திலகம் தரிப்பதும் கேலிப் பேச்சுகளும்

Must read

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

சமீபத்தில் சென்னை நகரின் புறநகர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஸ்டேஷன் ஒன்றில் வண்டி நின்றபோது, அங்கிருந்த ஒரு போஸ்டர் எனது கவனத்தை ஈர்த்தது. அப்போஸ்டரில், பெரிய அளவில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய திருமண் படம் இருந்தது. அத்துடன், “எங்களின் சமுதாயத்திற்கு பதவி உயர்வில் பட்டை நாமம் போடும்… நிர்வாகமே,” என்று கூறி, சில தொழிலாளிகள் தங்களின் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்திருந்தனர். ஏமாற்றத்தைக் குறிப்பிடுவதற்கு வைஷ்ணவர்கள் அணியும் திலகத்தினை படம் போட்டுக் காட்டியிருந்ததைக் கண்டு மனம் வருந்தியது. இத்தகு கேலி விளம்பரங்களும் பேச்சுகளும் புதிதல்ல. ஆயினும், இதுகுறித்து சில விளக்கங்களையும் கருத்துகளையும் பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

நாமம் அணிவது ஏமாற்றத்தைக் குறிப்பதல்ல

யாரேனும் பணம் வாங்கிவிட்டு அதனை திருப்பித் தரவில்லை என்றால், தமிழக மக்கள் சகஜமாக உபயோகிக்கும் சொல், “நாமம் போட்டுட்டான்.” அவ்வாறு சொல்பவர்களில் பெரும்பாலான மக்கள் அதை ஒரு நகைச்சுவையாகச் சொல்கின்றனர், வைஷ்ணவர்களை கேலி செய்யும் நோக்கில் சொல்வதில்லை. இருப்பினும், அத்தகு கீழ்த்தரமான அறிவற்ற சொற்கள் தீமையை விளைவிக்கும். நாமத்திற்கும் ஏமாற்றுவதற்கும் துளியும் தொடர்பில்லை, ஆனால் ஏன் இவ்வாறு ஒரு தொடர்பை தமிழகத்தில் ஏற்படுத்தினர் என்பது புரியவில்லை. சில நாடுகளில் யாரேனும் மற்றவரை ஏமாற்றிவிட்டால், அதைக் குறிப்பதற்கு X குறியை அவ்வப்போது உபயோகிக்கின்றனர். X குறிக்கும் நாமத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் சில அயோக்கிய நாத்திகர்கள் அவற்றை இணைத்துவிட்டனர் போலத் தோன்றுகின்றது. எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் ஏதோ மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, நாமும் அவ்வாறு பேசினால் நாம் அறிவுடைய மனிதர்களாக கருதப்பட மாட்டோம், முட்டாள்களாகவே கருதப்படுவோம்.

நாமம் அணிவது அமங்களமல்ல

ஏமாற்றத்தின் அடையாளமாக நாமத்தை உபயோகிப்பது ஒருபுறம்; மறுபுறம் நாமம் அணிந்தவரைக் கண்டாலே வெறுப்புடன் பார்க்கும் மக்கள் பலர். நாமத்துடன் யாரையாவது பார்க்க நேர்ந்தால், அஃது அமங்களம் என்பது அவர்களிடம் இருக்கும் பரவலான எண்ணம். “காலங்காத்தாலேயே நாமத்தை போட்டுட்டு வந்துட்டான்,” என்று முணுமுணுக்கும் கடைக்காரர்களை நாம் நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம். அதனால், திலகம் தரித்தவரைக் காண்பது ஓர் அபசகுணம் என்று நினைத்து விடுகின்றனர். உண்மையில், அவ்வாறு நினைப்பவர்களுக்கு சகுணம், அபசகுணம் குறித்த அறிவு துளியும் இல்லை என்பதை இதிலிருந்து நாம் உணரலாம். ஏதோ காரணத்தினால், சில அயோக்கியர்களும் நாத்திகர்களும் மக்கள் மனதில் இத்தகைய எண்ணத்தைப் பரப்பியுள்ளனர்.

