பதிவிரதையின் வலிமை

Must read

கணவனுக்காக கதிரவனையே தடுத்த சாண்டிலி

பிரதிஷ்டானபுரம் என்ற ஊரில் கௌசிகன் என்ற பிராமணன் வசித்து வந்தான். அவனது பத்தினியின் பெயர் சாண்டிலி, அவள் கணவனுக்கு எல்லா பணிவிடைகளையும் குறைவின்றி செய்து வந்தாள். அவள் கற்புடையவளாகவும் கணவனின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவளாகவும் திகழ்ந்தாள்.

 

பூர்வ ஜன்ம வினையினால், கௌசிகன் தொழுநோயினால் பாதிக்கப்பட்டான். அவனுடைய துக்கத்தில் முழு பங்கேற்ற சாண்டிலி அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து வலியை அதிகம் உணராமல் பார்த்துக் கொண்டாள். அவனை கடவுளைப் போன்று வழிபட்டு தொடர்ந்து தொண்டு செய்து வந்தாள். அவன் அவளுக்கு பல துன்பங்களைக் கொடுத்தபோதிலும், அவள் சிறிதும் மனம் கோணாமல் தொண்டு செய்து வந்தாள்.

 

ஒருநாள் மாலைப் பொழுதில், ஒரு வேசியினால் மதியிழந்த கௌசிகன், தன் மனைவியிடம் தன்னை அந்த வேசியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டான். கணவனின் கட்டளையைப் பின்பற்றிய சாண்டிலி, தன் கணவனை ஓர் அகலமான கூடையில் வசதியாக அமர்த்தி, போதுமான செல்வத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

மாண்டவ்ய முனிவரின் சாபம்

இதற்கிடையில், மாண்டவ்ய ரிஷி என்ற மாமுனிவர் தவறான திருட்டு குற்றம் சுமத்தப்பட்டு, கழுமரத்தில் ஏற்றப்பட்டிருந்தார். வேசியின் இல்லத்திற்கு கணவனை சுமந்தபடி சென்று கொண்டிருந்த சாண்டிலி இருளின் காரணத்தினால் அவர் இருந்ததை கவனிக்கவில்லை. கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த முனிவரின் கால்களை, கூடையில் இருந்த கௌசிகனின் கால்கள் தவறுதலாகத் தீண்டின. வலி பொறுக்க முடியாத சூழ்நிலையில் மிகவும் கோபமுற்ற மாண்டவ்ய ரிஷி, “யார் என்னை கால்களால் உதைத்தாரோ, அவர் நாளைய சூரிய உதயத்தில் மடிந்துவிடுவார்,” என்று சபித்தார்.

 

சாபத்தைக் கேட்ட மாத்திரத்தில், பதிவிரதையான சாண்டிலி உடனடியாகக் கூறினாள், “நான் உண்மையான பதிவிரதையாக இருப்பின், சூரியன் இனிமேல் உதயமாகாதிருக்கட்டும்.”

தேவர்கள் அனுசுயையை அணுகுதல்

மறுநாள் சூரியன் உதயமாகவில்லை. அடுத்த பொழுதிலோ அடுத்த நாளிலோகூட உதயமாகவில்லை. பல வருடங்கள் தொடர்ந்து இரவாகவே கழிந்தன. அந்தணர்களின் வேள்விகள் நின்றன, உழவர்களின் உழவுப் பணி நின்றது, பயிர்களின் விளைச்சலின்றி மக்கள் பட்டினியால் தவித்தனர். பயந்த நிலையிலும், என்ன நேர்ந்ததோ என்று குழம்பிய நிலையிலும், தேவர்கள் அனைவரும் பிரம்மதேவரின் உதவியை நாடினர். பிரம்மதேவர் அவர்களுக்கு நிலைமையை எடுத்துரைத்தார், “ஒரு பதிவிரதையின் காரணத்தினால், இனி சூரிய உதயம் நிகழாது. மாண்டவ்ய ரிஷியின் தவ வலிமையை சாண்டிலியின் பதிவிரத வலிமை தோற்கடித்து விட்டது. அனைத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர விரும்பினால், நீங்கள் மற்றொரு பதிவிரதையான அத்ரி முனிவரின் பத்தினி அனுசுயையை அணுக வேண்டும். அவள் உங்களுடைய பிரார்த்தனைகளில் திருப்தியடைந்தால், மீண்டும் சூரியனை உதிக்கச் செய்வாள்.”

 

தேவர்கள் அனுசுயையிடம் சென்று வணக்கம் செலுத்தி, முன்பிருந்த பகல், இரவு முறையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வருமாறு வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற அனுசுயை பதிலளித்தாள், “தேவர்களே! நீங்கள் தவறியும்கூட அந்த கற்புக்கரசியின் பெருமைகளை இழிவுபடுத்தி விடாதீர்கள். நான் சூரியனை மீண்டும் எழச் செய்வேன். ஆனால், பெருமைக்குரிய அந்த பதிவிரதையை கௌரவித்த பிறகே அது நிகழும். பகல், இரவின் சுழற்சி தொடர வேண்டும்; அதே சமயத்தில் அந்த தம்பதிகள் அழியக் கூடாது–இந்த இரு காரியத்தையும் நான் ஒரே சமயத்தில் செய்வேன்.”

சாண்டிலி தனது கணவனை கூடையில்சுமந்து செல்லுதல்.

சாண்டிலியுடன் அனுசுயையின் உரையாடல்

தேவர்களை அனுப்பி வைத்த பின்னர், அனுசுயை சாண்டிலியிடம் சென்று பின்வருமாறு கூறினாள், “ஆசீர்வதிக்கப்பட்டவளே! உன் கணவனின் முகம் கண்டே நீ மகிழ்ச்சி கொள்கிறாய் என்பதை நான் நம்புகிறேன். உன் பதியை நீ அனைத்து தெய்வத்திற்கும் மேலாக மதிப்பாயாக. நான் என்னுடைய பதியை விசுவாசத்தோடு பின்பற்றியே அனைத்து விதமான நன்மைகளையும் பெற்றேன். அவருக்கு சேவையாற்றுவதால் மட்டுமே என்னுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு, வாழ்க்கைப் பாதையிலுள்ள அனைத்து தடைகளும் நீக்கப்பட்டன. கடுமையான முயற்சிக்கு பின்னர் ஓர் ஆண் பெறுகின்ற அனைத்து நன்மைகளையும், பெண்ணானவள் தனது கணவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதால் எளிமையாகப் பெறுகிறாள். ஆதலால், நீ எப்பொழுதும் உன்னுடைய கணவனுக்கு சேவையாற்றுவதில் கவனமுடன் இருப்பாயாக!”

 

பதிவிரதையான சாண்டிலி பதிலுரைத்தாள்: “கற்புடைய மாதர்களில் சிறந்தவளே, தங்களின் கருணைமிக்க சந்திப்பினாலும் உபதேசங்களாலும் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம். தங்களுடைய வருகையின் நோக்கம் என்ன? நான் தங்களுக்கு எவ்வாறு சேவையாற்றுவது?”

 

அனுசுயை கூறினாள்: “உன்னுடைய விரதத்தின் பலனால் இயற்கையின் பகல், இரவு மாற்றங்கள் நின்றுவிட்டன. பகல் பொழுது இல்லாததால், மனிதர்கள் யாரும் யாகம் செய்ய முன்வரவில்லை, யாகங்கள் செய்யப்படாததால் தேவர்கள் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர், அவர்கள் என்னை அணுகி மீண்டும் காலச் சுழற்சியை ஏற்பாடு செய்யும்படி வேண்டினர். அதற்காகவே நான் உன்னை நாடி வந்தேன்.

 

“மாதர்களில் சிறந்தவளே! பகல் பொழுதும் சூரியனும் இல்லாதிருப்பதால், தேவர்கள் எந்த வகையான வளங்களையும் பெறவில்லை. அவற்றோடு மழையும் பொய்த்து போனதால், இவ்வுலகம் பெரும் அழிவைச் சந்திக்கின்றது. எனவே, இவ்வுலகின் துன்பத்தைப் போக்குமாறு உன்னிடம் நான் முறையிடுகிறேன். முன்பிருந்தவாறே சூரியதேவன் தனது கடமையைச் செய்யட்டும்.”

சூரியனை மீண்டும் வரவழைத்த அனுசுயை

இவ்வார்த்தைகளைக் கேட்ட கௌசிகனின் பணிவான மனைவியான சாண்டிலி, சிரம் தாழ்த்தியவாறு வருத்தத்துடன் கூறினாள், “என்னை மன்னியுங்கள், என்னால் எவ்வாறு இந்த வேண்டுதலை ஏற்க முடியும்? கோபம் கொண்ட முனிவர் மாண்டவ்யர் சூரியன் உதித்ததும் என் கணவரின் உயிர் பிரிந்து போகும் என சாபமிட்டுள்ளார். என் வாக்கினைப் பின்வாங்கினால், என் கணவரின் உயிர் பிரிந்துவிடும்.”

 

அப்போது அனுசுயை கூறினாள், “கற்புள்ளவளே! நீ விரும்பினால் உன் கணவரின் உயிரைப் புதுப்பித்து, தொழுநோயிலிருந்து விடுவித்து, இளமையான சரீரத்தையும் என்னால் வழங்க முடியும். அழகியே, நான் கற்புள்ள மாதர்களைப் புகழவே விரும்புகிறேன். ஆதலால் அதன்படி உன்னை கௌரவிக்க விரும்புகிறேன்.”

 

சாண்டிலி அனுசுயையின் வேண்டுதலை ஏற்றாள். அதன் பிறகு, அனுசுயை புனித நீரைத் தெளித்து நீண்ட வருடமாக தொடர்ந்த இரவை, சூரியனை வரவழைத்து பகலாக மாற்றினாள். சூரியதேவனான விவஸ்வான் மீண்டும் தோன்றி, தனது முழு ஆற்றலையும் கதிர்களால் வெளிப்படுத்தினார்.

 

சூரியன் உதயமான அதே சமயத்தில், கௌசிக பிராமணன் தரையில் விழுந்து உயிர் நீத்தான். தனது அன்பிற்குரிய கணவனின் சடலத்தைக் கண்ட சாண்டிலி, அவனைத் தழுவியபடி ஓலமிடத் தொடங்கினாள். அனுசுயை அவளை அரவணைத்து, “சிறந்த பெண்மணியே! வருத்தம் கொள்ளாதே! என்னுடைய பதிக்கு நான் செய்த சேவையின் வலிமையைப் பார், என்னுடைய பதிவிரத வலிமையாலும் பணிவான முறையால் எனது மனம், சொல் மற்றும் செயல்களால் சேவையாற்றிய வலிமையாலும் உயிர்நீத்த இந்த பிராமணரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு, இளமையோடு வாழ வைக்கின்றேன்,” என்று ஆசீர்வதித்தாள்.

 

இவ்வாறாக, சூரியன் தனது இயல்பான நிலைக்கு திரும்பினார், அந்த கௌசிக பிராமணனின் வாழ்க்கையும் பாதுகாக்கப்பட்டது. அனுசுயையின் இந்த முயற்சியினால் தேவர்களும் திருப்தியடைந்தனர், சாண்டிலியும் திருப்தியடைந்தாள்.

 

ஆதாரம்: கருட புராணம் (1.142.19-29), மார்கண்டேய புராணம் (அத்தியாயம் 16)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives