நாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை?

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

நம்மில் பலரும் நம்மை பக்தர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளோம், அவ்வாறே பலரால் பாராட்டப்படுகிறோம். ஆயினும், தூய பக்தராக நம்மால் ஆக முடிவதில்லை, இறைவனின் நேரடி சம்பந்தம் இன்னும் ஏற்படாத நிலையில் இருக்கலாம். ஏன் நம்மால் புராண கால பக்தர்களைப் போன்று உன்னத பக்தர்களாக மாற முடியவில்லை என்பது பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்.

எதிர்பார்ப்புடன் கூடிய பக்தி

“பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணருக்கு, சாதகமான முறையில், எவ்வித இலாபத்தையும் எதிர்பார்க்காமல், பலன்நோக்குச் செயல்கள், தத்துவ கற்பனைகள் ஏதுமின்றி, திவ்யமான அன்புடன் தொண்டாற்ற வேண்டும். இதுவே தூய பக்தித் தொண்டு எனப்படுகிறது.” (பக்தி ரஸாம்ருத சிந்து 1.1.11)

நம்முடைய பக்தி இந்த வரையறையின்படி இல்லாமல், பல்வேறு பௌதிக ஆசைகள் கலந்து காணப்படுவது முதல் பிரச்சனையாகும்.

சில நேரங்களில் நாம் நமது குடும்ப சூழ்நிலையினாலோ கலாச்சாரத்தினாலோ கடவுள் நம்பிக்கையுடன் வாழலாம். இளமையில் நாத்திகராக இருந்து விட்டு, வயது மூப்பின் காரணத்தினால், மரண பயத்தின் உணர்வினால் பக்தர்களாக மாறியிருக்கலாம். அந்த நிலையிலிருந்து முன்னேற்றம் பெறாமல், பக்தி முறையினைத் தொடர்ந்து மரண பயத்தினால் பயிற்சி செய்யக் கூடாது. அல்லது கடவுளை நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சக்தி என்று எண்ணுவதால், நாம் அதற்கு மேல் அவருடனான உறவினை நினைத்துகூடப் பார்ப்பதில்லை. “கடவுளே எனக்கு இது வேண்டும், அது வேண்டும்,” என்ற எதிர்பார்ப்பு நிலையிலிருந்து வெளிவராவிடில், கடவுளும் தனது பக்தர்களிடம் நேரடி சம்பந்தத்தினை ஏற்படுத்த மாட்டார். அத்தகு பக்தரிடம் பூரணமான பக்தி இல்லை. எனவே, இத்தகைய கலாச்சார பக்தியினால் பூரணமான பக்தராக மாறுவது இயலாது.

கிருஷ்ணரை அறிவதில் ஆர்வமின்மை

“பரம புருஷ பகவானைப் பற்றி அறிவதால், பிறப்பு இறப்பிலிருந்து விடுபட்டு முக்தியின் பக்குவநிலையை அடைய முடியும். இப்பக்குவத்தை அடைவதற்கு வேறு எந்த வழியும் இல்லை.” (ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 3.8)

 

நாம் இஸ்கான் கோயிலுக்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் வரலாம், அல்லது பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் செல்லலாம், அல்லது திருப்பதிக்கு மாதந்தோறும் (அல்லது வருடந்தோறும்) பாதயாத்திரை செல்லலாம். அப்போதும்கூட கிருஷ்ணரின் மீதான தூய அன்பு மேலோங்காமல் இருக்கின்றது. இதற்கு நாம் கிருஷ்ணரின் மீது பற்றுதல் கொள்ளாமல் இருப்பதுவே காரணமாகும்.

 

“எனக்கு கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும், எனது இஷ்ட தெய்வம் கிருஷ்ணரே,” என்று கூறுபவர்கள்கூட, சிறிது நேர தத்துவ விளக்கங்களை பொறுமையுடன் கேட்க முடியாமல் தவிப்பதைக் காணலாம். “ஏதேனும் கதை இருந்தால் கூறுங்களேன், அந்த சொற்பொழிவாளர் மிகவும் அழகாக உரையாற்றுவார். அவரது உபன்யாசங்கள் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும், ஆனால் நீங்கள் தத்துவங்களையே பேசுகிறீர்கள்,” என தத்துவங்களைப் புரிந்துகொள்ள முடியாத தங்களது இயலாமையை வேறு விதத்தில் வெளிப்படுத்துவதை நம்மில் பலர் கேட்டு இருக்கலாம். நூல்களில் அல்லது பத்திரிகைகளில்கூட கதைகளைச் சொல்லும் நூலாகத் தேடிப் படிப்பதையும் பார்த்திருக்கலாம்.

 

இவை கிருஷ்ணரின் மீதான பற்றற்ற பக்தியினைக் குறிக்கின்றன. நாத்திகர்களாக இருப்பதைவிட, பிற தேவர்களை வழிபடுவதைவிட இந்த நிலை மேலானது என்றபோதிலும், இத்தகு பக்தர்கள் பகவானைப் பற்றிய விவரங்களில் ஆர்வத்தினை வளர்த்துக்கொள்ளாது இருப்பதால், அந்த இஷ்ட தெய்வத்தின் பரிபூரண அனுக்ரஹம் கிடைக்கவில்லை.

நமது ஒவ்வொரு புலன்களும் நம்மை ஒவ்வொரு திசையில் இழுக்கின்றன. புலன்களை கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்தாமல், அதீத புலனின்பத்தில் ஈடுபடுத்தினால், பக்தியில் முன்னேற முடியாது.

அதீத புலனின்பம்

“நீரின் மீதுள்ள படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் புலன்களில் ஏதேனும் ஒன்றின் மீது மனம் ஈர்க்கப்பட்டு விட்டால், அந்த ஒரே ஒரு புலன்கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.” (பகவத் கீதை 2.67)

 

24 மணி நேரமும் கோயிலிலேயே இருந்தால்கூட, கட்டுப்பாடற்ற புலனின்பமும் அவற்றினை நிறைவேற்ற முடியாத ஏக்கமும் இருக்கும்வரை, நம்மால் இறைவனின் பூரண பக்தனாக மாறவே இயலாது. பெரும் செல்வந்தனைப் பார்த்தால் அவனைக் கண்டு ஏக்கமுறுதல், அழகிய பெண்கள் அல்லது கட்டுக்கோப்பான ஆண்கள் வந்தால் அவர்களைப் பார்த்து சபலப்படுதல், தன்னை யாரேனும் சிறந்த பக்தனென்று பாராட்ட மாட்டார்களா என்று ஏங்குதல், கிருஷ்ணருக்கான பிரச்சாரப் பணி என்ற போர்வையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் குவித்தல் போன்றவற்றை பக்தர்களின் எண்ணற்ற புலனின்பத்திற்கு சில உதாரணமாகக் கொடுக்கலாம். இவ்வாறு புலனின்பத்தை மையமாக வைப்பதால், பக்தர்களின் பிரார்த்தனைகள் உன்னதமானவையாக இருப்பதில்லை.

உரிமை கோருதல்

“நான், எனது” என்ற உணர்வே பக்தி பாதையில் இருப்பவனின் மிகப்பெரிய எதிரியாகும், உண்மையில் ஜட வாழ்விற்கே இதுதான் எதிரி. “நானே அனுபவிப்பாளன். நான் இதனை நம்புவதால், இதுதான் சரி; எனக்கு இந்த மதம் பிடித்திருப்பதால் இந்த மதம் தான் சரி; எனக்கு இந்த கடவுள்தான் கடவுளாக இருக்க தகுதியுடையவர் என்று தோன்றுவதால், இவர்தான் கடவுள்; மற்றவர்களுடைய நம்பிக்கை எனக்கு பிடிக்காததால், அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள்”–இதுபோன்ற எண்ணங்களே நம்மை அழிக்கின்றன. “எனக்கு எல்லாம் தெரியும், எனது அறிவே உண்மையில் பூரணமானது,” என்று குருட்டுத்தனமாக நாம் நம்புவதால், உண்மையான அறிவு நமக்குக் கிட்டும்போதும் அதனை எளிதில் புறந்தள்ளி விடுகின்றோம். உதாரணமாக, பகவத் கீதை கையில் கிடைக்கும்போதும், அதனை ஏற்காது புறந்தள்ளி விடுகின்றனர்.

 

பகவத் கீதையை பக்தர்களை அணுகி அறிந்துகொள்வதற்கு பதிலாக, “எனக்கு என்ன புரிந்ததோ, அதுவே ஞானம்,” என்று நினைத்து ஏமாறுபவர்கள் பலர் உண்டு. “உனக்கு நீயே குரு, கடவுளுக்கும் உனக்கும் இடையில் இடைத்தரகர்கள் ஏன்?” போன்ற அறிவற்ற கேள்விகளால், உண்மையான அக்கறை காட்டும் மக்கள்கூட பகவானின் உண்மையான பக்தர்களின் உதவியை இழந்துவிடலாம். எல்லாம் என்னைச் சுற்றியே நடக்க வேண்டும் என்று எண்ணுபவனால் பக்தனைப் போன்று நடிக்க முடியுமே தவிர உண்மையான பக்தனாக முடியாது. ஏனெனில், உண்மையான பக்தி என்பது எல்லாம் பகவான் கிருஷ்ணரைச் சுற்றியே என்ற உணர்வாகும்.

வைகுண்டம் செல்ல விரும்புபவர்கள் வைகுண்டத்தைப் பற்றிய அறிவினை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

மனக் கற்பனை

“எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக்கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துள்ளானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான்.” (பகவத் கீதை 11.55)

 

பக்தர்களுக்கு மற்றுமொரு மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது மனக் கற்பனை. இறைவன் தன்னிடம் எவ்வாறு பழகுவார் என்பதில் ஆரம்பித்து, கிருஷ்ணருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று அனைத்தையும் தன் மனக் கற்பனையின் மூலம் நினைப்பவர்களே இங்கு அதிகம். மேலும், “இறைவன் என்னிடம் பேசுவான், இறைவன் என்னிடம் கோபம் கொள்வான்,” என்று தொடங்கி இவர்களின் மனக் கற்பனைக்கு எல்லையே இல்லாது செல்லும். இது மனோவியாதிக்கு வழிவகுக்குமே ஒழிய இறையுணர்வை வளர்க்க உதவாது.

 

தன்னை கிருஷ்ணருடைய நண்பன் என்றும், தாய் என்றும், காதலி என்றும், கற்பனை செய்பவர்களும் உள்ளனர். கிருஷ்ணருக்கு நண்பர்கள், தாய்மார்கள், காதலிகள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வாறு இருப்பதற்கு நாம் தகுதி வாய்ந்தவர்களா என்பதே கேள்வி.

 

பணக்காரனின் நண்பன் பெரும்பாலும் பணக்காரனாகவே இருப்பான், அதே நேரத்தில் அவனுடைய வேறு ஏதேனும் குணத்துடன் ஒத்துப்போகும் ஏழையும் அவனது நண்பனாக இருக்க முடியும். ஆனால் எதிலுமே ஒத்துப்போகாத நண்பர்கள் இருக்க முடியுமா? கிருஷ்ணரின் உணர்வுடன் எதிலும் ஒத்துப்போகாமல், முற்றிலும் உடல் உணர்வில் வாழக்கூடிய ஜீவன்களால், கிருஷ்ணருடைய நண்பனாக, தாயாக, காதலியாக இருப்பது இயலாததாகும். அவ்வாறு கூறுபவர்களும் அதனை விசாரிக்காமல் ஏற்பவர்களும் பக்தியில் உன்னதத்தினை அடையவே இயலாது.

 

ஒருவன் பக்தனா இல்லையா என்பதை மனக் கற்பனையின்படி முடிவு செய்யக் கூடாது. பக்தன் என்பவன் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படுபவன் அல்ல. ஒருவரது பக்தியையும் அவர் நமக்கு வழிகாட்ட தகுதியுடையவரா என்பதையும் அவருடன் பழகி பரிசோதித்து முடிவு செய்ய வேண்டும். (ஹரி பக்தி விலாஸ 1.73) மாறாக, இந்த பக்தர் அதிக சீடர்களைக் கொண்டுள்ளார், இவர் மிகவும் பிரபலமானவர், இவருடைய சிரிப்பு நன்றாக இருக்கும், இவர் சக்தி வாய்ந்தவர் என்றெல்லாம் நினைத்து நாம் முடிவு செய்யக் கூடாது.

தெளிவற்ற ஆன்மீக உலக அறிவு

“எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.” (பகவத் கீதை 15.6)

வைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஈமக்கிரியை பத்திரிகையில் அச்சடித்துக்கொள்ளும் நாம் வைகுண்டம் என்றால் என்ன என்றோ, அங்குள்ள சூழ்நிலை என்ன என்றோ, அங்குள்ள மக்களின் உடலமைப்பு, செயல்பாடுகள், இறைவனின் செயல்பாடுகள் என எதுவுமே தெரியாது இருப்பர். இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஒருவன் அங்குள்ள சூழ்நிலையினை உணராது சென்றால், அவன் குளிரிலும், நமது உணவின்றியும் துன்பப்படுவது உறுதி. எங்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவின்றி இருப்பவர்கள் பலர். வைகுண்டம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களில் பலரும், வைகுண்டத்தினை ஸ்வர்கத்தைப் போல நினைக்கின்றனர், வைகுண்டம் சென்றால் ஸ்வர்கத்தைப் போல புலனின்பத்தை அனுபவிக்கலாம் என்று நினைக்கின்றனர். வைகுண்ட வாசல் திறக்கப்படும்போது, “ஸ்வர்க வாசல் திறப்பு” என்று கூறிக்கொள்கின்றனர்.

ஆன்மீக உலகினைப் பற்றி இவ்வாறு தெளிவின்றி இருந்தாலும், இறைவனின் செயல்பாடுகளைப் பற்றி தெளிவின்றி இருந்தாலும், நமக்கு வைகுண்ட பிராப்தி கிடைக்காது.

குழப்பங்களின் உச்சம்

 

“தூய பக்தன், உண்மை என்ன என்பதை தெளிவாக அறிந்துள்ளதால், பகவத் கீதையின் மீதான தவறான கருத்துரைகளால் அவன் குழம்புவதில்லை. பகவத் கீதையின் மூலப் பதங்கள் சூரியனைப் போன்று தெளிவானவை; முட்டாள் கருத்துரையாளர்களின் விளக்கொளி அவற்றிக்குத் தேவையில்லை.” (பகவத் கீதை 11.51 – பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர்)

 

பக்தனாக இருப்பவன் எந்த கேள்வியும் கேட்காமல் பக்தியில் இருந்தால், அவன் எதற்கும் பயன்பட மாட்டான். தன்னையறியும் ஞானம்கூட இல்லை என்றால், பக்தி எவ்வாறு வளரும்? கடவுளுக்கு ஏன் உருவம் இருக்கக் கூடாது என்று எந்த முஸ்லீமும் கேட்பதில்லை. கடவுள் ஏன் நமது பாவங்களுக்காக இறக்க வேண்டும் என்று எந்த கிறிஸ்துவனும் கேட்பதில்லை. நாம் ஏன் இத்தனை கடவுள்களைக் கொண்டுள்ளோம், இந்த உருவங்கள் எல்லாம் என்ன என்று எந்த இந்துவும் கேள்வி கேட்பதில்லை. நமக்கு அருள் புரிய வரும் இந்த சாமியார் ஏன் பன்னாட்டு நிறுவனங்களைப் போன்று கோயிலைக் கட்டியுள்ளார் என்று எந்த யோகா மாணவனும் கேட்பதில்லை.

 

தெளிவான சித்தாந்தங்களைப் படிக்காமல், குழப்பத்திலேயே இருந்தால் யாருக்கு என்ன பயன்? நமக்கே என்ன பயன்? இவ்வளவு சொல்லிய பிறகும் பகவான் கிருஷ்ணரே புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது இருப்போமானால் நமது இலக்குதான் என்ன?

 

வருடத்திற்கு ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று மட்டும் 1008 முறை காயத்ரி மந்திரம் கூறுபவர்கள் (தினசரி மூன்று வேளை கூற வேண்டியது), புரட்டாசி மாதத்தில் மட்டும் மாமிசத்தைக் கைவிடும் பெருமாள் பக்தர்கள், கிரிக்கெட் போட்டி இருந்தால் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கும் உன்னத பக்தர்கள், மரணத்தின் வலியினை மறக்க சாராயம் குடிக்கும் மாக்கள், 30 நிமிட பஜனை முடிந்த பின்பு 3 மணி நேரம் ஊர்க்கதை பேசும் பக்தர்கள், சுற்றுலா செல்லும் சாமியார்கள், நீண்ட நேரம் கடவுளைப் பற்றி பேசி விட்டோம், கேட்டு விட்டோம் என்று இடைவெளி எடுக்கும் பக்தர்கள், வாழ்நாள் முழுவதும் 24 மணி நேரம் பக்தி செய்ய வேண்டும் என்றால் அரண்டு போகும் பக்தர்கள், 108 முறை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை மனதில் பதியாது கடமையாகக் கூறிவிட்டு இன்றைய கணக்கு முடிந்தது என்று திருப்தியடையும் பக்தர்கள் (இதில் தொலைக்காட்சி, கணிப்பொறி, மொபைல் போன் போன்றவற்றினை பயன்படுத்திக் கொண்டே மந்திரம் சொல்லுபவர்கள்) அநேகம் பேர் இவர்கள் எல்லாம் இறைவனை விரும்பாது பக்தி செய்யும் மனிதர்களுக்கான உதாரணங்கள்.

வைஷ்ணவ அபராதம்

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று உள்ளது வைஷ்ணவ அபராதம். சில மாதங்கள் தொடர்ச்சியாக கோயிலுக்கு வருவதாலேயே தங்களை பெரிய பக்தர்கள் என்ற போர்வைக்குள் நினைக்கத் தொடங்கிவிடுகின்றனர். உண்மையான பக்தர்களை அவமரியாதை செய்வதன் மூலமாக தங்களுடைய முன்னேற்றத்திற்கு தாங்களே தடை அமைக்கின்றனர். வைஷ்ணவ அபராதம் என்பது மதம் பிடித்த யானை தோட்டத்திற்குள் நுழைவதைப் போன்றதாகும். எவ்வாறு அந்த யானை மரங்களை வேருடன் சாய்த்து விடுமோ, அதுபோன்றே நமது பக்தி என்னும் கொடியினையும் வைஷ்ணவ அபராதம் வேருடன் சாய்த்துவிடும் என்கிறார் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 19.156)

பொறுமையும் அவசியம்

இவை எல்லாவற்றையும் தாண்டி, தூய்மையான பக்தியினை எடுத்துக் கொண்டு சிரத்தையுடன் பின்பற்றும்போது இறைவனின் பூரண கருணையையும் பக்தியையும் அடையலாம். தூய பக்தியை அடைவதற்கு தடையாக இருக்கும் எண்ணற்ற மனப்பான்மைகளில் சிலவற்றை இங்கே வழங்கியுள்ளோம். அதே சமயத்தில் தூய பக்தியினை ஆர்வமுடன் பயிற்சி செய்பவர்கள் தங்களுடைய ஆர்வத்திற்கும் மனப்பான்மைக்கும் ஏற்றாற்போல விரைவில் கிருஷ்ணரின் மீதான அன்பை அடைவர்.

தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து பக்தர்களின் சங்கத்தில், பூர்வீக ஆச்சார்யர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தூய பக்தியின் நெறிகளைப் பயிற்சி செய்தால்கூட, பூரண தூய பக்தராவதற்கு சில காலம் ஆகலாம் என்பதால், பக்தர்கள் உடனடி விளைவையும் எதிர்பார்க்கக் கூடாது, பொறுமையுடன் தனது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தக்க வைத்தபடி இருக்க வேண்டும் என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது உபதேசாமிருதத்தில் (3) அறிவுறுத்தியுள்ளார். எனவே, பொறுமையுடனும் சிரத்தையுடனும் கிருஷ்ண பக்தியினை பயிற்சி செய்து பக்குவத்தை அடைவோமாக.

2016-10-28T00:42:56+00:00September, 2016|தத்துவம்|0 Comments

About the Author:

திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment