நிலையற்ற பௌதிக உலகம்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

 

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

 

ஜடவுலகம், இதன் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன. நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

 

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு

 

“நேற்று இருந்தவன் இன்றில்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையை மட்டுமே பெருமையாக உடையது இவ்வுலகம்.” (திருக்குறள் 336) எனில், உயிர்வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?

 

இதே நிலையாமையை நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் (1.2.2) மிகவும் சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்:

 

மின்னின் நிலையில – மன்னுயிராக்கைகள்,

என்னுமிடத்து, இறை – உன்னுமின் நீரே

 

“உயிருடம்புகள் மின்னலைக் காட்டிலும் நிலையுடையவை அல்ல.”

 

உலக வாழ்வின் நிலையாத் தன்மையை வேத சாஸ்திரங்கள் பல இடங்களில் உரைத்துள்ளன. பகவத் கீதையில் (8.15) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

 

மாம் உபேத்ய புனர்ஜன்மது:காலயம் அஷாஷ்வதம்

நாப்னுவந்தி மஹாத்மான:ஸம்ஸித்திம் பரமாம் கதா:

 

இங்கே கிருஷ்ணர் பௌதிக உலகத்தை து:காலயம், அதாவது துன்பங்கள் நிறைந்த இடம் என்றும், அஷாஷ்வதம், அதாவது தற்காலிகமானது என்றும் குறிப்பிடுகிறார். இவ்வுலகம் ஒவ்வோர் அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையில் இருப்பவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே சிற்றறிவுடையோர், பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழுப் பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பௌதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை.

 

பௌதிக உலகத்தில் யாராலும் தீர்வு காண முடியாத நான்கு வகையான நிரந்தர பிரச்சனைகளும் மூன்று விதமான துன்பங்களும் உள்ளன. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவை நான்கு நிரந்தர பிரச்சனைகளாகும்.

 

மூன்று விதமான துன்பங்கள் என்னவென்றால்,

  1. ஆத்யாத்மிக க்லேஷா – மனம் மற்றும் உடலால் விளையும் துன்பங்கள் (எ.கா) மன உளைச்சல்.
  2. ஆதிதைவிக க்லேஷா – இயற்கையால் விளையும் துன்பங்கள் (எ.கா) சுனாமி.
  3. ஆதிபௌதிக க்லேஷா – பிற உயிரினங்களால் விளையும் துன்பங்கள் (எ.கா) கொசுக்கடி.

 

விமானத்தில் பறக்கும்போது மனிதன் பல்வேறு திட்டங்களிலும் கற்பனைகளிலும் மிதக்கிறான். ஏதாவது சிறு இடையூறால் விமானம் நொறுங்கி விழுந்தால், அவனுடைய எல்லாத் திட்டங்களும் பாழ். தன்மனதாலும், பிற உயிர்களாலும், இயற்கையின் சீற்றத்தாலும் உயிர்வாழிகளுக்குத் துன்பம் கொடுப்பதுதான் இவ்வுலகு. இதனை உணர்ந்து மறுவுலகிற்குச் செல்ல நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதே சாஸ்திரங்களும் பெரியோர்களும் நமக்கு வழங்கியுள்ள அறிவு.

 

About the Author:

தயாள கோவிந்த தாஸ் M.Tech., Ph.D. அவர்கள், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண பக்தியைக் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment