வேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்

Must read

இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்தார். அங்கே ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின் படி, வேத கோளரங்கத்தினை விளக்கக்கூடிய திருக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் திருப்பணிகள் முடிந்த பின்னர், இதுவே உலகின் மாபெரும் கோயிலாக அமையும்.

உலக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கோயிலின் உள்வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் 10,000 பேர் தரிசிக்கக்கூடிய அளவிற்கு கோயிலின் மையப்பகுதி இருக்கும். இத்திட்டப்பணியின் குழுவிற்கு ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் நிறுவனரான ஹென்றி ஃபோர்டு அவர்களின் கொள்ளு பேரனும் ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடருமான அம்பரீஷ தாஸ் (ஆல்ஃரெட் போர்டு) அவர்கள் தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022இல் திறக்கப்பட உள்ள இத்திருக்கோயிலின் திருப்பணிகள் 2009இல் ஆரம்பமாகியது.
சைதன்ய மஹாபிரபுவின் புகழை உலகம் முழுவதும் பறைசாற்றும் வகையில் இக்கோயில் அமையப்பெற வேண்டும் என விரும்பிய ஸ்ரீல பிரபுபாதர், அதற்கான பல்வேறு நுணுக்கமான விஷயங்களையும் தன் சீடர்களுக்கு 1976இல் மிகவும் விரிவான முறையில் உபதேசித்திருந்தார்.

கோயிலைப் பற்றிய கணிப்பு

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஜீவ கோஸ்வாமியை நவத்வீப மண்டல பரிக்ரமாவிற்கு அழைத்துச் சென்ற நித்யானந்த பிரபு, கங்கைக் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக நகரான மாயாபுரில் அதிசய கோயில் உருவாகும் என்று அப்போதே எடுத்துரைத்தார். இச்சம்பவத்தினை ஸ்ரீல பக்திவினோத தாகூர் தனது நவத்வீப தாம மஹாத்மியம் என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

வேத கோளரங்கத்தின் தனிச்சிறப்பு

இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவெனில், கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் நகரும் படிக்கட்டுகளைக் கொண்டு, இப்பிரபஞ்சத்திலுள்ள 14 லோகங்களின் மாதிரிகளைக் காணலாம். ஆராய்ச்சி வல்லுனர்கள் மற்றும் அறிஞர்களுக்கு மத்தியிலும் இக்கோயில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். இக்கோயிலில் காணப்படும் விக்ரஹங்கள்–எட்டு கோபியர்களுடன் கூடிய ராதா மாதவர், பஞ்ச-தத்துவ விக்ரஹங்கள், பிரகலாதருடன் கூடிய உக்கிர நரசிம்மர், மற்றும் பூர்விக ஆச்சாரியர்கள்.

ஸ்ரீல பிரபுபாதரின் கனவு

தன்னிகரற்ற முறையில் கட்டப்படும் இக்கோயில் ஸ்ரீல பிரபுபாதரின் முக்கியமான கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். சைதன்ய மஹாபிரபுவின் கருணையினால் இத்திட்டம் மிக விரைவில் நினைவாக உள்ளது. வேத பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை இக்கோயில் மீண்டும் தலைதூக்கி நிறுத்தும் என்றும், இத்திட்டம் மக்களின் மத்தியில் பெரும் விழிப்புணர்வையும் புரட்சியையும் ஏற்படுத்தும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோயில் என எதிர்காலத்தில் அழைக்கப்படவுள்ள வேத கோளரங்க கோயில் ஏற்கனவே எழுப்பப்பட்டு உள்ளது, காலம்தான் நம்மை இன்னும் ஆறு வருடங்களுக்கு பிரித்து வைத்துள்ளது.
இணைய தளம்: www.tovp.org

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives