பாத யாத்திரை

கிருஷ்ண பக்தியையும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும் உலகின் ஒவ்வொரு கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்வதற்கான அருமையான ஏற்பாடு, இஸ்கானின் அகில இந்திய பாத யாத்திரைக் குழு. அழகிய மாடுகள் பூட்டிய ரதத்தில் ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் தற்போது தமிழகத்தில் வலம் வரும் வேளையில், பகவத் தரிசனத்தின் ஆசிரியர் ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள் பாத யாத்திரைக் குழுவினரை சென்னையில் சந்தித்து மேற்கொண்ட பேட்டி.

பகவத் தரிசனம்: பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக பாத யாத்திரையினைப் பற்றி ஓர் அறிமுகம் கொடுங்களேன்.

ஆச்சாரிய தாஸ்: ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பம் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஹரியின் நாமத்தினை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே. ஸ்ரீல பிரபுபாதர் விருந்தாவனத்தில் இருந்த சமயத்தில் தவத்திரு. லோகநாத ஸ்வாமியிடம் பாத யாத்திரை நிகழ்ச்சியினைத் தொடங்குமாறு கூறினார். அப்பொழுது அவர் விருந்தாவனத்திலிருந்து அலகாபாத் வரை பாத யாத்திரையை நடத்தினார். அன்று அவர்கள் ஒரு மாட்டு வண்டியினை வாடகைக்கு எடுத்து, சுமார் பத்து அல்லது பன்னிரண்டு பக்தர்கள் இணைந்து முதல் பாத யாத்திரையை நிகழ்த்தினர். இன்று எங்களிடம் இருபத்தைந்து பக்தர்கள் இருக்கின்றனர். மேலும், எங்களிடம் ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் விக்ரஹங்கள், ஸ்ரீல பிரபுபாதரின் விக்ரஹம், மாட்டு வண்டி, டிராக்டர், டிராலி, பக்தர்கள் என அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அந்த நாளில் ஒரே ஒரு மாட்டு வண்டி மட்டுமே இருந்தது; அந்த வண்டியில் கௌர நிதாய் மற்றும் பக்தர்களின் பொருட்கள் என அனைத்தையும் வைத்தனர், அப்பொழுது கேஸ் சிலிண்டர் போன்ற எந்தவொரு வசதியும் கிடையாது. வழியில் செல்லக்கூடிய இடத்தில் கிடைக்கும் விறகுகளை எடுத்து வண்டியில் போட்டுக்கொள்வார்கள்.
அச்சமயத்தில் வெளிநாட்டு பக்தர்கள் காவியுடை அணிந்து தலையினை மழித்து கழுத்தில் துளசி மாலை அணிந்திருப்பதை விசித்திரமாக பார்த்து மக்கள் ஆனந்தமடைந்தனர். கிராமத்தில் இருந்த நபர்களிடம் பணம் அவ்வளவாக இருப்பதில்லை. ஆயினும், மக்கள் தங்களிடம் இருந்த அரிசி, கோதுமை மற்றும் தானியங்களை பாத யாத்திரைக் குழுவினருக்கு கொடுத்தனர். அலகாபாத் கும்பமேளாவில் ஸ்ரீல பிரபுபாதருடன் பாத யாத்திரை குழுவினரின் சந்திப்பு நடந்தது, பாத யாத்திரையின் அறிக்கையினைக் கேட்டு ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் உற்சாகமடைந்தார். பாத யாத்திரையை நிறுத்த வேண்டாம் என்றும் அங்கிருந்து மாயாபுருக்கு கௌர பூர்ணிமாவிற்கு வர வேண்டும் என்றும் கட்டளையிட்டார். பாத யாத்திரை பக்தர்களை மாயாபுரில் சந்தித்த பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பாத யாத்திரை மேலும் பெரிய அளவில் விரிவடைய வேண்டும் என்று பிரபுபாதர் விரும்பினார்.

பகவத் தரிசனம்: பாத யாத்திரையின் நோக்கம் என்ன?

ஆச்சாரிய தாஸ்: சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், ப்ருதிவீதே ஆசே ஜதி நகராதி க்ராம, ஸர்வத்ர ப்ரசார ஹபே மோர நாம, “ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் சென்று என்னுடைய நாமத்தை பிரச்சாரம் செய்வாயாக.” ஆயினும், இஸ்கான் கோயில்கள் பெரும்பாலும் பெரிய நகரங்களில் அமைந்துள்ளது, கிராமங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே, பாத யாத்திரை அந்த பணியினைச் செய்கிறது, இது ஒரு நகரக்கூடிய கோயில்.
கோயில்களில்கூட சில இடங்களில் இதுபோன்று இருபத்தைந்து பக்தர்கள்கூட இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் பாத யாத்திரையின் மூலமாக ஒரு கோயிலையே ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம். மாடுகள், கௌர நிதாய், ஸ்ரீல பிரபுபாதரின் விக்ரஹங்கள் போன்றவற்றைப் பார்த்து ஊர் மக்கள் அனைவரும் அதிசயிக்கின்றனர்.ஆர்வமுள்ள மக்களை அருகிலுள்ள நாமஹட்டா, பக்தி விருக்ஷா மற்றும் கோயில்களுக்கு அறிமுகம் செய்து விடுவோம். அவர்கள் தொடர்ந்து பக்தியில் முன்னேற்றம் அடைவதற்கு இது பெரும் உதவியாக அமைகிறது. ஊர் ஊராகச் சென்று பக்தியின் விதையினை விதைத்துவிட்டுச் செல்வது எங்களின் பணி.
சில நேரங்களில் மக்கள் நேரடியாக பாத யாத்திரையிலும் இணைகின்றனர். இங்கிருக்கும் பார்த்த-ஸக தாஸ் (ஆச்சாரிய தாஸரின் இந்தி உரையினை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்) இதற்கு ஓர் உதாரணமாக இருக்கின்றார். இவர் பாத யாத்திரையினால் கவர்ச்சியடைந்து தன்னுடைய வாழ்க்கையை பாத யாத்திரைக்காகவே அர்ப்பணித்துள்ளார். எல்லாரும் பாத யாத்திரையை விரும்புகிறார்கள், பிரம்மசாரி பக்தர்களுக்கு இது ஒரு நல்ல தவமாக அமைகிறது. காலை 4:30 மணிக்கு மங்கள ஆரத்தி மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோயில்களில் எப்படியோ அப்படியே நாங்களும் பின்பற்றுகின்றோம். தினந்தோறும் மாலையில் ஹரிநாம ஸங்கீர்த்தனம் நடைபெறுகிறது, மிக அதிகமான அளவில் புத்தக விநியோகம் நடக்கின்றது.

பகவத் தரிசனம்: ஒரே இடத்தில் இருந்து கோயிலை வளர்ப்பதற்கும் இது போன்று நகர்ந்து செல்வதற்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: கோயிலில் பார்த்தீர்களானால் ஒவ்வொரு பக்தர்களுக்கும் தனித்தனி அறை, படுக்கை, பொருட்கள் என்று இருக்கும். ஆனால் பாத யாத்திரையில் என்னுடையது என்று யாருக்கும் எதுவும் கிடையாது.

பகவத் தரிசனம்: உங்களுடையது என்று ஏதுமின்றி, இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது கடினமாகத் தோன்றவில்லையா?

ஆச்சாரிய தாஸ்: இதில் எந்தவொரு கடினமும் இல்லை, மாறாக மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது. மிகவும் தவம் நிறைந்ததாக இருக்கின்றது. பாத யாத்திரை பக்தர்களுக்கு ஓரிடத்தில் இருக்க வேண்டும் என்றால், அதுவே எங்களுக்கு கடினம். ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் சென்று ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை விநியோகிப்பது, ஹரிநாம ஸங்கீர்த்தனம் செய்வது, பிரசாதம் விநியோகிப்பது என அனைத்துமே ஆனந்தத்தை அளிக்கின்றது.

பகவத் தரிசனம்: மக்களுடைய வரவேற்பு எவ்வாறு உள்ளது?

ஆச்சாரிய தாஸ்: நன்றாக உள்ளது. நானும் பார்த்த-ஸக பிரபுவும் முன்னேற்பாடுகளுக்காகச் செல்லும்போது இஸ்கான் பற்றி அறிந்த மக்களிடம் பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் இஸ்கானைப் பற்றி அறிமுகமில்லாத மக்களை அணுகும்போது, தங்குமிடத்திற்கு சில சிக்கல்கள் ஏற்படுகின்றன, முதலில் தயங்கிதயங்கி கொடுப்பார்கள். ஆனால் பிறகு கௌர நிதாய், மாடுகள், பக்தர்கள், மாலையில் கீர்த்தனம், ஆரத்தி போன்றவற்றைப் பார்த்த பின்னர்,மேலும் ஓரிரு தினங்கள் தங்களுடன் தங்குமாறு அவர்கள் கேட்கின்றனர்.

பகவத் தரிசனம்: முதலில் தயங்கினாலும் பிறகு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று சொல்கிறீர்களா?

ஆச்சாரிய தாஸ்: ஆமாம். இந்த பாத யாத்திரை துவாரகையிலிருந்து இவ்வளவு தூரம் நடந்து வருகிறார்கள் என்பதைக் கேட்டும், பக்தர்களின் நடவடிக்கைகள் மற்றும் நாம ஸங்கீர்த்தனத்தைப் பார்த்தும் மக்கள் ஆர்வம் கொள்கிறார்கள்.

பகவத் தரிசனம்: இந்த பாத யாத்திரை எப்பொழுது ஆரம்பித்தது?

ஆச்சாரிய தாஸ்: பிரபுபாதரின் காலத்தில் தொடங்கப்பட்டது. ஆயினும், 1984 முதல் 32 வருடங்களாக தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

பகவத் தரிசனம்: நீங்கள் இப்பொழுது இந்தியாவை வலம் வருவது எத்தனாவது முறை?

ஆச்சாரிய தாஸ்: ஐந்து முறை முடித்து விட்டு, 2011 ஏப்ரல் 16ஆம் தேதியில் ஆறாவது முறையாக எங்களின் பயணம் தொடங்கியிருக்கிறது.

பகவத் தரிசனம்: எப்பொழுதுமே நீங்கள் துவாரகையிலிருந்துதான் யாத்திரையை ஆரம்பிப்பீர்களா?

ஆச்சாரிய தாஸ்: ஆமாம். எங்களுடைய பாத யாத்திரை அங்குதான் முடியும், அங்கிருந்து

அப்படியே ஐந்து அல்லது பத்து நாள்களில் மீண்டும் ஆரம்பித்து விடுவோம்.

பகவத் தரிசனம்: நீங்கள் எத்தனை வருடங்களாக இந்த பாத யாத்திரையில் இருக்கிறீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: ஆறு வருடங்களாக.

பகவத் தரிசனம்: இதுவரைக்கும் எவ்வளவு தூரம் பயணம் செய்திருப்பீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: சுமார் 1,70,000 கிலோ மீட்டர்கள்.

பகவத் தரிசனம்: ஒரு முறை இந்தியாவை வலம் வரும்போது, எத்தனை கிலோ மீட்டர்கள் பயணம் செய்வீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: ஒவ்வொரு முறையும் பயணங்களும் தூரங்களும் மாறுபடும். இது ஆறாவது சுற்றுப் பயணம்.

பகவத் தரிசனம்: ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர்கள் பயணம் மேற்கொள்வீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: 10 அல்லது 15 கிலோ மீட்டர்கள். சில சமயம் எந்த ஊரும் கிடைக்கவில்லை என்றால் 18 அல்லது 20 கிலோ மீட்டர்கள் வரை செல்வோம்.

பகவத் தரிசனம்: ஒவ்வொரு முறையும் புதுப்புது நபர்களின் அறிமுகம்/அனுபவம் கிடைக்கின்றதா?

ஆச்சாரிய தாஸ்: ஆமாம். நாங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்குவோம். அப்போது அங்கிருப்பவர்கள், “எங்களுடைய உறவினர்கள் அந்த ஊரில் இருக்கின்றார்கள், நீங்கள் அங்கு செல்லலாம்” என்று கூறுவார்கள். இந்த பாத யாத்திரை என்பது மிகவும் திவ்யமான நிகழ்வு. சைதன்ய மஹாபிரபு எப்போதும் இரதத்திலேயே உள்ளார்–வெயிலானாலும் சரி, குளிரானாலும் சரி–நாங்கள் எங்கு நிறுத்துகிறோமோ அங்கு அவர் நிற்கின்றார். பல நேரங்களில் அவர் எங்களைக் காப்பாற்றியுள்ளார். ஒருமுறை ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருநாள் இரவு 15 கொள்ளையர்களிடமிருந்து மஹாபிரபு எங்களைக் காப்பாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரியபெரிய சங்கடங்கள் வரும்போதெல்லாம் கௌர நிதாய் எங்களைக் காப்பாற்றுகிறார்கள். சில நேரங்களில் நாங்கள் அறைகளில் மின்விசிறிகளுடன் உறங்குகின்றோம், ஆனால் பகவான் எப்போதும் வீதிகளிலேயே கடும் தவங்களோடு இருக்கின்றார். சாலைகளில் வாகனங்களின் சப்தங்கள் போன்றவற்றை மிகவும் கருணையோடு ஏற்றுக்கொள்கிறார். சொல்லப்போனால் எங்களைவிட பகவான் அதிகமான தவங்களை மேற்கொண்டுள்ளார்.

பகவத் தரிசனம்: உங்களுடைய அடிப்படைத் தேவைகளையெல்லாம் எவ்வாறு பார்த்துக்கொள்கிறீர்கள்? சாப்பிடுதல், தூங்குதல், உங்களுக்கான உடை, இங்கிருக்கக்கூடிய மாடுகளுக்கான தேவைகள் போன்றவற்றை எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: இது நிறைய பக்தர்கள் கேட்கும் கேள்வி. உண்மையில், நாங்கள் “போதும், போதும்,” என்று சொல்லுமளவிற்கு பகவான் எங்களுக்கு உணவளிக்கின்றார். நாங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் கட்டளைகளை அப்படியே பின்பற்றுவதால் எங்களுடைய அனைத்து தேவைகளும் மிகவும் எளிதாக பூர்த்தியாகின்றன. பகவான் எங்களுக்கு என்ன தேவையோ அவையனைத்தையும் வழங்குகிறார்.
நாங்கள் ஒருநாள்கூட பட்டினியாக இருந்தது கிடையாது, மக்களுக்கு பிரசாத விநியோகமும் செய்யாமல் இருந்ததே கிடையாது. எல்லாம் பகவானுடைய சேவையில் சிறப்பாக நடைபெறுகின்றது.

பகவத் தரிசனம்: மக்களுடைய வரவேற்பு கிராமங்களில் எவ்வாறு இருக்கின்றது? நகரங்களில் எவ்வாறு இருக்கின்றது?

ஆச்சாரிய தாஸ்: கிராமங்களில் மிகவும் அதிகமாக இருக்கின்றது. மக்கள் மிகவும் எளிமையான மனதோடு சரளமாக பழகுகிறார்கள். நாங்கள் கூறுபவற்றை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றால், அங்குள்ள அனைத்து நபர்களும் உடனே ஒன்றுகூடி விடுவார்கள். ஆனால் நகரத்திலுள்ள மக்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதேனும் கேளிக்கை இருந்தால்தான் எங்களிடம் வருவார்கள். நாங்கள் எங்களுடைய மாடுகளைப் பூட்டியவுடன், இந்த மாடுகளைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூடுகின்றனர். அதன் மூலம், ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் கௌர நிதாய் விக்ரஹங்களை அவர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த ரதத்தில் எப்பொழுதும் ஹரே கிருஷ்ண மந்திரம் பாடிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் ஹரி நாமத்தை அவர்கள் கேட்கின்றார்கள். பல இடங்களில் முஸ்லிம்களும் முன்வந்து பிரசாதம் வாங்கிச் செல்வார்கள்.

பகவத் தரிசனம்: மக்கள் மாடுகளினால் கவர்ச்சியடைவதாக கூறினீர்கள். இந்த மாடுகள் எங்கிருந்து வருகின்றன? இந்த மாடுகளைப் பற்றி சொல்லுங்கள்.

ஆச்சாரிய தாஸ்: இந்த மாடுகள் குஜராத் மாநிலத்திலுள்ள கச் புஜ் என்ற இடத்திலிருந்து வருகின்றன. அந்த வன பிரதேசத்தில் இருக்கும் சீதோஷ்ண நிலை, உணவு போன்றவை வித்தியாசமானவை. இவை மிகவும் விசேஷமான மாடுகள் என்று சொல்லலாம்.
நாங்கள் பல மாடுகளைப் பார்ப்போம். அவற்றில் எந்த ஜோடி மாடுகள் கௌர நிதாய் அவர்களின் சேவைக்கு உகந்தவை என்று பார்ப்போம். ஐந்து பேர் கொண்ட குழுவாக மாடு வாங்கச் செல்வோம். “இந்த ஜோடி மாடுகள் தான் எனக்கு சேவை செய்ய வேண்டும்,” என்று பகவான் முடிவு செய்திருப்பார். அந்த மாடுகளையே நாங்கள் தேர்ந்தெடுப்போம். எங்கள் அனைவரின் இதயத்திலும் இருக்கும் பரமாத்மா அதனை தெரியப்படுத்துவார்.

பகவத் தரிசனம்: உங்களுடைய தினசரி நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியாக இருக்குமா? அல்லது மாறுபடுமா?

ஆச்சாரிய தாஸ்: தினமும் ஒரே மாதிரியாக இருக்கும். மங்கள ஆரத்தி, கௌர ஆர்த்தி போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் இடம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம், ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம். ஆனால் நிகழ்ச்சிகள் ஒரே மாதிரிதான் இருக்கும்.

பகவத் தரிசனம்: வெளிப்புற மக்கள் நவீன நாகரிக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அதிலிருந்து ஒரு மாறுபட்ட வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்கள்? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: நவீன நாகரிக வாழ்க்கையில் இருப்பவர்கள் கபடமான மனதோடு இருக்கிறார்கள், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்கள். ஒரு சிலர் தங்களுடைய பௌதிகமான வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் எங்களிடம் தீர்வை நாடுகின்றனர். எங்களுடைய வாழ்க்கையைப் பார்த்து அவர்கள் கவர்ச்சியடைகிறார்கள். நாங்கள் அவர்களிடம் கிருஷ்ண பக்தியினைப் பிரச்சாரம் செய்கிறோம். சிலர் அதனை ஏற்று பின்பற்றுகிறார்கள். இந்த சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என அவர்கள் வினவுகின்றனர். பின்னர், சாதுக்களிடம் பேசுகிறார்கள், கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு விடையும் கிடைக்கின்றது. “ஓ, இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை இருக்கின்றதா,” என்று எண்ணி தன்னுடைய பௌதிகமான வாழ்க்கையை கைவிடுவதற்கு அவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள்.

பகவத் தரிசனம்: இப்பொழுது நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளீர்கள். இன்னும் எவ்வளவு காலம் தமிழ்நாட்டில் இருப்பீர்கள்?

ஆச்சாரிய தாஸ்: இங்கு வரும்போது ஒரு வருடத்திற்கு இருந்துவிட்டு போய்விடுவோம் என்று நினைத்தோம். இங்கு வந்தபின் இங்கு இருக்கக்கூடிய மக்களின் வரவேற்பு எங்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இதற்கு முன்பு இருந்த பாத யாத்திரைத் தலைவர்களின் ஆலோசனைகளின்படி சுமார் 15 மாதங்கள் இருப்பதற்கு முடிவு செய்திருக்கிறோம்.

பகவத் தரிசனம்: தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வீர்களா? அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் செல்வீர்களா?

ஆச்சாரிய தாஸ்: இதற்கு முன்பு இருந்தவர்கள் சில இடங்களைப் பார்க்காமல் சென்றார்கள், நாங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல முயற்சிக்கின்றோம். தமிழ்நாட்டில் அருமையான திவ்ய தேசங்களும் அழகான விக்ரஹங்களும் உள்ளன. பக்தர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். முன்பெல்லாம் அட்டவணைப் போட்டு செல்வார்கள், ஒரு குறிப்பிட்ட தேதியில் இங்கு இருக்க வேண்டும் என்று. ஆனால் நாங்கள் எந்த ஓர் அட்டவணையும் போடவில்லை. பக்தர்கள் இருக்கும் இடங்கள், மக்கள் அழைக்கும் இடங்கள், பெருமாள் கோயில்கள் இருக்கும் இடங்கள் என எல்லா இடங்களுக்கும் செல்கின்றோம். நாங்கள் பலமுறை திட்டத்தினை தயாரித்தாலும் பகவானுடைய திட்டப்படியே எங்களுடைய பாத யாத்திரையானது செல்கின்றது. அதனால் நாங்கள் எந்தத் திட்டத்தையும் தீட்டாமல் பகவானின் திட்டப்படியும் பக்தர்கள் எங்கு எங்களை அழைக்கின்றார்களோ அதன்படியும் செல்ல உள்ளோம்–அதுவே எங்களின் திட்டம்.

பகவத் தரிசனம்: பார்த்த-ஸக தாஸ் அவர்கள் பாத யாத்திரையில் நேரடியாக இணைந்ததாக கூறினீர்கள். இதுபோன்று முதல்முறையாக பாத யாத்திரையைப் பார்த்து இணைபவர்கள் உள்ளார்களா?

ஆச்சாரிய தாஸ்: ஆம். நிறைய பக்தர்கள் உருவாகியுள்ளார்கள். சிலர் எங்களுடன் இணைந்து விடுவர், சிலர் கோயில்களுடன் இணைந்துவிடுவர். உதாரணமாக, கடந்த முறை நாங்கள் ரூப கோஸ்வாமி தாஸ் அவர்களின் தலைமையில் பாத யாத்திரையாக சென்னை வந்தபோது, சவுகார்பேட்டையில் வசிக்கும் சுமித் என்ற இளைஞர் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தற்போது அவர் 16 மாலைகள் ஜபம் செய்பவராக உள்ளார்.பல்வேறு இளைஞர்களும் சராசரி மக்களும் பாத யாத்திரையினால் கிருஷ்ண பக்திப் பாதைக்கு வருகின்றனர். நாங்கள் ஒவ்வோர் ஊராக செல்லும்போது, பலரும் இதற்கு முன்பு வந்த பாத யாத்திரையை நினைவுகூர்வார்கள், “ஓ, நீங்கள் 10 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளீர்கள். இங்கு தங்கினீர்கள்,” என்று கூறுவார்கள்.
பகவத் தரிசனம்: (பார்த்த-ஸக தாஸ் அவர்களிடம்), நீங்கள் கிறிஸ்துவ மதத்தில் பிறந்து வளர்ந்தவர்,தற்போது கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்கிறீர்கள், இதனைப் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பார்த்த-ஸக தாஸ்: மக்களுக்கு இவ்விஷயம் மிகவும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், நாம் இந்த உடல் கிடையாது, ஆத்மா. ஆத்மா நித்தியமானது, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன் போன்றவை எல்லாம் உடலின் அடையாளங்கள். கிருஷ்ண உணர்வு ஆத்மார்த்தமானது. இது மதத்திற்கு அப்பாற்பட்டது. கிருஷ்ண பக்தியை எடுத்துக்கொள்வதற்கு மதம் ஒரு தடையில்லை.
பகவத் தரிசனம்: ரொம்ப சந்தோஷம். தமிழ்நாடு உங்களை நல்லபடியாக வரவேற்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஹரே கிருஷ்ண!
ஆச்சாரிய தாஸ்: ஹரே கிருஷ்ண!

பாத யாத்திரைக் குழுவினரின் நாம ஸங்கீர்த்தனம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றது.

பாத யாத்திரைக் குழுவினரின் நாம ஸங்கீர்த்தனம் அனைத்து

மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றது.

2016-10-28T00:43:02+00:00April, 2016|பொது|0 Comments

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment