சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

 

குற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் உலகில் பெருமளவிலான பணம் செலவு செய்யப்படுகிறது. எனினும், இம்முயற்சிகளையும் மீறி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகாகோ போலீஸ் துறையின் தகவல் தொடர்பு அதிகாரியான டேவின் மோஸீயுடன் நடந்த பின்வரும் உரையாடலில், கட்டுப்படுத்த முடியாததுபோலத் தோன்றும் குற்றங்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் வியக்கத்தக்க அளவிற்கு எளிதானதும் நடைமுறைக்கு சாத்தியமானதுமான தீர்வை முன்வைக்கின்றார்.

 

லெப்டினன்ட் மோஸீ: குற்றங்களைத் தடுப்பதற்கான எங்கள் முயற்சிக்கு உதவக்கூடிய சில யோசனைகள் தங்களிடம் உள்ளன என்று அறிகிறேன். அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: சாதுவுக்கும் குற்றவாளிக்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்றால், ஒருவன் மனதில் பரிசுத்தமாக இருக்கிறான், மற்றவனின் மனம் அழுக்கடைந்திருக்கிறது. குற்றவாளியின் மனதில் அடக்க முடியாத இச்சையும் பேராசையும் நோயாக உருவெடுத்து, அவனின் மனதை அழுக்கடையச் செய்துள்ளது. இன்றைய மக்கள் பொதுவாக இந்த நோய்க்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் குற்றம் மிக விரிவாகப் பரவியுள்ளது. இந்த அழுக்கை அகற்றினால் குற்றங்கள் மறைந்து போகும். தூய்மையடைவதற்கான மிக எளிதான வழி, மக்கள் ஒன்றாகக் கூடி கடவுளின் புனித திருநாமங்களைப் பாடுவதாகும். இது ஸங்கீர்த்தனம் எனப்படும். இஃது எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அடிப்படை. எனவே, குற்றங்களை நிறுத்த வேண்டுமானால், கூட்டாக ஸங்கீர்த்தனம் செய்வதற்கு எத்தனை மக்களைத் திரட்ட முடியுமோ, திரட்ட வேண்டும். இவ்வாறு கடவுளின் திருநாமத்தைக் கூட்டாக கீர்த்தனம் செய்யும் போது எல்லாரின் இதயங்களிலுள்ள மாசுக்கள் அனைத்தும் விலகிப் போகும். அதன் பின் குற்றம் எதுவும் நிகழாது.

 

மோஸீ: இந்தியாவோடு ஒப்பிடும்போது இங்கு குற்ற நிலை எப்படியுள்ளது, உங்கள் கருத்தென்ன?

 

ஸ்ரீல பிரபுபாதர்: குற்றம் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?

 

மோஸீ: ஒருவர் உரிமையை மற்றவர் பறிக்கும்போது அது குற்றமாகிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். எங்கள் விளக்கமும் அதுவே. உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், எல்லாம் கடவுளுக்குச் சொந்தம். எனவே, ஒவ்வொருவருக்கும் கடவுளால் ஒதுக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் ஒருவர் மற்றொருவரின் சொத்தில் தலையிடக் கூடாது. அப்படிச் செய்வது குற்றமாகும். உண்மையில், அமெரிக்கர்களாகிய நீங்கள் இந்த அமெரிக்க நாடு உங்களுக்குச் சொந்தமானது என்று எண்ணுவது முதல் குற்றம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இஃது உங்களுடையதாக இல்லாமலிருந்தபோது, நீங்கள் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இங்கு வந்து இதைச் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். உண்மையில் இது கடவுளின் நிலம். எனவே, இஃது எல்லாருக்கும் சொந்தம். அப்படியெனில், எல்லாரும் கடவுளின் குழந்தைகள். ஆனால் மக்களில் பெருவாரியானவர்கள் கடவுளைப் பற்றிய சரியான அறிவு இல்லாதவர்கள். நடைமுறையில் பார்த்தால் ஒவ்வொருவரும் கடவுளைப் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குக் கடவுளிடம் அன்பு செலுத்தக் கற்றுத் தரப்பட வேண்டும். உங்கள் அமெரிக்க அரசாங்கம் “நாங்கள் கடவுளை நம்புகிறோம்” என்னும் வாசகத்தை மேற்கொண்டுள்ளது. சரி தானே?

 

மோஸீ: ஆம்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், கடவுளைப் பற்றிய கல்வி எங்கே? நம்பிக்கை வைப்பது நல்லது, ஆனால் விஞ்ஞானபூர்வமான அறிவின் ஆதரவு இல்லாத கடவுள் நம்பிக்கை நீண்டநாள் நீடிக்காது. ஒருவர் தனக்கு தந்தை இருப்பதை அறிந்திருக்கலாம். ஆனால் தன் தந்தை யாரென்பதை அறியாவிடில், அவனது அறிவு முழுமையானதல்ல. கடவுள் விஞ்ஞானம் பற்றிய கல்வி இந்த நாட்டில் இல்லை.

 

மோஸீ: இந்தக் குறைபாடு இங்கு மட்டும் காணப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, இஃது எல்லா இடங்களிலும் உள்ளது. நாம் வாழும் இந்த காலம் கலி யுகம் எனப்படுகிறது. அதாவது கடவுளை மறக்கும் யுகம். இது பேதங்களும் பூசல்களும் நிறைந்த யுகம். மக்களின் மனம் இப்போது பல விதமான அழுக்குகளால் நிரம்பியுள்ளது. ஆனால் கடவுள் ஸர்வ வல்லமை படைத்தவர் என்பதால், அவரின் திருநாமத்தை உச்சரித்தால் நாம் புனிதமடைவோம். எனது சீடர்கள் இம்முறையைப் பின்பற்றி தங்களது கெட்ட பழக்கங்களை விட்டொழித்திருக்கிறார்கள். நாங்கள் எவ்வித வேறுபாடுமின்றி இந்த வாய்ப்பை எல்லாருக்கும் அளிக்கிறோம். அவர்கள் எங்களுடைய கோயில்களுக்கு வந்து, ஹரே கிருஷ்ண மந்திரத்தை கீர்த்தனம் செய்து, சிறிது பிரசாதம் உண்டு, படிப்படியாக தூய்மையடையலாம். எனவே, அரசாங்க அதிகாரிகள் எங்களுக்கு சில வசதிகளை அளித்தால், நாங்கள் மாபெரும் ஸங்கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்ய முடியும். அப்போது, சந்தேகமில்லாமல், சமுதாயம் முழுவதும் மாறுதலடையும்.

 

மோஸீ: மதக் கோட்பாடுகளை மீண்டும் பின்பற்றுவதை வலியுறுத்த வேண்டும் என்று நீங்கள் சொல்வதாகத் தெரிகிறது…

 

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. மதக் கோட்பாடுகள் இல்லாவிடில் நாய்க்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனால் மதத்தைப் புரிந்துகொள்ள முடியும், நாயால் அது முடியாது. அதுதான் வித்தியாசம். ஆகையால், மனித சமுதாயம் பூனைகள் மற்றும் நாய்களின் தளத்தில் இருக்கும்பட்சத்தில், அமைதியான சமுதாயத்தை நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஒரு டஜன் நாய்களைக் கொண்டு வந்து அறையில் விட்டு வைத்தால், அமைதியை எப்படி எதிர்பார்க்க முடியும்?

 

மனித வாழ்விற்கும் மிருக வாழ்விற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிய வேண்டும். மிருகங்களால் கடவுளை அறிய இயலாது, ஆனால் மனிதனுக்கு அது சாத்தியம். எனினும், கடவுளை அறிவதற்கான வசதிகள் மனிதர்களுக்கு அளிக்கப்படாவிடில், அவர்களும் நாய்கள் மற்றும் பூனைகளின் மட்டத்திலேயே இருப்பார்கள். நாய்களும் பூனைகளும் மிகுந்த சமுதாயத்தில் அமைதியை எதிர்பார்க்க இயலாது. எனவே, கடவுளைப் பற்றி மக்கள் அறிந்திருக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்கு உள்ளது. இல்லாவிடில், தொல்லைகள் ஏற்படும். ஏனெனில், கடவுள் பற்றிய அறிவில்லாமல் மனிதனுக்கும் நாய்க்கும் வேறுபாடில்லை. நாய் சாப்பிடுகிறது, நாம் சாப்பிடுகிறோம்; நாய் உறங்குகிறது, நாம் உறங்குகிறோம்; நாய் உடலுறவு கொள்கிறது, நாமும் உடலுறவு கொள்கிறோம். நாய் தன்னைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறது, நாமும் அதைச் செய்கிறோம். இவை நாய்க்கும் மனிதனுக்கும் பொதுவான அம்சங்கள். ஒரே வித்தியாசம் என்னவென்றால், கடவுளுடனான உறவை நாய்க்குக் கற்றுத் தர முடியாது. மனிதன் கற்றுக்கொள்ளலாம்.

 

மோஸீ: மதக் கோட்பாடுகளுக்கு முன்பாக அமைதி தேவைப்படுகிறது, முதலில் நமக்குத் தேவையானது அமைதி அல்லவா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, இல்லை. இதுவே சிரமம். தற்போது மதம் என்பதன் சரியான பொருள் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. மதம் என்றால் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது. இது நல்ல குடிமக்கள் அரசாங்கச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதைப் போன்றதாகும். கடவுளைப் பற்றிய சரியான அறிவு இல்லாத காரணத்தால், யாரும் கடவுளின் சட்டங்களையோ மதத்தின் பொருளையோ அறிந்திருக்கவில்லை. இஃது இன்றைய சமுதாயத்திலுள்ள மக்களின் நிலை. அவர்கள் மதத்தை மறந்து வருகிறார்கள். மதம் ஒரு நம்பிக்கை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நம்பிக்கை கண்மூடித்தனமானதாகவும் இருக்கலாம். நம்பிக்கை என்று சொல்வது மதம் என்பதன் சரியான விளக்கமாகாது. மதம் என்பது கடவுளால் வகுக்கப்பட்டுள்ள விதிகள். இந்த விதிகளைப் பின்பற்றுபவர்கள் மத உணர்வுள்ளவர்கள்; அவர்கள் கிறிஸ்துவர்கள், இந்துக்கள் அல்லது முஸ்லீம்களாக இருக்கலாம்.

 

மோஸீ: மன்னிக்க வேண்டும். இந்தியாவில் பல நூற்றாண்டு காலமாக மதப் பழக்கங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், மக்கள் ஆன்மீக வாழ்விற்கு திரும்புவதற்குப் பதிலாக அதிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்பது உண்மையல்லவா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதற்கு ஒரே காரணம், வழிநடத்துபவர்கள் சரியில்லை. மற்றபடி, இந்திய மக்களில் பெரும்பாலான நபர்கள் கடவுள் அறிவுள்ளவர்கள். கடவுளின் சட்டங்களைப் பின்பற்ற முயற்சிப்பவர்கள். இங்கு, மேல்நாட்டில் பெரிய கல்லூரிப் பேராசிரியர்கள்கூட கடவுளைப் பற்றிய நம்பிக்கையோ மரணத்திற்கு அப்பாற்பட்ட மறுவாழ்வைப் பற்றிய நம்பிக்கையோ இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மிக எளியவனும்கூட கடவுளிடமும் மறுபிறவியிலும் நம்பிக்கை கொண்டுள்ளான். பாவங்கள் செய்தால் துன்பமடைய நேரிடுமென்றும், நற்செயல்கள் புரிந்தால் நற்பயன்களை அனுபவிக்கலாமென்றும் அவன் அறிவான். இன்றும் கிராமவாசிகள் தங்கள் மத்தியில் சச்சரவு ஏற்படும்போது, அதை தீர்த்து வைக்க கோயில்களுக்குச் செல்கிறார்கள். ஏனெனில், எதிர்க்கட்சிக்காரன் கோயிலில் தெய்வ சந்நிதியில் பொய் பேசத் தயங்குவான் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே, பெருவாரியாக இந்தியா எண்பது சதவீதம் மத உணர்வுள்ள நாடு. இந்தியாவில் பிறப்பவனின் சிறப்பு இது. இதனால் சிறப்பான பொறுப்பும் ஏற்படுகிறது. சைதன்ய மஹாபிரபு கூறியிருக்கிறார்:

 

 

பாரத பூமிதே ஹைல மனுஷ்ய-ஜன்ம யார

ஜன்ம ஸார்த்தக கரி கர பர-உபகார

(சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 9.41)

 

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் கிருஷ்ண உணர்வைப் பெற்று தன் வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, அவர் உலகம் முழுவதும் கிருஷ்ண உணர்வைப் பரப்ப வேண்டும்.

 

மோஸீ: செல்வந்தனான ஒருவன் கடவுளை அடைவதைக் காட்டிலும், ஒட்டகம் ஒன்று ஊசித் துவாரத்தின் வழியாக புகுந்து வெளிவருவது எளிது என்று ஒரு கிறிஸ்துவப் பழமொழி உண்டு. அதன்படி, அமெரிக்கா மற்றும் மேல்நாடுகளின் செல்வம் அவர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives