ஸ்ரீ புவனேஷ்வர்

வழங்கியவர்: பிரியதர்ஷினி ராதா தேவி தாஸி

பகவான் ஸ்ரீ கௌராங்கர் (சைதன்ய மஹாபிரபு) விஜயம் செய்து தமது லீலைகளை அரங்கேற்றிய இடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுவுடன் அழைத்துச் செல்லும் பகவத் தரிசன யாத்திரை சேவாதாரிகளுக்கு எனது முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வருடம் ஸ்ரீ சைதன்ய மஹா பிரபுவின் லீலைகளில் முக்கிய பங்கு வகித்த ஒடிசா மாநிலத்திற்குச் செல்லும் பாக்கியம் எமக்குக் கிட்டியது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மற்றும் அவரது பக்தர்களின் திருப்பாதங்கள் பதிந்த திவ்ய ஸ்தலங்களான பத்ரக், ரெமுணா, கோபிவல்லபபுர், ஜாஜ்புர், புரி, கட்டாக், புவனேஷ்வர் ஆகியவற்றை நாங்கள் இந்த யாத்திரையில் தரிசித்தோம்.

 

இந்த புனித இடங்களுக்கெல்லாம் பக்தர்கள் சங்கத்தில் கிருஷ்ண கீர்த்தன கானத்துடன் சென்று ஸங்கீர்த்தன மழையில் நனைந்து பேரானந்தம் கண்டோம். இந்த யாத்திரை பக்தித் தொண்டின் மிக சக்தி வாய்ந்த ஐந்து அங்கங்களான திருநாம உச்சாடனம், பாகவதம் கேட்டல், ஸ்ரீ விக்ரஹ வழிபாடு, புனித ஸ்தலத்தில் வசித்தல், பக்தர்களின் சங்கம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து பெறும் வண்ணம் அமைந்திருந்தது.

 

பொதுவாக, சிவபெருமானின் கோயிலுக்கோ இதர தேவர்களின் கோயில்களுக்கோ வைஷ்ணவர்கள் செல்ல மாட்டார்கள். ஏனெனில், பகவான் கிருஷ்ணருக்கு சமமாகவோ அவரை விட உயர்ந்தவராகவோ தேவர்கள் ஒருபோதும் ஆக முடியாது. அவ்வாறு இருப்பினும், அவர்கள் பகவான் கிருஷ்ணரின் சேவகர்கள் என்பதால், அவர்களுக்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நமக்குக் கற்பித்துள்ளார். அதிலும் குறிப்பாக, சிவபெருமான் மிகவுயர்ந்த வைஷ்ணவர் (வைஷ்ணவானாம் யதா ஷம்பு, ஸ்ரீமத் பாகவதம் 12.13.16) என்பதாலும் புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் என்பதாலும், மஹாபிரபு, சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களை தரிசித்து அவருக்குரிய மரியாதையை செலுத்தினார்.

 

எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, சிவபெருமானின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றான புவனேஷ்வர் க்ஷேத்திரத்தை தரிசிக்கும் வாய்ப்பினை இந்த வருட பகவத் தரிசன யாத்திரையின் மூலம் யாம் பெற்றோம்.

புவனேஷ்வர் தாமத்தை சிவபெருமான் பெறுதல்

ஒரு சமயம் காசியில் சுதக்ஷிணன் என்ற சிவபெருமானின் பெரும் பக்தன் கிருஷ்ணரை வெல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் காசிநாதரான சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அவனால் திருப்தியுற்ற சிவபெருமான் அவனுக்கு உதவிட உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து எழுந்த யுத்தத்தில், சுதர்ஸன சக்கரம் அந்த அசுரனைப் பின்தொடர்ந்து, மொத்த காசி நகரத்தையும் சாம்பலாக்கிவிட்டு கிருஷ்ணரிடம் திரும்பியது. சிவபெருமான் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் சரணடைந்து பிரார்த்திக்கத் தொடங்கினார்: “எம்பெருமானே, என் இதய தெய்வமே, அசுரனுக்குத் துணை நின்றதால் எனது காசி நகரம் முழுவதையும் சுதர்ஸன சக்கரம் சாம்பலாக்கிவிட்டது. தற்போது நான் தங்குவதற்கான இடத்தையும் தங்களின் சேவகன் என்ற பணிவான மனோபாவத்தில் நான் எப்போதும் இருப்பதற்கான வழிமுறையையும் கூறுங்கள்.” இதைக் கேட்ட பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறினார்: “என்னுடைய இருப்பிடமான புருஷோத்தம க்ஷேத்திரத்தின் (புரி தாமத்தின்) வடக்குப் பகுதியில் உள்ள ஏகாம்ர கானனத்தை நான் உமக்கு அளிக்கிறேன். நீங்கள் புருஷோத்தம க்ஷேத்திரத்தின் காவல் தெய்வமாக அவ்விடத்தில் தங்க வேண்டும். அங்கு தாங்கள் “புவனேஷ்வரர்,” பூவுலகின் ஈஸ்வரன் என்று அறியப்படுவீர். மேலும், அங்கு வீற்றிருக்கும் அனந்த வாஸுதேவரின் பிரசாதத்தை ஏற்பதன் மூலமாக, எனது சேவகன் என்ற பணிவான மனப்பான்மை உம்மில் எப்போதும் நிலைத்திருக்கும்.”

ஏகாம்ர கானன்

பகவான் கிருஷ்ணரால் சிவபெருமானுக்கு அளிக்கப்பட்ட ஏகாம்ர கானன் மிகவும் மங்களம் வாய்ந்த ஸ்தலமாகும். புக்தி (லௌகீக இன்பம்), முக்தி (விடுதலை) ஆகிய இரண்டையும் அளிக்கவல்ல இந்த க்ஷேத்திரத்தின் மகிமைகள் ஸ்கந்த புராணத்தின் உத்கல காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புவனேஷ்வர் என்று அழைக்கப்படும் இந்த ஏகாம்ர கானன் சிவபெருமானின் இரண்டாம் காசியாகும் (திவ்ய காசி புவனேஷ்வர்). புராண காலங்களில் இவ்விடம் முழுவதும் ஒரு மாபெரும் மாமரத்தால் மூடப்பட்டிருந்தது. எனவே, இவ்விடம் ஏகாம்ர க்ஷேத்திரம் என்றும் அறியப்பட்டது (ஏக என்றால் ஒன்று, ஆம்ர என்றால் மாமரம்). மேலும், தங்கமலை என்று பொருள்படக்கூடிய “ஹேமாசலம்,” “ஸ்வர்ணாத்ரி” போன்ற பெயர்களிலும் இவ்விடம் அறியப்படுகிறது.

 

இந்த ஏகாம்ர கானனத்தில்தான் முதன்முதலில் சிவபெருமான் தனது பத்தினியான பார்வதி தேவிக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். ஒரு சமயம் சிவபெருமான் இங்கே ஸ்ரீமத் பாகவதத்தை தனது பத்தினியிடம் கூறிக் கொண்டிருந்தபோது, ஒரு கிளியும் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவி “உம், உம்” என்று சொல்லியபடி கவனித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள். பார்வதி தேவி உறங்கிக் கொண்டிருந்தபோதிலும், “உம், உம்” என்று சொல்லியபடி சப்தம் மட்டும் எங்கிருந்தோ வருவதை சிவபெருமான் கவனித்தார். ஒரு கிளி அம்மரத்தில் அமர்ந்து கொண்டு, “உம், உம்” என்று கேட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அக்கிளியைப் பிடிக்கச் சென்றபோது அது பறந்து விட்டது. அக்கிளி பத்ரிகாஷ்ரமத்தில் வியாஸதேவரிடம் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அவரது மனைவியின் வாய் வழியாக கருவினுள் சென்றது. அக்கிளியே பரீக்ஷித் மன்னருக்கு ஸ்ரீமத் பாகவதம் உபதேசித்த ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி. எனவே, இது வைஷ்ணவ க்ஷேத்திரம்.

 

ஸ்ரீல வியாசதேவர் ஒருமுறை இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்திருக்கிறார். இந்த க்ஷேத்திரத்தின் மகிமைகளை தனது புத்தகமான ஸ்வர்ணாத்ரி-மஹோதயாவில் விளக்கியுள்ளார். இந்த க்ஷேத்திரத்தில் ஒன்பது விசேஷ தீர்த்தங்கள் (பிந்து-சாகரம், பாபநாசினி, கங்கா, யமுனா, கோடி-தீர்த்தம், பிரம்ம-தீர்த்தம், மேக-தீர்த்தம், அலபு-தீர்த்தம் மற்றும் அசோகஹர) நிறைந்திருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த க்ஷேத்திரம் வாரணாசியைக் காட்டிலும் சிறந்தது, சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானது.

லிங்கராஜர் கோயிலின் முகப்புத் தோற்றம்

பிந்து ஸரோவர்

கிரீதி, வாசன் என்ற இரு அசுரர்களை பார்வதி தேவி இந்த க்ஷேத்திரத்தில் வதம் செய்தாள். அதன் பின்னர், மிகுந்த களைப்பும் தாகமும் அடைந்திருந்த அவள் தண்ணீர் வேண்டியதால், சிவபெருமான் தனது திரிசூலத்தினால் மலை உச்சியைத் துளைத்து ஓர் ஆழமான கிணற்றை உண்டாக்கினார். அக்கிணறு “ஷங்கர் பம்பி” என்று அறியப்படுகிறது. பின்னர் தேவி கூறினாள், என் தாகம் தணிய நிரந்தரமாக இவ்விடத்தில் ஒரு பெரும் குளம் வேண்டும்.” அப்போது சிவபெருமான் தனது நந்தி வாகனத்திடம் ஒரு குளத்தை ஏற்படுத்தும்படி கட்டளையிட்டார். அங்கு எல்லா தீர்த்தங்களும் தோன்றின; புனித நதிகளான காவேரி, கோமதி, கிருஷ்ணா, யமுனா, சரஸ்வதி, கண்டகி, ரிஷிகுல்யா, மற்றும் மஹாநதியும் அங்கு தோன்றின. பின்னர், தேவ லோகத்திலிருந்தும் பாதாள லோகத்திலிருந்தும் மந்தாகினியும் க்ஷீரோக நதியும் வந்தன.

 

எல்லாப் புனித தீர்த்தங்களும் அங்கு தோன்றியதைக் கண்ட சிவபெருமான் தனது திரிசூலத்தினால் மலை உச்சியைத் துளைத்து அவர்கள் அனைவரையும் துளித்துளியாக விழும்படி கேட்டுக் கொண்டார். “பிந்து” என்றால் துளி. அந்நதிகள் அவ்வாறே செய்ய பிரம்மதேவர் அங்கு ஒரு குளத்தை நிறுவினார். அந்த குளமே தற்போது பிந்து ஸரோவர் என்று அறியப்படுகிறது. பகவான் ஜனார்தனரும் (கிருஷ்ணரும்) பிரம்மதேவரால் தலைமை தாங்கப்பட்ட அனைத்து தேவர்களும் பிந்து ஸரோவரில் நீராடினர். இவ்வாறாக பிந்து ஸரோவர் நிறுவப்பட்டது.

அனந்த வாஸுதேவரின் கோயில்

பின்னர் ஷம்பு (சிவபெருமான்) தனது மரியாதைகளையும் வந்தனங்களையும் பகவான் ஜனார்தனருக்கு சமர்ப்பித்தார். பகவான் ஜனார்தனர் அனந்ததேவரை பிந்து ஸரோவருக்கு கிழக்குப் புறத்தில் ஸ்தாபித்தார். அனந்த வாஸுதேவரின் விக்ரஹங்களை இன்றும் நாம் பிந்து ஸரோவரின் கிழக்குப் பக்கத்தில் பார்க்கலாம். சிவபெருமான் க்ஷேத்திர பாலனாகவும் அனந்த வாஸுதேவர் தமது தங்கை சுபத்ரா தேவியுடன் க்ஷேத்திர நாயகனாகவும் வாசம் செய்கின்றனர். பிந்து ஸரோவரின் கிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் அனந்த வாஸுதேவர் சிவபெருமானின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறார். அக்கோயிலின் முன்புற சுவற்றில் லக்ஷ்மி தேவியையும் சுதர்சன சக்கரத்தையும் காணலாம். லிங்கராஜ சிவபெருமானின் இஷ்ட தெய்வங்களாக அனந்த வாஸுதேவரும் மதன மோஹனரும் திகழ்கின்றனர். புவனேஷ்வரில் உள்ள மதன மோஹன விக்ரஹம் நான்கு கரங்களைக் கொண்டுள்ளார்.

 

சந்தன யாத்திரையின்போது, சிவபெருமான், அனந்த வாஸுதேவர், மதன மோஹனர் ஆகிய மூவரும் பிந்து ஸரோவரில் பவனி வருவது வழக்கம். லிங்கராஜரின் கோயில் வளாகத்தில் மதன மோஹனர் ஒரு தனிக் கோயிலில் வசிக்கிறார். தற்போது அவர் நாராயணராக அறியப்படுகிறார். மேலும், தற்போது சந்தன யாத்திரை உற்சவத்தில் அவர் சிவபெருமானுடன் செல்வதில்லை.

 

அனந்த வாஸுதேவர் கோயிலில் வைஷ்ணவி பகவதி தேவி (பார்வதி தேவி) அனந்த வாஸுதேவருக்காக சமைக்கிறாள். முதலில் அனந்த வாஸுதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவே (லிங்கராஜ்) சிவபெருமானின் கோயிலுக்கு பிரசாதமாக அனுப்பப்படுகிறது. சிவபெருமான் மிகவும் திருப்தியுடன் அந்த பிரசாதத்தை ஏற்கிறார். இதுவே வைஷ்ணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை. முதலில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவை மட்டுமே வைஷ்ணவர்கள் (கிருஷ்ண பக்தர்கள்) ஏற்பது வழக்கம். அதன்படி, உயர்ந்த வைஷ்ணவரான சிவனுக்கு விஷ்ணு பிரசாதம் வழங்குவதே சிறந்தது. விஷ்ணு பிரசாதம் வழங்கி வைஷ்ணவர்கள் சிவபெருமானை வழிபடுவர். வைஷ்ணவர் அல்லாதவரோ நேரடியாக சிவனை வழிபடுவர், வைஷ்ணவர்கள் அத்தகைய வழிபாட்டிலிருந்து பெறும் பிரசாதத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அனந்த வாஸுதேவரின் பிரசாதத்தை லிங்கராஜ கோயிலில் உள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கும் வழிமுறை சில வருடங்களாக நிறுத்தப்பட்டு விட்டது. ஆயினும், ஜகந்நாதர் கோயிலில் இவ்வழிமுறை இன்றும் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ஜகந்நாதர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து தேவர்களுக்கும் ஜகந்நாதரின் பிரசாதமே அர்ப்பணிக்கப்படுகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிந்து ஸரோவரில் நீராடியுள்ளார். எவர் அங்கு நீாரடினாலும் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலனைப் பெறுவர்.

லிங்கராஜர் கோயிலுக்கு அருகில் உள்ள பிந்து ஸரோவர் எனப்படும் திருக்குளம்.

புவனேஷ்வரில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

ஜனார்தனராகிய கிருஷ்ணரின் கட்டளையாலும் கருணையாலும் சிவபெருமான் க்ஷேத்ர பாலனாக மாறினார். அதே சமயம், அவர் உயர்ந்த வைஷ்ணவராகையால், அவர் திருப்தியுற்றால், அவரால் பக்தியை வழங்க முடியும், பக்தி ப்ரதாத. சிவபெருமான் உயர்ந்த வைஷ்ணவர்–வைஷ்ணவ ஸேவன-க்ருஷ்ண-பூஜாம், வைஷ்ணவருக்கு சேவை செய்வதால் கிருஷ்ணர் வழிபடப்படுகிறார்–இதை நமக்குக் கற்பிக்கவே மஹாபிரபு புவனேஷ்வர் கோயிலை தரிசித்தார். மஹாபிரபு இந்த க்ஷேத்திரத்திற்கு சென்றுள்ளமையால் அவரின் பிரிய பக்தர்களும் இங்கு சென்று கிருஷ்ண பக்தியை வேண்டி அவரின் கருணைக்காக பிரார்த்தனை செய்வர்.

 

சிவபெருமானின் இருப்பிடமான புவனேஷ்வர் க்ஷேத்திரத்தைப் பற்றி விருந்தாவன தாஸ தாகூர் சைதன்ய பாகவதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஜகந்நாத புரிக்குச் செல்லும் பாதையில் புவனேஷ்வரை அடைந்தபோது, அங்குள்ள லிங்கராஜர் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. லிங்கராஜர் அனந்த வாஸுதேவரின் மிகப் பிரியமான சேவகர் என்ற காரணத்தினால் மஹாபிரபு இக்கோயிலை தரிசித்தார். லிங்கராஜரின் முன்பாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பரவசத்தில் பாடி ஆடினார் என்பதை சைதன்ய பாகவதம் ஆதி காண்டம் இரண்டாம் அத்தியாயம் குறிப்பிடுகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வைஷ்ணவர்கள் புவனேஷ்வரில் அமைந்துள்ள லிங்கராஜரை தரிசிக்க வருகின்றனர்.

 

எங்களுடைய புவனேஷ்வர் யாத்திரையில், லிங்கராஜரை தரிசித்துவிட்டு, உடனடியாக நாங்கள் புவனேஷ்வரில் உள்ள இஸ்கான் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், பாடி ஆட எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. எனினும், மஹாபிரபு கீர்த்தனம் செய்து அங்கே ஆடியதை எண்ணி மெய்சிலிர்த்துப் போனோம்.

புவனேஷ்வரில் ஸ்ரீல பிரபுபாதர்

புவனேஷ்வரில் அமைந்துள்ள இஸ்கானின் கிருஷ்ண பலராமர் கோயில் மிகமிக அற்புதமானதாகவும் பிரதான வீதியில் அமைந்ததாகவும் உள்ளது. இஸ்கான் கோயில் இங்கு வருவதற்கு முன்னர் இவ்விடம் காடாகவே இருந்தது. இருப்பினும், இவ்விடத்தை மிகவும் ரசித்த ஸ்ரீல பிரபுபாதர், தனது லீலைகளின் இறுதிக் கட்டத்தில் (1977இல்) பதினாறு நாள்கள் இங்கு தங்கி உபன்யாசங்களை வழங்கினார். அச்சமயத்தில் இக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கோயிலின் நுழைவாயிலில் அவர் தங்கிய இடம் நினைவுச் சின்னமாக இன்றும் அமைந்துள்ளது. புவனேஷ்வரில் கேதாரி கௌரி நீர் பிரபலமானது, ஸ்ரீல பிரபுபாதர் அன்றாடம் இந்நீரையே பருகுவார். அவர் விருந்தாவனத்தில் இருந்தபோதும் இந்நீரே அனுப்பப்பட்டது. ஸ்ரீல பிரபுபாதர் ஜகந்நாத புரியில் முதலில் கோயில் அமைக்க நினைக்கவில்லை, முதலில் க்ஷேத்திரத்தின் நுழைவாயிலில் கட்ட தீர்மானித்தார் என்று கூறப்படுகிறது.

பிந்து ஸரோவரின் கிழக்குப் பகுதியில் காணப்படும்

அனந்த வாஸுதேவரின் திருக்கோயில்.

கிருஷ்ண பலராமரின் விசேஷ தரிசனம்

நாங்கள் லிங்கராஜரை தரிசித்து, க்ஷேத்திரத்தில் நுழைவதற்கு அனுமதியை வேண்டி வருவதற்குள், இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயிலில் நடை சாத்தப்பட்டுவிட்டது. பக்தர்கள் உற்சாகத்துடன் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினைப் பாடினர். எப்படியோ பக்தர்களின் வேண்டுதலால் மூடிய கதவு திறக்கப்பட்டு, பகவத் தரிசன யாத்திரீகர்களுக்கு பகவானின் விசேஷ தரிசனம் கிட்டியது. பக்தவத்ஸலரான பகவானின் தரிசனத்தைப் பெற்ற பக்தர்கள் இன்னும் உற்சாகமாக ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை கீர்த்தனம் செய்தபடி அவர்களை வலம் வந்தனர்.

 

ஸ்ரீ சைதன்ய பாகவதத்தில் புவனேஷ்வர் க்ஷேத்திரத்திற்காக ஓர் அத்தியாயமே அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. ஒரு சிறிய சுருக்கத்தினை மட்டும் இங்கு வழங்கியுள்ளோம், பிரசித்தி வாய்ந்த இந்த க்ஷேத்திரத்தின் மகிமைகளைக் கூறிக் கொண்டே போகலாம். இது ஒரு வைஷ்ணவ க்ஷேத்திரம். எனவே, ஸ்ரீ க்ஷேத்திரத்திற்கு (ஜகந்நாத் புரிக்கு) செல்வதற்கு முன்பு, ஒருவர் தவறாமல் க்ஷேத்திர வாயிலில் உள்ள புவனேஷ்வர் க்ஷேத்திரத்திற்குச் சென்று லிங்கராஜரிடம் அனுமதியைப் பெற வேண்டும். அவரோ, “வாருங்கள் ஜகந்நாதர் தரிசனம் பெறுங்கள்” என்று பக்தர்களை கூப்பிய கரங்களுடன் வரவேற்பார்.

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment