மரணம் நமது உற்ற நண்பனா?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ. மரண பயம் என்பது திக்கற்ற நிலையில் இருக்கும் மனிதர்களை நிலை குலைய வைக்கும் உணர்வாகும். உலகின் அனைத்து விஷயங்களையும் பட்டிமன்றம் போட்டு பேசும் அறிஞர்கள் மரணத்தை பற்றி பேச அஞ்சுகின்றனர். நமக்கு மரணத்தைப் பிடிக்காமல் இருந்தாலும் நாம் மரணத்தைப் பற்றி பேசாமல் இருந்தாலும், மரண தேவன் தகுந்த நேரத்தில் பாரபட்சமின்றி நம் அனைவரையும் தழுவிக் கொள்ள காத்துக் கொண்டிருக்கிறான். மரணம் என்கிற சூட்சும புதிருக்கு விடை காண்பதே மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

 

மரணத்தை தவிர்க்க முடியுமா

கைரேகை ஜோதிட நிபுணர் ஒருவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஆவல் காரணமாக அப்பெட்டியில் இருந்த பலரும் அவர் முன்பு கையை நீட்டினர். கைரேகைகளை பார்த்த அவருக்குக் கடும் அதிர்ச்சி: காரணம், அவர்கள் அனைவருக்கும் அற்ப ஆயுளின் அறிகுறி தென்பட்டது. அவர் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அடுத்த நிலையத்திலேயே சில நிமிடங்களில் இறங்கி விட்டார். அவர் பயணித்த இரயில் வண்டியோ, அடுத்த அரை மணி நேரத்தில் சரக்கு வண்டியுடன் நேருக்கு நேர் மோதி அப்பெட்டியில் பயணம் செய்த பலரும் இறந்து போயினர். தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்ட அவரது செயல் சரியா? தவறா? என்பதை பின்வரும் புராணக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒருமுறை எமராஜர் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அஃது அந்த குருவியின் கேடு காலம் என்பதை உணர்ந்த கருடர் உடனடியாக குருவியைத் தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் பத்திரமாக வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பொந்தில் வசித்த பாம்பு அந்த குருவியை விழுங்கி விட்டது. குருவி இறந்து போன துக்கத்தில் கருடர் மீண்டும் எமராஜரின் இடத்திற்கே வந்தார். அப்போது எமராஜர் கருடரை கூர்ந்து பார்க்க, கருடரோ, “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார். இதைக் கேட்ட எமராஜர் கருடரிடம், “நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். அந்த குருவியை நான் உற்று நோக்கியதற்கான காரணம், அக்குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. அஃது எவ்வாறு நடக்கப் போகிறது என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்றார்.

அதாவது, மரணம் எப்போது நிகழுமோ, அஃது அப்போது நிகழ்ந்தே தீரும். அதனை யாராலும் தடுக்க இயலாது.

மரணம் என்றால் என்ன?

ஆத்மாக்களான நம் அனைவருக்கும் இரண்டு உடல்கள் இருக்கின்றன: ஸ்தூல உடல், சூட்சும உடல். நாம் நமது கண்களால் பார்க்கக் கூடிய ஸ்தூல உடலானது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தினால் ஆன சூட்சும உடலை நம்மால் நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும், அதன் இருப்பை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இந்த இரண்டைக் காட்டிலும் நுண்ணியதாக விளங்கும் ஆன்மீக உடல் அல்லது ஆத்மாவானது முடி நுனியின் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவு கொண்டது என்பதையும், அஃது இதயத்தில் இருக்கும் ஐந்து விதமான பிராண வாயுக்களில் மிதந்து கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் சாஸ்திரங்களிலிருந்து அறிகிறோம்.

ஸ்தூல உடலைப் பிரிந்து ஆத்மாவும் சூட்சும உடலும் வெளியே செல்வதே மரணம் என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆத்மாவானது ஸ்தூல உடல், சூட்சும உடல் ஆகிய இரண்டையும் பிரிந்து தனது இயற்கையான ஆன்மீக ஸ்வரூபத்தை ஏற்கும்போது, அது வைகுண்டம் அல்லது மோட்ச நிலையை அடைந்து விட்டது எனலாம். பகவானின் அசிந்திய சக்தியினால் கடுகளவு விதையிலிருந்து மாபெரும் ஆலமரம் எவ்வாறு உருவாகின்றதோ, அதுபோல முக்தி பெற்றவர்கள் உடலை விடும்போது அவர்கள் தங்களது இயற்கையான வைகுண்ட உடலை ஏற்கின்றனர்.

ஸ்தூல உடலின் தன்மை, அது ஒருநாள் அல்லது மறுநாள் அழிக்கப்பட வேண்டும் என்பதே. அஃது எரிக்கப்படும்போது சாம்பலாகிவிடும், புதைக்கப்படும்போது மண்ணாகிவிடும், கழுகினால் உண்ணப்படும்போது மலமாகிவிடும். ஆனால், நாம் அந்த சாம்பல் அல்ல, மண் அல்ல, மலமும் அல்ல என்பதை உணர வேண்டும், நமது அடையாளம் “ஆத்மா.” இந்த உடலினுள் ஆத்மா இருக்கும்போது, அதனை எரித்தால் அது மாபெரும் குற்றம்; ஆனால் இதே உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பின்னர், அதனை எரிக்காமல் வைத்திருந்தால் அதுவே குற்றம்.

உடல் மாற்றம் ஏற்படுவது ஏன்?

ஒரே உடலில் அனைத்து ஆசைகளையும் அனுபவிக்க முடியாது என்பதால் வெவ்வேறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைப் படைத்திருக்கின்றது. இயற்கையானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது. இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களுக்கும் ஆசைகளுக்கும் தகுந்தவாறு மறுபிறவியில் அவருக்கு உடல் கொடுக்கப்படுகின்றது. இறக்கும் நேரத்தில் யார் எதை நினைக்கின்றாரோ அதை நிச்சயம் அடைவர் (பகவத் கீதை 8.6).

நீரில் விளையாட வேண்டும் என்கிற ஆசையில் உடலை விட்டால், அவனுக்கு ஒரு மீனின் உடலை இயற்கை வழங்குகின்றது. மிகுதியாக உறங்குபவனுக்கு கரடியின் உடலும், மாமிசம் உண்பவனுக்கு புலியின் உடலும், அரைகுறை உடையுடன் திரிபவர்களுக்கு மரத்தின் உடலும் (மரம் ஆடை அணியத் தேவையில்லை), வேகமாக ஓட நினைப்பவனுக்கு கங்காருவின் உடலும், பெண்ணை நினைத்து உடலை விடுபவனுக்கு பெண்ணின் உடலும், இனிப்பு உண்ண வேண்டும் என்கிற ஆசையில் உடலை விடுபவன் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்கு புண்ணியம் இல்லாத பட்சத்தில் அதே வீட்டில் எறும்பாகப் பிறப்பதற்கும் இயற்கை வழிவகை செய்து கொடுக்கிறது. ஜீவன்களின் பல்வேறு ஆசைகளின் வெளிப்பாட்டை நாம் பல்வேறு உடல்களில் காண்கிறோம். கிருஷ்ணரை நினைத்து உடலை விடுபவன் கிருஷ்ணரிடமே செல்கிறான். (பகவத் கீதை 8.5)

பத்ம புராணத்தில் 84 இலட்சம் வகையான உடல்களைப் பற்றி விரிவாக  சொல்லப்பட்டிருக்கின்றது: 9 இலட்சம் நீர் வாழ்வன, 20 இலட்சம் தாவர வகைகள், 11 இலட்சம் ஊர்வன,  10 இலட்சம் பறவை இனங்கள், 30 இலட்சம் மிருக இனங்கள், மற்றும் 4 இலட்சம் மனித இனங்கள். நான்கு இலட்சம் மனித வகை என்பது, தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள் என பலரைக் குறிக்கும். எந்த உடலை ஏற்றாலும், அந்த உடலில் வசிப்பதற்கு உகந்தாற் போன்ற ஒருவிதமான இன்பத்தை இயற்கை கொடுத்து விடுகின்றது.

உதாரணமாக, மாமிசம் உண்பவன் இறந்த பிறகு நேராக புலியின் உடலுக்குச் செல்வதில்லை. புலியின் உடலில் வசிப்பதற்குத் தேவையான மனப் பயிற்சியை நரக லோகத்தில் மேற்கொண்ட பின்னரே செல்கிறான். எமதூதர்களின் நேரடி கண்காணிப்பில் பல்வேறு சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்ற பிறகே அவன் புலியின் உடலுக்கு அனுப்பப்படுகின்றான். கண்டதை உண்பவன் பன்றியின் உடலுக்கு தகுதி பெறுகிறான்; அவன் நரக லோகத்தை அடைந்த பிறகு, மலத்தை உண்பதற்கான பயிற்சியைப் பெறுகிறான். எமதூதர்களின் சித்ரவதையில் மலத்தைச் சாப்பிடுவதற்கு நன்கு பயிற்சி எடுத்த பின்னர், அவன் பன்றியின் உடலுக்கு அனுப்பப்படுகிறான்.

பாவச் செயல்களைச் செய்பவர்கள் நரகத்தில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இம்மாதிரியான இழிந்த உடல்களைப் பெறுகின்றனர். பாவகரமான ஆசைகளை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிக் கூடமாக நரக லோகம் திகழ்கிறது.

இந்த உடலினுள் ஆத்மா இருக்கும்போது, அதனை எரித்தால் அது மாபெரும் குற்றம்; ஆனால் இதே உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பின்னர், அதனை எரிக்காமல் வைத்திருந்தால் அதுவே குற்றம்.

துர் மரணம் என்றால் என்ன?

ஒருவருடைய ஆயுள் அவரது சுவாசத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவதால், குழந்தை பருவத்தில் இறப்பவர்கள், சாலை விபத்தில் இறப்பவர்கள் போன்றவர்களை துர் மரணம் அடைந்தவர்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. தற்கொலை செய்தவர்களை நிச்சயம் துர்மரணம் என கூறலாம். எண்பது வருடம் வாழ வேண்டியவர்கள் முப்பது வயதில் தற்கொலை செய்து கொண்டால், அந்த இடைப்பட்ட ஐம்பது வருடங்களுக்கு அவர்கள் வெறும் சூட்சும உடலுடன்தான் அலைந்து கொண்டிருப்பர்.

நூறு ரூபாயை தொலைத்தாலே வேதனைக்கு உள்ளாகும்போது, பல வருடங்கள் உபயோகித்த உடலை தொலைக்க நேரும்போது, எவ்வளவு வேதனையை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். நாற்பதாயிரம் தேள்கள் ஒருநேரத்தில் கொட்டினால் என்ன வலி ஏற்படுமோ, அந்த வலியை மரணத்தின்போது அனுபவிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பக்தர்கள் அத்தகு வேதனைகளுக்கு உட்படுவதில்லை. அவர்கள் பௌதிக உடலைக் கைவிட்ட உடனேயே ஆன்மீக உடலை அடைகின்றனர். அத்தகு உடல் மாற்றம் தூய பக்தர்களுக்கு மின்னல் வேகத்தில் நடைபெறுகின்றது. பக்தித் தொண்டை வாழ்க்கையின் ஒரே நோக்கமாக வைத்து செயல்படுபவர்கள், பாம்பு கடித்து இறந்தாலும், உச்சியில் இருந்து கீழே விழுந்து இறந்தாலும், விபத்தில் இறந்தாலும், நீரில் மூழ்கி இறந்தாலும், நெருப்பினால் இறந்தாலும், நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தாலும், அனைத்தும் மங்களகரமானதாகவே கருதப்படுகிறது.

 

உயிர்வாழிகளின் பல்வேறு ஆசைகளுக்குத் தகுந்தாற் போல, ஜட இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைத் தருகின்றது.

வாழ்வின் முக்கியமான தருணம்

மரணம் என்பது வாழ்வின் முக்கியமான தருணம், அதனைச் சூழ்ந்துதான் ஆன்மீக வாழ்க்கை தொடங்கப்படுகின்றது. பகவத் கீதையானது மரணம் நிறைந்த போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது. ஏழு நாள்களில் பாம்பு தீண்டி இறக்க நேரிடும் என்கிற சாபத்தை பரீக்ஷித் மஹாராஜர் பெற்ற பிறகே ஸ்ரீமத் பாகவதத்தை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து அவர் கேட்டார். இறக்கும் தருவாயில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமை என்ன என்கிற கேள்வியை அடிப்படையாக வைத்தே ஸ்ரீமத் பாகவதம் உபதேசிக்கப்பட்டது. சாணக்கிய பண்டிதரோ, ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில், நாளைக்கே தான் இறந்து விடுவேன் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அத்தகைய மனோநிலையில் நாம் இன்றைக்கு செய்யக்கூடிய பக்தியானது சீரும் சிறப்புமாக இருக்கும். மனித உடலை அடைவது அரிது என்றாலும், அத்தகு பாக்கியம் பெற்றவர்கள் அதனை உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

மரண பயத்திலிருந்து விடுபடுதல்

அறியாமையே பயத்திற்கு அடித்தளமாக விளங்குகின்றது. மூன்று முடிச்சுகளைப் போட்டு பந்தத்திற்குள் நுழைபவன் அதிலிருந்து வெளிவர விரும்புவதில்லை, எவ்வாறு வெளியேறுவது என்பதும் அவனுக்குத் தெரிவதில்லை. மரண பயம் ஏற்படும்போது, அவனது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறிவிடுகின்றது.

முகலாய மன்னன் ஔரங்கசீப் இந்தியா முழுவதும் பல்வேறு கோயில்களை இடித்துத் தள்ளியவன், மதுராவில் மட்டும் ஆயிரம் கோயில்களை இடித்தவன். அவனுக்கும் மரண பயம் வந்தது. இறுதி காலக் கட்டத்தில் தன் பாவச் செயல்களை எண்ணிப் பார்த்தபோது, அவனது மனதில் மரண பயம் ஏற்பட்டது. அதனால் தனது சொத்தில் ஒரு பகுதியை புரி ஜகந்நாதரின் கோயிலுக்காக எழுதி வைத்தான். ஔரங்கசீப் எழுதிக் கொடுத்த பத்திரம் இன்றும் ஒடிசா மாநில அரசிடம் உள்ளது.

மரண பயத்திலிருந்து விடுபட விரும்புவோர் பக்தித் தொண்டினை சிறு வயதிலிருந்தே தொடங்க வேண்டும், அல்லது அதன் முக்கியத்துவத்தை அறிந்த பின், எந்த நிலையில் இருந்தாலும் உடனடியாக தொடங்க வேண்டும். பக்தித் தொண்டில் ஈடுபடுவதையும் அதன் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதையும், நாம் நமது அவசர கடமையாக மேற்கொள்ள வேண்டும். எமராஜன் கிருஷ்ணரின் தூய பக்தராக இருப்பதால், அவர் பக்தர்களை ஒருபோதும் தண்டிப்பதில்லை, பக்தர்கள் என்றும் பாதுகாக்கப்படுகின்றனர். தனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை உரக்கக் கூறுமாறு கீதையில் (9.31) கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார்.

 

மரணத்தை வெல்வது எப்படி?

கிருஷ்ணருக்கு சேவை செய்வதே வாழ்க்கையாகவும், புலனுகர்ச்சியில் ஈடுபடுவது மரணமாகவும் கருதப்பட வேண்டும். சொந்தமாக பெரிய வீட்டைக் கட்டி அந்த வீட்டில் தனது உடலை விட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால் எந்த வீட்டில் மரணமடைகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த உணர்வில் மரணமடைகிறோம் என்பதே கணக்கிடப்படுகிறது. கிருஷ்ணருடைய நினைவில் உடலை விடும் பக்தர்களைப் பொறுத்தவரையில், மரணம் என்பது அவர்களது நித்தியமான வாழ்க்கையின் துவக்கம். மற்றவர்களுக்கோ அவர்களது பாவ வாழ்விற்கான தண்டனையின் துவக்கம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் (2.3.17) பின்வருமாறு கூறப்படுகிறது:

ஆயுர் ஹரதி வை பும்ஸாம்

உத்யன்ன் அஸ்தம் ச யன்ன் அஸௌ

தஸ்யர்தே யத்-க்ஷணோ நீத

உத்தம-ஷ்லோக-வார்தயா 

சூரியன் தினந்தோறும் உதித்து மறையும்போது அனைவரின் ஆயுட்காலமும் குறைகிறது. ஆனால் பகவான் கிருஷ்ணர் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பேசி தங்களது நேரத்தைச் செலவிடுபவர்களின் ஆயுளை சூரியன் குறைப்பதில்லை. கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை நிரந்தரமானது என்பதை இதிலிருந்து உணரலாம்.

இறக்கும் நேரத்திலும் கிருஷ்ணர் தன்னைக் காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் குடிகொண்டிருப்பதால், மரணத்திற்குப் பின்னர் கிருஷ்ணருடன் வாழப்போகும் பக்தர்கள் அந்த மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. செல்வந்தர்கள், பலசாலிகள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் என யாருமே ஆத்மா அணிந்திருக்கும் ஆடையே இந்த உடல் என்னும் அடிப்படை ஞானத்தைப் புரிந்து கொள்வதில்லை. நிரந்தரமாக வாழ வேண்டும் என்கிற ஆசை மட்டும் அனைவரிடமும் தென்படுகிறது, அதற்குரிய பாதையோ பக்தர்களுக்கு மட்டுமே தென்படுகிறது. பக்திப் பாதையை ஏற்பதற்கு பணம், உடல்பலம், படிப்பு, தவ வலிமை போன்ற எந்தவொரு பௌதிகத் தகுதியும் தேவையில்லை.

ரூப கோஸ்வாமியின் போதனை

ஒரு சாது குளக்கரையோரம் நடந்து சென்றபோது மீன்கள் நீரின் மேல் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். திடீரென்று அங்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில், நீர் மட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மீனை கவ்விக் கொண்டு செல்வதை அவர் பார்த்தார். அந்த மீனைப் போன்று பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக நீந்திக் கொண்டிருந்தால், தனக்கும் அதே கதிதான் ஏற்படும் என்பதை உணர்ந்து, ஆழமான பக்திக்குச் சென்று அடைக்கலம் பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.

பக்திக் கடலில் ஆழமாகச் செல்ல வேண்டுமானால், பக்தித் தொண்டை அழிக்கக்கூடிய ஆறு விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என ரூப கோஸ்வாமி அறிவுறுத்துகிறார்: (1) அளவிற்கு அதிகமாக உண்ணுதல் அல்லது அதிகமாக பொருள் சேகரித்தல், (2) அடைவதற்கு மிகவும் கடினமான பௌதிக விஷயத்தை அடைவதற்காக பெருமுயற்சி செய்தல், (3) வெட்டிப் பேச்சு பேசுதல், (4) ஒழுக்கக் கட்டுப்பாடு விதிகளை அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுதல், அல்லது எதையும் பின்பற்றாமல் விட்டுவிடுதல், (5) அபக்தர்களிடம் நெருங்கிப் பழகுதல், மற்றும் (6) பௌதிக பேராசை.

துச்சாதனன் துகில் உரிய முயற்சி செய்தபோது திரௌபதி தனது இரு கைகளையும் உயர்த்தி கோவிந்தனிடம் முழுமையாக அடைக்கலம் கொள்ளுதல்.

மரணம் நமது உற்ற நண்பனா?

மரண பயத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பக்தித் தொண்டில் ஆழமாகச் செல்ல கிருஷ்ணரிடம் சரணடையுங்கள். இந்திரனின் கடும் மழையின்போது விருந்தாவனவாசிகள் கிருஷ்ணரிடம் சரணடைந்தனர், துச்சாதனன் துகில் உரிய முயற்சி செய்தபோது திரௌபதி தனது இரு கைகளையும் உயர்த்தி கோவிந்தனிடம் முழுமையாக அடைக்கலம் கொண்டாள். அதுபோல நாம் ஒவ்வொருவரும் கிருஷ்ணரிடம் முழுமையாக அடைக்கலம் பெற வேண்டும், அப்போது எந்தவித அச்சமும் இன்றி, விருந்தாவனவாசிகளைப் போல, திரௌபதியைப் போல மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இன்றைய மக்கள் (சூதாட்டத்தில் ஈடுபடாவிட்டால்கூட) பணத்திற்காக கிரிக்கெட் விளையாடுவோரையும், சினிமா சண்டையில்கூட டூப் போட்டு நடிப்பவர்களையும் ஹீரோக்களாக ஏற்று இதயத்தைப் பறி கொடுக்கின்றனர். உண்மையான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் செயலாற்றியவரும், மிகப்பெரிய கோவர்தன மலையை டூப் போடாமல் இடது கை சுண்டு விரலால் தூக்கியவருமான கிருஷ்ணரிடம் ஏன் இதயத்தைப் பறி கொடுக்கக் கூடாது?

கிருஷ்ணரிடம் நமது மனதை பறி கொடுத்துவிட்டால், நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடலை விடலாம், அது புகழத்தக்கதாக அமையும், எந்த பயமும் நமக்கு அவசியமில்லை. அவரிடம் மனதை பறி கொடுப்பதற்கான சிறந்த வழிமுறை, அவரது திருநாமங்களை ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தினமும் உச்சரிப்பதே. இந்த நாமங்களை தொடர்ந்து உச்சரித்து சேவை செய்து வந்தால், நிச்சயம் மரணத்தை வென்று கிருஷ்ணருடைய திருநாட்டிற்குச் செல்ல முடியும்.

எப்படிப் பார்த்தாலும், அனைவரும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும், யாரும் மரணத்தை ஒதுக்கிவிட முடியாது. மரணம் எந்த உருவில் வந்தாலும், அது கிருஷ்ணரின் பிரதிநிதி என்பதை நாம் உணர வேண்டும். எனவே, மரணம் என்பது ஒருவரிடமிருந்து அனைத்தையும் பறித்து அவரை நரகத்திற்குக் கொண்டு செல்லும் விரோதியாகவும் அமையலாம், அல்லது பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து அவரை விடுவித்து கிருஷ்ணரிடம் கொண்டு செல்லும் நண்பனாகவும் ஆகலாம். மரணம்–நண்பனா, விரோதியா? முடிவு, நமது கையில்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives