மஹாராஷ்டிரா வறட்சிக்கும் சனி தேவருக்கும் தொடர்பு உண்டா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சனி தேவரின் கோயிலில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தின்படி, பெண்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அதற்கான அனுமதி வேண்டும் என்ற “உரிமைப் போராட்டம் சமீப காலத்தில் வலுவாக தோன்றியது. இது குறித்து பகவத் தரிசனத்தின் பிப்ரவரி இதழில் “உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம்” என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது. ஆயினும், மார்ச் மாதம் நீதிமன்ற தீர்ப்பின்படி, பெண்கள் சனி தேவரின் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் வரலாறு காணாத வறட்சியினை சந்தித்து வருகிறது. இந்த வறட்சிக்கும் சனி தேவருடைய கோயிலில் பெண்கள் நுழைந்ததற்கும் தொடர்பு உண்டா? அல்லது அவை சம்பந்தமற்ற நிகழ்வுகளா? பொதுவாக, அனைத்து செயல்களும் ஏதேனும் கர்ம தொடர்பு உண்டு என்பதை நாம் சாஸ்திரங்களிலிருந்து அறிகிறோம். எனவே, இது குறித்து ஸ்ரீல பிரபுபாதரின் சீடரும் பிரபல ஜோதிடருமான திரு சியாமசுந்தர பிரபு வழங்கிய பதில் மிகவும் பொறுத்தமானதாக அமைந்தது.

அவரளித்த பதிலின் சுருக்கம்: “ஜோதிடத்தின்படி, சனி தேவர் ’வாத’ தன்மையை வெளிப்படுத்துகிறார், வாத என்பது உலர்த்தும் தன்மையைக் கொண்டதாகும். நமது ஈரத்துணிகள் காற்றினால் உலர்த்தப்படுவதை நாம் அறிவோம். எனவே, சனி தேவர் கோபமடையும்போது, அவர் தனது உலர்த்தும் தன்மையினை வெளிப்படுத்தி, (துணியிலிருந்து ஈரம் அகல்வதுபோல) பூமியிலிருந்து நீரை அகலச் செய்கிறார். மேலும், சனி என்றால் ’மெதுவாக செயல்படக்கூடியது’ என்று பொருள். எனவே, சனி தேவருடைய விளைவுகள் (உடனடியாக வரும் மழை, வெள்ளம் போன்று அல்லாமல்) மெதுவாக செயல்படுவதாகும்.”

சனி தேவரின் கோயில் உள்ள அகமதுநகர் பகுதியே வறட்சிக்கு மையமாக உள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, பெண் உரிமை என்று போராடியவர்களே இந்த வறட்சிக்கு பொறுப்பாளிகள் எனத் தெரிகிறது.

மக்கள் சமஉரிமை என்ற பெயரில், கர்ம வினைகளைப் பற்றியும் தத்தமது கடமைகளைப் பற்றியும் சற்றும் அறிவின்றி செயல்படுவது வருத்தமாக உள்ளது. சிலருடைய தவறான வழிகாட்டலினால் ஒட்டுமொத்த சமுதாயமும் துன்பப்படுகிறது. மக்கள் தமக்குத் தாமே துன்பத்தை வரவழைக்கின்றனர். மக்களும் கர்ம வினைகளில் மூடர்களாக உள்ளனர், நீதிமன்றமும் அவ்வாறே உள்ளது. விளைவு: பேரிடர்.

இந்திரனால் ஏற்பட்ட மழை வெள்ளம் என்ற பேரிடரின்போது விருந்தாவன வாசிகள் கிருஷ்ணரிடம் சரணடைந்தனர், கிருஷ்ணரும் கோவர்தன மலையை உயர்த்தி அவர்களைக் காத்தார். அந்த விரஜவாசிகளை மஹாராட்டிர மக்கள் பின்பற்றுவார்களா?

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives