ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது “வைஷ்ணவர்களில் முதன்மையானவர்” என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில் கண்டுபிடித்ததில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஸ்ரீல ஜகந்நாத பாபாஜி மஹாராஜர் 1800 வருடவாக்கில் பிறந்தார். அவர் பல்வேறு வருடங்களை விருந்தாவனத்தில் கழித்து ஒரு பக்குவமான பக்தராக பிரபலமடைந்தார். அதன் பின்னர் நவத்வீப தாமத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் சுமார் 120 வயதை அடைந்த காலக் கட்டத்தில் ஸ்ரீ நவத்வீபத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார், அவருடைய சேவகரான பிஹாரி லால் அவருடைய தேவைகளைப் பார்த்துக் கொண்டார். பாபாஜி மஹாராஜர் எங்கேனும் செல்ல வேண்டுமெனில் அவருடைய சேவகர் அவரை ஒரு கூடையில் தூக்கிச் செல்வது வழக்கம்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடத்தினை ஸ்ரீல பக்திவினோத் தாகூர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் ஜகந்நாத தாஸ பாபாஜியையும் தன்னுடன் வருமாறு அவர் வேண்டிக் கொண்டார். சைதன்ய மஹாபிரபு அவதரித்து பல்வேறு வருடங்களுக்குப் பின்னர் கங்கை நதியின் வழித்தடம் மாறிய காரணத்தால் நவத்வீபத்தில் இருந்த பல்வேறு புனித ஸ்தலங்கள் இடம் மாறியிருந்தன. கங்கையின் பழைய இடங்கள் அழிவுற்று புதிய இடங்கள் தோன்றியிருந்தன. அச்சமயத்தில் இருந்த நவத்வீப நகரம் சுமார் நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பதையும், அது சைதன்ய மஹாபிரபு வசித்த நவத்வீபம் அல்ல என்பதையும் பக்திவினோத தாகூர் கண்டறிந்தார். சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடம் இப்போது கங்கையினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது என்று சிலரும் நவத்வீப நகரத்தில் அஃது உள்ளது என்று சிலரும் கூறி வந்தனர். அவை அனைத்தினாலும் அதிருப்தியுற்றிருந்த பக்திவினோத தாகூர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். பழங்கால வரைபடங்கள், அரசாங்கப் பதிவுகள், மற்றும் சைதன்ய மஹாபிரபுவின் காலத்தில் எழுதப்பட்ட அங்கீகாரம் பெற்ற புத்தகங்களின் அடிப்படையில், மாயாபுர் நவத்வீப தாமமானது கங்கையின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது என்று பக்திவினோத தாகூர் உறுதி செய்தார். கங்கையின் கிழக்குக் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மணல்மேடுகள் காணப்பட்டு அங்கு பல்வேறு துளசிச் செடிகள் வளர்ந்து வருவதைக் கண்டு ஆச்சரியம் கொண்டார், அந்த நிலமானது இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. அந்த இடத்தில் வித்தியாசமான வெளிச்சங்களும் சப்தங்களும் ஏற்படுவதாக உள்ளுரில் புரளிகள் உளவி வந்தன. அதன் காரணத்தினால் அவ்விடத்தின் உரிமையாளர் அங்கு பேய்கள் இருக்கலாம் என்று எண்ணி அங்குச் செல்வதை தவிர்த்து வந்தார். இருப்பினும், அச்சமயத்தில் பழைய பாபாஜிகள் அனைவரும் அதனை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடமாக நம்பினார். அஃது உண்மையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், பக்திவினோத தாகூர் ஜகந்நாத பாபாஜியை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். பாபாஜி மஹாராஜர் வழக்கம்போல ஒரு கூடையில் உட்கார வைத்து தூக்கி வரப்பட்டார்.

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜியினால் தன்னுடைய கண்களைக்கூட திறக்க இயலாது. கண்களை திறக்க வேண்டுமெனில் கைகளைக் கொண்டு பலவந்தமாக அவற்றை திறக்க வேண்டியிருந்தது, நடப்பதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை, அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பிஹாரி லால் அவரை ஒரு கூடையில் தூக்கிச் செல்வது வழக்கம். ஆனால் சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடமான அந்த தெய்வீக ஸ்தலத்தை அடைந்த மாத்திரத்தில், அவர் கூடையிலிருந்து வெளியே குதித்து பரவசத்தில் ஆடத் தொடங்கினார். “ஹரி போல்!” “கௌராங்க!” என்று உச்சரித்தபடி, அந்த இடம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடம் என்பதை அவர் உறுதிபடுத்தினார்.

கௌராவிர்பாவ-பூமேஸ் த்வம்நிர்தேஷ்டா ஸஜ்-ஜன-ப்ரிய:
வைஷ்ணவ-ஸார்வபௌம:ஸ்ரீ-ஜகன்னாதாய தே நம:

“பகவான் சைதன்யர் தோன்றிய இடத்தைச் சுட்டிக் காட்டியவரும் அனைத்து வைஷ்ணவர்களுக்கு பிரியமானவரும் வைஷ்ணவர்களில் தலைசிறந்த வருமான ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜிக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.”

ஸ்ரீல பக்திவினோத் தாகூர் ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி

ஸ்ரீல பக்திவினோத் தாகூர்  ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment