மக்களாட்சி-பிரச்சனைகளும் தீர்வுகளும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

“மக்களால் மக்களுக்காக” என்று கூறப்படும் மக்களாட்சியின் முக்கிய அங்கம் தேர்தல். தற்போது தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அனைத்து மக்களும் தேர்தல் செய்திகளை மிகமிக ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருவாயில், ஆன்மீக இதழில் தேர்தல் பற்றிய கட்டுரையா என்று சிலர் வியப்படையலாம். நடைமுறை விஷயங்களை சாஸ்திரப் பார்வையுடன் வழங்குவது பகவத் தரிசனத்தின் இயல்பு என்பதால், இங்கே இந்தக் கட்டுரை.

மக்களாட்சியின் தோற்றம்

மக்களாட்சி என்னும் சொல் “democracy” என்னும் சொல்லிலிருந்து வருகிறது; அச்சொல் demos (மக்கள்) kratein (ஆட்சி செய்தல்) என்னும் இலத்தின் சொற்களின் கலவையாகும். ஜான் கேனீ என்னும் ஆராய்ச்சியாளரின்படி, demos என்னும் சொல், பண்டைய கிரேக்க நாட்டில் damos என்று உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சுமேரிய மொழியில் அது dunu என்று உச்சரிக்கப்பட்டு “ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்கள்” என்ற பொருளில் வந்துள்ளது. சமஸ்கிருதத்தில் தாம் என்றால் “இடம்”, தாமு என்றால் “ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்தவர்” என்றும் பொருள். தாமு என்னும் சமஸ்கிருத உச்சரிப்பிற்கும் அதே பொருளை வழங்கும் dunu என்னும் சுமேரிய உச்சரிப்பிற்கும் பெரிய வேற்றுமை இல்லை என்பதை வைத்து, அக்காலத்தில் பல்வேறு மொழிகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிகிறது.

எப்படிப் பார்ப்பினும், தற்போது மக்களாட்சி என்று அறியப்படும் முறையானது சமீப காலத்தில் மன்னராட்சிக்கு மாற்றாக உருவான வழிமுறையாகும். முந்தைய காலக்கட்டத்தில், உலகின் எல்லாப் பகுதிகளிலும் மன்னராட்சியே நிகழ்ந்து வந்தது. ஆனால் மன்னர்கள் மதம் சார்ந்த புண்ணிய வாழ்விலிருந்து வழுவிய காரணத்தினாலும் புலனின்பத்தில் அளவின்றி ஈடுபட்ட காரணத்தினாலும், மன்னராட்சி படிப்படியாக மறையத் தொடங்கியது. மக்களின் வரிப்பணத்தைப் பெற்ற அரசர்கள் அதனை மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுத்தாமல், சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். மேற்கத்திய நாடுகளில் அஃது அளவுகடந்து சென்றபோது, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு புரட்சிகள் உருவாகி, பல்வேறு விதமான மாற்று அரசாங்கங்கள் முயற்சி செய்யப்பட்டு, அதன் பின்னர் மக்களாட்சி முறை உருவாகியது.

இன்றும்கூட பல்வேறு விதமான மக்களாட்சிகள் உள்ளன என்பதும், அவை ஒவ்வொன்றிலும் பல்வேறு நன்மை தீமைகள் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கதாகும். இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் மக்களாட்சி முறையானது இலங்கையில் பின்பற்றப்படும் முறையிலிருந்து வேறுபட்டது, அமெரிக்காவின் வழிமுறை இவை இரண்டிலிருந்தும் வேறுபட்டது. உண்மையில் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் ஏறக்குறைய வேறுபட்ட வழிமுறைகள் உள்ளன.

இந்தியாவில் மக்களாட்சி

இந்தியாவைப் பொறுத்தவரையில், மன்னராட்சியின் பிரச்சனைகளினால் மக்களாட்சி தொடங்கியது என்று கூறிவிட முடியாது. மன்னராட்சிக்கு எதிராக இந்தியாவில் எந்தவொரு புரட்சியும் வெடித்ததாக வரலாற்றில் காணப்படவில்லை. சராசரி குடிமக்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான எந்த தேவையும் இருக்கவில்லை. இரண்டு மன்னர்களுக்கு நடுவில் ஒரு மைதானத்தில் போர் நிகழ்ந்தால்கூட, அந்த மைதானத்தின் அருகில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தை வழக்கம்போல உழுது கொண்டு வாழ்ந்து வந்தனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக சாதாரண குடிமக்களும் அரசியலினுள் இழுக்கப்பட்டனர். போர்க்களத்தையோ அரசியலையோ அறியாத சாதாரண குடிமக்களும் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். போர்க்களத்தில் தாமே முன்னின்று சண்டையிட்ட மன்னர்களைப் பார்த்த பூமியில், சாதாரண குடிமக்கள் மனித கேடயங்களாக உபயோகப்படுத்தப்பட்டனர். எப்படியோ இந்தியாவைப் பீடித்திருந்த அந்நிய ராஜ்ஜியம் இந்தியாவை விட்டு அகன்றது; ஆயினும், அந்த அந்நிய ஆட்சியாளர்களின் தாக்கம் இந்தியாவை விட்டு அகலவே இல்லை.

சுதந்திர இந்தியாவின் சில தலைவர்கள் (இங்கே பெயர் கூற விரும்பவில்லை), இந்தியாவில் பிறந்தவர்களாக இருந்தாலும் பிரிட்டனில் உருவானவர்களாக வாழ்ந்தனர். அவர்களின் வாழ்க்கை முறையும் எண்ணங்களும் ஆங்கிலேயர்களைத் தழுவியே இருந்த காரணத்தினாலும், (மக்களைக் கேடயங்களாக உபயோகித்து சுதந்திரம் வாங்கினோம் என்பதை மறந்துவிட்டு) தாங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை மன்னர்களிடம் ஒப்படைக்க மனமில்லாத காரணத்தினாலும், மக்களாட்சி என்னும் மேற்கத்திய வழிமுறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அச்சமயத்தில், பல்வேறு இந்திய சிந்தனையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், காலப்போக்கில் மக்களாட்சியைப் பற்றிய தொடர் பிரச்சாரத்தினாலும் மன்னராட்சியைப் பற்றிய தொடர் பொய் பிரச்சாரத்தினாலும், எப்படியோ மக்களாட்சி என்பது தற்போது இந்தியாவில் நன்கு நிலைநாட்டப்பட்டுவிட்டது.

அரசியல் அறிந்தோர் அறியாதோர் என அனைவருக்கும் ஒரே ஓர் ஓட்டு இருப்பதால், அரசியல்வாதிகள் வாக்காளர்களை ஏமாற்றுகின்றனர்.

மக்களாட்சியின் சில பிரச்சனைகள்

மக்களாட்சி இந்தியாவில் ஒரு தோல்வி என்பதை எந்தவொரு சிந்தனையுடைய மனிதனும் யோசித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கொள்ளையடிப்பவர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் தனிப்பட்ட வாழ்வில் தீயப் பழக்கங்கள் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
மக்களாட்சியின் பிரச்சனைகள் பல, அவற்றில் சில முக்கிய அடிப்படைப் பிரச்சனைகளைக் காண்போம்.

அனைவருக்கும் ஓர் ஓட்டு: மக்களாட்சியில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதால், தகுதியுடையோர், தகுதியற்றோர், அரசியல் அறிந்தோர், அரசியல் அறியாதோர் என அனைவருக்கும் ஓர் ஓட்டு என்ற நிலை உள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர நிர்வாக விஷயங்களை நன்கறிந்த அறிஞருக்கும் ஓர் ஓட்டு, தினமும் குடித்துவிட்டு பண்பாடின்றி தெருவில் திரிபவனுக்கும் ஓர் ஓட்டு–இஃது ஏற்கத்தக்கதா? இதன் மூலம் வரும் விளைவு: காசு கொடுத்து, சாராயம் கொடுத்து, சேலை கொடுத்து, வேட்டி கொடுத்து, பிரியாணி கொடுத்து என ஏதேனும் ஒன்றைக் கொடுத்து, அறியா மக்களை எளிதில் ஏமாற்றி, ஓட்டு வாங்கும் பழக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே திளைத்துவிட்டது.

எங்கும் ஊறிக் கிடக்கும் ஊழல்: தகுதியற்ற மக்களிடம் ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது, அவர்கள் நிச்சயம் தவறான பாதைக்குச் செல்வார்கள். மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தால் நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்னும் அடிப்படை அறிவுகூட இல்லாத இந்த ஆட்சியாளர்கள், கொஞ்சம்கூட வெட்கமோ தயக்கமோ இன்றி, எல்லாவற்றிற்கும் காசு கேட்கிறார்கள்–சிறிய வேலையிலிருந்து பெரிய வேலை வரை அனைத்திலும் ஊறிக் கிடக்கிறது கொள்ளையும் இலஞ்சமும்–இது போதாதென்று, கட்சியிலும் ஆட்சியிலும் பதவி கிடைக்காத கட்சிக்காரர்களுக்கு கோயில் அறங்காவலர் பணிகள் ஒதுக்கப்படுகின்றன, அவர்களோ கோயில்களில்கூட கொள்ளையடிக்கிறார்கள். கோயில்களிலே கொள்ளை யடிக்கும் இவர்களை அறங்கொள்ளையர்கள் என்றுதான் அழைக்க வேண்டுமே தவிர, அறங்காவலர்கள் என்று அழைக்கக் கூடாது.

எப்படியோ திருடர்களும் கொள்ளையர்களும் ஓட்டு போடும் முறைக்கு ஏற்பாடு செய்து, மக்களாட்சி என்ற பெயரில் பல்வேறு கள்ளப் பணிகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்து விடுகின்றனர். அதன் பின்னர், குடிமக்களைச் சுரண்டுவதே அவர்களின் வாடிக்கையாக உள்ளது. இதிலுள்ள உண்மையான கொடுமை என்னவெனில், ஆட்சியாளர்கள் என்றால் திருடர்கள்தான் என்பதை மக்களும் சகஜமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

கொள்ளையடிக்காமல் இருக்க முடியுமா? இவை ஒருபுறமிருக்க, இந்திய மக்களாட்சி வழிமுறையின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினரால் கொள்ளையடிக்காமல் இருக்க முடியுமா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கலாமே. நீங்கள் ஒரு கட்சியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமெனில், பல இலட்சங்களை (அல்லது கோடிகளை) அதற்கே செலவழிக்க வேண்டும். அதன் பின்னர், தேர்தலிலும் செலவழித்து மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும்.

சமீபத்திய தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதிகபட்சம் 28 இலட்சம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் செலவு செய்யலாம். உண்மையான செலவு இதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றுதான் அனைவரும் கூறுகின்றனர். நம்முடைய கணக்கிற்காக நாம் இந்த 28 இலட்சத்தினை மட்டும் எடுத்துக்கொள்வோம். 28 இலட்சம் செலவு செய்தாலும், அவர் வெற்றி பெறுவாரா என்று கூற முடியாது. அவ்வாறு அவர் வெற்றி பெற்று சட்டமன்றத்தினுள் நுழைந்தால், அவருக்கு வழங்கப்படும் மாத சம்பளம் ரூ 8,000, ஏனைய படிகள் ரூ 47,000; மொத்தம் ரூ 55,000. ஆக, கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஐந்து வருட சம்பளம் (அனைத்து படிகள் உட்பட) ரூ 33 இலட்சம் (55,000 X 12 X 5). எனவே, ஐந்து வருடத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் நிகர இலாபம் வெறும் ஐந்து இலட்சம் மட்டுமே.

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்: இந்த ஐந்து இலட்சத்திற்காக யாரேனும் அரசியல் என்னும் குளத்தில் இறங்குவார்களா? சில வேட்பாளர்களுக்காகக் கட்சியிலிருந்து செலவழிக்கப்படலாம். ஆயினும், செலவிட்ட பணத்தை கட்சி எங்கிருந்து பெறும்? மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கவில்லை என்றால்கூட, அவர்கள் சில மாபெரும் பணக்கார முதலைகளிடமிருந்து பணத்தை நன்கொடையாக வசூலித்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டும். வெற்றி பெற்ற பின்னர், அந்த அரசியல் கட்சிகளால், அந்த பணக்கார முதலைகளுக்கு சலுகையளிக்காமல் இருக்க முடியுமா?

தேவையில்லாத தேர்தல் செலவுகள்: யாம் மேற்கூறிய கணக்கின்படி, தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் செலவிடும் செலவினைச் சற்று கணக்கிட்டுப் பாருங்கள். தலையே சுற்றிவிடும், கணக்கில் வராதது எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. சட்டமன்ற தேர்தலுக்கு இவ்வளவு என்றால், பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திற்குமான செலவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், எங்கேயோ போகும்–இவையெல்லாம் வெறும் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே.

விகிதாசார பிரதிநிதித்துவம்: ஒரு தேர்தலில் 66 சதவிகித ஓட்டுகள் பதிவாவதாகவும் அதில் 33 சதவிகித ஓட்டு பெற்ற கட்சி ஆட்சியமைப்பதாகவும் எடுத்துக்கொள்வோம். இதன்படி, அந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நாட்டு மக்களில் வெறும் 22 சதவிகித மக்களே (66 X 33/100). அதாவது, 78 சதவிகித மக்களால் விரும்பப்படாத அரசாங்கம் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. இஃது எந்த விதத்தில் நியாயம்? இது பெரும்பான்மை ஆட்சியா? இஃது மக்களுடைய உண்மையான பிரதிநிதித்துவமா?

சில நேரங்களில் 10 சதவிகித ஓட்டு பெற்ற கட்சி, ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாமல் போகிறது. அதாவது, 6.5 சதவிகித மக்களின் விருப்பத்தை பிரதிநிதிப்பதற்கென்று யாரும் இல்லை.
கட்சி ரீதியிலான ஆட்சி: இன்றைய அரசியலமைப்பினை நாம் மக்களாட்சி என்கிறோம், ஆனால் உண்மையில் இதனை கட்சியாட்சி என்றே கூற வேண்டும். ஏனெனில், கட்சியின் ஆதரவின்றி வெற்றி பெறுவது என்பது வலுவான வேட்பாளருக்குக்கூட சிரமமானது; இந்தியாவின் 65 வருட மக்களாட்சியில், இதுவரை எந்தவொரு சுயேட்சை உறுப்பினரும் முதல்வராகவோ பிரதமராகவோ ஆட்சியமைக்கவில்லை என்பதை கவனிக்கவும்.

மக்களும் பெரும்பாலும் கட்சியைப் பார்த்து ஓட்டளிக்கின்றனரே தவிர வேட்பாளரைப் பார்த்து அல்ல. குடும்ப உறுப்பினர்கள், ஜாதியினர், மதத்தினர், உடன் பணிபுரிபவர்கள் என மற்றவர்களால் உந்தப்பட்டு ஓட்டளிக்கின்றனர், நன்றாக விளம்பரம் செய்பவருக்கு ஓட்டளிக்கின்றனர், கட்சியைப் பார்த்து ஓட்டளிக்கின்றனர்–வேட்பாளரை உண்மையாக அறிந்து அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்து ஓட்டளிப்பவர்கள் மிகமிகக் குறைந்தவர்களே. மக்களாட்சி என்ற பெயரில் கட்சியாட்சி நடக்கின்றது என்பதற்கு, இந்திய மக்களாட்சிக்கான அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்களே தான் சந்தித்த இரண்டு தேர்தல்களிலும் (1952, 1954) காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியைத் தழுவியது சிறந்த உதாரணமாகும்.
ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்: “தற்போதைய இந்தியா கட்சி அரசியலினால் துன்பப்படுகிறது. இவர்கள் மன்னராட்சிக்கு முக்கியத்துவமளிக்க விரும்புவதில்லை. கட்சிகள் தங்களுடைய மனம்போனபோக்கில் ஆட்சி செய்ய விரும்பியதால், மொத்த சூழ்நிலையும் கெட்டுவிட்டது. கட்சி அரசியலின் கீழுள்ள பெயரளவு மக்களாட்சி அபத்தமானதாகும்.” (உரையாடல், டிசம்பர் 13, 1970, இந்தோர்)

பயிற்சியில்லா மக்களாட்சி: ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்: “மன்னராட்சியில் நாட்டை முறையாக நிர்வகிப்பதற்கான பயிற்சிகள் அனைத்தும் போதுமான அளவில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் மக்களாட்சியில் அத்தகு பயிற்சி யாருக்கும் இல்லை; மாறாக, அரசியல்வாதிகள் சில அரசியல் ஏற்பாட்டின்படி ஆட்சிப் பொறுப்பிற்கு ஓட்டுப் பெற்று வருகின்றனர். ஒரு மன்னர் இருக்க வேண்டிய இடத்தில், மக்களாட்சி என்ற பெயரில், பல்வேறு போலி மன்னர்கள் உள்ளனர்: ஜனாதிபதி, அமைச்சர்கள், உப அமைச்சர்கள், காரியதரிசிகள், தனிப்பட்ட காரியதரிசிகள், மற்றும் பலர். எத்தனையோ கட்சிகள். ஆனால் யாருக்கும் ஆட்சி நிர்வாகத்தில் முறையான பயிற்சி இல்லை. பெயரளவு மக்களாட்சி அரசாங்கத்தில், மன்னராட்சி அல்லது சர்வாதிகாரத்தைக் காட்டிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது.” (பாகவதத்தின் ஒளியில், ஸ்லோகம் 44)

ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்: “மக்களாட்சி என்பது கழுதைகளின் அரசாங்கமாகும். ஏனெனில், மக்கள் கழுதைகளாக உள்ளனர், அவர்கள் மற்றொரு கழுதையினை அரசாங்கத்தின் தலைவராகும்படி வாக்களிக்கின்றனர். நீங்கள் என்ன செய்ய முடியும்? ஸயுத்தே க்ரியதே ராஜன் ஸ கிம் அஷ்னு பாஹனம், ’நாயினை மன்னராக அமர வைத்தால், அது செருப்பைக் கடிக்காது என்று நினைக்கிறீர்களா? உங்களால் பழக்கவழக்கத்தை மாற்ற முடியாது. ஆன்மீகப் பயிற்சியினால் மட்டுமே அதனை மாற்ற முடியும்.” (உரையாடல், டிசம்பர் 13, 1970, இந்தோர்)

இன்றைய அரசியலைக் கேலி செய்து இணையத்தில் காணப்பட்ட கார்ட்டூன்

குறைகூற முடியுமா?

நாம் உருவாக்கும் ஆட்சிகளை நாமே குறை கூற முடியுமா? ஒரு நல்ல ஆட்சியாளர் கிடைக்காத காரணத்தினால், நாமும் மாறிமாறி பலருக்கு ஓட்டுப் போட்டு நொந்து கொண்டுள்ளோம். இது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதைச் சற்று கேட்போம்.

ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்: “புண்ணியமான மன்னர்கள் உலகினை ஆட்சி செய்தால், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம். ஆட்சியாளர்கள் பாவிகளாக இருந்தால், மக்கள் துன்பப்பட வேண்டும். கலி யுகத்திலுள்ள பெரும்பாலான ஆட்சியாளர்கள் பாவிகளே. ஆனால் மக்களாட்சியைப் பொறுத்தவரையில், பாவிகளான குடிமக்கள் தங்களை ஆட்சி செய்வதற்காகத் தங்களின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்; எனவே, அவர்கள் தங்களுடைய வருத்தத்திற்கு யாரையும் குறைகூற முடியாது.” (ஸ்ரீமத் பாகவத பொருளுரை, 1.8.32)
“மன்னராட்சியையும் இன்று நடைபெறும் ஆட்சியையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த அயோக்கிய அரசாங்கத்தினால் என்ன பயன்? நாம் அயோக்கியர்களாக இருப்பதால், அரசாங்கமும் நிச்சயம் அயோக்கியமாகவே இருக்கும். நீங்களே தேர்ந்தெடுப்பதால், நீங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக குறை கூறக் கூடாது. மக்களாட்சியில் நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம். அவ்வாறு இருக்கையில், நீங்கள் ஏன் அரசாங்கத்தினைக் குறை கூற வேண்டும்?… நீங்கள் ஓர் அயோக்கியன், மற்றோர் அயோக்கியனுக்கு ஓட்டுப் போடுகிறீர்கள்; நீங்கள் எவ்வாறு நல்ல அரசாங்கத்தினை எதிர்பார்க்க முடியும்? நீங்கள் பெரிய அயோக்கியர்களை அனுப்பி வைக்கிறீர்கள்.” (ஸ்ரீமத் பாகவத உரை, ஜுன் 21, 1973, மாயாபுர்)

அரசியலே அறியாத நபர்கள் ஓட்டுப் போட்டுவிட்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, அரசியலை நன்கறிந்த சில திறன்வாய்ந்த நபர்கள் மன்னரை அறவழியில் வழிநடத்தி வந்தனர். அவ்வாறு வழிநடத்தப்படும் மன்னரால் திறமையான ஆட்சியை வழங்க முடியும். மன்னருடைய ஆட்சியில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக அதனைச் சுட்டிக்காட்டி திருத்துவது வழக்கம். ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

கடவுள் வழங்கிய வழிமுறை

உலகினைப் படைத்த இறைவன் உலக நிர்வாகத்திற்கென்று ஒரு வழிமுறையை வழங்கியுள்ளார்: அதுவே மன்னராட்சி. இதன்படி, தகுதிவாய்ந்த இளவரசர்களுக்கு சிறு வயதிலிருந்தே முறையாகப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும், மன்னருக்கு கற்றறிந்த பிராமணர்களும் சாதுக்களும் தொடர்ந்து அறிவுரை வழங்குவது வழக்கம். ஒரு விதத்தில் கூறினால், மன்னராட்சியில்தான் உண்மையான மக்களாட்சி இருந்தது–மக்களால் தினமும் மன்னரைச் சந்திக்க இயலும், தங்களது குறைகளை எடுத்துரைக்க இயலும், உடனடித் தீர்ப்புகளைப் பெறவும் முடியும். திறன்வாய்ந்த அமைச்சர்கள் மன்னரின் ஆலோசகராக இருப்பர்.

அரசியலே அறியாத நபர்கள் ஓட்டுப் போட்டுவிட்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, அரசியலை நன்கறிந்த சில திறன்வாய்ந்த நபர்கள் மன்னரை அறவழியில் வழிநடத்தி வந்தனர். அவ்வாறு வழிநடத்தப்படும் மன்னரால் திறமையான ஆட்சியை வழங்க முடியும். மன்னருடைய ஆட்சியில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக அதனைச் சுட்டிக்காட்டி திருத்துவது வழக்கம். ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

மக்களாட்சியின் பிரச்சனைகள் இல்லா மன்னராட்சி

மக்களாட்சியில் காணும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மன்னராட்சியில் இடமில்லை என்பதை யாம் மேற்கூறிய பிரச்சனைகளை யோசித்துப் பார்த்தால், யார் வேண்டுமானாலும் அறியலாம்.
மேலும், “ஐந்து வருடங்கள் மட்டுமே பதவி, அதற்குள் சுருட்டிக்கொள்ள வேண்டும்” என்ற எண்ணம் மன்னர்களிடையே எழுவதற்கு வாய்ப்பே இல்லை. அனைத்தும் மன்னருடைய சொத்து என்னும்பட்சத்தில், அவர் எதைச் சுருட்டப் போகிறார்? சில நேரங்களில் மன்னர்கள் மிகவும் சொகுசாக வாழ்ந்தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் சில உண்மைகள் உண்டு என்றபோதிலும், அவர்கள் மாபெரும் பொறுப்புகளுடன் வாழ்ந்தனர் என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்களுடைய மேற்கொண்ட பொறுப்புகளுக்கு அந்த சொகுசு ஒரு குறையில்லை. நவீன கால ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி சுருட்டுகின்றனரே.

முறையான சட்டம் ஒழுங்கு

இந்திய நீதிபதிகளின் வேலைப்பளு மிக அதிகமாக உள்ளது என்றும், நீதிபதிகள் போதவில்லை என்றும் சமீபத்தில் இந்திய தலைமை நீதிபதி கண்ணீர் மல்க எடுத்துரைத்தது நினைவிலிருக்கலாம். அதாவது, எண்ணற்ற வழக்குகள் தினம்தினம் தொடுக்கப்படுகின்றன; அந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது–இதுதான் மக்களாட்சியின் நிலை.
ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்: “மக்களாட்சியைக் காட்டிலும் மன்னராட்சி சிறந்ததாகும்; ஏனெனில், மன்னர் வலுவானவராக இருந்தால், நாட்டின் சட்டதிட்டங்கள் அனைத்தும் நன்றாக தக்கவைக்கப்படும். நூறு வருடத்திற்கு முன்பாகக்கூட, காஷ்மீரில் வலுவான மன்னர் இருந்த காரணத்தினால், அவரது ராஜ்ஜியத்தில் யாரேனும் ஒரு திருடன் கைது செய்யப்பட்டால், மன்னர் உடனடியாக அந்த திருடனின் கைகளை வெட்டிவிடுவார். அந்த கடும் தண்டனையின் காரணத்தினால், அவரது ஆட்சியில் திருட்டு என்பதற்கு வழியே இல்லாமல் இருந்தது.” (ஸ்ரீமத் பாகவத பொருளுரை 4.13.19-20)

இந்திய நீதிபதிகளின் வேலைப்பளு மிக அதிகமாக உள்ளது என்றும், நீதிபதிகள் போதவில்லை என்றும் சமீபத்தில் இந்திய தலைமை நீதிபதி கண்ணீர் மல்க எடுத்துரைத்தது நினைவிலிருக்கலாம். அதாவது, எண்ணற்ற வழக்குகள் தினம்தினம் தொடுக்கப்படுகின்றன; அந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதுஶீஇதுதான் மக்களாட்சியின் நிலை.
ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்: மக்களாட்சியைக் காட்டிலும் மன்னராட்சி சிறந்ததாகும்; ஏனெனில், மன்னர் வலுவானவராக இருந்தால், நாட்டின் சட்டதிட்டங்கள் அனைத்தும் நன்றாக தக்கவைக்கப்படும். நூறு வருடத்திற்கு முன்பாகக்கூட, காஷ்மீரில் வலுவான மன்னர் இருந்த காரணத்தினால், அவரது ராஜ்ஜியத்தில் யாரேனும் ஒரு திருடன் கைது செய்யப்பட்டால், மன்னர் உடனடியாக அந்த திருடனின் கைகளை வெட்டிவிடுவார். அந்த கடும் தண்டனையின் காரணத்தினால், அவரது ஆட்சியில் திருட்டு என்பதற்கு வழியே இல்லாமல் இருந்தது.” (ஸ்ரீமத் பாகவத பொருளுரை 4.13.19-20)

மக்களின் நலன்விரும்பி

ஆட்சியாளர் என்பவர் உயர்ந்தோரின் ஆலோசனையின் கீழ் பூரண சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்; அதே நேரத்தில் தான் விரும்பியதைச் செய்யும் சர்வாதிகாரியாக இருக்கக் கூடாது. பாரதப் பண்பாட்டின் மன்னர்கள் யாரும் சர்வாதிகாரியாகச் செயல்படவில்லை. அவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த சாதுக்களால் வழிநடத்தப்பட்டு வந்ததால், அவர்களும் ராஜரிஷிகள் என்று அழைக்கப்பட்டு வந்தனர் (பார்க்க, பகவத் கீதை 4.2).

மன்னர் என்பவர் கடவுளின் பிரதிநிதியாக இருந்த காரணத்தினால், அவர் நர-தேவர் (மனிதரில் காணப்படும் கடவுள்) என்று அழைக்கப்பட்டார். கடவுளின் பிரதிநிதி என்ற முறையில், அவர் நாட்டு மக்களின் அன்றாட தேவைகளைப் பார்த்துக் கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியுடன் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதற்கு வழி செய்ய வேண்டும். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தனக்கு வரி வந்தால் போதும் என்னும் மனப்பான்மை இருக்கக் கூடாது.

ஆன்மீகப் பயிற்சி பெற்ற மன்னர்கள்

ஒரு ராஜரிஷி மன்னருக்குப் பதிலாக, இன்று பல்லாயிரக்கணக்கான பெயரளவு ஆட்சியாளர்கள் மக்களுடைய கடின உழைப்பின் பணத்தினை கொள்ளையடித்து வருகின்றனர். மஹாராஜா யுதிஷ்டிரர், பகவான் இராமசந்திரர் ஆகியோரும்கூட கற்றறிந்த பிராமணர்களால் வழிநடத்தப்பட்டனர்.
மன்னர்கள் அனைவரும் கடவுள் அமைத்த சட்டத்திற்கு (அறநெறிகளுக்கு) ஏற்ப ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்கள் நாட்டின் சட்டங்களை “நேற்று ஒன்று, இன்று வேறு, நாளை மற்றொன்று,” என்று மாற்றிக் கொண்டிருக்கவில்லை. மஹாராஜா யுதிஷ்டிரர் நவீன கால மக்களாட்சித் தலைவர்களைப் போன்று அறிவற்றவராக இருக்கவில்லை. அவர் நீதிக் கருத்துகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்; மேலும், மகாஜனரான பீஷ்மராலும் சாக்ஷாத் பகவான் கிருஷ்ணராலும் அறிவுறுத்தப்பட்டவர். ஒவ்வொரு மன்னரும் யுதிஷ்டிரரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ வேண்டும்.

ஆட்சியாளர்களின் ஆதரவு இல்லாவிட்டாலும், எந்தச் செலவுமின்றி எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஸங்கீர்த்தன யாகத்தைச் செய்ய முடியும்.

நடைமுறைப்படுத்துவது எங்ஙனம்

மக்களாட்சியைக் காட்டிலும் மன்னராட்சியே சிறந்தது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போதைய தருணத்தில், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் ஏறக்குறைய சாத்தியமற்ற செயல். நவீன காலத்தின் மாபெரும் ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் மன்னராட்சியை ஆமோதித்தார், அதே சமயத்தில் அவர் அதனை தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். அதிலிருந்து சில மேற்கோள்கள்:

“மக்களாட்சி அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தங்களது பதவியைத் தக்கவைப்பதற்கு மும்முரமாக முயற்சி செய்கின்றனர். குடிமக்களின் நன்மையைப் பற்றி யோசிப்பதற்கு அவர்களுக்கு மிகக்குறைந்த நேரமே உள்ளது… மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் அலுவலர்களாலும் ஆட்சியாளர்களாலும் தாராளமாக செலவிடப்படுகிறது. முந்தைய காலக்கட்டத்தில் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தைக் கொண்டு வேத சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருந்த மாபெரும் யாகங்கள் நடத்தப்பட்டன. ஆயினும், தற்போதைய தருணத்தில் அத்தகு யாகங்கள் முற்றிலும் அசாத்தியமானவை; எனவே, ஸங்கீர்த்தன யாகத்தை நிகழ்ந்த வேண்டும் என்று சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. எல்லா குடும்பத்தினராலும்–தமது நிலை என்னவாக இருந்தாலும்–எந்தச் செலவுமின்றி ஸங்கீர்த்தன யாகத்தை நிறைவேற்ற முடியும். எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து தங்களுடைய கைகளைத் தட்டி ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைப் பாடினால் போதும்… பிரசாதத்தையும் ஸங்கீர்த்தனத்தையும் பரவலாக விநியோகிப்பதால், அமைதியும் வளமும் உலகம் முழுவதும் ஏற்படும்.” (ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவத பொருளுரை, 4.12.10)
“இவ்வெல்லா அரசியல்வாதிகளும் அயோக்கியர் களே. ஆம், இது கலி யுகம். மஹாராஜா பரீக்ஷித் போன்ற மன்னர் எங்கே? நீங்கள் மக்களை கிருஷ்ண உணர்விற்கு மாற்றினால், அதன் பின்னர் தானாக அனைத்தும் சரியாகும். தற்போது மக்களாட்சி நிலவுகிறது. எனவே, நீங்கள் ஒரு கிருஷ்ண பக்தனுக்கு ஓட்டளித்து ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆக்கினால், அப்போது அனைத்தும் காப்பாற்றப்படும். எனவே, நீங்கள் அதற்குத் தேவையான கிருஷ்ண பக்த வாக்காளர்களை உருவாக்க வேண்டும்… மக்கள் கிருஷ்ண உணர்வைப் பெற்றால், இயற்கையாகவே அரசாங்கமும் கிருஷ்ண உணர்வுடன் திகழும்.” (ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவத உரை, நவம்பர் 6, 1970, பம்பாய்)

விருந்தினர்: மன்னராட்சியை தற்போது நடைமுறைப் படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பிரபுபாதர்: இல்லை, அது சாத்தியமல்ல. அதனால்தான் நாங்கள் மக்களுக்கு கிருஷ்ண உணர்வின் பயிற்சியினை வழங்குகிறோம். கிருஷ்ண உணர்வு மக்கள் கிருஷ்ண உணர்வு கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, சமுதாயத்தில் அமைதியும் வளமும் ஏற்படும். தற்போது, கிருஷ்ண உணர்வினர் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களால் கிருஷ்ண உணர்வு கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இயலாது. இதனால் கொடிய விளைவுகள் நிகழ்ந்து வருகின்றன.” (உரையாடல், டிசம்பர் 12, 1970, இந்தோர்) எனவே, கிருஷ்ண உணர்வு மிக்க மக்களை உருவாக்குவது மட்டுமே இன்றைய மக்களாட்சியின் தீய விளைவுகளுக்கான ஒரே தீர்வு. நாமும் கிருஷ்ண உணர்வில் வளர்ச்சி பெற்று, மற்றவர்களையும் கிருஷ்ண உணர்விற்கு அழைத்து வருவோமாக.
குறிப்புகள்: (1) ஆட்சி முறை குறித்து ஸ்ரீல பிரபுபாதரின் விரிவான ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டத்தினைப் படிக்கவும்.

(2) இங்குள்ள தகவல்கள் தமிழகத்தின் பொதுவான நிலைக்குப் பொருந்தக்கூடிய கூற்றுகள். இக்கட்டுரையின் எதிர்ப்புக் குரலுக்கு உட்படாத அரசியல்வாதிகளும் சிலர் இருக்கலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives