பெறுவதற்கே நீங்கள் அதிக அளவு நேரத்தையும் உழைப்பையும் விவேகத்தையும் செலவிட வேண்டியுள்ளது. அதுபோலவே, ஆன்மீக வாழ்வை எடுத்துக்கொள்ளும்போது, நீங்கள் சிரத்தையுடையவர்களாக மாற வேண்டும். சில விசித்திரமான மந்திரங்களின் மூலம் ஆறு மாதங்களில் கடவுளாக முடியுமா? மக்கள் ஏன் அதுமாதிரியான ஒன்றை விரும்புகின்றனர்? எனவே, அவர்கள் ஏமாற்றப்பட விரும்புகின்றனர் என்பதே அதற்கு பொருள்.

 

நிருபர்: ஒரு நபர் தனக்கு உண்மையான குரு இருக்கின்றார் என்பதை எவ்வாறு கூற முடியும்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: என்னுடைய சீடர்களில் யாராவது ஒருவர் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க இயலுமா?

 

சீடர்: ஒருமுறை திரு. ஜான் லெனன் உங்களிடம், யார் உண்மையான குரு என்பதை எவ்வாறு அறிவது என்று கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. நீங்கள் அதற்கு பதிலளித்தீர்கள், “யாரொருவர் கிருஷ்ணரிடம் நெருக்கமாகப் பழகி அவருடன் அதிகப் பற்றுதலுடன் இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடியுங்கள், அவரே உண்மையான குரு.”

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், உண்மையான குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி. அவர் கடவுளைப் பற்றி மட்டுமே பேசுவார், வேறு எதைப் பற்றியும் அல்ல. பௌதிக வாழ்வில் விருப்பமில்லாமல் இருப்பவரே உண்மையான குரு, அவர் கடவுளைச் சார்ந்தே இருப்பார்; கடவுளை மட்டுமே! அதுவே உண்மையான குருவிற்கான சோதனை. முண்டக உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: ஷ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம், “உண்மையான குருவானவர் வேத இலக்கியங்களையும் வேத ஞானத்தையும் நன்கு அறிந்து, முழுமையான முறையில் பிரம்மனைச் சார்ந்தவராக இருப்பார்.” பிரம்மன் என்றால் என்ன என்பதை அவர் அறிந்திருப்பார், மேலும், எவ்வாறு பிரம்மனில் நிலைத்திருப்பது என்பதையும் அறிந்திருப்பார். இந்த அறிகுறிகள் வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. நான் ஏற்கனவே கூறியபடி, உண்மையான குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி ஆவார். எப்படி வைஸ்ராய் என்பவர் மன்னரைப் பிரதிநிதிக்கின்றாரோ அவ்வாறே உண்மையான குருவானவர் பரம புருஷ பகவானைப் பிரதிநிதிக்கிறார். உண்மையான குரு என்பவர் எதையும் தானாக உற்பத்தி செய்ய மாட்டார். அவர் கூறும் ஒவ்வொரு விஷயமும், வேத இலக்கியங்களின் கூற்றுப்படியும் முந்தைய ஆச்சார்யர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியும் இருக்கும். அவர் ஒரு மந்திரத்தைக் கொடுத்து விட்டு ஆறு மாதங்களில் நீங்கள் கடவுளாகி விடுவீர்கள் என்று கூற மாட்டார். அது குருவின் அலுவல் அல்ல. ஒவ்வொருவரையும் கடவுளின் பக்தனாக மாறும்படி ஊக்குவிப்பதே உண்மையான குருவின் அலுவலாகும். உண்மையில் அவருக்கு வேறு எந்த அலுவலும் கிடையாது. அவர் தான் காண்பவர் அனைவரிடமும் “தயவுசெய்து கடவுள் உணர்வுள்ளவர்களாக மாறுங்கள்” என்று வேண்டுகின்றார். கடவுளின் சார்பாக பிரச்சாரம் செய்பவர் நிஜமான குரு ஆவார்.

 

நிருபர்: கிறிஸ்துவ பாதிரியார்களைப் பற்றி என்ன கூறலாம்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: கிறிஸ்துவன், முஸ்லிம், இந்து என்பது ஒரு பொருட்டே அல்ல. கடவுளின் சார்பாகப் பேசுபவர் குரு எனப்படுகிறார். உதாரணமாக, ஏசுநாதர் “கடவுளிடம் அன்பு செலுத்துங்கள்” என்று பிரச்சாரம் செய்து வந்தார். யாராக இருந்தாலும் அஃது ஒரு பொருட்டல்ல, கடவுளிடம் அன்பு செலுத்தும்படி மக்களை நம்பச் செய்தால், அவரே குரு. இதுவே பரிசோதனை. “நான் கடவுள்,” அல்லது “நான் உங்களைக் கடவுளாக்குகிறேன்” என்று குரு கூறுவதில்லை. “நான் கடவுளின் சேவகன், நான் உங்களையும் கடவுளின் சேவகனாக மாற்றுவேன்” என்று உண்மையான குரு கூறுவார். குரு என்பவர் எவ்வாறு உடை அணிந்துள்ளார் என்பது முக்கியமல்ல. சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், “கிருஷ்ணரைப் பற்றிய அறிவை யாரால் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியுமோ, அவரே ஆன்மீக குரு.” உண்மையான ஆன்மீக குரு மக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்ற முயற்சி செய்வார். அவருக்கு வேறு எந்த அலுவலும் இல்லை.

 

நிருபர்: ஆனால் அந்த தவறான குருக்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: தவறான குரு என்றால் என்ன?

 

நிருபர்: பணத்தையும் புகழையும் விரும்புபவர் தவறான குரு.

 

ஸ்ரீல பிரபுபாதர்: நல்லது, அவர் தவறானவராக இருக்கும் பட்சத்தில், அவர் எவ்வாறு குருவாக முடியும்? இரும்பு எவ்வாறு தங்கமாகும்? உண்மையில் குரு என்பவர் தவறானவராக இருக்க முடியாது. ஏனெனில், தவறானவராக இருப்பவர் குருவாக இருக்க முடியாது. நீங்கள் “தவறான குரு அல்லது கெட்ட குரு” என்று கூற முடியாது. அது முரண்பாடான வாக்கியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உண்மையான குரு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உண்மையான குருவின் தகுதி, அவர் கடவுளைப் பற்றி மட்டும் பேசுவார். அவ்வளவே. அவ்வாறின்றி அவர் வேறு ஏதாவது அபத்தமான விஷயங்களைப் பற்றிப் பேசினால், அவர் ஒரு குரு அல்ல, கெட்டவர் எவரும் குருவாக இருக்க முடியாது. எனவே, “இங்கே கெட்ட குரு” என்ற கேள்விக்கே இடமில்லை. சிவப்பு நிற குரு, வெள்ளை நிற குரு என்றெல்லாம் யாரும் இல்லை; குரு என்றால் “உண்மையான குரு” என்றுதான் பொருள். நாம் அறிந்துகொள்ள வேண்டியதெல்லாம், ஓர் உண்மையான குருவானவர் கடவுளைப் பற்றி மட்டுமே பேசுவார்; மக்களை பகவானின் பக்தர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்வார். அவர் இதைச் செய்து வந்தால் அவரே உண்மையான குரு.

 

நிருபர்: தங்களின் இயக்கத்தில் தீக்ஷை பெற வேண்டுமானால், நான் என்ன செய்ய வேண்டும்?

 

(ஸ்ரீல பிரபுபாதரின் பதிலும் உரையாடலும் அடுத்த இதழில் தொடரும்)

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives