Srila A.C. Bhaktivedanta Swami Prabhupada

 

 ஓம் அஜ்ஞான-திமிராந்தஸ்யஜ்ஞானாஞ்ஜன-ஷலாகயா

சக்ஷுர் உன்மீலிதம் யேனதஸ்மை ஸ்ரீ-குரவே நம:

“அறியாமையால் இருண்ட எனது கண்களை ஆன்மீக அறிவு எனும் விளக்கினால் ஒளி பெறச் செய்த ஆன்மீக குருவிற்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகிறேன்.”

தெய்வீக அறிவைக் கொண்டு ஆன்மீக ஒளியளிக்கும் ஆன்மீக குருவிற்கு அவரது சீடர்கள் இந்த ஸ்லோகத்தினைக் கொண்டு நமஸ்கரிப்பது வழக்கம். வேத வழிமுறை எவ்வித ஆராய்ச்சிக்கும் உட்பட்டதல்ல. இவ்வுலகில் தனது அறிவுத் திறனைக் காட்டிக்கொள்ள ஒருவர் ஏதாவது ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. ஆனால் வேத வழிமுறை இதிலிருந்து மாறுபட்டதாகும், இங்கே ஆராய்ச்சிப் பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டன. வேத வழிமுறை பூரணமானது, அது சீடப் பரம்பரையின் வழியாக குருவினால் சீடனுக்குத் தரப்படுகிறது.

லௌகீக வாழ்வில் நாம் பலவித இயற்கை விதிகளினால் பாதிக்கப்பட்டுள்ளோம். கட்டுண்ட ஜீவன்கள் அனைவரும் நான்கு வகையான குறைபாடுகளுக்கு உட்பட்டவர்கள். இந்நான்கு குறைகளில் ஒன்று, கட்டுண்ட ஆத்மா தவறுகள் செய்யக்கூடியது என்பதாகும். தவறுகள் செய்யாத மனிதனே இல்லை. உதாரணமாக, இந்தியாவின் மகாத்மா காந்தி பெரும் தலைவராக இருந்தபோதிலும், அவரும் தவறுகள் செய்தார். அவருடைய உதவியாளரின் அறிவுரையைக் கேட்காத தருணத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். “தவறு செய்வது மனித இயல்பு” என்ற முதுமொழியே உள்ளது. கட்டுண்ட ஆத்மாவின் இரண்டாவது குறைபாடு, அவன் மாயைக்கு உட்பட்டவன் என்பதாகும். இல்லாததையும் கற்பனைத் தோற்றங்களையும் உண்மை என ஏற்பதே மாயை எனப்படுகிறது. ஒவ்வொருவரும் உடலே நாம் என்று தவறாக எண்ணுகிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. இப்பூதவுடலை தான் என்று நினைப்பது மாயையே.

கட்டுண்ட ஆத்மாவின் மூன்றாவது குறைபாடு, ஏமாற்றும் மனோபாவம். நமக்கு தெரிந்த கடைக்காரர், “நீங்கள் எனது நண்பராதலால் உங்களிடம் இலாபம் சம்பாதிக்க விரும்பவில்லை” என்று கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் உண்மையில் அவர் இலாபம் சம்பாதிக்கின்றார். இந்த ஏமாற்றும் மனோபாவத்திற்கு பற்பல உதாரணங்களைக் காட்டலாம். நான்காவது குறைபாடு யாதெனில், உயிர்வாழும் ஜீவன்களின் புலன்கள் பக்குவமற்றவையாக உள்ளன. கண்ணிற்கு எட்டிய தூரம் மட்டுமே நம்மால் காண முடியும், மேலும் கண்களுக்கு வெகு அருகில் உள்ளதைக் காண முடியாது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே நம்மால் எதையும் பார்க்க முடியும். ஆகையினால், நமது புலன்கள் யாவும் வரைமுறைக்கு உட்பட்டவை, எல்லைக்கு உட்பட்ட புலன்களைக் கொண்டு எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் புரிந்துகொள்வது இயலாது. எனவே, வரம்பில்லாத மெய்ப்பொருளை புலன்களைக் கொண்டு காண முயற்சி செய்வதை வேத வழிமுறை ஊக்குவிப்பதில்லை. நான்கு குறைபாடுகளுக்கு கட்டுப்படாத மேன்மையான ஆதாரத்திடமிருந்தே நாம் ஞானத்தைப் பெற வேண்டும். அந்த மூல ஆதாரம் பகவான் கிருஷ்ணரேயாவார். பகவத் கீதையின் மேன்மையான அதிகாரி அவரே. மேலும், அவரே பல்வேறு முனிவர்களாலும் யோகிகளாலும் குறைகளற்ற அதிகாரியென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

வேத இலக்கியங்களைக் கற்பதில் தீவிரமாக உள்ள மாணவர்கள் அதற்கான அதிகாரியை ஏற்கின்றனர். உதாரணமாக, பகவத் கீதை பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட படைப்பல்ல. பகவத் கீதை குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு போதிக்கப்பட்ட பூரண அறிவாகும். மேலும், இந்த பூரண அறிவை முற்காலத்திலேயே கிருஷ்ணர் சூரிய பகவானான விவஸ்வானுக்கு போதித்தார் என்ற விவரம் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொன்றுதொட்ட காலம் முதல் விவஸ்வானிடமிருந்து சீடப் பரம்பரையின் வழியாக இவ்வறிவு சீடர்களுக்கு வழங்கப்பட்டது.

இமம் விவஸ்வதே யோகம்ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்

விவஸ்வான் மனவே ப்ராஹமனுர் இக்ஷ்வாகவே

 

“அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை சூரிய தேவனான விவஸ்வானுக்கு நான் உபதேசித்தேன். விவஸ்வான் இதனை மனித குலத்தின் தந்தையான மனுவிற்கும், மனு இக்ஷ்வாகுவிற்கும் இதனை முறையே உபதேசித்தனர்.” (பகவத் கீதை 4.1)

இந்த பகவத் கீதையை நமது மனக் கற்பனைக்கு ஏற்ப, அல்லது சுயமாக கற்றறிய விரும்பினால், நாம் நிச்சயமாகத் தவறாக புரிந்துகொள்வோம். அவ்வழியில் பகவத் கீதையை புரிந்துகொள்வதென்பது இயலாத காரியம். அர்ஜுனன் காட்டிய வழியை எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். முந்தைய யுகங்களில் தவறான விளக்கங்களாலும் மனக் கற்பனைகளினாலும் பகவத் கீதையின் உண்மையான கருத்து இழக்கப்பட்டது. ஆகையால், பகவான் கிருஷ்ணர் இந்த ஞானத்தை மீண்டும் அர்ஜுனனுக்கு போதித்து நிலைநாட்டினார்.

 

ஆகையால், அர்ஜுனனின் வழியை யார் கடைபிடிக் கிறார்களோ, அதாவது பக்தியுடன் யார் கிருஷ்ணரை அணுகு கிறார்களோ, அவர்களால் பகவத் கீதை மற்றும் இதர வேத இலக்கியங்களின் குறிக்கோளை அறிந்துகொள்ள முடியும்.

 

ரிக், யஜுர், ஸாம, அதர்வ என்று நான்கு வேதங்கள் உள்ளன. ஈஷோபநிஷத், கடோபநிஷத், தைத்ரீய உபநிஷத் என 108 உபநிஷதங்களும், வேதாந்த சூத்திரம், ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை என இதர இலக்கியங்களும் உள்ளன; இவை ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்காகத் தோன்றியது அல்ல. அவை மனித சமுதாயம் முழுமைக்கும் உரித்தானதாகும். இப்பௌதிக உலகம் கடவுளுடைய முழு படைப்பில் ஒரு சிறு பகுதியே என்பதை நாம் வேத இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கடவுளுடைய படைப்பின் பெரும்பகுதி ஆன்மீக உலகிலுள்ள வைகுண்டங்களாகும்.

 

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தைப் போன்ற பற்பல பிரபஞ்சங்களைக் கொண்டதே பௌதிக படைப்பாகும். எண்ணற்ற இப்பௌதிக பிரபஞ்சங்களின் தொகுப்பிற்கு அப்பால் ஆன்மீக ஆகாயம் உள்ளது. இதுவும் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

தத் பாஸயதே ஸுர்யோந ஷஷாங்கோ பாவக:

யத் கத்வா நிவர்தந்தேதத் தாம பரமம் மம

 

“எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ சந்திரனாலோ நெருப்பினாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.” (பகவத் கீதை 15.6)

 

அந்த நிரந்தரமான, உன்னத, ஆன்மீக இயற்கை யானது பௌதிக இயற்கைக்கு அப்பாற்பட்டதாகும். இது தோன்றிய காலம் என்று எந்த வரலாறும் இல்லை, அஃது ஆதியந்தமற்றதாகும். (பார்க்க, பகவத் கீதை 8.20–21)

 

வேத மதம் அல்லது வர்ணாஷ்ரம தர்மம் என்பது நிரந்தரமானதாகும், இதன் ஆரம்பத்தை யாராலும் கண்டறிய முடியாது. கிறிஸ்துவம் 2,000 ஆண்டுகள் என்றும், இஸ்லாம் 1,300 ஆண்டுகள் என்றும் வரலாறு உண்டு. ஆனால், வேத மதத்தின் ஆரம்பத்தைக் கண்டறிய முடியாது. இந்த ஸநாதன தர்மம் உயிர் வாழும் ஜீவன்களின் நிரந்தரமான மதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் சூரிய தேவனான விவஸ்வானுக்கு வழங்கப்பட்ட ஞானம் படிப்படியாக பெறப்பட்டு வந்தது.

 

கடவுள் இப்பௌதிக பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று நாம் அடிக்கடி கூறுகிறோம். இக்கூற்றிலிருந்து, பௌதிக பிரபஞ்சத்தின் படைப்பிற்கு முன்பாகவே கடவுள் இருந்தார் என்று அறியப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடவுள் தனது படைப்புகளின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போதிலும், அவருடைய இருப்பிடத்தில் முழுமையாக வீற்றிருக்கிறார் என்பதும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

 

உண்மையில் நாம் அனைவரும் ஜீவாத்மாக்கள், கடவுளுடன் ஆன்மீக வானில் உறவு கொள்ளும் இயல்புள்ளவர்கள். அந்த ஆன்மீக உலகில் எண்ணிலடங்காத ஆன்மீக கிரகங்களும் ஜீவன்களும் உள்ளன. அங்கு வாழ தகுதியற்றவர்கள் இப்பௌதிக உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள். மில்டனின் “இழந்த ஸ்வர்க்கம்” எனும் நூலிலும் இக்கருத்தே வலியுறுத்தப்படுகிறது. ஆத்மா எப்போது இந்த பௌதிக சரீரத்தை ஏற்றுக் கொண்டது என்பதை ஆராய்வது இயலாததாகும்.

 

மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வினுடைய கொள்கை தற்போது உயர்கல்வி கற்பிக்கும் நிறுவனங்களில் பிரபலமாகியுள்ளது. ஆனால், பத்ம புராணம் போன்ற அதிகாரப்பூர்வமான வேத இலக்கியங்களில், சரீரங்களை மாற்றுவதன் மூலம் ஜீவன்கள் அடையும் ஆன்மீக பரிணாமத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பத்ம புராணத்தின்படி 84,00,000 வகையான உயிரினங்கள் உள்ளன. 9,00,000 வகையான உயிரினங்கள் நீர்வாழ்வன என்றும், தாவர வகைகளில் 20,00,000 உயிரினங்கள் உள்ளன என்றும் இதிலிருந்து அறிகிறோம். தற்போதைய உலகில் அனைவரும் டார்வினின் கொள்கைக்கே முக்கியத்துவமளிக்கின்றனர். ஆனால், வேத இலக்கியங்களிலோ பல்வேறு வகையான உயிரினங்களைப் பற்றிய அளவற்ற தகவல்கள் உள்ளன. தாழ்வான உயிரினத்திலிருந்து மேலான உயிரினத்திற்கு ஜீவன்கள் பரிணாம வளர்ச்சியடைகின்றன எனும் டார்வினின் கொள்கை உண்மையல்ல. அனைத்து உயிரினங்களும் இப்பௌதிக இயற்கையின் சிருஷ்டியின் போது பகவான் கிருஷ்ணராலேயே சிருஷ்டிக்கப்படுகின்றன என்று பகவத் கீதை (9.7-8) குறிப்பிடுகின்றது.

மானிட வாழ்வின் முக்கியத்துவத்தை ரிஷபதேவர் தனது புதல்வர்களுக்கு எடுத்துரைத்தல்.

 

அனைத்து ஜீவன்களும் மூவகை பௌதிகத் துன்பங்களுக்கு உட்பட்டவை; இதில் சரீரம் மற்றும் மனதினால் ஏற்படும் துன்பங்களும் அடங்கும். தாங்கள் துன்பப்படுவதை மிருகங்களால் அறிய முடியாது. ஆனால், மனிதர்களால் அறிய முடியும். தான் துன்பப்படுவதை உணராதவன் மிருகமாகவே கருதப்பட வேண்டும். வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும் தாங்கள் கொல்லப்பட இருப்பதை மிருகங்கள் உணர்வதில்லை. ஆனால், மனிதர்களாகிய நாம் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களால் அவதியுறுகிறோம் என்பதை உணர வேண்டும். இத்துன்பங்களை போக்கும் வழியை அறிய ஆவல் கொள்ள வேண்டும்.

 

நமது பிறப்பு முதலே நாம் துன்பப்படுகிறோம். சிசுவாக தாயின் கருப்பையில் ஒன்பது மாதங்கள் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் குழந்தை துன்பப்பட்டது. தாய் குழந்தையின் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றபோதும், குழந்தை ஏன் அழுகிறது? துன்பப்படுவதால்தான். மூட்டைப்பூச்சி கடிக்கலாம், வயிற்றுவலி போன்ற வியாதிகளால் அவதிப்படலாம். எவ்விதத்திலும் துன்பம் இருக்கவே செய்கிறது. பின்னர், பள்ளிக்குச் செல்லும்போது கட்டாயத்தின் பேரில், குழந்தை விருப்பமில்லாத கல்வியைக் கற்க நேரிடுகிறது. நமது வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்தால், நமது வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் தொடர்வதைக் காணலாம். பொதுப்படையாகப் பார்க்கும்போது, கட்டுண்ட ஆத்மாக்கள் புத்தி மிகுந்தவையல்ல. ஆகையால், ஏன் இவ்வாறு துன்பத்திற்குள்ளாகிறோம் என்பதை அறியாமலேயே அவை தொடர்ந்து துன்பப்படுகின்றன. எப்படியிருப்பினும் நாம் துன்பப்படுகிறோம் என்பதை உணர்ந்து, அதற்கான தீர்வினை அறிந்து மேன்மையடைய வேண்டும்.

 

மாமுனிவரான ரிஷபதேவர் தனது புத்திரர்களுக்கு அறிவுறுத்தினார்: “அன்பார்ந்த மகன்களே! இப்பிறவியில் நீங்கள் பெற்றுள்ள அற்புதமான சரீரத்தை நாய்களையும் பன்றிகளையும் போன்று இன்பம் காண பயன்படுத்தாமல், ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்காக பயன்படுத்த வேண்டும். கழிவுப் பொருட்களை உட்கொள்ளும் பன்றிகளே புலனின்பத்திற்காக வாழ வேண்டும், உயர்நிலையில் வாழும் மனிதன் தாழ்ந்த உயிரினங்களின் வழி நடக்கக் கூடாது.”

 

சமீபத்தில் நியுயார்க்கின் மத்திய பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தபோது, இள வயதுடைய சில அமெரிக்க ஆண்களும் பெண்களும் பன்றிகளை வணங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்க, அவர்கள் பன்றி, பன்றி என உச்சரித்துக் கொண்டிருந்தனர். உண்மையில் அவர்கள் மத்திய பூங்காவில் பன்றிகளின் அணிவகுப்பிற்கு முன்னால் தலை வணங்கி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். பன்றியின் தலைமையில் வாழ்க்கை நடத்த அவர்கள் விரும்பினர். இந்த வேடிக்கை தீவிரமடைந்து சியாட்டில் என்னுமிடத்தில் நடந்த ஆர்பாட்டத்தின்போது, மாணவர்களும் மாணவியர்களும் ஆடைகளைக் களைந்து சேற்றில் புகுந்து பன்றிகளுடன் விளையாடினர்! பன்றிகளை வணங்குபவர்கள் பன்றிகளுடன் சேர்ந்து பன்றிகளாகப் பழகினர். இவையனைத்தும், மற்ற நாட்டு இளைஞர்களைவிட அதிக அளவில் பணமும் உடல் வளமும் இதர வசதிகளும் பெற்றுள்ள அமெரிக்க இளைய தலைமுறையினரின் செயல்களாகும்! மற்றவர்களை விட வசதிகளும் சலுகைகளும் கிடைக்கப் பெற்றதன் விளைவு, அவர்கள் பன்றிகளை வழிபடுகின்றனர்.

 

இப்படிப்பட்ட பன்றி வழிபாடு நீண்ட காலத்திற்கு முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தில் இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் நல்ல சூழ்நிலைகளை மேன்மையான காரணங்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமேயன்றி, இழிவான காரணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

 

நாம் கிருஷ்ண உணர்வின் வழிமுறையை மேற்கொண்டால், நமது உணர்வு தூய்மையடையும். அமெரிக்க, ஐரோப்பிய இளைஞர்கள்கூட இந்த கிருஷ்ண உணர்வை தன்னிச்சையாக பின்பற்றி பழகி வருகின்றனர். இம்முறை கடினமற்றதோடு மட்டுமல்லாமல், மகிழ்ச்சிகரமானதும்கூட. மிருக வாழ்க்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையேயுள்ள முக்கிய வேறுபாட்டினை கிருஷ்ண உணர்வின் மூலமாக இவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

 

தகாத உடலுறவு, புலால் உண்ணுதல், போதை பழக்கம், சூதாட்டம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது கிருஷ்ண உணர்வுடன் வாழ்வதற்கான அடிப்படை விதிகளாகும்; இவ்வாறாக நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டால், படிப்படியாக ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்படுவோம். ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், “வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்” என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.

 

ஆன்மீக உலகம் வறட்சியானதோ அறிந்துகொள்ள முடியாததோ அல்ல. முன்னரே தெரிவித்தவாறு அங்கே பலவகையான மகிழ்ச்சிகள் உண்டு. நாம ஸங்கீர்த்தனத்தில் நடனமாடுவதால் நாம் பெறும் ஆனந்தம் வைகுண்டத்தில் உள்ள ஆன்மீக ஆனந்தத்தின் ஒரு பகுதியே. அங்கிருக்கும் ஆண்களும் பெண்களும் இளமை மிகுந்தவர்கள்; உண்மையில் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற துன்பங்கள் அங்கு இல்லை. ஆன்மீக உலகிலுள்ள நமது உண்மையான தன்மைகளான அளவற்ற ஆனந்தம், அறிவு, மற்றும் நிரந்தர வாழ்க்கையைப் பெற விரும்பினால், புலனின்பங்களிலும் பன்றித் தொழுகைகளிலும் நாம் நமது நேரத்தை விரயமாக்கக் கூடாது. கிருஷ்ண உணர்வை பெருக்கிக் கொள்வதற்கான வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள வேண்டும். அளவற்ற நல்லதிர்ஷ்டத்தையும் இன்பத்தையும் பெறுவதே கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் அடிப்படைக் கருத்தாகும்.