வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்பட உள்ளது.

இந்த இதழில்: ஆதிபகவன்
ஆதிபகவன் அல்லது முழுமுதற்கடவுள்

வேதாந்த சூத்திரத்தில் ஸ்ரீல வியாஸதேவர், ஜன்மாத்யஸ்ய யத:, எவரிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றனவோ, அவரே முழுமுதற் கடவுள் என்று கூறுகிறார். மேலும் அதனை அவரே விளக்கமான முறையில் ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தில் (1.1.1.), வஸுதேவரின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவர் தனது நிலையான உலகத்தில் வீற்றுள்ளார் என்றும் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும் அவரை தான் தியானிக்கிறேன் என்றும் கூறுகின்றார்.

திருவள்ளுவர் தன்னுடைய முதல் குறளில்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(திருக்குறள் 1)

“எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதைப் போல், உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.”
செம்மொழி இலக்கியமாகிய திருக்குறளை இயற்றிய வள்ளுவர் முழுமுதற் கடவுளையே ஆதிபகவன் என்று குறிப்பிடுகிறார். குறைந்த கண்ணோட்டமுடைய சிலர் ஆதியை நூலாசிரியரின் தாயென்றும் பகவனைத் தந்தையென்றும் கூறுவர். இங்கு உலகு என்பது எல்லா உலகங்களையும் உயிர்களையும் குறிக்கும். பகவான் என்றால் எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளவர் என்று பொருள்.

எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்ட முதல்வனே ஆதிபகவன். இந்த ஆதிபகவன் எப்படிப்பட்டவன் என்பதை வள்ளுவர் ஏழாவது குறளில்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
(திருக்குறள் 7)

“தனக்கு நிகரில்லாதவனுடைய தாளைச் சேர்ந்தவருக் கல்லாது மற்ற எவருக்கும் மனத்தின்கண் உருவாகும் துன்பங்களை நீக்குதல் அரிது.” தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. அவருக்கு மேல் யாரும் இல்லை என்பதே இதன் பொருள். இதையே பகவத் கீதையில் (7.7) கிருஷ்ணர்,

 

மத்த: பரதரம் நான்யத்கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸர்வம் இதம் ப்ரோக்தம்ஸூத்ரே மணி-கணா இவ

“செல்வத்தை வெல்வோனே, என்னை விட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.” என்று கூறுகிறார். கிருஷ்ணரின் இந்த ஸ்லோகத்தையும் வள்ளுவரின் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், வள்ளுவர் குறிப்பிடும் ஆதிபகவன் கிருஷ்ணரே.

 

மேலும், புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
(திருக்குறள் 1103)

“தாமரைக் கண்ணனுடைய உலகம், தான் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ?” வேறு எந்த தேவரையும் தேவ உலகத்தையும் வள்ளுவர் திருக்குறளில் குறிப்பிடவில்லை. எல்லாரையும்விட உயர்ந்தவரான தாமரைக் கண்களையுடைய கிருஷ்ணரே ஆதிபகவன் என்பதை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர் இந்த குறளைப் படைத்திருக்கின்றார். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் ஒருவருக்கே சரணடைய வேண்டும் என்பது பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கொள்கை. அந்தக் கொள்கையையே வள்ளுவர் முதல் அதிகாரத்தின் ஏழு குறள்களில் கூறுகின்றார். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், மற்றெல்லாரும் அவருடைய தொண்டர்கள் என்பது பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாக்கு.