 

திலகம் அணியாமல் யாரேனும் ஒருவரைக் காண நேர்ந்தால், அதனை அபசகுணமாக எடுத்து நீராட வேண்டும் என்பது சாஸ்திரமும் ஆச்சாரியர்களும் மக்களுக்கு எடுத்துரைத்த தகவல். நெற்றியில் திலகம் இல்லாத நபரைக் காண்பது, சுடுகாட்டைக் காண்பதைப் போன்றது என்பது ஐதிகம்; பண்டைய காலங்களில், அவ்வாறு நெற்றியில் திலகம் இல்லாத நபர்களைக் காண நேர்ந்தால், அந்த அமங்களத்திலிருந்து விடுபட உடனடியாக நீராட வேண்டும் என்ற பழக்கம் வழக்கத்தில் இருந்தது. ஆனால், கலி யுகத்தின் கொடூரத்தில், திலகம் அணிந்த நபர்களைப் பார்த்தால், மக்கள் கேலி செய்யும் இழிவான நிலை வந்துவிட்டது. அந்தோ பரிதாபம்!

 

திலகம் அணிதல்–சில அடிப்படைத் தகவல்கள்

திலகம் அல்லது நாமம் என்று அழைக்கப்படுவது வைஷ்ணவர்களுக்கான ஓர் அலங்காரமாகும். நெற்றி உட்பட உடலின் பன்னிரண்டு இடங்களில் திலகம் அணியப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திலகத்தில் இருக்கும் இரு கோடுகள் பகவான் விஷ்ணுவின் திருப்பாதங்களைக் குறிக்கும். பகவானின் திருப்பாதங்களை தனது உடலில் தாங்குவதன் மூலமாக, தான் பகவானின் சேவகன் என்பதை ஒவ்வொரு வைஷ்ணவனும் நினைவுகூர்ந்து மற்றவர்களுக்கும் தெரிவிக்கின்றான். கௌடீய வைஷ்ணவர்களின் திலகத்தில் பகவானின் பாதங்களின் கீழ் துளசியும், தமிழகத்தில் பரவலாக இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் திலகத்தில் பகவானின் பாதங்களுக்கு நடுவில் இலக்ஷ்மியைக் குறிக்கும் கோடும் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும். திலகத்தின் அடிப்படை கருத்து ஒன்றே என்றபோதிலும், ஒவ்வொரு சம்பிரதாயத்திலும் அணியப்படும் திலகங்கள் சற்று வேறுபடுகின்றன.

 

எப்படிப் பார்த்தாலும் திலகம் தரித்தல் அனைத்து பக்தர்களுக்கும் அவசியமானதாகும். இது நாம் தூய்மையடைவதற்கும் பகவானின் பாதுகாப்பைப் பெறுவதற்கும் உதவுகின்றது. திலகம் அணியும் பக்தர் மட்டுமின்றி, அந்த பக்தரைக் காணும் மற்றவர்களும் இதனால் தூய்மையடைகின்றனர். எனவே, திலகம் தரித்தல் அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு சீரிய செயலாகும்.

சிறுவர், இளைஞர், முதியோர், வேலைக்கு செல்வோர் என எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் திலகம் தரிக்கலாம்.

திலகம் அணிவதன் சிறப்புகளில் சில

“தங்களுடைய உடலில் பன்னிரண்டு இடங்களில் திலகத்தைத் தரித்தவர்கள் விஷ்ணு பக்தர்கள் என்று அறியப்பட வேண்டும். அவர்கள் இருப்பதால் இந்த உலகமே தூய்மையடைகிறது. அவர்கள் எங்கிருந்தாலும் அந்த இடம் வைகுண்டத்தைப் போன்றதாகும்.” (பத்ம புராணம்)

 

இதே போன்ற கருத்தினை ஸ்கந்த புராணத்திலும் காண்கிறோம்: கோபி சந்தன திலகத்தினாலும் துளசி மணி மாலையினாலும் யாருடைய உடல் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ, அவர்களை எமதூதர்கள் ஒருபோதும் அணுக மாட்டார்கள்.”

 

பத்ம புராணத்தில் மேலும் ஒரு கருத்தினைக் காண்கிறோம். “கோபி சந்தனத்தினால் உடலை அலங்கரித்துள்ள நபர்கள் தங்களின் பாவ விளைவுகளிலிருந்து முற்றிலுமாக விடுபெறுகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் முழுமுதற் கடவுளுடன் நேரடியாக சங்கம் கொள்வதற்காக

கிருஷ்ண லோகத்தை அடைகிறார்கள்.”

 

மேலும், ஆச்சாரியர்கள் எழுதிய பல்வேறு கிரந்தங்களில் திலகம் தரிப்பதன் முக்கியத்துவத்தையும் வழிமுறைகளையும் நாம் காண்கிறோம்.

 

திலகம் அணிவது ஏமாற்றத்தைக் குறிப்பதல்ல, அமங்களமும் அல்ல. உண்மையில், திலகம் அணிவது நம்மைத் தூய்மைப்படுத்தி மங்களமாக மாற்றுவதற்கான ஓர் அற்புத வழிமுறை. ஆனால் ஏதோ காரணத்தினால் கேலிப் பேச்சுகளாக மாறியிருப்பதற்கு உண்மையில் எந்தவொரு அடிப்படை காரணமும் இல்லை. பலரும் பலவாறு பேசலாம், ஆனால் உண்மை என்றும் பொய்யாகி விட முடியாது. நாத்திகர்களின் பேச்சுகளால் சராசரி மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.

நாமம் தரிப்பதும் மற்ற மதச் சின்னங்களும்

திலகம் தரிப்பதை கேலி செய்வோர் உண்மையான நாத்திகர்களாக இருந்தால், மற்ற மதச் சின்னங்களை கேலி செய்து பார்க்கட்டும். வைஷ்ணவர்களுக்கு இருக்கும் சின்னம் திலகம். துரதிர்ஷ்டவசமாக இதனை அனைவரும் கேலி செய்கின்றனர். திரைப்படங்கள், நாடகங்கள், பத்திரிகைகள் என அனைத்து ஊடகங்களும் நாமத்தை வைத்து நகைச்சுவை செய்கின்றனர். உண்மையில், இது வைஷ்ணவர்களை இழிவுபடுத்தும் மட்டமான செயல்; இத்தகு கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் அரசின் சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டும். யாரேனும் ஒருவர் கிருஸ்துவர்களின் சிலுவையைப் பற்றி கேலியோ கிண்டலோ செய்தால், என்ன நடக்கும்? அடுத்த நாள், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும், அதற்கு மறுநாள் உலகெங்கிலும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் வலுக்கும். அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக, கேலி செய்தவரைக் கைது செய்யும், என்னவெல்லாம் நடக்கும் என்று நம்மால் கூற இயலாது. அத்தகு போராட்டங்கள் தவறு என்று யாம் கூறவில்லை. ஆனால் உலகின் மிகச்சிறந்த மதமான வைஷ்ணவ தர்மத்தை சற்று மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், காட்டுமிராண்டிகளாக இருக்காதீர்கள் என்றே அறைகூவல் விடுக்கின்றோம்.

 

வைஷ்ணவர்களின் அடையாள சின்னத்தை கேலி செய்வது சகஜமாகிவிட்டது, இதற்கு யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, இந்த கேவலமான நிலை மாற வேண்டும். வரலாற்றில் பல்வேறு வைஷ்ணவர்கள் பல்வேறு முறை அரசாங்கத்திடம் மன்றாடிவிட்டனர், ஆனால் எந்த பலனும் இல்லை. என்ன செய்வது, திறனில்லாத அரசாங்கம் என்று நினைத்து, நம்மை நாம் முறையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வது சாலச் சிறந்தது. மதச்சார்பற்ற அரசு என்ற பெயரில் சிலருக்கு மட்டும் சலுகைகளை வழங்கி, ஓட்டுவங்கியின் அடிப்படையில் மற்றவர்களை ஒதுக்கி வைக்கின்றது இன்றைய அரசியல். பெயரளவில் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர்கூட, வைஷ்ணவ சின்னத்தைக் கேலி செய்கின்றனர், உண்மையில் அவர்களே அதிகமான கேலியில் ஈடுபடுகின்றனர். இந்த கேவலமான நிலை வேறு எங்கும் இல்லை.

திலகம் தரிக்கும் ஸ்ரீல பிரபுபாதர்.

தனி மனித சுதந்திரம்

இதைக் காட்டிலும் மற்றொரு கேவலம் என்னவெனில், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வேலை பார்க்கும் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் திலகம் தரித்து வரக் கூடாது என்று கட்டளையிடுகின்றனர். சிலுவை அணிந்து வரக் கூடாது என்று கட்டளையிட்டுப் பார்க்கட்டுமே! குல்லா அணிந்து வரக் கூடாது என்று கட்டளையிட்டுப் பார்க்கட்டுமே! ஏன் இந்த பாரபட்சம்? இன்றைய உலகில் மக்கள் அனைவரும் தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்றெல்லாம் பேசி வருகின்றனர். ஆனால் திலகம் அணிவதில் மட்டும் தனி மனித சுதந்திரம் எங்கே சென்றது? மாணவர்கள் பள்ளிக்கு திலகத்துடன் வரக் கூடாது என்று கட்டளையிடும் பள்ளிகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர். இஃது ஏன் கண்டனத்திற்கு உட்படுத்தப்படவில்லை? திலகம் அணிவது ஒரு மதச் சின்னம், இது தனி மனிதனின் சுதந்திரம். இதில் ஏன் கை வைக்க வேண்டும்?

 

வேலைக்கு வருபவர்கள் டையும் ஷூவும் அணிந்து வர வேண்டும் என்று கட்டளையிடும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஏராளம். வெளிநாட்டினர் கொடுத்த டையை அணிய வேண்டும், பாரத பாரம்பரியத்தின் திலகத்தை அணியக் கூடாதா? வெளிநாட்டினர் கொடுத்த ஷூ உடன் வர வேண்டும், பாரத பாரம்பரியத்தின் குடுமியுடன் வரக் கூடாதா? ஏன் இந்த வெளிநாட்டு மோகமும் உள்நாட்டு வெறுப்பும்? தனி மனித சுதந்திரம் எங்கே சென்றது?

வைஷ்ணவ தர்மம் பரவட்டும்

திலகம் தரித்தவரை அவமதிக்கும் நிலை மாற வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைஷ்ணவ திலகத்துடன் நீதி வழங்கும் நாள் எந்நாளோ என்று ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேறு விதமாகக் கூறினால், வைஷ்ணவ தர்மம் மக்களிடையே பரவலாக பயிற்சி செய்யப்படும் நிலை வர வேண்டும். அப்போது அனைவரும் வைஷ்ணவ திலகம் அணிந்திருப்பர். யோசித்துப் பாருங்கள்: நமது நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட முக்கிய பதவியில் இருப்பவர்கள் வைஷ்ணவர்களாக மாறினால் எப்படி இருக்கும்? அந்த நிலை நிச்சயம் வர வேண்டும். அப்போது வைஷ்ணவர்கள் தங்களுக்கு உரிய மரியாதையைப் பெறுவர். திலகம் அணிவதை அனைவரும் பெருமையாகக் கருதுவர், கேலி செய்தல் என்ற கேள்விக்கே இடமிருக்காது.

வைஷ்ணவர்கள் தங்களது உடலில் திலகம் தரிக்க வேண்டிய பன்னிரண்டு இடங்களைக் குறிக்கும் படம்.

பெருமையுடன் அணிய கற்போம்

இஃது ஒருபுறம் இருக்க, வைஷ்ணவர்களின் திலகம் குறித்த இன்றைய நிலைக்கு மற்றொரு காரணம் வைஷ்ணவர்களே. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து வைஷ்ணவர்களும் திலகத்துடனே இருப்பர். ஆனால், இன்றோ, பெரும்பாலான வைஷ்ணவர்கள் திலகம் அணிவதைத் தவிர்க்கின்றனர். இவ்வாறு தவிர்ப்பதால், திலகம் அணியும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து, கேலி செய்யப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

 

பல்வேறு வைஷ்ணவர்கள் வீட்டில் விசேஷ நாளன்று மட்டுமே திலகம் அணிகின்றனர், அல்லது கோயிலுக்குப் போகும் போது மட்டும் திலகம் அணிகின்றனர். அவ்வாறு அவர்கள் தயங்குவது ஏன்? அவர்களிடம் போதிய விஷ்ணு பக்தி இல்லை என்பதே இதற்கு காரணம். இந்தியாவில் இன்றும் சுதந்திரம் உள்ளது. நமது தனி மனித சுதந்திரம் சில பள்ளிகளில், கல்லூரிகளில், அல்லது அலுவலகங்களில் மறுக்கப்படலாம். இருப்பினும், பெரும்பாலான பொதுவிடங்களில் இன்றும் தனி மனித சுதந்திரம் இந்தியாவில் வலுவாக உள்ளது. அந்த சுதந்திரத்தை நாம் இப்போது பயன்படுத்தாவிடில், காலப்போக்கில் எங்குமே திலகம் அணிந்து செல்ல இயலாத நிலை வந்துவிடும். சில நாடுகளில் அந்த நிலை ஏற்கனவே வந்து விட்டது. பாரம்பரியத்தின் பொக்கிஷமாக விளங்கும் நமது பாரத நாட்டிலும் அத்தகு அவல நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால், எங்கும் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் திலகம் அணிய வேண்டும் என்ற உறுதியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும். அப்போது இந்நிலை படிப்படியாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

 

குடிகாரர்கள் சற்றும் கூச்சமின்றி எல்லா இடங்களிலும் குடிக்கின்றனர், தெருவிற்குத் தெரு அரசாங்கமும் வசதிகளை அமைத்துவிட்டது. தீய செயல்கள் செய்யும் அவர்களுக்கே கூச்சமில்லை, திலகம் அணிவதில் நாம் ஏன் கூச்சம் கொள்ள வேண்டும்?

கௌடீய வைஷ்ணவ திலகத்தின் வடிவம்

வைஷ்ணவர்களாக நடந்துகொள்ளுதல்

திலகம் அணிதல் என்பது சாதாரண அடையாளம் அல்ல, வைஷ்ணவரின் அடையாளம். திலகம் தரித்தவர்கள் வைஷ்ணவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்பது மிகமிக அவசியம், அவர்கள் தங்களது சீரிய வைஷ்ணவ குணங்களை வெளிப்படுத்த வேண்டும். திலகம் அணிந்து கொண்டு செய்யக்கூடாத செயல்களில் ஈடுபடக் கூடாது. குறைந்தபட்சம் இஸ்கான் பக்தர்கள் அந்த நிலை தங்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

இஸ்கான் பக்தர்கள் தங்களது சீரிய பழக்கங்களுக்காக மக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றனர். கௌடீய வைஷ்ணவ திலகத்துடன் நாம் வெளியே சென்றால், நிறைய மக்கள் “ஹரே கிருஷ்ண” என்று கூறி நமக்கு வணக்கம் செலுத்துகின்றனர். இதற்கான அடிப்படை காரணம், இஸ்கான் பக்தர்கள் பொதுவாக தவறான செயல்கள் எதிலும் ஈடுபடுவதில்லை என்பதே. எனவே, நமது கௌரவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. திலகம் அணிந்து கொண்டு பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசுதல், செய்யக்கூடாத செயல்களைச் செய்தல் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். (இதற்காக அச்செயல்களை திலகம் அணியாமல் செய்யலாம் என்று அர்த்தமல்ல) வெளியில் திலகம் அணிந்தால் மட்டும் போதாது, உள்ளேயும் நாம் வைஷ்ணவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக, தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) உச்சரிக்க வேண்டும், ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களைப் படிக்க வேண்டும், பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தினை மட்டுமே உண்ண வேண்டும்; மேலும், கூடியவரை எப்போதும் வைஷ்ணவர்களின் சங்கத்தில் இருக்க வேண்டும்.

பகவானின் திருப்பாதங்களை (திலகத்தை) உடலில் தரிப்பதை பெருமையாகக் கருதுவோம்! அவரது திருஉலகை அடைவோம்!

நாமம் தரிப்பது எப்படி?

(தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி அருளிய கிருஷ்ண பக்தி, ஓர் ஆரம்பநிலை வழிகாட்டி என்னும் புத்தகத்திலிருந்து)

திலகம் தரிப்பதற்கு பல்வேறு விதமான பொருட்கள் சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கௌடீய வைஷ்ணவர்கள் கோபிசந்தனத்தைப் பயன்படுத்துவர். துவாரகையிலிருந்து பெறப்படும் இந்த மஞ்சள் நிற களிமண் அனைத்து இஸ்கான் கோயில்களிலும் கிடைக்கப்பெறும். திலகம் அணிவதற்கு சிறிது நீரை இடது உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளவும். கோபிசந்தனக் கட்டியை வலது கையில் எடுத்து, அதனை நீருடன் தேய்த்து, குழைவான பசையை உருவாக்கவும்.

வலது கையின் மோதிர விரல் நுனியைக் கொண்டு, இடது உள்ளங்கையில் இருக்கும் கோபிசந்தனக் கலவையில் சிறிதை எடுக்கவும். பின்னர், நெற்றியில் நாமம் இட வேண்டும். இரண்டு நேரான கோடுகள் வரும் வகையில் நடுவே சீராக அழுத்தவும். மூக்கின் மேல் பாகத்திலிருந்து மேல்நோக்கி செல்ல வேண்டும். மேலிருந்து கீழாக அல்ல. இறுதியில் இரண்டு அழகிய கோடுகள் வரும்வரை இதனை பலமுறை தொடரலாம். பின்னர், கோபிசந்தனத்தை மேலிருந்து கீழாக மூக்கின் மீது இட வேண்டும். மூக்கின் நான்கில் மூன்று பங்கு திலகம் இருக்க வேண்டும். (அதாவது, மிகச் சிறியதாகவும் இல்லாமல், மூக்கு முழுவதும் இல்லாமல் இருக்க வேண்டும்.) நெற்றியில் இடப்பட்டதையும் மூக்கில் தரித்ததையும் இடைவெளி ஏதுமின்றி இணைக்க வேண்டும்,

உடலின் குறிப்பிட்ட இடங்களில் திருநாமம் தரிக்கும்போது, பின்வரும் மந்திரங்களை இங்கு காட்டப்பட்டுள்ள வரிசையில் உச்சரித்து திலகமிட வேண்டும்.

 

1)   ஓம் கேஷவாய நம:       நெற்றி

(2) ஓம் நாராயணாய நம: வயிற்றின் மத்தியில்

(3) ஓம் மாதவாய நம:        நெஞ்சுப்பகுதி

(4) ஓம் கோவிந்தாய நம:      கீழ் கண்டம் (தொண்டை)

(5) ஓம் விஷ்ணவே நம:       வயிற்றின் வலப்பக்கம்

(6) ஓம் மதுஸூதனாய நம:   வலது புஜத்தின் கீழ்பகுதி

(7) ஓம் த்ரிவிக்ரமாய நம:     வலது புஜத்தின் மேல்பகுதி

(8) ஓம் வாமனாய நம:        வயிற்றின் இடப்பக்கம்

(9) ஓம் ஸ்ரீதராய நம:          இடது புஜத்தின் கீழ்பகுதி

(10) ஓம் ஹ்ருஷீகேஷாய நம: இடது புஜத்தின் மேல்பகுதி

(11) ஓம் பத்மநாபாய நம:      முதுகின் மேல்பகுதி

(12) ஓம் தாமோதராய நம:          முதுகின் கீழ்பகுதி

 

வலது கரத்தின் மோதிர விரலால் திருநாமம் இட வேண்டும். வலது புஜத்தில் இடப்படும் இரண்டு திலகத்திற்கும் இடது கரத்தின் மோதிர விரலைப் பயன்படுத்த வேண்டும். திலகம் இட்டுக் கொண்டபின், இடது உள்ளங்கையில் இருக்கும் சிறிதளவு கோபிசந்தனத்தை, ஓம் வாஸுதேவாய நம: என்று சொல்லியவாறு உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives