திருப்புல்லாணி

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள இராமநாத புரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பதே திருப்புல்லாணி என்னும் திருத்தலம். காடு போன்ற புல் இருந்த இவ்விடத்தில், புல்லர் மகரிஷி கடுந்தவம் செய்த காரணத்தினால் இத்திருத்தலம் புல்லாரண்யம் எனப் பெயர் பெற்றது. ஆதி ஜகந்நாத பெருமாள் இவ்விடத்தில் கம்பீரமாக வீற்றிருப்பதால் இத்திருத்தலம் தென்னகத்தின் புரி என்றும் புகழப்படுகின்றது. இராமசந்திர பகவானிடம் விபீஷணன், சமுத்திர ராஜன், சுகர் மற்றும் சரணர் இவ்விடத்தில் சரணடைந்த காரணத்தினால், இத்திருத்தலம் சரணாகதி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.

திருப்புல்லாணி அழகான சேதுக்கரையோரத்தில் அமைந்திருப்பதால் ஆதி சேது என்றும், இராமசந்திர பகவான் இவ்விடத்தில் தர்ப்பை புல்லின் மீது சயனம் கொண்டிருந்ததால் தர்ப சயனம் என்றும், விஸ்வகர்மரின் மகனான நளன், சேது சமுத்திர பாலத்தைக் கட்டுவதில் முதன்மையான சிற்பியாகத் திகழ்ந்ததால் நளசேது என்றும், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளதால் ரத்னாகர க்ஷேத்திரம் என்றும் திருப்புல்லாணி பல பெயர்களில் அறியப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு தனது தென்னிந்திய பயணத்தின்போது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியை தரிசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருப்புல்லாணி வரலாறு

புல்லர், கன்வர், கலவர் ஆகிய மூன்று முனிவர்களின் கடுந்தவத்தினால் அகமகிழ்ந்த பெருமாள், அவர்களின் வேண்டுகோளின்படி இவ்விடத்தில் பக்தர்களுக்கு இந்நாள் வரை ஆதி ஜகந்நாத பெருமாளாகக் காட்சியளிக்கிறார். தேவல ரிஷிக்கு சப்த கன்னியர்கள் தகுந்த மரியாதை கொடுக்கத் தவறியதால், அவரால் சபிக்கப்பட்டு அவர்கள் யக்ஷ பெண்களாக மாறி, பின் இவ்விடத்தில் ஆதி ஜகந்நாதரை வழிபட்டு, இராமசந்திர பகவானின் கடைக்கண் பார்வை பெற்ற பிறகே சாபத்திலிருந்து விடுபட்டனர்.

பரம பவித்ர ஸ்தலமான இக்கோயிலின் முன்பு சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. இலங்கையில் இருந்த இரு அசுரர்களான பாலி, சுமாலியை வதம்செய்த சுதர்சன சக்கரம் தன்னைத் தூய்மைபடுத்திக்கொள்வதற்காக இத்தீர்த்தத்தில் நீராடியபோது, பெருமாள் சுதர்சன சக்கரத்தின் முன்பு தோன்றி, இராம அவதாரத்தில் தானும் இலக்ஷ்மணரும் இத்தீர்த்தத்தில் நீராடிய பிறகு, தனது மற்றொரு ரூபமான ஆதி ஜகந்நாதரை இவ்விடத்தில் வழிபட்டு, அவரிடமிருந்து பெறப்படும் தெய்வீக வில்லால் இராவணனை வதம் செய்ய போவதாகக் கூறி மறைந்தார். திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தைப் போற்றி 20 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.

முக்கிய சன்னதிகள்

இக்கோயிலில் ஆதி ஜகந்நாதர் அமர்ந்த கோலத்தில் கல்யாண விமானத்தின் கீழும், தர்ப சயன இராமர் சயனக்கோலத்தில் ஸ்வஸ்திக் விமானத்தின் கீழும், பட்டாபி இராமர் நின்ற கோலத்தில் புஷ்பக விமானத்தின் கீழும் காட்சியளிக்கின்றனர். மூலவராகத் திகழும் ஆதி ஜகந்நாதர் தன் திருமுகத்தை கிழக்கு திசையில் நோக்குகிறார். பத்மாஸினி தாயார், ஆண்டாள், சந்தான கோபாலர் ஆகியோருக்கு தனித்தனியான சன்னதிகள் உள்ளன.

ஆதி ஜகந்நாதர்: ஆதி ஜகந்நாதர் அமர்ந்த கோலத்தில் ஒரு கையில் பக்தர்களை ஆசிர்வதிப்பது போன்றும், மற்றொரு கையில் பக்தர்களைத் தன்பக்கம் அழைப்பது போன்றும் காட்சியளிக்கிறார். உற்சவராக உலா வரும் கல்யாண ஜகந்நாதர் கல்யாணக் கோலத்தில் பூமிதேவியுடனும் நீலாதேவியுடனும் காட்சியளிக்கிறார்.

சந்தான கோபாலன் ஆதிசேஷன்மீது அமர்ந்திருக்கிறார், ஆதிசேஷன் கூர்மத்தின் மீதும், அவர்களைச் சுற்றி எட்டு யானைகளும் எட்டு சர்ப்பங்களும் தென்படுகின்றனர். இக்கோயிலின் பின்புறத்தில் காணப்படும் அரச மரத்திற்கும் பெருமாளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதால், அவ்விடம் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக திகழ்கின்றது.

தர்ப சயன பெருமாள் மூலவரும் உற்சவரும்

தர்ப சயன பெருமாள் மூலவரும் உற்சவரும்

தர்ப சயனம்

இராவணன் சீதையை இலங்கையில் வைத்திருந்தபோது, இராமர் சீதையைக் காப்பாற்றும் பொருட்டு சேதுக்கரையோரத்தில் இருக்கும் திருப்புல்லாணிக்கு வருகை புரிந்தார். அப்போது சமுத்திரத்தை கடந்து செல்வதற்கான வழிமுறைகளை இராமர் அங்கு குழுமியிருந்த இலக்ஷ்மணர், சுக்ரீவன், விபீஷணன், ஹனுமான் உட்பட பலரிடம் ஆலோசித்தார். அரசர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் அமைச்சர்களிடம் ஆலோசிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு இராமர் இந்த ஆலோசனையின் மூலம் வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர், சமுத்திரத்தில் சேதுக்கரையிலிருந்து இலங்கை வரை பாலம் கட்டுவதற்காக, இராமர் தர்ப்பைப் புல்லால் படுக்கையை அமைத்து மூன்று நாள்கள் வருணரை நோக்கி கடுமையாக பிரார்த்தனை செய்தார். வருணன் அங்கு தோன்றாததால், கடல் நீரை கோபக் கண்ணால் பார்த்தார். இராமரின் பார்வையால் சமுத்திரத்தில் இருந்த அனைத்து ஜீவன்களும் பயந்து போயினர். இராமர் கடல் நீரை முற்றிலுமாக வற்றுவதற்கு அக்னி அஸ்திரத்தை ஏவத் தயாரானார்; அச்சமயத்தில் வருணர் உடனடியாக தன் மனைவி வருணதேவியுடன் இராமரிடம் சரணடைந்து மன்னிப்புக் கேட்டார். பின்னர் வருணன் இலங்கை வரை பாலம் கட்டுவதற்குச் சிறந்த வழித்தடத்தையும் காண்பித்தார். இராமரின் இந்த வீர சயன திருக்கோலமே தர்ப சயன இராமராக திருப்புல்லாணியில் காட்சியளிக்கிறார். இராமர் சயனக் கோலத்தில் தன் இடுப்பில் பட்டாக்கத்தியுடன் காட்சியளிப்பது மிகவும் விசேஷமானது, சயனக் கோலத்தில் இருக்கும் தர்ப சயன இராமரின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப்படுகிறார். சந்திரன், சூரியன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களும் நின்ற கோலத்தில் பகவானைப் பிரார்த்தனை செய்கின்றனர். அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விபீஷணன், சமுத்திர ராஜன் தத்தமது மனைவிகளுடன் இருப்பதையும் காணலாம்.
பொதுவாக சயனக் கோலத்திலிருக்கும் பெருமாள்களின் கண் பார்வை மேலே பார்ப்பது போன்று இருந்தாலும், திருப்புல்லாணியில் சயனக் கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாளின் கண்பார்வை தன்னைக் காண வரும் பக்தர்களை நோக்கியிருப்பது மிகவும் விசேஷமானதாகும்.

விபீஷணன் சரணடைதல்

விபீஷணன் தன் சகோதரனான இராவணனின் கீழ்த்தரமான செயலைக் கண்டித்து, சீதாதேவியை இராமரிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினான். அதைக் கேட்டு கடுங்கோபமடைந்த இராவணன் உடனடியாக விபீஷணனை இலங்கையை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டான். விபீஷணன் தன் யோக சக்தியினால். சபையிலிருந்து வெளியேறி, காற்றில் பறந்த வண்ணம், தன் நான்கு அமைச்சர்களுடன் இராமர் இருந்த சேதுக்கரைக்கு வந்தார். விபீஷணன் இராமரிடம் அடைக்கலம் வேண்ட, இராமர் உடனடியாக அங்கதன், ஜாம்பவான் உட்பட பலரிடம் கருத்து கேட்டார்.

அனைவரும் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்பதற்கு பல காரணங்களைத் தெரிவித்தனர். இராமர் இறுதியாக ஹனுமானிடம் அபிப்பிராயத்தைக் கேட்டபோது, ஹனுமானோ, “உங்களுக்கு எனது ஆலோசனை தேவையில்லை, இருந்தும் நீங்கள் கேட்டுக் கொண்டதால் அதை நான் சேவையாகக் கூறுகிறேன்,” என தெரிவித்தார். மற்றவர்களின் கருத்தை மறுத்த ஹனுமான், முகமே மனதின் கண்ணாடி என்றும், அதனால் விபீஷணனை திருவடிகளில் ஏற்றுக்கொள்ளும்படியும் கூறினார்.

விபீஷணன் திருப்புல்லாணியில் இராமரிடம் சரணடைய வருதல்.

விபீஷணன் திருப்புல்லாணியில் இராமரிடம் சரணடைய வருதல்.

சரணாகதி க்ஷேத்திரம்

ஹனுமான் கூறியதைக் கேட்ட இராமர் புன்னகைத்தபடி, “யாரேனும் ஒருவர் என்னிடம் வந்து ’இன்றிலிருந்து நான் உங்களுக்கு சொந்தமானவன் என்று கூறி சரணாகதி அடைந்தால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பையும் பயமின்மையையும் நான் அளிப்பேன்,” என தெரிவித்தார். பின் இராமர் சுக்ரீவனிடம், “என்மீது இருக்கும் அன்பினால் எனக்கு எந்தத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருப்பதை நான் அறிவேன். இருப்பினும், நான் முழுமுதற் கடவுள் என்பதால், எனக்கு யாரும் தீங்கு விளைவிக்க முடியாது. என்னால் இலங்கையையும் மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு கண் அசைவினால் அழிக்க முடியும். இதனைப் புரிந்துகொள்ளுங்கள். இராவணனை அழிப்பதற்கு எவருடைய உதவியும் துணையும் எனக்குத் தேவையில்லை. இருந்தும் உங்கள் அனைவரையும் நான் என் சேவையில் ஈடுபடுத்துகிறேன்.”

மேலும் இராமர் கூறினார், “விபீஷணன் எனக்கு எதிராகச் செயல்படலாம் என நினைக்கிறீர்கள். ஆயினும், பக்தர்களான உங்களை நான் எவ்வாறு ஏற்றுள்ளேனோ, அதுபோல அவரையும் நான் ஏற்கிறேன். பல மக்களைத் துன்புறுத்தி, என் மனைவி சீதாதேவியை திருடிய இராவணனே இப்போது என்னிடம் சரணடைவதாகக் கூறினால், நான் இராவணனையும் ஏற்றுக் கொள்வேன். விபீஷணன் தற்போது பக்தனாகிவிட்ட காரணத்தினால், தாமதிக்காமல் உடனடியாக அவரை அழைத்து வாருங்கள்.”

சேதுக்கரை

சேதுக்கரை திருப்புல்லாணியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. விபீஷணன் திருப்புல்லாணியில் இராமரிடம் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சேதுக்கரையில் இராமர் விபீஷணனை இலங்கையின் மன்னனாக இராவணனிடம் போரிடுவதற்கு முன்பே முடிசூட்டினார்.

இராமர் பாலம் அமைக்க தேர்ந்தெடுத்த இடம் சேதுக்கரையாகும். மிதக்கும் கடல்நீரில் சாத்தியப்படாத பாலத்தைக் கட்டியதைக் கண்ட தேவர்கள், ரிஷிகள், சாரணர்கள், சித்தர்கள் என பலரும் சேதுக்கரைக்கு விரைந்து இராமருக்கு திவ்யமான பூஜை மற்றும் அபிஷேகத்தில் ஈடுபட்டனர். அதனால் இராமருக்கு சேதுராமர் என மற்றொரு திருநாமமும் உண்டு.

சேதுக்கரையில் ஹனுமான், சுக்ரீவன், நீலன் போன்ற சக்திமான்கள் உட்பட வானரப் படைகள் அனைவரும் பெரிய மலைகள் மற்றும் மரங்களைப் பெயர்த்து பாலம் கட்டுவதற்கு உதவினர். அங்கிருந்த சிறிய அணில் உட்பட அனைவரும் தத்தமது சக்திக்கு ஏற்றவாறு கற்களை சமுத்திர நீரில் தள்ளினர். பாலம் கட்டும் சேவையில் அனைவரும் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு செயல்பட்டதால், இராமரின் பார்வையில் அங்கு சேவையில் ஈடுபட்ட அனைவரின் பக்தியும் ஒன்றே.

சேதுக்கரையில் அமைந்துள்ள இராமர் கோயில்

அசுர உளவாளிகளின் சரணாகதி

இராவணன் இராமரின் படை பலத்தையும் போர் யுக்திகளையும் கண்டறிவதற்கு சுகன், சரணன் ஆகிய இருவரை உளவாளிகளாக அனுப்பினான். அவர்கள் இருவரும் யோக சக்தியினால் வானரங்களைப் போன்று மாறுவேடம் அணிந்து கொண்டனர். இருப்பினும், அவர்கள் இருவரும் விபீஷணனால் கண்டறியப்பட, வானரப் படையினர் அவர்களைப் புரட்டிப் போட்டனர். அப்போது அசுரர்கள் இருவரும் தங்களைக் காப்பாற்றும்படி இராமரிடம் சரணடைந்தபோது, இராமர் அவர்கள் இருவரையும் திருப்புல்லாணியில் காப்பாற்றி பயமின்மையைக் கொடுத்தார்.

அவர்கள் இருவரையும் வானரப் படைகளின் பிடியிலிருந்து விடுவித்த இராமர், தனது படையின் வலிமை மற்றும் திட்டத்தை அவர்களுக்கு எடுத்துரைத்து அதை இராவணனிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார். அவர்கள் இருவரின் மூலம் சரணடைவதற்கான வாய்ப்பினை இராவணனுக்கு மீண்டும் வழங்குவதாக தகவலையும் அனுப்பினார்.

சுருக்கமாகப் பார்த்தால், விபீஷணன், வருணன், வருண தேவி, சுகன், சரணன் ஆகிய அனைவரும் திருப்புல்லாணியில் இராமரின் திருப்பாதங்களில் சரணடைந்தவர்கள்.

பட்டாபிஷேகம்

சேதுக்கரையிலிருந்து இலங்கைக்கு பிரவேசித்த இராமர், இராவணனை வதம் செய்த பின்னர், சீதாதேவியுடன் புஷ்பக விமானத்தில் அயோத்தியை வந்தடைந்தார். அப்போது விமானம் சேதுக்கரையின் மீது பறந்தபோது, இராமர் தான் கட்டிய பாலத்தையும் சேதுக்கரையையும் சீதாதேவிக்குக் காண்பித்தார்.

(ஸ்தல புராணத்தின்படி) சுற்றியிருந்த பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க புஷ்பக விமானம் திருப்புல்லாணியில் சிறிது நேரம் தரையிறங்கியது. திருப்புல்லாணியில் பக்தர்களின் மகிழ்ச்சிக்காக இராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அணுகும் முறை

பொதுவாக திருப்புல்லாணிக்குச் செல்லும் மக்கள் பாவங்கள் நீங்குவதற்கு, முக்தி பெறுவதற்கு, நவகிரஹங்களின் தீய விளைவுகளிலிருந்து விடுபடு வதற்கு, புத்திர பாக்கியத்திற்கு, பித்ரு ஹோமம் செய்வதற்கு என பல காரணங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றனர். இருப்பினும், திருப்புல்லாணி ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலம் என்பதை உணர்ந்துள்ள பக்தர்கள், பகவானுக்கு சேவை செய்யக்கூடிய சிறந்த மனநிலையை அருளும்படி இங்கே வேண்டுகின்றனர்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு திருப்புல்லாணிக்கு விஜயம் செய்த தகவல் சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய லீலை 9.198) காணப்படுகிறது. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை இங்கே அவர் பாடி ஆடினார். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாமும் நாம ஸங்கீர்த்தனத்துடன் திருப்புல்லாணியை அணுகுவோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives