பக்தித் தொண்டின் சுவை

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அனைவரையும் தூண்டும் ரஸம்

பக்தி என்றால் அன்புத் தொண்டு என்று பொருள். ஒவ்வொரு தொண்டும் தன்னிடம் ஒரு கவர்ந்தீர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது, அந்தத் தன்மையே அதை செய்பவரை மேலும் மேலும் அந்தத் தொண்டில் முன்னேற்றமடையச் செய்கிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் நிரந்தரமாக ஏதாவதொரு தொண்டில் ஈடுபட்டுள்ளோம். அந்தத் தொண்டிற்கான ஊக்கம் நாம் அதிலிருந்து பெறும் இன்பத்தாலேயே கிடைக்கிறது. ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தால், இரவு பகலாக உழைக்கிறான். அதேபோல் தான் ஒரு சமூக சேவகன் மிகப் பெரிய குடும்பத்தின் அன்பிற்காக உழைக்கிறான், ஒரு தேசியவாதி தன்னுடைய நாட்டிற்காகவும் மற்றும் நாட்டு மக்களுக்காகவும் உழைக்கிறான். சமூக சேவகன், கிருஹஸ்தன், தேசியவாதி போன்றவர்களை உந்துகின்ற அந்த சக்தி ரஸம் என்று அழைக்கப்படுகிறது அல்லது மிக இனிமையான சுவையான உறவு என்று அழைக்கப்படுகிறது. பௌதிகத் தொழிலாளர்களால் அனுபவிக்கப்படும் சாதாரண ரஸத்திலிருந்து பக்தித் தொண்டினால் அனுபவிக்கப்படும் ரஸமானது முற்றிலும் மாறுபட்டது.

பௌதிக ரஸத்தின் பிரச்சனைகள்

பௌதிகவாதிகள் புலனுகர்ச்சி என்று அறியப்படுகின்ற ஒரு விதமான ரஸத்தை அனுபவிப்பதற்காக இரவுபகல் பாராது உழைக்கின்றார்கள். ஆயினும், பௌதிக ரஸத்தில் உள்ள இன்பமானது நிலைத்திருக்காத காரணத்தால், பௌதிகவாதிகள் இன்பத்தை அனுபவிப்பதற்கான தங்களுடைய நிலையினை அவ்வப்போது மாற்றிக் கொண்டுள்ளனர். வியாபாரி ஒருவன் வாரம் முழுவதும் வேலை செய்வதால் திருப்தியுறுவதில்லை; எனவே, வாரக் கடைசியில் தன்னுடைய வியாபாரச் செயல்களை மறக்கக்கூடிய ஒரு இடத்திற்குச் செல்ல நினைக்கிறான். இவ்வாறாக, வாரக் கடைசியினை தன்னை மறந்த நிலையில் கழித்த பிறகு, அவன் மீண்டும் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு அவனுடைய உண்மையான வியாபாரச் செயல்களை மறுபடியும் தொடங்குகிறான். பௌதிக ஈடுபாடு என்றால் ஒரு குறிப்பிட்ட நிலையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றுக்கொள்வதும், அதன் பிறகு அதை மாற்றிக்கொள்வதுமாகும். அந்த நிலையற்ற தன்மை முன்னும்பின்னும் மாறிக் கொண்டே இருக்கும். இந்த நிலையை போக-த்யாக என்று சமஸ்கிருதத்தில் அழைக்கிறார்கள். அதாவது, ஒரு பௌதிகவாதியின் நிலையானது புலனின்பம், துறவு என்னும் இரண்டிற்கும் இடையே மாறிக் கொண்டே இருக்கும் நிலையாகும். ஓர் உயிர்வாழியால் புலனின்பம் அல்லது துறவு என எதிலும் ஸ்திரமாக இருக்க முடியாது. உயிர்வாழியானவன் உன்னத பகவானின் நித்திய அம்சம் என்பதால், அவன் இந்த இரண்டில் எதிலும் இன்பமாக இருக்க முடியாது, மாற்றம் என்பது தொடர்ந்து கொண்டு இருக்கும்.

 

புலனுகர்ச்சியானது நெடுங்காலத்திற்கு நீடிக்காது; எனவே, அது சபல-ஸுக அல்லது நிலையற்ற இன்பம் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சாதாரண கிருஹஸ்தன் ஒருவன் இரவுபகல் பாராது உழைத்து, தன்னுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வெற்றி காண்கிறான். அதில் அவன் ஒருவிதமான உறவை அனுபவிக்கிறான். ஆனால் அவனுடைய இந்த பௌதிக இன்பத்திற்கான முன்னேற்றம் முழுவதும் அவனது வாழ்க்கை முடிவுற்ற உடனேயே அந்த உடலோடு முடிவடைகிறது. எனவே, நாஸ்திக மனிதர்களுக்கு இறப்பானது கடவுளின் பிரதிநிதியாக கருதப்படுகிறது.

பக்தனுக்கு இழப்பில்லை

பக்தன் ஒருவன் கடவுள் இருப்பதை பக்தித் தொண்டினால் அறிகிறான், ஆனால் நாஸ்திகனோ கடவுள் இருப்பதை இறப்பின் ரூபத்தில் அறிகிறான். இறப்பின்போது எல்லாமே முடிந்துவிடுகிறது. மேலும், அவன் புதிய வாழ்க்கையின் புதிய சகாப்தத்தை புதிய சூழ்நிலையில் தொடங்குகின்றான். அஃது ஒருவேளை முந்தைைய பிறவியில் நாம் இருந்ததைவிட உயர்ந்ததாக இருக்கலாம், அல்லது தாழ்ந்ததாகக்கூட இருக்கலாம். அரசியல், சமுதாயம், தேசியம், உலகளாவிய செயல் என எந்தத் துறையின் செயல்களாக இருக்கட்டும், அச்செயல்களின் பலன்கள் வாழ்வின் முடிவில் முடிந்துவிடும். இதுவே உண்மை.

 

இருப்பினும், பகவானின் உன்னத அன்புத் தொண்டில் அனுபவிக்கப்படுகின்ற இன்பமாகிய பக்தி ரஸம், வாழ்க்கையின் முடிவோடு சேர்ந்து அழிந்துவிடாது, அஃது என்றுமே இடைவிடாது தொடரும். எனவே, அஃது அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது என்றுமே அழியாது நித்தியமாக நிலைத்திருக்கக் கூடியது. இஃது எல்லா வேத இலக்கியங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்தி ரஸத்தில் ஒரு சிறிய முன்னேற்றம்கூட பக்தனை, மனிதப் பிறவியின் வாய்ப்பினை நழுவ விடாமல், பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்று பகவத் கீதை கூறுகிறது. நம்முடைய குடும்ப வாழ்க்கையால் பெறப்படும் ரஸங்கள், அல்லது சமுதாயம் என்னும் பெரிய குடும்ப வாழ்க்கையினால் பெறப்படும் ரஸங்களான சமூக சேவை, தயாள குணம், நாட்டுப்பற்று, பொதுவுடைமைக் கொள்கை போன்றவற்றால்கூட ஒருவனுடைய அடுத்த வாழ்க்கை மனித வாழ்க்கையாகத்தான் இருக்கும் என்று உத்திரவாதம் கொடுக்க முடியாது. நமது தற்போது செயல்களால் நாம் நம்முடைய அடுத்த வாழ்க்கைக்கு தயாராகிறோம். உயிர்வாழி தன்னுடைய தற்போதைய உடலின் செயல்களின் விளைவுகளுக்கு ஏற்பவே அடுத்த பிறவியைப் பெறுகிறான்.

நேசிக்கும் குணம் இயற்கையானது

வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கை என்ன வென்றால், நாம் பொதுவாக யாராவது ஒருவரை எப்போதும் நேசிக்க வேண்டும். எவராலும் மற்றவர் களை நேசிக்காமல் இருக்க முடியாது. இந்த இயற்கை குணம் ஒவ்வோர் உயிர்வாழியிடத்திலும் உள்ளது. புலியைப் போன்ற மிருகங்களிடத்தும் இந்த குணமானது ஓரளவிற்கு உறங்கிய நிலையிலாவது உள்ளது. எனவே, நிச்சயமாக இந்த குணம் மனிதர்களிடமும் உள்ளது. ஆயினும், இந்த அன்பை யாரிடம் செலுத்தினால் நாம் எல்லாரும் இன்பத்தைப் பெறலாம் என்பதை நாம் மறந்துவிட்டோம். தற்போதைய மனித சமுதாயம் நாட்டை நேசிப்பதற்கு, குடும்பத்தை நேசிப்பதற்கு, அல்லது தன்னையே நேசிப்பதற்கு கற்றுத் தருகிறது. ஆனால் அந்த அன்பை யாரிடத்தில் செலுத்துவதால் நாம் எல்லாரும் இன்பத்தைப் பெறலாம் என்பதைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. நாம் மறந்த அந்த உண்மை கிருஷ்ணரே. மேலும், பக்தித் தொண்டின் வழிமுறையானது கிருஷ்ணரின் மீதான நம்முடைய உண்மையான அன்பினை எவ்வாறு தூண்டுவது என்பதையும், அந்த ஆனந்தமயமான வாழ்வில் எவ்வாறு நிலைபெறுவது என்பதையும், எடுத்துரைக்கின்றது.

 

ஆரம்பத்தில் குழந்தையானது பெற்றோர்களை நேசிக்கிறது, பிறகு சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோரை நேசிக்கின்றது. பிறகு, வளரவளர மனிதன் தனது குடும்பம், சுற்றம், சமூகம், நாடு, அல்லது முழு மனித சமூகத்தையேகூட நேசிக்கிறான். ஆனால் அந்த அன்பு செலுத்தும் குணமானது முழு மனித சமூகத்தை நேசிப்பதால்கூட திருப்தியுறுவதில்லை; ஏனெனில், உன்னதமான அன்பிற்குரியவர் யார் என்பதை அறியாமல் அந்த அன்பு செலுத்தும் குணமானது திருப்தியுறுவதில்லை. நாம் அந்த அன்பை கிருஷ்ணரிடம் வைக்கும்போது, நம்முடைய அன்பு செலுத்தும் குணமானது திருப்தியடைகிறது. இந்த கருத்தே கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தின் முழுப் பொருளாகும். இந்த விஞ்ஞானமானது ஐந்து வகையான தெய்வீக ரஸங்களினால் கிருஷ்ணரிடத்தில் அன்பு செலுத்துவது எவ்வாறு என்பதை நமக்குத் தெரிவிக்கிறது.

வாரம் முழுவதும் வேலை செய்பவன் வாரக் கடைசியில் வேறு வகையான இன்பத்தைத் தேடுகிறான். ஒருவனின் ஈடுபாடு முன்னும்பின்னும் மாறிக் கொண்டே உள்ளது.

கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துதல்

நம்முடைய அன்பு செலுத்தும் குணமானது ஒளி அல்லது காற்றின் அதிர்வுகளைப் போல தொடர்ந்து விரிவடைகிறது. ஆனால் அஃது எங்கே முடிவடைகிறது என்பது நமக்குத் தெரியாது. பக்தி யோகமானது, சுலபமான முறையில் கிருஷ்ணரிடத்தில் அன்பு செலுத்துவதால் எவ்வாறு அனைத்து உயிர்களிடத்திலும் அன்பைச் செலுத்தலாம் என்னும் விஞ்ஞானத்தை நமக்குக் கற்பிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை போன்ற பெரும் முயற்சிகளால்கூட மனித சமுதாயத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையைக் கொண்டுவர நாம் தவறிவிட்டோம்; ஏனென்றால், அவர்களுக்கு சரியான முறை தெரியவில்லை. அந்த முறை சுலபமானதுதான், ஆனால் அதை ஒருவன் நல்ல அறிவோடு புரிந்துகொள்ள வேண்டும்.

 

எல்லா மனிதர்களும் முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரிடத்தில் சுலபமான மற்றும் இயற்கையான முறையில் அன்பு செலுத்துவது எவ்வாறு என்பதை “பக்தி ரஸாம்ருத சிந்து” தெரிவிக்கிறது. நாம் கிருஷ்ணரிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால், அதன் பின்னர் உடனடியாக அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது சுலபமாகிவிடும். இஃது ஒரு மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுவது அல்லது ஒருவருடைய வயிற்றிற்கு உணவளிப்பதைப் போன்றதாகும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றும் முறை அல்லது வயிற்றிற்கு உணவளிக்கும் முறையை, உலகம் முழுவதும் விஞ்ஞான ரீதியாகவும் செயல் ரீதியாகவும் அனைவரும் உணரலாம். நாம் வயிற்றிற்கு உணவிட்ட உடனே, அச்செயலால் உண்டாக்கப்படும் சக்தியானது உடல் முழுவதும் பரவுவதை உணரலாம். அதுபோலவே, ஒரு மரத்தின் வேருக்கு நீர் ஊற்றும்பொழுது, அதனால் உண்டாகும் சக்தியானது அஃது எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அந்த மரம் முழுமைக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. மரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நீர் ஊற்றுவதோ உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உணவளிப்பதோ முடியாத காரியமாகும். எல்லாவற்றிற்கும் சக்தி கொடுக்கின்ற செயலை எவ்வாறு செய்வது என்பதை “பக்தி ரஸாம்ருத சிந்து” நமக்குக் கற்பிக்கின்றது. இந்த முறையை அறியாதவன் வாழ்க்கையின் முக்கியமான விஷயத்தை மறந்தவனாவான்.

கிருஷ்ணர் மட்டுமே தீர்வு

பௌதிகத் தேவைகளைப் பொருத்தவரையில், தற்பொழுது மனித நாகரிகமானது சுகமாக வாழ்வதில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் மக்கள் இன்பமாக இல்லை. காரணம், நாம் முக்கியமான விஷயம் ஒன்றை மறந்துள்ளோம். நாம் இன்பமாக இருப்பதற்கு வாழ்க்கையின் பௌதிக சுகங்கள் மட்டும் போதாது. இதற்கான சிறந்த ஓர் உதாரணம், அமெரிக்க நாடு. பௌதிக சுகத்திற்கான அனைத்து வசதிகளும் நிறைந்த இந்த பணக்கார நாட்டில், வாழ்க்கையில் முற்றிலும் குழப்பமும் ஏமாற்றமும் நிறைந்த மனிதர்கள் பெருமளவில் உருவாகி வருகின்றனர். அத்தகு குழப்பமான மனிதர்கள் தெளிவான வழிகாட்டுதல்களை பக்தித் தொண்டினால் பெற முடியும். இதன் மூலமாக அவர்களுடைய உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் பௌதிக வாழ்க்கை என்னும் நெருப்பானது உடனடியாக அணைக்கப்படும் என்று நான் உறுதியளிக்கின்றேன்.

 

நாம் பௌதிக வாழ்வில் முன்னேற்றமடைந்துள்ள போதிலும், நம்முடைய அன்பு செலுத்தும் குணத்தை முழுமையாக திருப்திப்படுத்த முடிவதில்லை. நாம் எவ்வாறு இந்த பௌதிக உலகில் பூரணமாக பக்தித் தொண்டில் ஈடுபட்டு, நம்முடைய இந்த வாழ்க்கை மற்றும் அடுத்த வாழ்க்கையின் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்பதற்கான சில அனுபவமுள்ள குறிப்புகளை பக்தித் தொண்டு வழங்குகிறது. இந்த அறிவானது எந்த விதமான பௌதிக வாழ்க்கையையும் கண்டிப்பதற்காக (அல்லது புறக்கணிப்பதற்காக) உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, மதவாதிகள், தத்துவவாதிகள், மற்றும் எல்லா மக்களுக்கும் எவ்வாறு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவது என்ற தகவலை கொடுப்பதற்கான முயற்சியாகும். ஒருவன் வசதியான வாழ்க்கை வாழலாம், ஆனால் அதே சமயத்தில் அவன் கிருஷ்ணரை நேசிப்பதற்கான கலையையும் அறிந்துகொள்ள வேண்டும்.

 

தற்சமயத்தில் நாம் நம்முடைய அன்பு செலுத்தும் குணத்தைப் பயன்படுத்திக்கொள்ள பல வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால் உண்மையில், நாம் அந்த அன்பின் உண்மையான குறிக்கோளாகிய கிருஷ்ணரைத் தவறவிடுகிறோம். மரத்தின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுகிறோம், ஆனால் வேரை மறந்துவிடுகிறோம்; உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறோம், ஆனால் வயிற்றுக்கு உணவளிக்க மறுக்கிறோம்.

 

கிருஷ்ணரைத் தவற விடுகிறோம் என்றால், நம்மையே நாம் தவற விடுகிறோம் என்றுதான் அர்த்தம். உண்மையில் தன்னுணர்வும் கிருஷ்ண உணர்வும் ஒன்றோடொன்று இணைந்து செல்பவை. எடுத்துக்காட்டாக, காலையில் தன்னைத்தானே பார்ப்பது என்றால் அது சூரிய உதயத்தையும் பார்ப்பதாகத்தான் அர்த்தம்; சூரிய ஒளி இல்லாமல் யாராலும் தங்களைப் பார்த்துக்கொள்ள முடியாது. அதைப் போலவே, கிருஷ்ணரை உணராமல் ஒருவரால் தன்னை உணர்வது என்ற கேள்விக்கே இடமில்லை.

 

பகவான் கிருஷ்ணர் தானே சுயமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவாக 500 ஆண்டுகளுக்கு முன் வங்காளத்தில் அவதரித்தார். அவர் இந்த யுகத்தில் பகவானின் தூய அன்பைப் பெறுவதற்கான வழியை அருளியுள்ளார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் தெய்வீக அதிர்வினை எப்போதும் உரைப்பதன் மூலமும் கேட்பதன் மூலமும், ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியத்தை அடையலாம்.

 

நாங்கள் பல நிறங்களை உடைய, பல மத நம்பிக்கைகளை உடைய, மற்றும் பல தரப்பட்ட வாழ்க்கை முறைகளை உடைய அனைத்து மக்களையும் வரவேற்கிறோம். எங்களுடன் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதில் கலந்து கொண்டு இதன் உன்னத சக்தியை அனுபவிக்குமாறு அழைக்கிறோம். கடவுளை உணர்வதற்கான இந்த முறையை யார் எடுத்துக் கொண்டாலும், கிருஷ்ண உணர்வானது அவருடைய இறையன்பை வளர்த்து அவருடைய வாழ்க்கையை பூர்த்தியடையச் செய்கிறது.

ஒரு பக்தன் கிருஷ்ணரிடம் ஐந்து விதமான உறவில் அன்பு செலுத்துகிறான்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives