ஹிரண்யாக்ஷனை பகவான் வராஹர் வதம் செய்தல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பத்தொன்பதாம் அத்தியாயம்

சென்ற இதழில் பகவானிடம் பிரம்மதேவர் ஹிரண்யாக்ஷனை வதம் செய்யுமாறு பிரார்த்தித்ததைப் பார்த்தோம். அதன் பின்னரான லீலைகளை இவ்விதழில் காணலாம்.

சுதர்சன சக்கரத்தை அழைத்தல்

பிரம்மதேவரின் பாவ எண்ணமற்ற பிரார்த்தனைக்கு பதிலளிக்கும்போது பகவான் மனமாற சிரித்து அன்பு நிறைந்த பார்வையுடன் அவரது வேண்டுகோளையும் ஏற்றார். பின், பயமின்றி தம்முன் நின்றிருந்த ஹிரண்யாக்ஷனின் தாடையைக் குறிவைத்து தம் கதையால் தடுத்தபோது, பகவானின் கதை அவரது திருக்கரத்திலிருந்து நழுவியது. அது சுழன்று சுழன்று கீழே விழுந்தபோது ஒளிவிட்டு பிரகாசித்து அற்புதமாகக் காட்சியளித்தது. உடனே தேவர்களும் முனிவர்களும் அபயக்குரல் எழுப்பினர். ஆயுதமின்றி நின்ற பகவானை தாக்க வாய்ப்பு கிடைத்தும் அசுரன் போர்விதியை மதித்து தாக்காமல் இருந்தான். அதன்மூலம் பகவானின் கோபத்தைக் கிளறினான். ஆனால் அசுரனின் நேர்மையை பகவான் பாராட்டினார். உடனே தம் ஆயுதமான சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அச்சக்கரம் அவரது தாமரைக் கரங்களில் சுழல ஆரம்பித்தபோது எல்லா திசைகளிலிருந்தும் அந்த அற்புத காட்சியைக் கண்ட தேவர்கள், “தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். அவனை விரைவாக அழித்துவிடுங்கள். மேலும் அவனுடன் விளையாட வேண்டாம்” என வேண்டிக் கொண்டனர். ஆனால் அதே காட்சியைக் கண்டபோது, அசுரன் கடுஞ் சினத்தால் உதட்டை கடித்துக் கொண்டு பாம்பைப் போல சீறத் துவங்கினான். உடனடியாக தன் கதையை பகவான்மீது குறி வைத்து எறியும்போதே “நீ அழிந்தாய்” என கூக்குரலிட்டான். பகவானோ, தம் இடது திருவடியால் விளையாட்டாக அந்த கதாயுதத்தை கீழே தள்ள அது சூறாவளியின் வேகத்துடன் அசுரனை நோக்கிச் சென்றது.

ஏமாற்றமடைந்த ஹிரண்யாக்ஷனிடம், “என்னை வெற்றிகொள்ள நீ மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால், உன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சி செய்,” என்று பகவான் கூறினார். மீண்டும் தன் கதையை பகவானை நோக்கி கர்ஜித்தவாறு அசுரன் வீசினான். அதை பகவான் மிக லாவகமாக, கருடன் பாம்பைப் பிடிப்பதுபோல, எளிதாகப் பிடித்தார்.

இவ்வாறு அசுரனின் வீரம் அழிந்தது, செருக்கு குலைந்தது, முகம் வெளிறியது. பரம புருஷ பகவான் கதையைக் கொடுத்தபோது அவன் அதனை திரும்பப் பெற விரும்பவில்லை; எனினும், நெருப்பைப் போல ஒளிவிட்டுத் திகழும் ஒரு சூலாயுதத்தை எடுத்து எல்லா யாகங்களையும் அனுபவிப்பவரான பகவானுக்கு எதிராக சுழற்றி எறிந்தான். பரந்த வானில் ஒளி வீசிப் பறந்த அச்சூலாயுதத்தை பகவான் தம் சுதர்சன சக்கரத்தால் பொடிப்பொடியாக்கினார்.

இதனால் சீற்றமடைந்த அசுரன் பகவானின் அகன்ற மார்பில் தனது கடினமான முட்டியால் தாக்கினான். அத்தாக்குதல் யானையை பூமாலையால் அடித்ததுபோலிருந்தது. இதனால் மீண்டும் ஏமாற்றத்தை உணர்ந்த அசுரன், யோகமாயையின் தலைவரான யோகேஸ்வர பகவானுக்கு எதிராக மாயவித்தை பலவற்றை ஏவினான்.

மாயவித்தை

உடனே எல்லா திசைகளிலிருந்தும் அச்சம் தரும் காற்று வீசியது. தூசியையும் ப›lயலையும் வாய்ப்பாகக் கொண்டு இருளைப் பரப்பியது, எல்லா மூலைகளிலிருந்தும் இயந்திரத் துப்பாக்கிகளால் தூக்கி எறியப்பட்டதுபோல், கற்கள் தூக்கியெறியப்பட்டன. விண்வெளியில் மேகக் கூட்டங்கள் இருளுடன் மிக அதிகமாகக் காணப்பட்டன. உடனே மின்னலும் இடியும் சேர்ந்து வந்ததால் வானிலிருந்த ஒளிப்பிழம்புகள் எல்லாம் மறைந்தன. வானத்திலிருந்து சீழ், குருதி, மலம், சிறுநீர் மற்றும் எலும்புகள் மழையாகப் பொழிந்தன.

மலைகள் பற்பல ஆயுதங்களை வெளியேற்றின, மற்றும் தலைமுடியை விரித்துத் தொங்கவிட்டபடி சூலாயுதங்களை ஏந்திய நிர்வாணப் பெண் பேய்கள் தோன்றின. கால்நடையாகவோ, குதிரைகள், யானைகள் அல்லது தேர்களின் மீதோ அணிவகுத்துச் சென்ற யக்ஷ, ராக்ஷஸக் கூட்டத்தினர் கொடிய, நாகரிகமற்ற வார்த்தைகளை கூறினர்.

இவ்வாறு அசுரனால் வெளியிடப்பட்ட மந்திர ஜாலங்களை சிதறடிக்க வல்லமை வாய்ந்த தம் அன்பிற்குரிய சுதர்சன சக்கரத்தை பகவான் ஏவினார்.

ஹிரண்யாக்ஷ வதம்

அந்த நேரத்தில் ஹிரண்யாக்ஷனின் அன்னை திதியின் இதயத்தில் திடீரென்று ஒரு நடுக்கம் பரவியது. அவள் தன் கணவர் கஷ்யபரின் சொற்களை நினைவு கூர்ந்தாள். அவள் மார்புகளிலிருந்து ரத்தம் வழிந்தது.

தனது மந்திர சக்திகள் எல்லாம் முறியடிக்கப்பட்டதை உணர்ந்த அசுரன் மிகுந்த கோபத்துடன் கேசவனாகிய பகவானைத் தன் கரங்களுக்குள் அணைத்து நெருக்கிக் கொல்ல முயற்சித்தான். ஆனால் அவன் வியக்கும் வகையில் பகவான் அவனது கரங்களின் பிடிக்கு வெளியில் நிற்பதைக் கண்டான்.

அப்போது அவன் தன் கடினமான முட்டியால் பகவானைத் தாக்க ஆரம்பித்தான். ஆனால் அதோக்ஷஜரான (ஜட உலக கணிப்புக்கு அப்பாற்பட்ட) பகவான், அசுரனது காதின் வேர்ப்பகுதியில் “பளார்” என அறைந்தார். இதனால் அசுரனின் உடல் சுழலத் துவங்கியது, விழி பிதுங்கியது, கை கால்கள் முறிந்தன, தலைமுடி சிதறியது. வேரறுந்த மரம்போல் அவன் கீழே விழுந்தான்.

பிரம்மாதி தேவர்களின் பிரார்த்தனை

பிரம்மாவும் பிற தேவர்களும் அசுரன் விழுந்துகிடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பகவானின் திருக்கரம் பட்டதால் அசுரனின் உடல் பொலிவுடன் காணப்பட்டது. இதை பிரம்மா வியந்து பாராட்டி, “ஆஹா, அருள் தன்மை பெற்ற இத்தகைய மரணத்தை யாரால் பெற முடியும்? பொய்யான ஜடவுடலிலிருந்து விடுதலை பெற விரும்பும் யோகிகளால் தியானிக்கப்படும் பகவானின் தாமரைப் பாதங்கள் பட்டதால் இந்த அசுரன் உடனடியாக பிறவிச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்றான்,” என்று கூறினார்.

பின்பு பிற தேவர்கள் பகவானைப் போற்றித் துதித்தனர்: “எங்கள் எல்லா வணக்கங்களும் தங்களுக்கே உரித்தாகுக. எல்லா யாகங்களையும் அனுபவிப்பவர் தாங்களே. இந்த உலகத்தைப் பராமரிப்பதற்காக தூய ஸத்வ நிலையில் காட்டுப் பன்றியின் வடிவில் அவதரித்துள்ளீர்கள். உலகத்திற்கு தொல்லையாக இருந்த அசுரனை நீங்கள் கொன்றது எங்கள் பேரதிர்ஷ்டம். இதனால் தங்கள் தாமரைப் பாதங்களை வழிபாடு செய்து கொண்டு நிம்மதியாக வாழ்வோம்.”

பிரம்மாதி தேவர்களின் பாராட்டுரைகளை ஏற்றுக் கொண்ட பகவான் பின்னர் தமது சொந்த இருப்பிடமான வைகுண்டத்திற்குத் திரும்பினார். அது நித்ய விழாக்கள் நடைபெறும் அற்புத உலகமாகும்.

மேற்கூறியவாறு பகவான் வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷ அசுரனைக் கொன்ற அழகிய வர்ணனையைக் கேட்பவர், சொல்பவர் அல்லது அறிந்து இன்பமடைபவர் யாராயினும், அவர் ஒரு பிராமணரைக் கொன்ற பாவம் உட்பட, எல்லா பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்தும் உடனே விடுபடுவார். மேலும், இந்த புனித கதை அதீதமான நன்மை, செல்வம், புகழ், நீண்ட ஆயுள் மற்றும் ஒருவர் விரும்பும் எல்லாப் பொருட்களையும் அள்ளித் தருகிறது. புலன்களின் பலத்தை அதிகரிக்கிறது. வாழ்வின் மரணத் தருவாயில் இருக்கும் ஒருவர் இதைக் கேட்டால், அவர் பகவானின் உயர்ந்த இருப்பிடத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives