குறளின் குரல், கர்மம்-ஊழ் : திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.
வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

வேத நூல்களில் கண்டுள்ளபடி, ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக இயற்றும் செயல்கள் கர்ம (நல்ல செயல்கள்) எனப்படும். தனக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதால் கீழான நிலைக்கு ஒருவனை இட்டுச்செல்லும் செயல்கள் விகர்ம (தீய செயல்கள்) எனப்படும். இந்த கர்மங்களால் ஏற்படும் வினைகள், கர்மவினை அல்லது ஊழ் எனப்படுகிறது.

வள்ளுவர் ஊழ் எனப்படும் அதிகாரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

“ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும். தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகாது.” (திருக்குறள் 376)

சாதாரண மனிதர்கள் கடவுளின் பாராட்டைப் பெற்று இவ்வுலகில் அல்லது சொர்க்கத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக நற்செயல்களைப் புரிய விரும்புகிறார்கள். நல்லவை, தீயவை ஆகிய இருவகையான செயல்களுமே பௌதிக இன்னல்களில் மனிதனை சிக்கவைக்கும் தன்மை உடையவை என்பதை அறிவாளிகள் நன்கறிவார்கள்.

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்

“ஊழைவிட மிக்க வலிமையுள்ளது வேறு என்ன இருக்க முடியும்? ஊழை விலக்கும்பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும்.” (திருக்குறள் 380)

ஸ்ரீமத் பாகவதத்திற்கான தனது பொருளுரைகளில் (7.2.40) ஸ்ரீலபிரபுபாதர் கூறியுள்ளபடி, பகவான் பாதுகாப்பு அளிக்காவிடில் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கும் பணம்கூடக் காணாமல் போய் விடுகிறது. மறுபுறம், ஒருவன் பொதுவீதியில் பணத்தைத் தொலைத்தாலும் அது விதியினால் பாதுகாக்கப்படுகிறது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

“ஒருவன் செய்ய வேண்டாதவற்றை செய்வதும் கேடாகும், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுவதும் கேடாகும்.” (திருக்குறள் 466)

ந கர்மணாம் அனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோ ‘ஷ்னுதே

ந ச ஸன்ன்யஸனாத் ஏவ ஸித்திம் ஸமதிகச்சதி

செயலிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாதது.

(பகவத் கீதை 3.4)

அதனால், அறிவில் முதிர்ந்தவர்கள் செயல்களின் விளைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு நிற்க விரும்புகின்றனர். பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து ஒருவனை விடுவிக்கும் செயல்கள் அகர்ம எனப்படும். இந்த மூன்று வகையான செயல்களில், அறிவாளிகள், கர்ம பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்கும் செயல்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பகவத் கீதை 3.9 கூறுவதன்படி, “விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் (அகர்ம, உன்னதமான செயல்) நிறைவேற்றப்படலாம், மற்ற செயல்கள் (கர்ம, விகர்ம ஆகிய இரண்டும்) இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய். இவ்விதமாக, நீ எப்பொழுதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.”

மேலும், ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை (ஸ்லோகம் 54) கூறுகிறது, கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம், “பகவான் கோவிந்தர், தனது பக்தர்களின் கர்ம வினைகளைச் சுட்டெரித்து அழிக்கிறார். மற்றவர்கள் அனைவரையும் (அற்ப பூச்சியிலிருந்து இந்திரன் வரை) தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு செய்கிறார்.”

அடுத்த இதழில், வாழ்வின் குறிக்கோள்.

2018-04-18T16:06:25+00:00August, 2016|பகவத் கீதை|0 Comments

About the Author:

தயாள கோவிந்த தாஸ் M.Tech., Ph.D. அவர்கள், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண பக்தியைக் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment