தீவிரமான பக்தித் தொண்டு

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஏதாவான் ஏவ லோகே ’ஸ்மின் பும்ஸாம் நி:ஷ்ரேயஸோதய: தீவ்ரேண பக்தி-யோகேன மனோ மய்யர்பிதம் ஸ்திரம்

 

“எனவே, பகவானிடம் மனதைப் பதித்தவர்கள் தீவிர பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார்கள். வாழ்வின் இறுதிப் பக்குவத்தைப் பெறுவதற்கான ஒரே வழி இதுவே.” (ஸ்ரீமத் பாகவதம் 3.25.44)

இந்த ஸ்லோகம் பகவான் கபிலதேவர் தன் அன்னைக்கு உரைத்ததாகும். ஞானத்திலும் துறவிலும் முன்னேறியவன் பக்தி யோகத்தில் ஈடுபடுகிறான் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். பக்தி யோகமானது முட்டாள்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் உரியது அல்ல. ஞானத்திலும் துறவிலும் முன்னேறியவர்கள் பக்தித் தொண்டினை ஏற்கின்றனர். கிருஷ்ணர் பகவத் கீதையில் உரைக்கும் போதனைகளை நாம் ஏற்கும்போது பக்தி யோகம் ஆரம்பமாகிறது. ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, எல்லா விதமான தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டும் சரணடைவாயாக.” (பகவத் கீதை 18.66) நாம் நம்முடைய போலியான தர்மங்கள் எல்லாவற்றையும் நிராகரித்து கிருஷ்ணரின் பாத கமலங்களை ஏற்க வேண்டும்.

துன்பம் நிறைந்த பௌதிக உலகம்

ஆனால் நாம் பல்வேறு தர்மங்களை உருவாக்கி வைத்துள்ளோம், ஜடவுலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஆனால் இந்த உலகம் து:காலயம் அஷாஷ்வதம்  (துன்பத்தின் இருப்பிடம்) என்று புருஷோத்தமராகிய

முழுமுதற் கடவுளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உலகம் துன்பத்திற்கான இடமாகும், இந்த உடல் துன்பத்திற்கான உடலாகும், இந்த பூமி துன்பத்திற்கான பூமியாகும். ஆனால் நாம் இவற்றைப் புரிந்துகொள்வதில்லை. இந்தத் துன்பகரமான உலகிலும் நாம் இன்பத்தைத் தேடுகிறோம். அதற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி முயற்சி செய்கிறோம். இதுவே வாழ்க்கையின் போராட்டம் எனப்படுகிறது. நாம் ஒரு திட்டத்தைத் தீட்டுகிறோம், அஃது இயற்கையின் சட்டத்தினால் முறியடிக்கப்படுகிறது. இதுவே மீண்டும்மீண்டும் நடைபெறுகிறது. உலக வரலாற்றினை நாம் படித்தால் அங்கே துன்பங்கள் மட்டுமே இருப்பதைக் காண முடியும். துன்பத்திலிருந்து விடுபட நாம் சில திட்டங்களைத் தீட்டுகிறோம், ஆனால் அது மேலும் துன்பங்களை நமக்கு வழங்குகிறது என்பதே உண்மை.

 

எனவே, இந்த உலகின்மீது பற்றின்மையை வளர்த்துக் கொள்வதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். இதுவே முக்தி எனப்படுகிறது. பௌதிக சங்கத்தினைத் துறந்து ஆன்மீகத் தளத்திற்கு வரவேண்டும். நாம் ஆன்மீக ஆத்மாக்கள் என்பதால், நம்முடைய உண்மையான இடம் ஆன்மீக இடமாகும். நம்முடைய உண்மையான செயல் ஆன்மீக செயலாகும். அப்போது நாம் மகிழ்ச்சியாக இருப்போம். நான் பலமுறை வழங்கிய உதாரணத்தினை மீண்டும் வழங்குகிறேன். நிலத்தில் வாழ வேண்டிய நம்மை நீரினுள் இட்டால், நீச்சலில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அங்கே வாழ்க்கைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீரில் மகிழ்ச்சி என்பதற்கு இடமிருக்காது. நீரிலிருந்து நிலத்திற்கு வந்தவுடன் விடுதலையை உணர்வோம். இதுவே நமது நிலையாகும். நாம் புலனுகர்ச்சியை அனுபவிப்பதற்காக ஜடவுலகத்திற்கு வந்துள்ளோம். புலனின்பத்தை அனுபவிப்பதில் நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், ஒருபோதும் நாம் வெற்றியடைய மாட்டோம். பௌதிகச் செயல்களை விட்டுவிட்டு ஆன்மீக வாழ்விற்கான செயல்களில் நாம் ஈடுபட வேண்டும்.

தவறான பற்றுதல்களைத் துறப்போம்

இக்கருத்து இந்த ஸ்லோகத்தில் உதய: என்னும் வார்த்தையின் மூலமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதய: என்றால் உதயமாகுதல் என்று பொருள். நாம் தற்போது இருளில் உள்ளோம். காலையில் சூரியன் உதயமாகும் போது வெளிச்சம் வரும். அதுபோல, பௌதிக உலகம் என்னும் இருளிலிருந்து நாம் ஆன்மீக வாழ்வின் வெளிச்சத்திற்கு வர வேண்டும். “இந்த ஜடவுலகில், இந்த திட்டத்தின் மூலமாக நான் மகிழ்ச்சியடைவேன்,” என்று நாம் பல்வேறு நம்பிக்கையுடன் வாழ்கிறோம். ஆனால் மகிழ்ச்சி என்றும் கிடைக்கப்போவதில்லை.

 

நம்முடைய முயற்சி பாலைவனத்திற்குச் சென்று கானல்நீரைப் பார்த்து ஓடக்கூடிய மிருகத்தைப் போன்றதாகும். அந்த மிருகம் நீரைத் தேடி ஓடுகிறது, நீர் அதன் கண்களிலிருந்து தூரமாக சென்று கொண்டே உள்ளது. இவ்விதமாக, கடும் தாகத்தினால் அது மடிந்துவிடுகிறது. அதுபோலவே நாமும் “இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் போதும், நான் மகிழ்ச்சியடைந்து விடுவேன்,” என்று எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால் உண்மையான நீர் எங்கே உள்ளது? பாலைவனத்தில் நீர் கிடையாது. ஆனால் மிருகத்தைப் போன்று குறைபுத்தியுடைய மக்கள் இந்த ஜடவுலகில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். எனவே, இந்த தவறான பற்றுதல்களைத் துறந்து பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது.

தனக்கு தீங்கிழைத்த தந்தைக்கும் முக்தியை

வேண்டிய பிரகலாதர்.

இறுதி நன்மையைத் தேடுவோம்

இந்த ஸ்லோகத்தில் உள்ள தீவ்ரேண என்னும் சொல், பக்தி யோகத்தினை மேலோட்டமாக அன்றி தீவிரமாக ஏற்க வேண்டும் என்று உரைக்கிறது. ஷ்ரேய என்னும் சொல், இறுதி நன்மை என்று பொருள்படுகிறது. ப்ரேய, ஷ்ரேய என்று இரண்டு விஷயங்கள் உள்ளன. உங்களுடைய இறுதி மகிழ்ச்சியை நோக்கி நீங்கள் செயல்பட்டால், அது ஷ்ரேய என்று அழைக்கப்படுகிறது. வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுடைய உடனடி மகிழ்ச்சியை நோக்கிச் செயல்பட்டால், அது ப்ரேய என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக குறைபுத்தியுடைய மனிதர்களும் குழந்தைகளும் ப்ரேய நிலையை விரும்புவர். குழந்தை நாள் முழுவதும் விளையாட விரும்புகிறது (ப்ரேய), அதனைப் பள்ளிக்கு அனுப்ப நீங்கள் நினைத்தால் (ஷ்ரேய) அஃது அதனை விரும்புவதில்லை. ஷ்ரேய என்பதே இறுதி நன்மையாகும், ஆனால் அதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. பக்தி யோகமே மிகவுயர்ந்த ஷ்ரேயம் ஆகும். நீங்கள் கிருஷ்ண உணர்வை எடுத்துக் கொண்ட மாத்திரத்தில் உங்களுடைய இறுதி நன்மை உடனடியாகத் தொடங்கிவிடுகிறது.

யாரைப் பற்றிக் கேட்பது?

பக்தி யோகத்தில் ஒன்பது வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஷ்ரவணம், கேட்டல் என்பது மிகமிக முக்கியமானதாகும். யாரைப் பற்றி கேட்பது? விஷ்ணுவைப் பற்றிக் கேட்க வேண்டும், மற்ற விஷயங்களை அல்ல. பக்தி என்னும் சொல்லினை முழுமுதற் கடவுளுடனான உறவில் மட்டுமே உபயோகிக்க முடியும். தேச பக்தி, சமுதாய பக்தி, குடும்ப பக்தி, பூனை பக்தி, நாய் பக்தி என்றெல்லாம் கூற முடியாது. முழுமுதற் கடவுளுடனான உறவு மட்டுமே பக்தியாகும். ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ:, விஷ்ணுவைப் பற்றிக் கேட்க வேண்டும், ஏதோ ஒரு விஷயத்தை அல்ல. “நான் நாட்டின் நன்மையைப் பற்றிக் கேட்கிறேன், சமுதாயத்தின் நன்மையைப் பற்றி கேட்கிறேன், மனிதர்களின் நன்மையைப் பற்றிக் கேட்கிறேன்,” என்று கூறினால், அது பக்தியல்ல. அது மாயை.

எவ்வளவு திறன் வாய்ந்த நீச்சல்காரராக இருந்தாலும், நீரில் வாழ்வது நமது இயற்கைக்கு முரணானது.

அனைவருக்குமான சேவை

நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி பேசி கிருஷ்ணரைப் பற்றி கேட்டால், அதில் அனைத்தும் உள்ளடங்கிவிடும். உதாரணமாக, நீங்கள் மரத்தின் பூக்களில் ஆர்வம் காட்டினால், பூக்களுக்கு நீரூற்றக் கூடாது, பூக்களுக்கு நேரடியாக நீரூற்றினால் அவை வாடிவிடும். மரத்தினுடைய வேருக்கு நீரூற்றினால், உங்களுடைய பூக்களும் பழங்களும் தானாக வளரும். அதுபோல கிருஷ்ணருக்குத் தொண்டாற்றினால், அப்போது உங்களுடைய சமூக சேவை, நாட்டு சேவை, குடும்ப சேவை என அனைத்தும் பக்குவமாகப் பார்த்துக் கொள்ளப்படும். சமூக சேவைக்காகவும் இதர சேவைக்காகவும் தனிப்பட்ட முயற்சி எடுக்கத் தேவையில்லை. எனவே, தீவ்ரேண பக்தியோகேன, பக்தியில் பிறழாது தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. “நான் கிருஷ்ண பக்தனாகி கோயிலில் அவரை வழிபட்டால், எனது நாட்டிற்கு என்ன ஆகும்? எனது குடும்பம் என்ன ஆகும்?” என்று நினைக்க வேண்டாம். அவை தானாகப் பார்த்துக் கொள்ளப்படும். நீங்கள் இங்கே கிருஷ்ணருக்கு சேவை செய்தால், அதுவே உங்களுடைய குடும்பத்திற்கும் சமூகத்திற்குமான மிகச்சிறந்த சேவையாகும்.

தந்தையின் மரணத்திற்கு காரணமான மகன்

பிரகலாத மஹாராஜாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் பகவானுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை ஹிரண்யகசிபு அதனால் மிகவும் கோபம் கொண்டார். அவ்வாறு ஏற்பட்ட சர்ச்சையின் இறுதியில், அவரது தந்தை நரசிம்மதேவரால் கொல்லப்பட்டார். பிரகலாதரும் அதைக் கண்டார். உங்களுடைய தந்தை உங்களுக்கு முன்பாக கொல்லப்படுகிறார் என்றால், அந்த சூழ்நிலையில் நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அல்லது தந்தையைப் பாதுகாக்காமல் இருந்தால், யாரேனும் உங்களுடைய செயலை ஒப்புக்கொள்வாரா? இல்லை. உங்களை ஒரு கோழை என்று அனைவரும் தூற்றுவர்.

 

ஆனால் பிரகலாத மஹாராஜா தனது தந்தைக்கு மிகப்பெரிய சேவையை செய்தார். ஏனெனில், ஒருவன் கடவுளால் கொல்லப்பட்டால், அவன் அசுரனாக இருந்தாலும் உடனடியாக முக்தி பெறுகிறான் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

 

பகவான் நரசிம்மதேவர் பிரகலாதருக்கு வரமளிக்க முன்வந்தபோது, பிரகலாதர் பகவானிடம் கூறினார்.  “அன்பார்ந்த பகவானே, நான் உங்களுக்கு செய்த சேவைக்காக உங்களிடமிருந்து ஏதேனும் விரும்பினால், அது வியாபாரம் போன்றதாகிவிடும். உங்களுடைய நித்திய சேவகனான நான் உங்களிடமிருந்து எதையும் பெற விரும்பவில்லை. இருப்பினும், ஒரு விஷயத்தை நான் கேட்கிறேன். என் தந்தை பெரும் நாஸ்திகராக இருந்தார். உமது பாத கமலங்களுக்கு எதிராகப் பெரும் குற்றங்களை இழைத்தார். இப்போது நீர் அவரைக் கொன்றுள்ளீர். அவரை மன்னித்து அவருக்கும் முக்தியளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”

 

உண்மையில், ஹிரண்யகசிபு ஏற்கனவே முக்தி பெற்றிருந்தான். எனினும், அவன் மீதான பாசத்தினால், அவனுக்கு முக்தி கிடைத்துவிட்டதா என்பதை அறிய பிரகலாதர் ஆவலாக இருந்தார். ஒரு வைஷ்ணவன் முக்தி பெறும்போது அவனின் தந்தை மட்டுமின்றி, அவனுடைய பதினான்கு தலைமுறைகள் முக்தி பெறுகிறார்கள் என்று பகவான் உறுதியளித்தார்.

 

கருத்து என்னவெனில், முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதால், ஒருவன் தனது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் மிகவுயர்ந்த சேவை செய்கிறான். எனவே, நாம் பக்தி யோகத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும், நமது கவனத்தை வேறு எதிலும் திசைதிருப்பக் கூடாது.

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்டல் மிகச்சிறந்த வழிமுறையாகும். இதர விஷயங்களைக் கேட்பது நமக்கு உதவாது.

இஸ்கான், பக்திக்கான வழி

பக்தி யோகம் என்றால் விஷ்ணுவின் பெயரை உச்சரிப்பதாகும், விஷ்ணுவிற்கு சேவை செய்வதாகும். பகவான் விஷ்ணு பல்வேறு ரூபங்களைக் கொண்டுள்ளார். சில வைஷ்ணவர்கள் ராதா-கிருஷ்ணரை வழிபடுகின்றனர், சிலர் சீதா-ராமரையும் சிலர் லக்ஷ்மி-நாராயணரையும் சிலர் ருக்மிணி-கிருஷ்ணரையும் வழிபடுகின்றனர். அவர்கள் அனைவருமே வைஷ்ணவர்கள்தான். ஆனால் நாம் தேவர்களை வழிபடுவதில் ஈடுபடக் கூடாது.

 

பக்தித் தொண்டில் ஒன்பது வழிமுறைகள் உள்ளன. இவற்றில் கலி யுகத்தில் நாங்கள் ஷ்ரவணம், கீர்தனம் என்பதை வலியுறுத்துகிறோம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இதனைப் பரிந்துரைத்துள்ளார். உங்களுடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அஃது ஒரு பொருட்டல்ல. நீங்கள் பக்தரைத் தேடி, அவரிடமிருந்து கிருஷ்ணரைப் பற்றி கேட்க வேண்டும். நீங்கள் உங்களுடைய சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்பது அவசியமில்லை, ஆனால் கிருஷ்ணரைப் பற்றி கேட்க வேண்டும். அதுவே எங்களுடைய இயக்கமாகும். கிருஷ்ண பக்தி இயக்கம் மக்கள் கிருஷ்ணரைப் பற்றி கேட்பதற்கான வாய்ப்பினை பல்வேறு வழிமுறைகளில் வழங்குகிறது.

 

கிருஷ்ணரைப் பற்றி கேட்பதில் ஆர்வமிருப்பவர்கள் படிப்படியாக பக்தியை எடுத்துக்கொள்வதை நாங்கள் கண்கூடாகக் காண்கிறோம். ஏனெனில், கிருஷ்ணரைப் பற்றி கேட்டலே பக்தியின் தொடக்கமாகும். கிருஷ்ண தத்துவங்கள் உங்களுக்குப் புரியாவிடினும் தொடர்ந்து கேளுங்கள். அப்போது நீங்கள் தூய்மையடைவீர்கள். இதுவே வழிமுறையாகும். கேட்பதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், அப்போது நீங்கள் தூய்மையடைவீர்கள். அதன் பின்னர் கடவுளைப் பற்றியும் கடவுளுடனான உறவினைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள்.

 

இன்றைய உலகில் பாவத்தின் நான்கு தூண்களான தகாத பாலுறவு, மாமிச உணவுகள், போதைப் பொருட்கள், சூதாட்டம் ஆகிய தொழில்கள் நிரம்பிக் கிடக்கின்றன. உலகம் முழுவதும் இந்தச் செயல்கள் மேலோங்கி உள்ளன. அரசாங்கமே இவற்றிற்கு ஏற்பாடு செய்வதை நீங்கள் காணலாம். இந்த அபாயகரமான சூழ்நிலையில் நாங்கள் கிருஷ்ண உணர்வினை பிரச்சாரம் செய்து ஊக்குவித்து வருகிறோம். இஃது எவ்வளவு கடினமான காரியம் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவோ தடைகள் இருப்பினும், இயக்கம் வளர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் தடைகளைப் பொருட்படுத்துவதில்லை. இதுவே தீவிரமான பக்தி எனப்படுகிறது. இத்தகைய பக்தியில் ஈடுபடுவதே நமது கடமையாகும். மிக்க நன்றி.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives