மனிதன் குரங்கிலிருந்து வந்தவனா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

மனிதனிடம் இருக்கும் விசேஷ தன்மைகளில் ஒன்று, சிந்திக்கும் திறன். இரவில் நட்சத்திர கூட்டங்களைக் காணும்போதும், மலைப் பிரதேசங்களின் இயற்கை அழகை ரசிக்கும்போதும், மரங்கள், செடிகள், கொடிகள், மீன்கள், பறவைகள், விலங்குகள் என பல இனங்களைக் காணும்போதும், பல தருணங்களில், “நான் யார், எங்கிருந்து வந்தேன்?” என்ற கேள்வி மனிதர்களின் சிந்தனையில் பொதுவாக எழக்கூடிய ஒன்றுதான். இதுகுறித்து ஆழமாக சிந்தித்தவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் என பல பெயர்களில் பிரபலமடைந்தனர்.

இதனால், இயற்கையாகவே, மனித இனத்தின் ஆதிமூலம் குறித்த ஆராய்ச்சியைப் பல்வேறு விஞ்ஞானிகள் கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது கொள்கைகளில் பிரபலமாக இன்றும் அறியப்படும் டார்வினின் பரிணாமக் கொள்கை மனித சமுதாயத்தில் மாபெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. பரிணாமம் குறித்து பேசுபவர்கள் அனைவரும் பெரும்பாலும் டார்வினின் கொள்கையையே ஆதாரமாக அல்லது அடிப்படையாக வைத்துப் பேசுகின்றனர். “மனிதன் குரங்கிலிருந்து வந்தான்” என்று டார்வின் கொள்கையின் அடிப்படையில் நம்பக்கூடிய சிலரது நம்பிக்கையை இங்கே சிதைக்கப் போகிறோம்.

டார்வினின் பரிணாமக் கொள்கை

டார்வினின் பரிணாமக் கொள்கை என்றால் என்ன?

உலகின் முதல் உயிரானது உயிரற்ற ஜடப் பொருளிலிருந்து தோன்றியதாக டார்வின் கொள்கை கூறுகிறது. அந்த முதல் உயிரானது படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று நாம் உலகில் காணும் எல்லா தரப்பட்ட உயிரினங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த உயிரினங்களின் வளர்ச்சியானது இயற்கையினால் தானாக நிகழ்ந்தது என்றும், தகுதியுடைய உயிரினங்கள் நீடித்து வாழ்கின்றன என்றும், சில உயிரினங்கள் அழிந்துவிட்டன என்றும் டார்வின் கொள்கை கூறுகிறது.

டார்வினுடைய அபிப்பிராயத்தின்படி, உயிரினங் களின் உடல்கள் பின்வருமாறு தோன்றின: முதன்முதலில் ஒரு சூடான குளத்தில் சில இரசாயனங்கள் ஒன்று சேர்ந்து, ஒரு செல் உயிரினை உருவாக்கியது. அதன் பின்னர் படிப்படியாக நீரிலேயே பல செல் உயிரிகள் வளர்ந்தன, அவை நீர்வாழ் தாவரங்கள், நீர்வாழ் பிராணிகளாக வளர்ந்தன. காலப்போக்கில் அந்த நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் சில நிலத்திற்கு இடம்பெயர்ந்தன. முதலில் அவை நிலத்திலும் நீரிலும் வாழும் உயிர்களாக இருந்தன, ஊர்வனவும் இதில் அடக்கம். காலப்போக்கில் பாலூட்டிகள் வளர்ச்சி பெற்றன, அவை படிப்படியாக மாற்றம் பெற்று, இறுதியில் குரங்கின் மூலமாக கற்கால மனிதன் தோன்றினான். அவன் படிப்படியாக நாகரிக வளர்ச்சியைப் பெற்று வருகிறான். இதுவே டார்வினின் பரிணாமக் கொள்கை.

டார்வின் கொள்கையினால் வரும் பிரச்சனைகள்

டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் வாழ்விற்கு இயற்கையை மட்டும் காரணமாகக் காட்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்துபவர் யாருமில்லை என்றும், உயிர்களின் பரிணாமம் தானாக நிகழ்ந்தது என்றும் கூறியதன் மூலமாக, டார்வின் கொள்கை உலக அளவில் நாத்திகம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. மேலும், மக்களிடையே படிப்படியாக நற்பண்புகள் குறைந்து, புலனின்ப வேட்கையும் லௌகீகவாதமும் அதிகரிப்பதற்கு டார்வின் கொள்கை அடிப்படையாக உள்ளது.

டார்வினுடைய கொள்கையின்படி, கறுப்பர்கள் பரிணாமத்தின் ஆரம்ப நிலையைச் சார்ந்தவர்களாவர், வெள்ளையர்கள் பரிணாமத்தில் உயரியவர்கள். இந்தக் கருத்தானது உலகளவில் நிறம் மற்றும் இனவெறியினை ஆதரித்து வளர்த்து வருகிறது. டார்வினுடைய கொள்கையை உண்மையென ஏற்ற ஜெர்மனியின் ஹிட்லர் ஜெர்மானியர்களைப் பரிணாம வளர்ச்சியில் உயர்ந்தவர்களாக எண்ணினான். இதன் காரணமாக ஹிட்லர் இனவெறி பிடித்து இலட்சக்கணக்கான இதர மக்களைக் கொன்று குவித்தான், இரண்டாம் உலகப் போர் மூண்டு மேலும் இலட்சக்கணக்கான மக்கள் மடிவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.

டார்வினின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் இனவெறியைத் தூண்ட முயற்சி செய்த ஐரோப்பியர்கள் திராவிட ஆரிய மாயையைக் கொண்டு வந்தனர். பரிணாம வளர்ச்சியின் முந்தைய நிலையைச் சார்ந்தவர்களே திராவிடர்கள் என்றும், அவர்கள் பரிணாம வளர்ச்சியின் உயர்நிலையைச் சார்ந்த ஆரியர்களால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கற்பனை செய்யப்பட்டது. இந்தக் கற்பனையின் விளைவாக இனவெறியும் நாத்திகமும் இன்றும்கூட தமிழகத்தில் உலவி வருகிறது. தகுதியுடைய இனங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இனங்கள் அழிய வேண்டும் என்ற டார்வினின் கொள்கையே பல்வேறு இடங்களில் இனக் கலவரங்களுக்கும் இனப் போர்களுக்கும் காரணமாக அமைகின்றன.

பலம் பெற்றவன் தொடர்ந்து வாழ்வான், பலமற்றவன் மடிந்து போவான் என்ற டார்வினின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள நபர்கள், தங்களை மேன்மேலும் பலமுள்ளவனாக மாற்றிக்கொள்ள முயல்கின்றனர். இதனால் முதலாளித்துவம் வளர்ச்சி பெறுகிறது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறிக் கொண்டுள்ளனர், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறிக் கொண்டுள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த பூமியில், வாழ்க்கைப் போராட்டம் என்னும் மிகப்பெரிய சிரமத்தை மக்களிடையே ஏற்படுத்தியதற்கு டார்வினின் கொள்கையே அடிப்படை என்றால் அது மிகையாகாது.

டார்வின் கொள்கை, டார்வின் விதி அல்ல

இத்தனைப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாகத் திகழும் டார்வினின் பரிணாமக் கொள்கை இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று என்பது மக்கள் அறியாத ஓர் உண்மையாகும். எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சியாக இருந்தாலும், அது முதலில் கொள்கை வடிவில் உருவாக்கப்பட்டு, அதன் பின்னர் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே அந்த விஞ்ஞானம் விஞ்ஞானமாக ஏற்கப்படும். இல்லாவிடில், அது வெறும் கற்பனையாகவே தொடர்ந்து இருக்கும். உதாரணமாக, நியூட்டனின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் முதலில் கொள்கைகளாக வடிக்கப்பட்டு, பின்பு ஆராய்ச்சிகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு, விதிகளாக மாற்றம் பெற்றன. கொள்கைகள் விதிகளாக மாறிய பின்னரே (அதாவது நிரூபிக்கப்பட்ட பின்னரே) அவை அறிவியலாக ஏற்கப்படுகின்றன. நிரூபிக்கப்படாவிடில் அவை வெறும் கொள்கைகளாகவே இருக்கின்றன.

ஒருவர் ஒரு கொள்கையைக் கூறலாம், மற்றவர் மற்றொரு கொள்கையைக் கூறலாம், கொள்கை என்பது ஓர் அபிப்பிராயமே தவிர நிதர்சனமான உண்மையல்ல. டார்வினுடைய பரிணாமக் கருத்துகளும் அதுபோன்ற ஒரு கொள்கையே. இதுவரை எல்லா இடங்களிலும் டார்வினின் பரிணாமக் “கொள்கை” என்றுதான் நாம் கேள்விப்படுகிறோம், இதுவரை எங்கும் யாரும் இதனை டார்வினின் பரிணாம “விதி” என்று கூறவில்லை. வேறுவிதமாகக் கூறினால், டார்வினின் பரிணாமக் கொள்கை இதுவரை நிரூபணமாகாத ஒன்று என்பது அனைத்து விஞ்ஞானிகளும் அறிந்த அப்பட்டமான உண்மை; மேலும், இதனை எக்காலத்திலும் நிரூபிக்க முடியாது என்பதையும் அனைவரும் அறிவர். இருப்பினும், தங்களுடைய நாத்திகக் கருத்துகளை தக்க வைக்க உதவுவதால் டார்வினின் பரிணாமக் கொள்கையை விஞ்ஞானிகள் இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

தன்னுடைய கொள்கைகள் கற்பனையால் புனையப்பட்டவை என்பதை டார்வினே தன்னுடைய நூலில் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நிரூபிக்கப்படாத டார்வினின் பரிணாமக் கொள்கையை சாதாரண யதார்த்தத்தின் அடிப்படையில் யோசித்துப் பார்த்தால் போதும், அது முற்றிலும் பொய்யானது, போலியானது, ஏமாற்றுத்தனமானது, முட்டாள்தனமானது, அயோக்கியத்தனமானது என்பதை எந்தவொரு புத்திசாலியாலும் புரிந்துகொள்ள முடியும்.

 

குரங்கு ஏன் இன்றும் உள்ளது?

டார்வினின் பரிணாமக் கொள்கை எனக்கு ஒன்பதாம் வகுப்பில் கற்றுத் தரப்பட்டது. அச்சமயத்தில், இயற்கையாகவே நானும் எனது நண்பர்கள் சிலரும் எங்களது அறிவியல் ஆசிரியரிடம், “மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால், குரங்கு ஏன் இன்னும் வாழ்கிறது?” என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளிக்க இயலாத ஆசிரியர், “அஃது அப்படித்தான். காலப்போக்கில் தெரிந்துகொள்வீர்கள்,” என்று கூறி எங்களது வாய்களை அடைத்துவிட்டார். ஆம், காலப் போக்கில் தெரிந்துக் கொண்டோம், டார்வினின் பரிணாமக் கொள்கை முற்றிலும் அபத்தமானது என்பதை. இன்றும் இப்போதும் எண்ணற்ற பள்ளி மாணவர்களிடையே, “குரங்குகள் ஏன் இன்றும் வாழ்கின்றன?” என்னும் கேள்வி இயற்கையாகவே எழுகின்றது. ஆனால் அவர்கள் யாவரும் பொதுவாகத் தங்களது பாடத்தைப் படித்து மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணத்தில் அதிகம் யோசிப்பதில்லை, கேள்வி கேட்பதில்லை, வாதம் செய்வதில்லை, முட்டாள்களாகவே இருந்து விடுகின்றனர். ஸ்ரீல பிரபுபாதரின் தெளிவான ஆணித்தரமான பதில்களைப் பெறும்வரையில், நானும் இந்த விஷயத்தில் உங்களைப் போன்றுதான் வாழ்ந்து வந்தேன்.

இஃது இயற்கையான எளிமையான கேள்வி: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால், குரங்கு ஏன் இன்னும் வாழ்கிறது? குரங்கு இனம் ஏன் இன்னும் மடியவில்லை? இந்த கேள்விகளுக்கு டார்வினோ டார்வினைப் பின் பற்றும் இதர விஞ்ஞானிகளோ இதுவரை தெளிவான பதிலை வழங்கவில்லை.

வரலாற்றில் எங்குமே குரங்கு ஒன்று மனிதக் குழந்தையைப் பெற்றெடுத்ததாக நாம் காண்பதில்லை. அத்தகு நிகழ்ச்சி பன்னெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்ந்ததாக டார்வின் கூறுகிறார். பன்னெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி இன்று ஏன் ஏற்படுவதில்லை என்பதே எமது கேள்வி. ரோஜா மலர் செடியிலிருந்து தாமரை மலர் பூக்கின்றதா? தாமரை மலரிலிருந்து பல்லி பிறக்கின்றதா? பல்லியிலிருந்து முதலை பிறக்கிறதா? முதலையிலிருந்து ஆமை பிறக்கிறதா? ஆமையிலிருந்து பன்றி பிறக்கிறதா? பன்றியிலிருந்து நாய் பிறக்கிறதா? நாயிலிருந்து குரங்கு பிறக்கிறதா? குரங்கிலிருந்து மனிதன் பிறக்கிறானா? அல்லது குறைந்தது மாமரத்திலிருந்து வாழைப்பழமாவது வளர்கிறதா? ஏதேனும் ஒன்றாவது மற்றொன்றாக மாற்றமடைந்துள்ளதா? வரலாற்றில் ஏதேனும் ஓர் உதாரணத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.

இப்போது கூறுங்கள்: டார்வினின் பரிணாமக் கொள்கை அறிவியலா, முட்டாள்தனமா?

 

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்னும் தனது கொள்கைக்கு விளக்கமளிக்க இயலாத டார்வினைக் கிண்டல் செய்யும்படியாக வரையப்பட்ட இப்படம் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரபலமானது.

நீங்கள் குரங்கு கோத்திரமா?

கொரில்லா வகைக் குரங்கிலிருந்து ஆப்பிரிக்காவிலுள்ள கருப்பர் இன மனிதர்கள் தோன்றியதாக டார்வின் கூறுகிறார். ஏதேனும் ஒரு கொரில்லா குரங்கு கறுப்பு மனிதனைப் பெற்றெடுத்துள்ளதா? வெள்ளை மனிதன் எங்கிருந்து வந்தான்? வெள்ளை நிற கொரில்லாவிலிருந்தா? டார்வினின் கொள்கை முற்றிலும் குழந்தைத் தனமான அயோக்கியத்தனம். இதனை மாபெரும் கண்டுபிடிப்பாகக் கூறிக் கொள்கின்றனர். மனிதர் களைப் பெற்றுக் கொடுக்கும் குரங்குகள் தற்போது எங்கே? அந்தக் குரங்குகள் தற்போது மலடிகளாகி விட்டனவா? மனிதர்களைப் பெற்றெடுப்பதை நிறுத்தி விட்டனவா? வெறுமனே டார்வின் சொல்கிறார் என்பதற்காக நாம் இதனை ஏற்றுவிட முடியுமா? டார்வின் சொல்வதற்கேற்ப இயற்கை செயல்பட வேண்டுமா? யாராலும் காண முடியாத யாராலும் நிரூபிக்க முடியாத எங்கும் நிகழாத ஒன்று டார்வினுக்கு மட்டும் தெரிந்துள்ளதே. இதனை நாம் நம்ப வேண்டுமா? குரங்கிலிருந்து மனிதன் ஒரே ஒருமுறை மட்டும் தோன்றினான் என்று கூறுவது என்னே அபத்தம். இந்தக் கற்பனையை நாம் நம்ப வேண்டுமா? இதில் எந்தவொரு அறிவும் இல்லை, முற்றிலும் அபத்தமே.

டார்வின் வேண்டுமானால் தன்னுடைய மூதாதையர் களை குரங்குகள் என்று கூறிக்கொள்ளட்டும். நான் ஏன் என்னுடைய தாத்தா, பாட்டனார்களைக் குரங்குகள் என்று கூற வேண்டும்? நாம் யாரிடமாவது சென்று, “உன்னுடைய அப்பா ஒரு குரங்கு, உன்னுடைய தாத்தா ஒரு குரங்கு, உன்னுடைய பாட்டனார் ஒரு குரங்கு,” என்று கூறினால், நாம் தர்மஅடி வாங்கப் போவது நிச்சயம். ஆனால் டார்வினுக்கும் டார்வினைப் பின்பற்றும் விஞ்ஞானிகளுக்கும் தர்மஅடி கொடுக்கப் போவது யார்?

நீங்கள் கோயில்களுக்குச் செல்லும் போதும் இதர சடங்குகளின்போதும், உங்களுடைய கோத்திரம் என்று கூறி ஏதேனும் ஒரு ரிஷியின் பெயரைக் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் டார்வினின் கொள்கையில் நம்பிக்கையுடையவராக இருப்பீரானால், இனிமேல் யாரேனும், “உங்களுடைய கோத்திரம் என்ன?” என்று உங்களிடம் வினவினால், அவரிடம் கபி கோத்திரம்” அதாவது குரங்கு கோத்திரம்” என்று பதில் சொல்லுங்களேன்.

அறிவு எங்கிருந்து வந்தது?

உயிரினங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தார்கள் என்றால், அவர்களுக்குரிய அறிவு எங்கிருந்து வந்தது? அறிவும் பரிணமிக்கின்றது என்று கூறுவார்களேயானால், அறிவற்ற விலங்குகள் இன்றும்கூட வாழ்கின்றனவே! உதாரணமாக, தற்போதைய தருணத்தில் அறிவுடைய மனிதனையும் அறிவற்ற கழுதையையும் நாம் ஒன்றாகக் காண்கிறோம். அந்த கழுதைகள் பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேற்றம் பெறாதது ஏன்? கழுதைகள் மறையாமல் இருப்பது ஏன்? மனிதர்களிடையே ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்று டார்வினால் கூறப்படுபவர்களுக்கு மத்தியிலும் அறிவாற்றல் வேறுபடுவது ஏன்? அறிவு எங்கிருந்து வந்தது என்பதற்கு டார்வினிடம் பதிலே இல்லை.

யதார்த்தம் அறியா விஞ்ஞானிகள்

ஆண் பெண் வேறுபாடுகள்: சில உயிரினங்களில், ஆண் பெண் என்ற வேறுபாடின்றி, பாலுறவு என்ற நிகழ்ச்சியின்றி இனப்பெருக்கம் நிகழ்கின்றது. சில உயிரினங்களில் ஆண் பெண்ணின் பாலுறவினால் இனப்பெருக்கம் நிகழ்கிறது. எப்போது எந்தச் சூழ்நிலையில் ஏன் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன? இதற்கு டார்வினிடமோ நவீன விஞ்ஞானிகளிடமோ பதில்கள் ஏதுமில்லை.

எரிக்கப்பட்ட உடல்கள்: ஆங்காங்கே கிடைக்கும் புதைப்பொருட்களையும் எலும்புகளையும் கொண்டு மனிதனின் தோற்றத்தினை யூகிப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர். ஆனால் மஹாபாரத போர் நிகழ்ந்த காலம் வரை (சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை) உலகம் முழுவதும் வேதக் கலாச்சாரமே இருந்து வந்தது என்பதை இந்த விஞ்ஞானிகள் அறியார்கள். வேத காலப் பண்பாட்டின்படி இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் முற்றிலும் எரிக்கப்பட்டு வந்தன. அத்தகைய சூழ்நிலையில் பழைய எலும்புகளைத் தேடி ஆராய்ச்சி செய்தல் என்பது நிச்சயம் பக்குவமளிக்காது.

நாகரிக வேறுபாடுகள்: இன்றைய உலகில் நன்கு முன்னேற்றம் பெற்ற மனிதர்களும் நாகரிகமடையாத காட்டுவாசிகளும் ஒருங்கே வாழ்ந்து வருகின்றனர். வருங்காலத்தில் யாரேனும் ஒருவர் காட்டுவாசிகளின் வாழ்க்கை முறை குறித்து சில புதைப்பொருட்களைப் பெற நேர்ந்தால், கி.பி. 2015ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்கள் அனைவரும் காட்டுவாசிகளே என்ற முடிவிற்கு வருவர். இதே பிரச்சனையைத் தான் தற்போதைய புதைப்பொருள் ஆராய்ச்சியிலும் நாம் காண்கிறோம். ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு தருணத்தில் மண்ணிற்குள் புதைந்த மனிதர்களின் எலும்புகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர், இத்தகு ஆராய்ச்சிகள் என்றும் பக்குவமளிக்காது.

ஒருசேர வாழ்ந்த உயிரினங்கள்: புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள்கூட ஒரே சமயத்தில் அனைத்து உயிரினங்களும் ஒருசேர வாழ்ந்தன என்பதற்கான சான்றுகளைத் தொடர்ந்து பெற்று வருகின்றனர். டார்வினின் கொள்கையை முழுமையாக நம்பக்கூடிய விஞ்ஞானிகள் இந்தச் சான்றுகளை மூடத் தனமாக நிராகரித்து வருகின்றனர், சில விஞ்ஞானிகள் குழப்பமடைகின்றனர், வேறு சில விஞ்ஞானிகளோ இந்தச் சான்றுகளை உபயோகித்து டார்வினின் கொள்கை முற்றிலும் தவறானது என்பதனை நிரூபித்து வருகின்றனர்.

சில விஞ்ஞான குளறுபடிகள்

யதார்த்தத்தின் அடிப்படையில் யோசித்துப் பார்த்தாலே டார்வினின் பரிணாமக் கொள்கை முற்றிலும் அபத்தமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். விஞ்ஞான ரீதியிலும் பல்வேறு அறிஞர்கள் இந்த பரிணாமக் கொள்கையின் அபத்தங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில:

* பூச்சிகளின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு புதைப்பொருள் ஆராய்ச்சியில் எந்தத் தகவலும் இல்லை.

* எந்தவொரு மிருகத்திற்கும் அதன் முந்தைய வாழ்விற்கும் உரிய தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. மீன் தானாகத் தோன்றியது என்பது ஏற்க முடியாத ஒன்று.

* பாலூட்டிகளுக்கும் ஊர்வனவற்றிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கண்டுபிடிக்கப்படவில்லை, விளக்கப்படவில்லை.

* மனிதக் குரங்கு எந்த உயிரினத்திலிருந்து தோன்றியது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அதற்கு புதைப்பொருள் ஆராய்ச்சியில் எந்தச் சான்றும் இல்லை.

* மனிதன் மனிதக் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு இதுவரை எந்தவொரு புதைப்பொருள் ஆராய்ச்சி சான்றும் இல்லை. பில்ட்டவுன் என்ற இடத்தில் இதுகுறித்த ஏமாற்று வேலைகளில் சில விஞ்ஞானிகள் 1912இல் ஈடுபட்டு, பின்னர் 1953இல் அவை போலி என கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* இவை எல்லாவற்றிற்கும் மேலாக, டார்வினின் கொள்கை மனிதர்களை 40,000 வருடத்தைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடுகிறது. ஆனால் புதைப்பொருள் படிமங்களையும் பாறைகளையும் வைத்து மேற்கொள்ளப் பட்டுள்ள ஆராய்ச்சிகள் மனிதர்களைப் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தையவர்களாகக் காட்டுகிறது. அவ்வப்போது எழும் சில கண்டுபிடிப்புகள், மனிதன் தோன்றிய வருடத்தினை மேன்மேலும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகின்றன.

மேலும், விடுபட்டுப்போன தொடர்புகள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அதாவது, ஓர் உயிரினத்திற்கும் அடுத்த உயிரினத்திற்கும் இடையில் தொடர்பற்ற நிலைகள் பல உள்ளன. இந்த அபத்தங்கள் எல்லாம் விஞ்ஞானம், அறிவியல் என்ற பெயரில் உலா வந்து கொண்டுள்ளன. என்னே வேடிக்கை! மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள், அவர்களும் அறிவற்றவர்களாக இருப்பதால், இதனை மாபெரும் கொள்கையாக ஏற்கின்றனர்.

பரிணாம வளர்ச்சி மனிதனுடன் நின்றுவிட்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க இயலாத விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் விதமாக, மனிதன் பன்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் என்பதை விளக்கும் இப்படம் இணைய தளங்களில் பிரபலான ஒன்றாகும்.

அஞ்ஞான விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் பல விஷயங்களை அறியாதவர்களாக உள்ளபோதிலும், எல்லாம் அறிந்தவர்களைப் போல தங்களைக் காட்டிக்கொள்வதில் வல்லவர்கள். “எல்லாம் இயற்கையின்படி நடக்கின்றன,” என்று நினைக்கும் அவர்களால், இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க இயலாது. சில இடங்களில் அதனை விளக்கினாலும், இயற்கை ஏன் இவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான காரணத்தை அவர்களால் துளிகூட கற்பனை செய்ய முடிவதில்லை. அதாவது, மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று கூறுபவர்கள், அத்தகு மாற்றம் “ஏன் நிகழ்ந்தது?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல இதுவரை முயற்சிகூட செய்யவில்லை. ஏன் என்ற கேள்வியை ஒதுக்கிவிட்ட விஞ்ஞானத்தினை விஞ்ஞானம் என்று சொல்வதா, அஞ்ஞானம் என்று சொல்வதா?

அறிவுடைய மனிதனால், இயற்கைக்குப் பின்னால் ஒரு சட்டம் உள்ளது என்பதையும், அதைக் கட்டுப் படுத்துபவர்கள் உள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இதை அறியாத வெற்று விஞ்ஞானிகள் வெறுமனே நூல்களை எழுதித் தள்ளுகின்றனர், மக்களும் அதனை ஏற்கின்றனர்.

இருப்பினும், டார்வினின் கொள்கைகளில் இருக்கும் தவறுகளை விஞ்ஞானரீதியாக சுட்டிக்காட்டிப் பல்வேறு விஞ்ஞானிகள் நூல்களை எழுதி வருகின்றனர். அவற்றை அறிய ஆர்வமுடையவர்கள் Forbidden Archeology. Human Devolution, Rethinking Darwin போன்ற நூல்களைப் படிக்கலாம்.

டார்வினின் பரிணாமக் கொள்கையில் பல்வேறு உயிரினங்களுக்கு இடையிலான இணைப்புகள் இன்றுவரை விளக்கமளிக்கப்படாமல் வெறும் கற்பனையாகவே உள்ளது.

வேதங்கள் கூறும் பரிணாமக் கொள்கை

சில மதவாதிகள் டார்வினின் பரிணாமக் கொள்கையினை ஏற்று, அதே நேரத்தில் அந்த பரிணாமத்திற்குக் கடவுளை காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் வேதங்களோ எல்லா உயிரினங்களும் ஒருசேர படைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.

ஒரு குறிப்பிட்ட உடலானது வேறோர் உடலாக மாற்றம் பெறுகிறது என்பது டார்வினின் பரிணாமக் கொள்கை. ஆனால் உடல்கள் மாற்றமடைவதில்லை என்பதும் உடலினுள் உள்ள ஆத்மா பல்வேறு உடல்களை தாண்டிச் செல்கின்றது என்பதும் வேதங்கள் கூறும் பரிணாமக் கொள்கையாகும். நாம் காணக்கூடிய உடல் ஒரு வாகனத்தைப் போன்றது என்றும், ஆத்மா அதனுள் பயணிக்கின்றது என்றும் வேதங்கள் கூறுகின்றன. மனிதன் தன்னிடம் இருக்கும் பணத்திற்கேற்ப வாகனங்களைத் தேர்ந்தெடுப்பதைப் போல, ஆத்மா தனது கர்மத்திற்கேற்ப வெவ்வேறு உடல்களைத் தேர்ந்தெடுக்கிறது.

நீரில் வாழும் உயிரினங்கள் ஒன்பது இலட்சம், தாவரங்கள் இருபது இலட்சம், பூச்சிகள் பதினோரு இலட்சம், பறவைகள் பத்து இலட்சம், விலங்குகள் முப்பது இலட்சம், மற்றும் மனிதர்கள் நான்கு இலட்சம் என மொத்தம் எண்பத்திநான்கு இலட்ச உயிரினங்கள் இருப்பதாக பத்ம புராணம் குறிப்பிடுகிறது. ஜீவன் இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் படிப்படியாகப் பரிணமித்து மனிதப் பிறவியினை அடைகிறான். அதன் பின்னர், அவன் செய்யும் செயல்களுக்கேற்ப அவனது மறுபிறவி அமைகிறது. இதுவே வேதங்கள் கூறும் பரிணாமக் கொள்கையாகும்.

எண்பத்திநான்கு இலட்ச வகையான உயிரினங்கள் என்பது ஸத்வ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களின் கலவை யினால் ஏற்படுவதாகும். விலங்கு உடலிலிருந்து மனித உடலுக்கு ஏற்றம் பெறும் ஜீவன்கள் இந்த மூன்று குணங்களை வைத்து பிரிக்கப்படுகின்றனர். ஸத்வ குணத்தில் இருப்பவர்கள் தங்களது முற்பிறவியில் பசுக்களாக இருந்தனர் என்றும், ரஜோ குணத்தில் இருப்பவர்கள் சிங்கங்களாக இருந்தனர் என்றும், தமோ குணத்தில் இருப்பவர்கள் குரங்கு களாக இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. நவீன கால மக்களில் பெரும்பாலானோர் (திரு. டார்வினைப் போன்று) தமோ குணத்தில் இருப்பதால், அவர்களுக்கும் குரங்குகளுக்கும் சில ஒற்றுமைகள் காணப்படு கின்றன. இந்த ஒற்றுமைகளை வைத்து, குரங்கு மனிதனாக மாறிவிட்டது என்று டார்வின் அபத்தமான முடிவிற்கு வருகின்றனர். சில மனிதர்கள் தங்களது முற்பிறவியில் குரங்குகளாக இருந்திருக்கலாம், குரங்கிலிருந்து மனிதனாகப் பிறவி எடுத்திருக்கலாம்; ஆனால் குரங்கு உடலே மனித உடலாக மாறிவிட்டது என்னும் டார்வினின் கொள்கை மூடத்தனமானது. வேறு விதமாகக் கூறினால், ஆத்மா வெவ்வேறு உடல்களில் பரிணமிக்கின்றது என்பது உண்மை, உடலே வெவ்வேறு உடல்களாகப் பரிணமிக்கின்றது என்பது பொய்.

இந்த பரிணாமங்கள் அனைத்தும் முழுமுதற் கடவுளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன என்று வேதங்கள் உறுதிப்படுத்துகின்றன. எல்லா உயிரினங்களும் ஒரே சமயத்தில் படைக்கப்பட்டன என்றும் அவை அனைத்திற்கும் விதையளிக்கும் தந்தை கிருஷ்ணரே என்றும் பகவத் கீதை (14.4) உறுதிப்படுத்துகிறது. மேலும், வேதப் பரிணாமத்தின்படி முதலில் படைக்கப்பட்ட உயிர்வாழி சற்றும் அறிவற்ற ஒரு செல் உயிரி அல்ல, மாறாக உலகையே நிர்மாணிக்கும் பேரறிவு பெற்ற பிரம்மதேவர் ஆவார்.

ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு இடம்பெயர்வதே பரிணாம வளர்ச்சி என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. உடலே தானாக மாற்றம் பெறுவதாக கூறும் டார்வினின் கொள்கை ஏற்புடையதல்ல.

டார்வின் கொள்கையைப் புறக்கணிப்போம்

டார்வினின் பரிணாமக் கொள்கை வெளிவந்து 150 வருடங்கள் ஆன பின்னரும் விஞ்ஞானிகளால் இதனை இதுவரை நிரூபிக்க இயலவில்லை. உண்மையில் டார்வினின் கொள்கையில் மேன்மேலும் அதிகமான ஓட்டைகளே கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனை நிரூபிக்கும்படி விஞ்ஞானிகளிடம் கேட்டால் காலம் காலமாக “வருங்காலத்தில் நிரூபிப்போம்” என்று பதிலளித்து வருகின்றனர். உங்களுக்குத் தரவேண்டிய பணத்திற்காக, யாரேனும் ஒருவர் சுமார் முன்னூறு வருடங்கள் பின் தேதியிட்ட காசோலையை வழங்கினால், நீங்கள் அதனை ஏற்பீர்களா? அத்தகைய முட்டாள்கள் யாரேனும் இருப்பார்களா? “வருங்காலத்தில் நிரூபிப்போம்” என்னும் விஞ்ஞானிகளின் கூற்றிற்கும் பின் தேதியிட்ட காசோலையை வழங்குவதற்கும் வேறுபாடில்லை.

டார்வினின் கொள்கைக்கு மாற்றாக இன்றைய விஞ்ஞானிகளில் பலர் அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையை (Intelligent Design) ஆதரித்து வருகின்றனர். பிரபஞ்சப் படைப்பிற்கும் உயிரினங்களின் தோற்றத்திற்கும் பூரண அறிவுடைய முழுமுதற் கடவுள் காரணமாக திகழ்கிறார் என்பதை வேத இலக்கியங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தில் இதுகுறித்த விரிவான தகவல்களை நாம் காணலாம். இந்த சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் பயில்வோர் அவற்றில் மிகவும் ஆழமான தத்துவ உண்மைகள் பொதிந்து கிடப்பதை உணர முடியும். இதனால்தான், ஸ்ரீல பிரபுபாதர் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள விஞ்ஞானத்தை பயில்வதற்கு முன்வர வேண்டும் என பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இன்று இஸ்கானில் எண்ணற்ற பல்கலைக்கழகங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் டார்வினின் கொள்கையைப் புறக்கணித்து வேதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

எனவே, மனிதர்களை அவர்களது வாழ்வின் குறிக்கோளிலிருந்து திசை திருப்பக்கூடிய அபத்தமான, நிரூபிக்கப்படாத டார்வினின் பரிணாமக் கொள்கையை நாமும் புறக்கணிப்போமாக. டார்வினின் கொள்கையை எதிர்ப்பது பக்தித் தொண்டில் ஒருவரை முன்னேற்றும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment