மனுவிற்கும் கர்தமருக்கும் இடையிலான உரையாடல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.”வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், இருபத்தொன்றாம் அத்தியாயம்

சென்ற இதழில் பிரம்மதேவர் பற்பல உயிரினங்கள் மற்றும் பிரஜாபதிகளை படைத்ததைப் பற்றி பேசிய மைத்ரேயர் கர்தம முனிவரின் பக்தித் தொண்டு மற்றும் மனுவுக்கும் கர்தமருக்கும் இடையிலான உரையாடலைப் பற்றி விதுரரிடம் விளக்குவதை இவ்விதழில் காணலாம்.

விதுரரின் கேள்விகள்

விதுரர் மைத்ரேயரிடம் தொடர்ந்து வினவினார்: “புனிதமான முனிவரே, பெருமைக்குரிய ஸ்வாயம்புவ மனுவின் பரம்பரையைப் பற்றிய குறிப்பை அளிக்கும்படி வேண்டுகிறேன். குறிப்பாக, மனுவின் சிறந்த புதல்வர்களான உத்தானபாதர், ப்ரியவிரதர் ஆகியோரின் ஆட்சியைப் பற்றி கூறுங்கள். மேலும், அவரது புதல்விகளான தேவஹுதி, ஆகூதி, ப்ரஸுதி ஆகியோர் முறையே கர்தம முனிவர், ருசி, தக்ஷன் ஆகிய பிரஜாபதிகளை மணந்தனர். இவர்கள் பகவானுடன் தொடர்புடையவர்கள் என்பதால், இவர்களைப் பற்றி விளக்கியருள வேண்டுகிறேன்.”

 கார்தம முனி பகவானின் காட்சியை பெறுதல்

கர்தமரின் தியானம்

இவ்வாறு வினவிய விதுரரிடம் சிறந்த முனிவரான மைத்ரேயர் பின்வருமாறு பதிலளித்தார்: சந்ததியைப் பெருக்கும்படி பிரம்மதேவரால் ஆணையிடப்பட்ட கர்தம முனிவர் பத்தாயிரம் ஆண்டுகாலம் சரஸ்வதி நதிக்கரையில் பக்தியுணர்வுடன் தவம் மேற்கொண்டார். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த பரம புருஷ பகவான் தம் உன்னத எழில் கோலத்தை அவருக்கு காட்டியருளினார்.

பகவான் மஞ்சள் பட்டாடையுடுத்தி, வெண் தாமரை மற்றும் அல்லிகள் சேர்ந்த அழகிய மலர்மாலையை அணிந்திருந்தார். அவரது மார்பில் கௌஸ்துப மணியானது தங்கம்போல் மின்ன, கருடனின் தோளில் தம் தாமரைத் திருவடிகளை வைத்து வானில் காட்சி தந்தார்.

அந்த அற்புதக் காட்சியைக் கண்ட கர்தம முனிவர் தம் நீண்டகால உன்னத ஆசை நிறைவேறியதால் மிகவும் திருப்தியடைந்து பகவானை விழுந்து வணங்கினார். அவரது மனம் இயற்கையிலேயே பகவானிடம் முழுமையான அன்பால் நிறைய, தம் இருகைகளைக் கூப்பி தமது வழிபாட்டால் பகவானை திருப்தி செய்தார்.

கர்தமரின் பிரார்த்தனை

பகவானின் திவ்ய அழகை தம் கண்களால் அள்ளிப் பருகிய கர்தம முனிவர் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “வந்தனைக்குரிய பரம புருஷ பகவானே, உயிர்களுக்கெல்லாம் இருப்பிடமாக விளங்கும் தங்களின் தரிசனம் பெற்றதால் எனது பார்க்கும் ஆற்றல் முழுமையடைந்துள்ளது. பற்பல பிறவிகளாகத் தொடர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு பக்குவமடைந்த யோகிகள் தங்களைக் காண விரும்புகின்றனர்.

“தங்களது தாமரைத் திருவடிகள், அறியாமை எனும் கடலைக் கடக்க உதவும் படகாகும். நரகத்தில் கிடைக்கக்கூடிய சாரமற்ற கணநேர புலனின்பங்களுக்காக தங்களது திருவடிகளை வணங்கும் அறிவற்ற மனிதர்களுக்கும்கூட தாங்கள் கருணை காட்டத் தயங்குவதில்லை.

“எனவே, எனக்கு ஒத்த இயல்புடைய ஒழுக்கமுடைய பெண்ணை மணந்து, இல்லற வாழ்வின் இன்பங்களை துய்ப்பதற்காக, கற்பக விருட்சம் போன்ற தங்கள் பாதகமலங்களின் பாதுகாப்பை நாடியுள்ளேன். தாங்களே அனைத்து உயிர்களுக்கும் தலைவரும் வழிகாட்டியும் ஆவீர். எல்லாக் கட்டுண்ட ஆத்மாக்களும் உங்களது வழிகாட்டுதலால் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது.உங்களுடைய உன்னத குணங்களையும் அற்புதச் செயல்களையும் பற்றி கலந்துரையாடுவதால். ஜட ஆசைகள் உள்ளவர்களாயினும் ஜட ஆசைகளை துறந்தவர்களாயினும் தங்கள் பாத கமலங்களின் பாதுகாப்பைப் பெற்று முக்தி பெற முடியும். பகவானே, உங்கள் பக்தர்களின் வாழ்வின் சிறு பகுதியைக்கூட கால சக்கரத்தின் சுழற்சி பாதிக்காது.

“எனதன்பு பகவானே, ஒரு சிலந்தி தன் ஆற்றலால் வலையை உருவாக்கி மீண்டும் அழிப்பதுபோலவே, தாங்கள் தங்களுடைய அளப்பரிய சக்தியால் எண்ணற்ற பிரபஞ்சங்களைப் படைத்து காத்து பின் அழிக்கிறீர்கள். உயிர்வாழிகள் புலநுகர்வு நாட்டத்தால் துன்புறுவது உங்களுக்கு விருப்பமானதல்ல எனினும் கருணையுடன் இவ்வுலகப் படைப்புகளை வெளிப்படுத்துகிறீர்கள். துளசி இலைகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ள அழிவற்ற திருமேனியில் நீங்கள் என்முன் தோன்றியிருப்பது தங்களின் அகாரணமான கருணையே.தங்களின் ஒப்புயர்வற்ற தாமரைத் திருவடிகளுக்கு நான் மீண்டும் எனது வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். என்னைப் போன்ற அற்பமானவனிடத்தில்கூட நீங்கள் எல்லா ஆசிகளையும் பொழிகிறீர்கள்.”

பகவானின் வரம்

கர்தம முனிவரின் மனமார்ந்த பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் புன்னகையுடன் பின்வருமாறு பேசினார்:  “உம் மனதாலும் புலன்களாலும் என்னை வழிபடுவதற்கான காரணத்தை அறிந்து அதற்கானவற்றை நான் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டேன். என்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு தூய பக்தித் தொண்டு புரிவோருக்கு ஏமாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. பிரம்மாவர்தத்தை இருப்பிடமாகக் கொண்டு பூவுலகம் முழுவதையும் ஸ்வாயம்புவ மனு ஆட்சி செய்கிறார். மதச் சடங்குகளில் வல்லுனரான அம்மன்னர் தன் மனைவி ஸதரூபாவுடன் நாளை மறுநாள் உம்மைக் காண வருவார். அவருக்கு எல்லா நற்குணங்களும் நன்னடத்தையும் கொண்ட ஒரு மகள் இருக்கிறாள். நீர் இத்தனை ஆண்டுகளாக உம் மனதில் நினைத்த வண்ணமே அப்பெண் இருப்பாள். ஆதலால் அப்பெண்ணை மணந்துகொள்வீராக. எனது கட்டளையை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் உம் மனம் தூய்மைப்படுத்தப்பட்ட பின், எல்லாச் செயல்களின் பலன்களை என்னிடம் விட்டுவிட்டு இறுதியில் நீர் என்னிடமே திரும்பி வருவீர்.

“நீர் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டினால் தன்னையறிதலில் வெற்றியடைய முடியும். எல்லாருக்கும் பாதுகாப்பு வழங்குவதால் உம்மில் என்னையும், என்னில் எல்லா பிரபஞ்சங்களையும் காண முடியும்.சிறந்த முனிவரே, உமக்கும் உம் மனைவிக்கும் ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பர். அதன்பின் நானே உமது மகனாகப் பிறந்து ஸாங்கிய தத்துவத்தைப் போதிப்பேன்.”

கர்தம முனிவருக்கு இவ்வாறு வரமளித்த பகவான் தம் இருப்பிடம் திரும்பினார். அவ்வாறு பகவான் புறப்பட்டபோது கருட தேவரின் படபடக்கும் இறகுகளின் அசைவால் ஸாம வேத பாசுரங்கள் இனிமையாக வெளிப்பட, முனிவர் அவற்றை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டு நின்றார்.

பிந்து ஸரோவர்

பகவான் விடைபெற்று சென்ற பிறகு மரியாதைக்குரிய கர்தம முனிவர், பிந்து ஸரோவரின் கரையில் தங்கி, பகவான் கூறிய நேரத்திற்காகக் காத்திருந்தார்.

ஸ்வாயம்புவ மனு, தன் மனைவி மற்றும் மகளுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து இவ்வுலகெங்கும் பிரயாணம் செய்தார். பகவானால் முன்பே உரைக்கப்பட்ட அந்த நாளில் தன் தவ விரதச் சடங்குகளை பூர்த்தி செய்து கொண்டிருந்த கர்தம முனிவரின் ஆசிரமத்தை அவர்கள் அடைந்தனர். சரஸ்வதி நதியின் வெள்ள நீரால் நிரப்பப்பட்டு ஓர் அழகிய ஏரி உருவானது. கர்தம முனிவரின் தவத்தால் அகமகிழ்ந்த பகவானின் திருக்கண்களிலிருந்து சிந்திய கண்ணீர் துளிகள் இந்த ஏரியில் விழுந்தன. எனவே, இந்த ஏரி பிந்து ஸரோவர் எனப் பெயர் பெற்று, கங்கையைப் போல் புனிதமாக விளங்குகிறது. தவம் செய்ய விரும்பும் முனிவர்கள் இதன் கரையில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் நீரை பருகுபவர்கள் எல்லா ஜட நோய்களிலிருந்தும் விடுபடுவர் என்பதால் ’சிவாம்ருத ஜலம்’ எனப்படுகிறது.

எல்லாப் பருவங்களிலும் பூத்துக் குலுங்கும் மரங்களும் கனிந்து தொங்கும் பழங்களும் நிறைந்த மரங்கள் மற்றும் அழகிய கொடிகள் அந்த ஏரியின் கரைகளைச் சூழ்ந்திருந்தன. மதுவைத் தேடி தேனீக்கள் ரீங்காரமிட்டு சுற்றித் திரிந்தன. களிப்புடைய மயில்கள் பெருமையுடன் நர்த்தனமாடின. மகிழ்ச்சியுடனிருந்த குயில்கள் இனிமையாகக் கூவின.

கதம்பம், சம்பகம், அசோகம், கரஞ்ஜம், பகுலம், ஆஸனம், குந்தம், மந்தாரம், குடஜம், இள மாமரங்கள் ஆகிய மரங்களின் இனிய காற்றினாலும், அன்னங்கள், மீன்கொத்திகள், நீர்க்கோழிகள், கொக்குகள், வாத்துகள், சக்ரவாகம் ஆகிய பறவைகளின் இனிய ஒலிகளாலும் பிந்து ஸரோவர் நிறைந்திருந்தது. மேலும், மான்கள், யானைகள், ஆடுகள், குரங்குகள், கீரிப்பிள்ளைகள், கஸ்தூரி மான்கள் ஏரியின் கரையில் நிரம்பியிருந்தன.

கர்தமர் மனுவை வரவேற்றல்

கர்தம முனிவரின் உடலில் பிரம்மதேஜஸ் பொருந்தியிருந்தது. அவரது கண்கள் தாமரை இதழ்கள்போல் அகலமாக நீண்டிருந்தன. அவரது தலையை சடாமுடி அலங்கரித்தது. ஸ்வாயம்புவ மனு அவரை அணுகியபோது பட்டை தீட்டப்படாத வைரம்போல் விளங்கியதைக் கண்டார். அவர் கடுந்தவத்தில் ஈடுபட்டவராயினும் பகவானின் அருட்பார்வை பட்டதாலும் பகவானின் அமிர்தம்போன்ற இனிய சொற்களைக் கேட்டதாலும், அவரது உடல் தளர்ச்சியின்றி உறுதியுடன் விளங்கியது.

தம்மை அணுகி தலை வணங்கும் மனுவை, முனிவர் ஆசிகள் கூறி மரியாதையுடன் வரவேற்று அமரச் செய்தார். பின் பகவானின் கட்டளையை நினைவில் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் பின்வருமாறு பேசினார்:

“பிரபுவே! நீங்கள் ஸ்ரீ ஹரியினுடைய காக்கும் சக்தியின் ஸ்வரூபமாவீர். நீங்கள் மேற்கொண்டுள்ள பயணம் நிச்சயமாக தர்மத்தைக் காப்பதற்கானதாகும். தேவைப்படும் சமயங்களில் நீங்கள் பற்பல தேவர்களின் பாகங்களை மேற்கொள்கிறீர்கள். மேலும், பகவான் விஷ்ணுவின் பிரதிநிதியாக இருப்பதால் உங்களுக்கு என் வணக்கங்கள் உரித்தாகுக. தங்களைக் கண்டு குற்றவாளிகள் அஞ்சுகிறார்கள். போக்கிரிகளும் கயவர்களும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் நீங்கள் பாதுகாக்கிறீர்கள், பணத்தின் பின்னால் அலையும் மனிதர்களை அடக்குகிறீர்கள்.

“வீரம் மிகுந்த மன்னரே, உலகில் இத்தகைய உயர்நிலையில் இருந்தும்கூட நீங்கள் இங்கு வந்ததன் நோக்கம் எதுவென்று அறிய விரும்புகிறேன். எதுவாயினும் தயங்காமல் நிறைவேற்ற நான் சித்தமாயிருக்கிறேன்.”

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment