கடனிலிருந்து விடுபடுவது எப்படி?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

கடன் அன்பை முறிக்கும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார், பெற்ற பிள்ளையையும் வாங்கிய கடனையும் இல்லை எனக் கூற முடியாது என்று மக்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். கடன் தொல்லையினால், தூக்குப் போட்டுத் தற்கொலை, விஷம் குடித்துத் தற்கொலை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி வரும் செய்திகளாகும். மக்கள் கடன் தொல்லையினால் அவதிப்படும்போது நரக வேதனையின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.

பொருளாதாரக் கடன்

கடன்களில் பல வகை உண்டு என்றபோதிலும், பொதுவாகக் கடன் என்றதும் மக்களின் நினைவில் வருவது பொருளாதாரக் கடனே. அந்த பொருளாதாரக் கடன் பல ரூபங்களில் சமுதாயத்தில் வெளிப்படுகிறது: வீட்டுக் கடன், கல்விக் கடன், வியாபாரக் கடன், வாகனக் கடன், அடமானக் கடன், விவசாயக் கடன், மருத்துவக் கடன், அரசாங்கக் கடன் மற்றும் பல.

 

சிங்கம் போல் சிலுப்பிக் கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்த பெருமை கடனுக்கு உண்டு. கடன் தொல்லை மக்களை வாட்டி விஸ்வரூபம் எடுக்கும்போது, மனக்கசப்பு, தூக்கமின்மை, பிரிவு, ஏமாற்றம், விரக்தி, எரிச்சல், அவலநிலை, மன உளைச்சல், அடிமை உணர்வு, குடும்பம் சின்னாபின்னமாகுதல் போன்ற விரும்பத்தகாத உணர்வுகள் கடன்பட்டவர்களுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் ஏற்படுகிறது. கடன்பட்டவர்களின் பலவீனத்தைத் தவறாகப் பயன்படுத்தி கடன் கொடுத்தவர்கள் அவர்களை வஞ்சிக்கும்போது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, அவர்களின் பிடி இறுகுகின்றது. பொருளாதாரக் கடன்களின் தொல்லையிலிருந்து மீண்டவர்களும் உண்டு, ஏகப்பட்ட கடன் பிரச்சனைகளால் மீள முடியாமல் தகாத செயல்களின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களும் உண்டு.

வல்லவர்களின் உலகம்

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற பௌதிக உலகமானது நல்லவர்களின் உலகம் என்பதை விட வல்லவர்களின் உலகம் எனக் கூறுவது பொருத்தமாக அமையும். கடன் கொடுப்பவர்களுக்கு கடன் வாங்குபவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியாது. கடன் வாங்குபவருக்கு கடன்கொடுப்பவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியாது. எது எப்படி இருப்பினும், இந்த வணிக உலகத்தில், ஒருவர் மற்றவரை இலாபம் சம்பாதிக்கும் நோக்கிலேயே பார்க்கின்றனர். அதனால் கடனும் பொய்யும் பொதுவாகக் கலந்தே தென்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து, பணத்தைக் கடனாக வழங்கும் தாராளமான கொள்கைகளைக் கடைபிடிக்கின்றன.

 

ஆனால், கடன் வாங்கிய பின்னர், தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீனைப் போன்றும், எரியும் விளக்கில் உருகும் மெழுகைப் போன்றும், பாம்பின் வாயில் சிக்கிய தவளைப் போன்றும் கடன்பட்டவர்கள் தங்கள் நிலையை உணர்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், பயத்தின் பிடியில் வாழ ஆரம்பிக்கின்றனர்.

பித்ருக்களிடம் கடன்பட்டுள்ளதைப் போக்குவதற்காக

செய்யப்படும் ஸ்ரார்த்தம்

 

கர்ம வினை கடன்கள்

மனு ஸம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளபடி, கடன்பட்ட தந்தை வீட்டின் எதிரியாவார். ஏனெனில், மகன் தந்தையின் கடனுக்குப் பொறுப்பேற்க வேண்டும். கடன்பட்ட தந்தை இறந்து போனால், மகன் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதனால் நமது மூதாதையர்கள் கடன் வாங்குவதை அறவே தவிர்த்தனர். தற்போதைய காலத்தில் கடன்பட்ட தந்தை இறந்து போனால், அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என பிள்ளைகள் தெரிவித்து விடுவதைக் காண்கிறோம்.

 

கடன் கொடுத்தவன் சில நேரங்களில் கடன் பெற்றவனுக்குக் குழந்தையாகப் பிறந்து, தனது அசலையும் வட்டியையும் சேவையின் மூலம் பெற்ற பிறகு, கர்ம வினை கணக்கு முடிந்தவுடன் மடிந்து விடுகின்றனர். அதாவது, நாம் எங்குச் சென்றாலும், கடன் நம்முடனே வரக்கூடிய நிழல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எப்படியிருப்பினும் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தியே ஆக வேண்டும். கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களும், ஏதாவது ஒரு பிறவியில் கடன்காரர்களுக்கு அதனை அடைத்தே தீர வேண்டும் என்பது கர்ம வினையின் விதி.

விவேகமாகச் செயல்படுதல்

முந்தைய காலத்தில்  கடன் வாங்குவதைப் பாவமாகக் கருதினர். தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் கடன் இல்லாத வாழ்க்கையை நடத்துவது பெரும்பாலும் மிகவும் சிரமமாகவும் நினைத்துப் பார்க்க இயலாததாகவும் உள்ளது. இருப்பினும், விவேகமாகச் செயல்படுபவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களிடமிருந்து பரிசுப் பொருட்களையோ ரொக்கத்தையோ வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பிறரை வஞ்சித்து ஏமாற்றுவதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அடிபட்டு திருந்துவது நல்லது என்றபோதிலும், மற்றவர்கள் செய்யும் தவறுகள் மூலம் பாடம் கற்றுக் கொள்பவன் புத்திசாலியாகக் கருதப்படுகிறான்.

 

பொருளாதாரக் கடன்களை மட்டுமே கடன் என்று அறியாமையில் இருப்பவர்கள் நினைக்கின்றனர். கடன் என்கிற வார்த்தையின் பொருளை ஆழமாக புரிந்துகொள்வது மிகமிக அவசியம். கடன் என்பது பல வழிகளில் பெறப்படுகிறது. காசு வாங்கினால் மட்டும் கடன் அல்ல, காற்று வாங்கினாலும் அதுவும் கடன்தான். பல தரப்பட்ட கடன்கள் இருப்பதால், உண்மையான அறிவைப் பெற்றவர்கள் எல்லாக் கடன்களையும் அடைப்பதற்கு மிகவும் முனைப்புடன் செயல்படுவர். பொருளாதாரக் கடன்களை அடைத்துவிட்டு இதர கடன்களை அடைக்காமல் இருப்பவர்களும் கடன்காரர்களாகவே கருதப்படுகின்றனர். பல்வேறு இதர கடன்களைச் சற்று பார்ப்போம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்தவர்களோ அனைத்து விதமான கடனிலிருந்தும் விடுபட்டவர்களாவர்.

ஐந்து விதமான கடன்கள்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து விதத்தில் கடன்பட்டுள்ளனர்.

 

முதலாவதாக, தேவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். நமது உடலின் ஒவ்வோர் அங்கமும் அசைவும் பல்வேறு தேவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், நாம் முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களுக்கும் கடன்பட்டுள்ளோம். தேவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்து வதற்கு யாகங்கள் புரிய வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தேவர்களுக்கான கடனை அடைப்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

 

இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர். வேத சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலம் ரிஷிகள் திருப்தியடைகின்றனர். பொதுவாக கலி யுக மக்கள் வேத சாஸ்திரங்களை வயதான காலத்தில் படிப்பதற்குக்கூட தயங்குகின்றனர்.

 

மூன்றாவதாக, பித்ருக்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம். அவர்களுக்கு சிரார்த்த சடங்கு சரிவர செய்வதாலும் சந்ததியர்களை வாழையடி வாழையாகத் தழைக்க வைப்பதாலும் மூதாதையர்கள் திருப்தியடைகின்றனர். இதனை பித்ரு யாகம் என அழைப்பர், பித்ரு லோகத்தில் மூதாதையர்கள் இன்பமாக வாழ்வதற்கு இஃது உதவுகிறது. சிரார்த்த சடங்கு செய்யாத பட்சத்தில் மூதாதையர்களின் சாபத்தினால் குடும்ப விருத்தி தடைபடுகிறது.

 

நான்காவதாக, மனிதர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். தாய், தந்தை, சகோதரர், சகோதரி, சேவகன், கணவன், மனைவி, குழந்தைகள் எனப் பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம். அதே சமயம் விருந்தினர்களைக் நன்கு உபசரித்து, மற்றவர்களையும் அந்த சேவையில் ஈடுபடுத்தும்போது விருந்தினர்கள் திருப்தியடைகின்றனர். இதனை நிர் யாகம் என அழைப்பர். எதிரியே இல்லத்திற்கு விருந்தினராக வந்தாலும், அவருக்கு விருந்து படைப்பது பண்பாடு. தற்போதைய காலக்கட்டத்தில் விருந்தினர்களைக் கழுத்தைப் பிடித்து இல்லத்திற்கு வெளியே தள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

 

ஐந்தாவதாக, இதர உயிர்வாழிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். உதாரணமாக, பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம். அந்த ஜீவன்களின் சேவையைப் போற்றுதல் பூத யாகம் எனப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பசுவை பால் கொடுக்கும்வரை மட்டுமே பராமரிக்கின்றனர், பால் கறவை முடிந்த பிறகு இறைச்சி கூடத்திற்கு விற்று விடுகின்றனர்.

கடனிலிருந்து விடுபடுவது எப்படி?

இந்த ஐந்து கடன்களையும் எந்த ஜென்மத்திலும் யாராலும் முழுமையாக அடைக்க முடியாது. அவ்வாறு கடனை அடைப்பதற்கு முயற்சி செய்யும்போதே, மேலும் பலரின் சேவையை ஏற்று, மேன்மேலும் கடன்காரர்களாக தான் திகழ்வோம். அப்படியெனில், இந்தக் கடன்களை அடைப்பதற்கான வழி என்ன?

 

தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன் ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்

 

“யாரொருவர் முழுமையாக கிருஷ்ணரின் திருப்பாதத்தில் தஞ்சம் புகுகிறார்களோ, அவர்கள் தேவர்களுக்கோ ரிஷிகளுக்கோ பித்ருக்களுக்கோ மனிதர்களுக்கோ மற்ற உயிர்வாழிகளுக்கோ கடன்பட்டவர்கள் அல்லர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.5.41)

 

கிருஷ்ணரைச் சார்ந்து வாழ்வதால் அனைத்து கடனிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும். ஏனெனில், கிருஷ்ணரே அனைத்து ஜீவன்களுக்கும் தந்தையாகத் திகழ்கிறார். பொருளாதாரக் கடனிலிருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்குச் சிலர் நீதிமன்றத்தில் சரணடைகிறார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ என்னிடம் சரணடைந்தால், அனைத்து விதமான கடன்களிலிருந்தும் விடுவிப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறார்.

ஆனந்தத்தைத் தேடி

பொதுவாக பொருளாதாரக் கடனில் சிக்கியவர்கள் அதிலிருந்து மீண்டு நிம்மதியை அடைய விரும்புகின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்கள் நிம்மதிக்கும் மேலான ஆனந்தத்தை அடைகின்றனர். ஒருமுறை பாண்டவர்களில் மூத்தவரான மாமன்னர் யுதிஷ்டிரரிடம் யக்ஷர் ஒருவர், “ஆனந்தமாக இருப்பவன் யார்?” என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர், “அந்நிய நாட்டில் வசிக்காமல் இருப்பவனும், கடனில்லாமல் இருப்பவனுமே ஆனந்தமாக இருப்பவன்,” என பதிலளித்தார்.

இந்த பதிலை நமது சிற்றறிவினால் அணுகும்போது, சொந்த ஊரில் வசிப்பவனும் பொருளாதாரக் கடன் இல்லாதவனும் ஆனந்தமாக இருப்பவன் எனத் தவறாக புரிந்துகொள்கிறோம். ஆனால் யுதிஷ்டிரரின் பதில் பூரணத்துவமானது, ஆத்மாவிற்கு வைகுண்டமே தாய்நாடு, ஆத்மாவிற்கு பௌதிக உலகம் அந்நிய நாடு, கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவனே கடனில்லாதவன், வைகுண்டவாசிகள் அனைவருமே கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் என தத்துவப் பூர்வமாக பதிலளித்தார். அதனால் ஆன்மீக விஷயங்களை தத்துவ ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தர்மமும் கடன் சுமையும்

இத்தகு தெய்வீக ஞானத்தை அருளிய அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதருக்கு நாம் அனைவரும் கடன்பட்டுள்ளோம்.

 

முந்தைய பிறவியிலோ இந்தப் பிறவியிலோ தர்மத்திலிருந்து விலகி பாவம் செய்தவர்களுக்கு, அவர்களுடைய குற்றங்கள் கடனின் வடிவில் நினைவுபடுத்தப்படுகின்றன. பொருளாதாரத்தால் ஏற்படக்கூடியதே கடன் எனக் கருதுவது அறியாமை. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து விதமான கடன்களுக்கு உட்பட்டவர்கள் என்பதால், கிருஷ்ணரைச் சார்ந்து வாழ்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

உண்மையான தர்மம் என்பது கிருஷ்ண உணர்வே. கிருஷ்ணரின் புகழைக் கேட்பதாலும், கிருஷ்ணரின் விக்ரஹத்தைத் தரிசிப்பதாலும், கிருஷ்ணரை தியானிப்பதாலும், கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பதாலும் பல வழிகளில் நாம் கிருஷ்ண உணர்வைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ள முடியும். ஸநாதன கோஸ்வாமியிடம் சைதன்ய மஹாபிரபு கூறினார், “யாரொருவர் பௌதிக விருப்பத்தைக் கைவிட்டு, தன்னை முழுமையாக கிருஷ்ணரின் திவ்யமான பக்தித் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைத்து விதமான கடனிலிருந்தும் விடுபடுகின்றனர்.” (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 22.140)

 

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை தினமும் உச்சரித்து, கிருஷ்ணருக்கு பக்தி செய்தால், அனைத்து கடனிலிருந்தும் படிப்படியாக விடுபட்டு, நிம்மதிக்கும் மேலான ஆனந்தத்தை அடைய முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives