ஆன்மீக குரு அவசியமா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

ஆன்மீகத் தன்னுணர்வினை ஒவ்வொருவரும் தானாக அடைய வேண்டும் என்றும், அதற்கு சாஸ்திரங்களோ குருவோ அவசியம் இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஆதாரமற்றதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமான அத்தகு கூற்றுகளை எடுத்துரைக்கும் நபர்களுக்கு பதிலளிக்கும் வகையில், சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை பகவத் தரிசனத்தின் சென்ற இதழில் வெளியிட்டிருந் தோம். ஆன்மீகத் தன்னுணர்வைப் பெறுவதில் குருவின் அவசியத்தை இந்த இதழில் காணலாம்.

குரு இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையா?

“ஆன்மீக வாழ்க்கையை வாழ்வதற்கு குரு அவசியமா?” “ஆன்மீக குரு தன்னுடைய அறிவை எங்கிருந்து பெறுகிறார்?” அல்லது “நான் என்னுடைய குருவை எவ்வாறு அறிவது?” போன்ற கேள்விகள் அவ்வப்போது எம்மிடம் கேட்கப்படுகின்றன.

 

சமீபத்தில் ஒருவர் எம்மிடம் கேள்வி எழுப்பினார்: “நான் ஆன்மீகமானவன், ஆன்மீக உண்மையை என்னால் சுயமாக ஏன் தெரிந்துகொள்ள முடியாது? நான் ஏன் வேறு ஒருவரிடம் செல்ல வேண்டும்? என்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக உண்மையை என்னால் அடைய முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார். அவருடைய கேள்விகள் வாஸ்தவமாக தோன்றலாம். உண்மையைத் தேடுவதில் நேர்மை, தானாக கிடைக்கும் தகவல்களை சேகரித்தல், அந்த சின்னஞ்சிறு தகவல்களை ஒன்றுசேர்த்து தன்னுடைய உள்ளுணர்வின் உதவியுடன் வாழ்வின் சிக்கல்களை தீர்க்க நினைத்தல்–இஃது அற்புதமான வழிமுறையாக தோன்றுகிறது. அப்படித்தானே?

 

ஆனால் சற்று யோசியுங்கள்! நாம் எந்தவொரு பௌதிக அறிவைத் தேடினாலும் (இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், இலக்கணம் என எதுவாக இருந்தாலும்), அதனை அறிந்த வல்லுநரை அணுகுவதே விரைவான, உறுதியான, மற்றும் எளிமையான வழிமுறையாகும். முன்பின் தெரியாத மாநகரத்தில் நீங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அங்குள்ள தபால் நிலையத்திற்கு நீங்கள் செல்ல விரும்பினால், என்ன செய்வீர்கள்? அங்கே இங்கே திரிந்து, எந்த திசையில் செல்லலாம் என்று யூகிப்பீர்களா? நீங்கள் செய்தாலும் செய்வீர்கள். ஆனால் தபாலை அனுப்புவதில் நீங்கள் நேர்மையானவராக இருந்தால், யாரேனும் ஒருவரிடம் விசாரித்து, செல்ல வேண்டிய பாதையைத் தெளிவுபடுத்திக் கொண்டு, நேரடியாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்வீர்கள்.

 

ஆன்மீக வாழ்க்கை என்பது முன்பின் தெரியாத மாநகரத்தில் தபால் நிலையத்தைத் தேடுவதைப் போன்றதாகும். நீங்கள் உங்களுடைய மனதின் வழிகாட்டுதலைப் பின்பற்றி கற்பனை செய்தால், நேரத்தை வீணடித்துக் கொண்டே செல்லலாம், அல்லது நீங்கள் நேர்மையானவராக இருந்தால், “எங்குச் செல்வது என்பது எனக்குத் தெரியாது,” என்பதை ஒப்புக் கொண்டு விவரம் தெரிந்தவரை அணுகலாம். இதுவே உண்மையான ஆன்மீக வாழ்வின் முதற்படியாகும்.

 

கேள்வி: “ஆனால் நான் ஆர்வமுடையவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தால், என்னுடைய அந்த நேர்மையின் பலத்தினால் தன்னுணர்வை ஏன் அடைய முடியாது?” ஆம். இயலும், ஆனால் உங்களுடைய நேர்மையுடன் சரியான வழிமுறையையும் நீங்கள் இணைக்க வேண்டும். உதாரணமாக, மருத்துவராக வேண்டும் என்னும் நேர்மையான விருப்பம் உங்களிடம் இருக்குமெனில், அந்த நேர்மை என்பது முதல்படி மட்டுமே. அது நிச்சயம் அவசியம். ஆனால் அந்த நேர்மை உண்மையானதாக இருந்தால், நீங்கள் மருத்துவப் புத்தகங்களைக் கடையில் வாங்கி வந்து வீட்டில் உட்கார்ந்து படிக்க மாட்டீர்கள். நிச்சயம் மாட்டீர்கள். நீங்கள் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வீர்கள், அங்குள்ள நிபுணர்களிடமிருந்து கல்வி கற்பீர்கள், படிப்படியாக உங்களை தகுதியுடைய மருத்துவராக மாற்றிக்கொள்வீர்கள். அதுபோல, நீங்கள் தன்னுணர்வைப் பெறுவதில் நேர்மையுடையவராக இருப்பின், அப்போது உண்மையான ஆன்மீக குருவினை அணுகி அவரின் கீழ் அறிவைப் பெற வேண்டும்.

 

கேள்வி: “ஆனால், நாமே சுயமாக கஷ்டப்பட்டு இறுதியில் அடையக்கூடிய உண்மை உயர்ந்த உண்மையல்லவா?” உங்களுடைய தேவை தன்னுணர்வா அல்லது “நானே செய்வேன்” என்ற தற்பெருமையா என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். தன்னுணர்வு அடைவதில் நீங்கள் தீவிரமாக இருந்தால், அதற்காக கிடைக்கும் எல்லா உதவிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். “நானே தேடுகிறேன்” என்ற போர்வையை அனுபவிப்பதற்காக உண்மையைத் தேடுவதைத் தள்ளிப்போடுவது முட்டாள்தனமாகும்.

 

கேள்வி: “ஆனால், பகவத் கீதை மற்றும் இதர ஆன்மீக நூல்களைப் படித்து வருகிறேன். அவற்றை என்னால் சுயமாக புரிந்துகொள்ள முடியும் என்றும் ஆன்மீக வாழ்க்கையை நானே சுயமாக பயிற்சி செய்யலாம் என்றும் தோன்றுகிறது.” நீங்கள் பகவத் கீதையைப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் கீதையின் நான்காவது அத்தியாயத்தில் (ஸ்லோகம் 34) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய், அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய், உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.”

ஆன்மீக குருவை ஏற்பதற்கான காரணங்கள்

ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில் கார், செல்போன், டிவி, வாஷிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்கள் தேவைப்படுகின்றன. இவற்றுடன் வாழ்வதே இன்றைய வாழ்வில் ஃபேஷனாகிவிட்டது. சிலர் ஆன்மீக குருவை ஏற்பதையும் அதுபோன்ற ஒரு ஃபேஷனாக மாற்றி விட்டனர். சிலரோ ஆன்மீக குருவை நல்ல படிப்பிற்காகவும் நல்ல வேலைக்காகவும் நல்ல ஓய்விற்காகவும் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் ஏற்கின்றனர், சிலர் நல்ல காம வாழ்விற்காகவும் ஏற்கின்றனர். ஆனால் இவற்றிற்கும் தன்னுணர்விற்கும் துளிகூட சம்பந்தமில்லை. அதுபோன்ற விஷயங்களை விரும்பினால், குறிப்பிட்ட கட்டணத்துடன் அவற்றை வழங்கக்கூடிய எத்தனையோ பெயரளவு யோகிகளும் குருமார்களும் உள்ளனர். இன்றைய உலகில் அஃது ஒரு மாபெரும் தொழிலாக இருக்கின்றது, ஆனால் ஆன்மீக வாழ்க்கை என்பது இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

 

தத் விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “தன்னுணர்வை அடைய விரும்புபவன் ஆன்மீக குருவை கட்டாயம் அணுக வேண்டும்,” என்று புராதன வேத இலக்கியமான முண்டக உபநிஷத் (1.2.12) கூறுகிறது. மேலும், தஸ்மாத் குரும் பிரபத்யேத ஜிஜ்ஞாஸு ஷ்ரேய உத்தமம், “வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை அடைவதில் தீவிரமாக இருப்பவன் ஆன்மீக குருவிடம் சரணடைய வேண்டும்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (11.3.21) கூறுகிறது. தங்களுடைய சீடர்களின் பணத்தைச் சூறையாடுவதில் மிகவும் நிபுணர்களாக இருக்கும் பெயரளவு குருமார்கள் பலர் இருப்பர் என்றும், எல்லா பௌதிகக் கவலைகளிலிருந்தும் தங்களுடைய சீடர்களை விடுவிக்கக்கூடிய உண்மையான ஆன்மீக குருவைக் காண்பது அரிதானது என்றும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

 

வாழ்வின் மிகவுயர்ந்த குறிக்கோளான தன்னுணர்வு, நம்மை இந்த ஜடவுலகின் இன்பதுன்பத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்கிறது. ஜடவுலக வாழ்க்கை முற்றிலும் குழப்பங்கள் நிறைந்ததாகும், வாழ்வின் குழப்பங்களுக்கு தீர்வைத் தேடுவதில் நேர்மையாக இருப்பவன் உண்மையான ஆன்மீக குருவைத் தேடுதல் அவசியமானதாகும். உண்மையான ஆன்மீக குருவைத் தேடுபவர் பகவத் கீதையில் அர்ஜுனன் வெளிப்படுத்திய அதே பணிவினை வெளிப்படுத்துதல் அவசியமாகும். கீதையில் (2.7) அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்: “இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன், இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள்கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.”

 

அதுவரை நண்பனாக இருந்த அர்ஜுனன் தற்போது சீடனாக சரணடைகிறான். ஏனெனில், நட்புறவில் பேசப்படும் பேச்சுகள் இனிமேல் பயன் தராது என்பதை அவன் உணர்ந்தான். கிருஷ்ணரிடம் சரணடைகிறான் என்றால், அவர் கூறுபவை அனைத்தையும் பின்பற்ற ஒப்புக்கொள்கிறான் என்று பொருள். ஆன்மீக குருவை ஏற்பது என்றால், அவர் கூறும் கட்டளைகளை அப்படியே பின்பற்றுதல் என்று அர்த்தம். அவரது கட்டளைகள் மீறப்படக் கூடாது. எனவே, குருவைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவன் கவனமாக இருத்தல் வேண்டும். நீங்கள் ஒரு தவறான நபரை ஆன்மீக குருவாக ஏற்றுவிட்டால், அவர் உங்களை தவறான வழியில் வழிநடத்துவார். அப்போது உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.

ஆன்மீக ஞானத்தைப் பெறுவதற்கு குருவை அணுகுவது கட்டாயம் என்று உபநிஷத் கூறுகிறது.

ஆன்மீக குரு என்பவர் யார்?

ஆன்மீகம், பௌதிகம் என எதை எடுத்துக் கொண்டாலும், கடவுளைக் காட்டிலும் சிறந்த அறிவாளி யாருமில்லை. எனவே, மூல முழுமுதற் கடவுளான கிருஷ்ணரே ஆதி குரு. ஆனால் கிருஷ்ணரிடமிருந்து நாம் எவ்வாறு வழிகாட்டுதலைப் பெற முடியும்? மாபெரும் ஆச்சாரியரான கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி இக்கேள்விக்குப் பதிலளிக்கின்றார்: “கட்டுண்ட ஆத்மா தன்னுடைய சொந்த முயற்சியினால் கிருஷ்ண உணர்வினைப் புதுப்பிக்க முடியாது. ஆயினும், பகவான் தன்னுடைய காரணமற்ற கருணையினால் வேத இலக்கியங்களையும் புராணங்களையும் அதற்காக தொகுத்துள்ளார்.” (சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 20.122) எனவே, வேத இலக்கியங்களை நம்பிக்கையுடனும் கவனத்துடனும் கேட்பதால், நாம் கடவுளிடமிருந்து ஆன்மீக வழிகாட்டுதலை பெற இயலும்.

 

வேத இலக்கியங்கள் என்பது வேதங்கள், உபநிஷத்துகள், வேதாந்த சூத்திரம், மஹாபாரதம், புராணங்கள், (மிகவும் முக்கியமாக) ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவையனைத்தும் முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வருகின்றன. அவர் அதனை பிரம்மதேவருக்கு முதலில் உபதேசித்து, அதன் பின்னர் படிப்படியாக அது கீழிறங்கி வருகிறது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்னர் வியாஸதேவர் அதனை எழுத்து வடிவில் வழங்கினார். இங்கே முக்கியமான கருத்து என்னவெனில், உண்மையான ஆன்மீக குருவைத் தெரிந்துகொள்வதற்கு நாம் வேத இலக்கியங்களை அணுக வேண்டும் என்பதே. ஏனெனில், உண்மையான ஆன்மீக குருவின் குணங்கள் அங்கே விளக்கப்பட்டுள்ளன. ஆன்மீகப் பாதையைத் தேடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்லாயிரம் வருடங்களாக வேத வழிமுறையினால் பக்குவமடைந்துள்ளனர்.

 

கேள்வி: “ஆனால் எதையும் படிக்காமல் நேர்மையான ஆன்மீக குருவைச் சந்திப்பது இயலுமா?” நிச்சயமாக. ஓர் அதிர்ஷ்டசாலி மனிதன் பக்குவமான ஆன்மீக குருவினை சந்தர்ப்பவசத்தினால்கூட சந்திக்க நேரிடலாம். ஆனால், நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலி மனிதனாக இல்லாமல் போகலாம், நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரனைச் சந்திக்க நேரிடலாம். இதனை எவ்வாறு உணர்வீர்கள்? ஒரு நல்ல கட்டிட கலைஞரை நீங்கள் தேடுவதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்கு கட்டிடங்களைப் பற்றிய போதிய அறிவு இல்லாவிட்டால்கூட, தங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் ஒரு நல்ல நேர்மையான கட்டிடக் கலைஞனை சந்திக்கலாம். ஆனால் நீங்கள் தேடக்கூடிய நபரின் தகுதிகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நல்லவரைச் சந்திப்பதற்கான தங்களுடைய வாய்ப்புகள் அதிகம். இஃது ஆன்மீக குருவிற்கும் பொருந்தும். அறிவினை நீங்கள் நம்பலாம், அதிர்ஷ்டத்தினை நம்பவியலாது. ஆன்மீக குருவிடம் சரணடைவது என்னும் முக்கியமான முடிவினை அதிர்ஷ்டத்திடம் விட்டுவிடுதல் கூடாது. குருட்டுத்தனமாகவோ மனவெழுச்சியினாலோ ஆன்மீக குருவிடம் சரணடையக் கூடாது. குருவின் தகுதிகளாக வேத இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை அறிந்திருத்தல் நன்று.

 

கேள்வி: “நல்ல முடிவை எடுக்கும் திறனற்ற நபர்கள் உண்மையான குருவை எவ்வாறு அடைவது?” முதல் விஷயம், ஒரு பள்ளிக்கூடத்தைத் தேடுவதைப் போல, நீங்கள் ஆன்மீக குருவைத் தேட வேண்டும். பள்ளிக்கூடம் என்றால் என்ன என்பது குறித்து ஓர் ஆரம்ப அறிவாவது உங்களுக்கு இருத்தல் வேண்டும். பள்ளிக்கூடத்தைத் தேடிக் கொண்டு நீங்கள் துணிக்கடைக்குச் செல்லக் கூடாது. பள்ளிக்கூடம் என்றால் என்ன, துணிக்கடை என்றால் என்ன என்பதைக்கூட அறியாத அளவிற்கு நீங்கள் அறியாமையில் இருப்பீர்களேயானால், அப்போது அது மிகவும் கடினம். ஆன்மீக குருவின் தகுதிகளைப் பற்றிய அடிப்படை அறிவாவது உங்களுக்கு அவசியம்.

ஆன்மீக குருவின் தகுதிகள் யாவை?

உண்மையான ஆன்மீக குருவின் தகுதிகளை இரண்டு வார்த்தைகளில் கூறிவிடலாம்: ஷ்ரோத்ரியம் ப்ரஹ்ம-நிஷ்டம். (முண்டக உபநிஷத் 1.2.12) ஷ்ரோத்ரியம் என்றால், ஆன்மீக குருவானவர் வேத ஞானத்தை மற்றொரு ஆன்மீக குருவிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் என்று பொருள்; மேலும், அந்த ஆன்மீக குருவானவர் அதனை கிருஷ்ணரிடமிருந்து வரும் குரு சீடப் பரம்பரையில் பெற்றிருக்க வேண்டும். உண்மையான ஆன்மீக குரு புதிதாக எதையும் கண்டுபிடிப்பதில்லை. அவருடைய பணி அறிவைப் பரிமாறுவது மட்டுமே, உருவாக்குவது அல்ல. அவருடைய கடமை வேத ஞானத்தை பகவான் எவ்வாறு வழங்கினாரோ, அவ்வாறே உள்ளது உள்ளபடி வழங்குவதாகும். ஒரு தபால்காரர் எவ்வாறு தபால்களில் தன்னுடைய சொந்த கருத்துகள் எதையும் சேர்க்காமல் குறைக்காமல் வழங்குகின்றாரோ, அதுபோல ஆன்மீக குருவானவர் வேத ஞானத்தைக் குறைக்காமல் சேர்க்காமல் அப்படியே வழங்குகிறார்.

 

ஆன்மீக குருவிடம் இந்த தகுதிகள் உள்ளன என்பதை எவ்வாறு அறிவது? மிகவும் எளிது. கிருஷ்ணரின் வார்த்தைகள் பகவத் கீதையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், “எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிரு, என்னிடம் சரணடை.” (பகவத் கீதை 9.34) உண்மையான ஆன்மீக குருவானவர் தனது சீடனிடம் எப்போதும் கிருஷ்ணரை நினைக்கும்படியும் அவரிடம் சரணடையும்படியும் அறிவுறுத்துவார். அருவமான ஒன்றினை நினைக்கும்படியோ கிருஷ்ணர் அல்லாத வேறொருவரிடம் சரணடையும்படியோ அவர் கூற மாட்டார். அவ்வாறு அவர் கூறினால், அவர் எப்படி உண்மையான குருவாக இருக்க முடியும்? அத்தகு நபரை நாம் உடனடியாக உபயோகமற்றவர் என்று நிராகரிக்க வேண்டும்.

 

ஆன்மீக குருவானவர் தன்னைக் கடவுளாக விளம்பரப்படுத்திக்கொள்ளக் கூடாது. உண்மையான ஆன்மீக குரு எப்போதும் தன்னை கடவுளின் பணிவான சேவகனாகவே கூறிக்கொள்கிறார், கடவுளாக அல்ல. “நான் கடவுள்,” அல்லது “நீங்களும் கடவுளாகலாம்” என்று சீடர்களிடம் கூறக்கூடிய எந்தவொரு குருவும் ஏமாற்றுக்காரனே.

 

உண்மையான குருவின் இரண்டாவது தகுதி: ப்ரஹ்ம-நிஷ்டம். ப்ரஹ்ம-நிஷ்டம் என்றால், ஆன்மீக குருவானவர் கிருஷ்ணரின் மீது பூரண நம்பிக்கை கொண்டவர் என்றும் எப்போதும் கிருஷ்ண உணர்வில் மூழ்கியவர் என்றும் பொருள்படும். ஆன்மீக குருவானவர் எல்லாவித பௌதிகப் பற்றுதல்களிலிருந்தும் விடுபட்டவராக இருக்க வேண்டும். அவர் தன்னுடைய புலன்களின் எஜமானராக இருக்க வேண்டும், புலன்களின் சேவகனாக அல்ல. உதாரணமாக, யாரேனும் ஒருவர் போதைப் பொருட்கள், பெண்கள், அல்லது சிகரெட் போன்றவற்றில் பற்றுடையவராக இருப்பின், அவர் குருவாக இருப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் எத்தனையோ பெயரளவு குருமார்கள் தங்களை ஆனந்தத்தின் உச்சநிலையில் இருப்பவர்களாக கூறிக் கொண்டு, சீடர்களிடம் காமச் செயல்களில் ஈடுபடும் தரம் தாழ்ந்த நிலைக்கு வருகின்றனர். அவர்கள் ப்ரஹ்ம-நிஷ்டம் என்னும் தகுதியை அடையவில்லை. ஆன்மீக குருவானவர் எப்போதும் கிருஷ்ணரை நினைப்பவராக, கிருஷ்ணரின் பக்தராக, கிருஷ்ணரின் புகழைப் பரப்புபவராக இருக்க வேண்டும்.

நண்பனாக இருந்த அர்ஜுனன் கிருஷ்ணரை குருவாக ஏற்ற பின்னரே கீதையின் உபதேசம் தொடங்கியது.

ஆன்மீக குரு ஞானத்தை எவ்வாறு வழங்குகிறார்?

ஆன்மீக குருவானவர் சீடனின் தலையைத் தொட்டு, அல்லது ஏதோ ஒரு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து தன்னுடைய சக்தியை சீடனுக்கு வழங்குகிறார் என்பதைப் போன்ற கதைகளை நாம் சில நேரங்களில் கேட்கிறோம். வேறு சிலரோ கண் அசைவு, கட்டிப்பிடித்தல், புதிரான விடுகதைகள், இரகசிய மந்திரங்களை காதில் ஓதுதல் போன்றவற்றினால் ஞானம் வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த வழிமுறைகள் எதுவுமே உண்மையான ஆன்மீகத் தன்னுணர்வுடன் கொஞ்சம்கூட சம்பந்த முடையவை அல்ல.

 

வேத வழிமுறை மிகவும் எளிமையானது: ஆன்மீக குருவானவர் தன்னுணர்வு பெற்ற ஆத்மா, அந்த ஆன்மீக குருவின் உபதேசங்களைக் கேட்டுப் பின்பற்றுவதால், சீடனும் தன்னுணர்வைப் பெற முடியும். அவ்வளவுதான். இங்கே இரகசிய மந்திரங்கள் ஏதுமில்லை, திடீரென முளைக்கும் லிங்கங்களும் இல்லை. ஆன்மீக குருவானவர் எளிமையான முறையில் தான் தன்னுடைய குருவிடமிருந்து கற்ற விஷயங்களை அப்படியே தனது சீடனுக்கு கற்றுத் தருகிறார். பணிவான மனப்பான்மையுடன் அவற்றைக் கேட்டு பின்பற்றுவதால், சீடனும் தன்னுணர்வை அடைகிறான்.

 

சீடன் தன்னுடைய நேர்மையான கேள்விகளை குருவிடம் சமர்ப்பிக்கிறான், குருவும் அக்கேள்விகளுக்கு அதிகாரபூர்வமான முறையில் பதிலளிக்கிறார். பக்தித் தொண்டின் விஞ்ஞானம் என்பது முற்றிலும் தெய்வீக சக்தியினால் நிறைந்தது. ஆன்மீக குருவிற்கு பணிவுடனும் அடக்கத்துடனும் சேவை செய்து அவரிடமிருந்து கேட்போ மானால், அந்த தெய்வீக சக்தியினை நம்மாலும் உணர முடியும். அப்போது நாம் ஆன்மீக அறிவினைப் பெற்று பௌதிக வாழ்வின் சிக்கல்களுக்கு அப்பாற்பட்ட முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும்.

அடுத்த இதழில்: குருவிடமிருந்து ஆசி மட்டும் போதுமா?

ஆன்மீக குரு ஒரு தபால்காரரைப் போன்று வேத செய்திகளில் எதையும் சேர்க்காமல் எதையும் எடுக்காமல் உள்ளதை உள்ளபடி வழங்குபவராவார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives