பக்தர்களைக் காக்கும் நரசிம்மர்

Must read

பெருமாளின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் முக்கியமான ஓர் அவதாரம், மிகவும் விசித்திரமானவரும் கூட. பாதி மனித உருவமும் பாதி சிங்க உருவமும் கொண்டு, தனது பக்தரான பிரஹலாதரைக் காப்பதற்காகத் தோன்றினார். பார்ப்பதற்கு மிகவும் கோரமாகவும் கோபமாகவும் தோற்றமளித்த அவரை அணுகுவதற்கு தேவர்களும் அஞ்சினர். ஆயினும், சற்றும் அச்சமில்லாத பிரஹலாதர், நரசிம்மரை அணுகி பல்வேறு பிரார்த்தனைகளை முன்வைத்து, பகவான் எப்போதும் தமது பக்தர்களிடம் பரிவுடன் நடந்துகொள்பவர் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தினார்.

 

மிகவும் கொடிய விலங்காகிய சிங்கம், தன் எதிரிகளிடம் கொடூரமாக நடந்து கொண்டாலும், தனது குட்டிகளிடம் பரிவுடனே நடந்துகொள்ளும். அதுபோல, பகவானின் நரசிம்ம ரூபம் அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தாலும், பக்தர்களின் மனதிலிருந்து அச்சத்தை நீக்குகின்றது. பிரஹலாதரைப் போன்று பகவானால் பாதுகாக்கப்பட விரும்பும் பக்தர்கள் தினமும் நரசிம்மரை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் பாடி அன்புடன் வழிபடுவர். பக்திப் பாதையில் பக்தர்களுக்கு வரும் அபாயங்களிலிருந்து அவர்களைக் காத்து, அவர்கள் மேலும் முன்னேறுவதற்கு நரசிம்மர் உதவி புரிகிறார்.

 

கோடை காலத்தின் வெப்பத்திற்கே வெப்பத்தைக் கொடுக்கும் வகையில் தோன்றிய நரசிம்மரின் அவதார தினம் இந்த வருடம் மே மாதம் 24ஆம் தேதியன்று வருகின்றது. சதுர்தசி திதியன்று அவதரித்ததால், அவரது அவதார தினம் நரசிம்ம சதுர்தசி என்று அழைக்கப்பட்டு, அனைத்து பக்தர்களாலும் மிக்க மகிழ்ச்சியுடன் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. நரசிம்மர் மாலை நேரத்தில் அவதரித்தார் என்பதால், பக்தர்கள் அனைவரும் மாலை வரை பகவானின் வருகையை எதிர்பார்த்து உபவாஸம் இருப்பர்; நரசிம்மரின் அற்புத லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கேட்டு சக பக்தர்களுடன் இணைந்து அவரது அவதாரத் திருநாளை நாம ஸங்கீர்த்தனத்துடன் கொண்டாடுவர். இக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் பகவத் தரிசன வாசகர்கள் அனைவரும் தங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோயிலைத் தொடர்பு கொள்ளவும்.

நரசிம்மரின் பாதுகாப்பை வேண்டி பக்தர்களால் தினமும் பாடப்படும் பிரார்த்தனை:

நமஸ் தே நரஸிம்ஹாய

ப்ரஹ்லாதஹ்லாததாயினே

ஹிரண்யகஷிபோர் வக்ஷ:-

ஷிலாடங்கநகாலயே

 

இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹோ

யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ:

பஹிர் ந்ருஸிம்ஹோ ஹ்ருதயே ந்ருஸிம்ஹோ

ந்ருஸிம்ஹம் ஆதிம் ஷரணம் ப்ரபத்யே

 

“பிரகலாதருக்கு மகிழ்ச்சியைத் தருபவரும், அசுரனான ஹிரண்யகசிபுவின் கல்போன்ற மார்பில் உளி போன்ற தனது நகத்தை வைத்து கிழித்தவருமான பகவான் நரசிம்மருக்கு எனது வணக்கங்கள்.”

 

“பகவான் நரசிம்மர் இங்கும் இருக்கின்றார், அங்கும் இருக்கின்றார். நான் எங்கு சென்றாலும் நரசிம்மர் அங்கு உள்ளார். வெளியிலும் உள்ளார் இதயத்திலும் உள்ளார். எல்லாவற்றிற்கும் ஆதியாகவும் தஞ்சமளிப்பதில் உன்னதமானவராகவும் விளங்கும் அந்த பகவான் நரசிம்மரிடம் நான் சரணடைகிறேன்.”

 

தவ கரகமலவரே நகம் அத்புதஷ்ருங்கம்

தலிதஹிரண்யகஷீபுதனுப்ருங்கம்

கேஷவ த்ருதநரஹரிரூப ஜய ஜகதீஷ ஹரே

 

“கேசவரே! அண்டத்தின் இறைவனே! பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் அவதரித்த பகவான் ஹரியே! எல்லா புகழும் உமக்கே! உமது அழகிய தாமரைக் கரங்களில் உள்ள அற்புதமான கூரிய நகங்களால் சக்திவாய்ந்த அசுரன் ஹிரண்யகசிபுவின் உடல் ஒரு சிறு பூச்சியின் உடலைப் போன்று கிழித்தெறியப்பட்டது.”

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives