பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால்

விஞ்ஞானிகளால் விடையளிக்க முடியாத உண்மை

வழங்கியவர்: தவத்திரு பானு ஸ்வாமி

பிறப்பு இறப்பைப் பற்றியும், அவற்றிற்கு அப்பால் இருக்கக்கூடிய உண்மையைப் பற்றியும் தற்போது ஆராய உள்ளோம். குழந்தைகள் பிறக்கின்றன, விலங்குகளும் பிறக்கின்றன, செடி கொடிகள்கூட பிறக்கத்தான் செய்கின்றன; இதனால் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். அதுபோன்றே மரணமும் அனைவரும் அறிந்ததே. மரணமடைந்த பின், இந்தியாவில் உடலை எரித்து விடுவர், மற்ற இடங்களில் புதைத்து விடுவர், வேறுசில இடங்களில் கழுகுகள் சாப்பிடத் தூக்கியெறிந்து விடுவர். இத்தகு பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வாழ்க்கை அமைந்துள்ளது. பிறப்பு என்றால் என்ன என்பதையும், இறப்பு என்றால் என்ன என்பதையும் நாம் அறிவோம். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலேயே உள்ளோம்.

மனிதர்கள் இரசாயனக் கலவையா?

வாழ்க்கை என்பதை விளக்குவதற்கு, நமது உடலை ஆராய்ந்து ஒரு முடிவை வழங்க நவீன விஞ்ஞானம் முயற்சி செய்கின்றது. நமது பள்ளிக்கூடங்களில் நாம் இரசாயனங்களிலிருந்து தோன்றியதாகக் கற்றுக் கொடுக்கின்றனர். சில இரசாயனங்கள் கலந்து அமினோ அமிலங்கள் உருவானதாகவும், அதன்பின் சின்னஞ்சிறு செல்கள் உருவான தாகவும், அவையெல்லாம் சேர்ந்து சிக்கலான செல்கள் தோன்றியதாகவும் கூறுகின்றனர். செல்கள் இணைந்து மரம் செடிகொடிகளாகவும், பிறகு விலங்குகளாகவும் பரிணமித்து, அதன் பிறகு மனித உருவம் எடுத்ததாக யூகிக்கிறார்கள். இவ்வாறு உயிர்கள் தோன்றியதற்குக் காரணம் ஏதுமில்லை என்றும் இவையனைத்தும் தற்செயலாக நிகழ்ந்தவை என்றும் கூறுகின்றனர்.

கணித ரீதியாகவும் சரி, உயிரியல் ரீதியாகவும் சரி, இக்கூற்றுகள் பொருத்தமற்றவை. அப்படியே நாம் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், மனிதர்கள் வெறும் இரசாயனக் கலவை தான் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. அத்தகு முடிவிற்குப் பின்னால் பல சிக்கல்கள் உள்ளன. நம்முடைய உடலை கனிமங்களாக பிரித்தெடுத்தால், சண்ணாம்பு, இரும்பு, கந்தகம், தண்ணீர் மற்றும் சில வேதிப் பொருள்களும் கிடைக்கும். இந்த இரசாயனங்களின் மொத்த மதிப்பு வெறும் 210 ரூபாய் மட்டுமே. அப்படியெனில், நம்முடைய மதிப்பும் வெறும் 210 ரூபாய்தானா? இதுதான் நம் எல்லோருடைய மதிப்பா? மனித வாழ்வைப் பற்றிய இத்தகு ஆராய்ச்சியில் எந்த அர்த்தமும் இல்லை. இரசாயனக் கலவைக்கு மதிப்பேது? நாம் வெறும் இரசாயனக் கலவை கிடையாது.

விஞ்ஞானத்தினால் விடையளிக்க முடியாதவை

இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது என்றும், ஏறக்குறைய 865,000,000, 000,000,000,000,000 ச.கி.மீ. சுற்றளவு உடையது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த பெரிய பிரபஞ்ச வெளியின் நடுவில் விண்வெளி மண்டலம் (கேலக்ஸி) உள்ளது. விண்வெளி விஞ்ஞானியான ஸ்டீபன் ஹௌகிங் என்பவர், கிட்டத்தட்ட நூறு கோடி விண்வெளிகள் உள்ளன என்றும், அவை ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன என்றும் கூறுகிறார். அந்த விண்வெளியின் நடுவிலுள்ள ஒரு நட்சத்திரத்தில் என்ன நடக்கிறது என்றுகூட  நம்மால் கற்பனை செய்ய முடியாது. அத்தகைய ஒரு பெரிய விண்வெளியின் மத்தியில், ஏதோ ஒரு மூலையில் சூரியக் குடும்பத்தைச் சார்ந்த பூமியில் நாம் வசித்து வருகிறோம். இந்த பூமியில்கூட மனிதர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகிறார்கள்.

மொத்தப் பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் வாழும் பகுதி ஒன்றுமே இல்லை. நமது வாழ்நாளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதுவும் ஒன்றுமே கிடையாது, அப்படியெனில் வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? நாம் பிறந்தோம், இறந்தோம் ஆனால் நாம் யார்? நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் வெறுமனே பரிணாமக் கொள்கையை எடுத்துக் கொண்டு போகலாமா? நாம் எங்கிருந்து வந்தோம்? குரங்கிலிருந்து வந்தோமா? பறவைகளிலிருந்து வந்தோமா? நாயிலிருந்து வந்தோமா? எங்கே போகப் போகிறோம்? நம்மை நாமே அழித்துக் கொள்ள போகிறோமா? அல்லது பரிணாமக் கொள்கை மூலம் வளர்ச்சி பெற்று வேறொரு விசித்திரமான பிராணி ஆகப் போகிறோமா? இவற்றிற்கெல்லாம் விஞ்ஞானிகளிடத்தில் பதில் கிடையாது.

விடையளிக்கும் சாஸ்திரங்கள்

வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வியை பலர் கேட்கின்றனர். ஜடத்தைப் பற்றிய சில தகவல்களை வழங்கும் விஞ்ஞானிகளால் இதற்கு பதிலளிக்க முடியாது. வாழ்க்கை என்றால் என்ன? அதன் குறிக்கோள் என்ன என்பதை அவர்களால் சொல்ல முடியாது. ஆனால் நம்மிடம் வேதங்கள், புராணங்கள் போன்ற சாஸ்திரங்கள் இருப்பதால் அவற்றிற்கு விடையளிக்க முடியும். நமது அறிவிற்கு அவையே மூலமாகத் திகழ்கின்றன. எதற்கு விஞ்ஞானிகளால் விடையளிக்க முடியாதோ, அதற்கு சாஸ்திரங்களால் விடையளிக்க முடியும். வெறும் ஜடப்பொருளைப் பற்றி பேசாமல், மற்ற விஷயங்களைப் பற்றியும் வாழ்வின் குறிக்கோளைப் பற்றியும் சாஸ்திரங்கள் பேசுகின்றன. வேத சாஸ்திரங்களின் சாராம்சம் என்பதால் பகவத் கீதை மிகவும் அற்புதமானதாகும். பகவத் கீதையில் அர்ஜுனன் குழம்பிய நிலையில் காணப்பட்டான். அவன் மிகப்பெரிய போர்வீரன் என்றபோதிலும், தன்னுடைய சொந்த உறவினர்களைக் கொலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால், மிகவும் குழம்பிய நிலையில் இருந்தான். அத்தகைய குழப்பமான நிலையில், அவன் கிருஷ்ணரை அணுகி, “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். கிருஷ்ணர் அவனுக்கு அறிவியலைக் கற்றுத் தரவில்லை. மாறாக, வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி உபதேசித்தார்.

நாம் உடலல்ல, ஆத்மா

கிருஷ்ணருடைய முதல் உபதேசமே மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வருத்தத்திலிருந்த அர்ஜுனனிடம், கிருஷ்ணர், “தான் யார் என்பதை தெரிந்து கொள்ளாமல் வாழும் நீ ஒரு முட்டாள். நீ ஏன் வருத்தப்படுகிறாய்? உண்மையில் நீ இந்த உடல் கிடையாது என்பதால், எந்த உறவினர்களையும் நீ கொல்லப் போவதும் கிடையாது; மேலும், நீயும் மரணமடையப் போவது கிடையாது. உண்மையில் நீ ஒரு ஆத்மா. ஆத்மாவானது இந்த உடலுக்குள் பிறப்பிலிருந்து மரணம் வரை தொடர்கிறது, உடல் மட்டும்தான் மாறுகிறது. ஆத்மா என்றுமே மாறுவது கிடையாது. உடல் மரணமடையும்போது நீ மரணமடைவது கிடையாது; மரண நேரத்தில், ஆத்மா இந்த உடலை விட்டு வேறொரு உடலை ஏற்றுக்கொள்கிறது” என்றார். அவ்வாறு வேறொரு உடலுக்குள் நுழைவதே பிறப்பு எனப்படுகிறது. மேலும், பிறப்பு என்பது ஓர் உடையைக் களைந்து வேறொன்றை அணிவதுபோல என்றும் கிருஷ்ணர் விளக்குகிறார். பிறப்பு இறப்பு என்பது வெறும் உடலுக்குத் தான், ஆத்மா மரணமடைவது கிடையாது. அஃது எப்போதும் தொடர்ந்து போய் கொண்டே இருக்கும், என்றுமே அழிவடையாது. யாரேனும் உங்களைக் கொலை செய்யலாம், ஆனால் உண்மையில் உங்களை யாராலும் கொலை செய்ய முடியாது. உடல் மட்டுமே மரணமடையும், ஆத்மா என்றுமே மரணமடையாது.

பூர்வ ஜன்ம நினைவுகள்

நீங்கள் சொல்வதெல்லாம் சாஸ்திரத்தில்தான் இருக்கின்றன, அவற்றை நிரூபிக்க முடியுமா என சிலர் வாதிடலாம். அவற்றை நிரூபிக்க முடியாது என்பது உண்மைதான். ஆத்மா பௌதிகக் கண்களுக்கு அப்பாற்பட்டது, நவீன விஞ்ஞானமோ பௌதிகக் கண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனதை வைத்தும் ஆத்மாவைப் புரிந்துகொள்ள முடியாது; ஏனெனில், மனமும் பௌதிகமானது தானே. இருப்பினும், ஒரு சில விஷயங்களை வைத்து ஆத்மா இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆத்மா இருப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட 20ஆம் நூற்றாண்டின் பல்வேறு விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர். அயன் ஸ்டீவென்சன் என்பவர், பூர்வ ஜன்ம நினைவுகளை வெளிப்படுத்திய சில குழந்தைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார். விஞ்ஞானப்பூர்வமான தனது ஆராய்ச்சியில் அவர் 2,600 பேரை ஆய்வு செய்தார். முற்றிலும் விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர், ஆய்வுகளில் தவறிழைத்துவிடக் கூடாது என்பதற்காக, சின்னஞ்சிறு சந்தேகங்களை எழுப்பிய நிகழ்ச்சிகளைக்கூட புறக்கணித்து விட்டு ஆய்வு செய்தார். ஆச்சரியமளிக்கும் பல்வேறு பூர்வ ஜன்ம சம்பவங்களை ஆராய்ந்த பின்னர், மக்கள் ஓர் உடலை விட்டு வேறு உடலுக்கு மாறிக்கொண்டிருப்பது உண்மையே என்று அவர் முடிவு செய்துள்ளார். பூர்வ ஜன்ம நினைவுகளை ஞாபகப்படுத்திய பல்வேறு குழந்தைகளால், தாங்கள் இந்த ஜன்மத்தில் போகாத இடங்கள் குறித்த குறிப்பிட்ட தகவல்களையும் தெரிவிக்க முடிந்தது.

மரண நேரத்தின் எண்ணங்கள் மறுவுடலைத் தீர்மானிக்கின்றன

ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்குச் செல்லும் இந்நிகழ்ச்சியை அவர் ஓர் உயிரியல் பரிணாமம் என்று முடிவு செய்தார். ஆனால் உண்மையில் நாம் ஆத்மா; ஓர் உடலிலிருந்து வேறு உடலுக்குச் செல்வது ஆத்மாவே. ஆத்மா ஓர் உடலை விட்டு மறு உடலுக்குச் செல்வதைப் பற்றி பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறுகிறார்: “மரண நேரத்தில் நீ எதை நினைக்கின்றாயோ, மரணத்திற்குப் பிறகு அடுத்த வாழ்வில் நீ அந்த நிலையை அடைவாய்.” ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்லுதல் என்பது தான்தோன்றித்தனமாக நடப்பதன்று. அத்தகு மாற்றத்திற்குப் பின்பு சில திட்டங்கள் அடங்கியுள்ளன. ஒருவருடைய பலமான எண்ணங்கள் அவரது அடுத்த உடலைத் தீர்மானிக்கும்.

ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள பரத மன்னரை இதற்கு நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மிகவும் பிரபலமான மன்னரான அவர், வயதான பின்னர், வானபிரஸ்தம் மேற்கொண்டு இமயமலையிலுள்ள கண்டகி நதிக்கு அருகில் நாராயணரை வழிபட்டு வந்தார். மிகவுயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்த அவருக்கு, ஒரு மான் குட்டியின் மீது பற்றுதல் ஏற்பட்டது. அந்த மான் குட்டியின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த அவர், விஷ்ணு வழிபாட்டை மறக்க ஆரம்பித்தார். திடீரென்று அவர் மரணம் அடைந்தபோது, நாராயணரைப் பற்றி நினைக்காமல் அந்த மானைப் பற்றி நினைத்தார். அதன் விளைவாக அவர் அடுத்த பிறவியில் மானாகப் பிறவியெடுத்தார். ஒருவர் மரண நேரத்தில் எதை நினைக்கின்றாரோ அதே நிலையை மரணத்திற்குப் பிறகு அடைவார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் எளிமையான சம்பவமாகும். உடனே, சாஸ்திரத்தில் இருக்கும் அதனை எப்படி நம்மால் நம்ப முடியும் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். இதே போன்ற சம்பவங்களை ஸ்டீவென்சன் அவர்களும் தமது புத்தகத்தில் கூறியிருப்பது ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகும்.

சில சம்பவங்கள்

இந்தியாவைச் சார்ந்த ஒரு சிறுவன் தனது பூர்வ ஜன்மத்தை நினைவு கூர்ந்தான். அப்பிறவியில் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு, பல்வேறு குண்டுகளால் துளைக்கப்பட்டு மரணமடைந்ததாக அவன் கூறினான். அந்த சம்பவத்தை ஆராய்ந்த போது, அங்கிருந்து 100 மைல் தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் அவ்வாறு ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. காவல்துறையினரின் பிரேத பரிசோதனையின்படி, அவனது மார்பின் நடுவில் பெரிய காயம் ஒன்றும், அதைச் சுற்றி பல சிறிய காயங்களும் இருந்தன. அவ்வாறு முந்தைய பிறவியில் மரணமடைந்திருந்த அவனது மார்பில் சில விசித்திரமான தழும்புகள் பிறவியிலிருந்து இருக்கின்றன. அவற்றை ஆராய்ச்சி செய்தபோது, ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபரின் காயங்களுக்கு, இச்சிறுவனின் தழும்புகள் ஒத்ததாக இருந்தன. முற்பிறவியில் ஏற்பட்ட காயங்கள், இந்த பிறவியில் தழும்புகளாகக் காணப்படுகின்றன.

கைகளில் விரல்களே இல்லாமல் பிறந்த ஒரு சிறுவன், தன்னுடைய முந்தைய பிறவியில் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது எல்லா விரல்களும் வெட்டப்பட்டு மரண மடைந்ததை நினைவு கூர்ந்துள்ளான். முந்தைய பிறவியில் ரயிலில் அடிபட்டு கால்கள் துண்டிக்கப்பட்டு மரணமடைந்த ஒரு பெண், அடுத்த பிறவியில் கால்கள் இல்லாமல் பிறந்தாள். மற்றொரு மனிதன், தனது முந்தைய பிறவியில், தலையில் அடிபட்டு, காது கிழிந்துபோய் மரணமடைய, மறுபிறவியிலும் பாதி காதுடன் பிறந்தான். ஒருவனது பூர்வ ஜன்ம செயல்கள் இந்த ஜன்மத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை இவை மறைமுகமாகக் காட்டுகின்றன. எனவே, நமது எண்ணம் குறித்து, குறிப்பாக மரண நேரத்திலான எண்ணம் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

முந்தைய பிறவியில் குண்டுகள் துளைத்தைக் காட்டும் காவல் துறையின் வரைபடமும், அதே தழும்புகளுடன் விளங்கும் சிறுவனின் படமும், மேலே: கைகளின்றிப் பிறந்த சிறுவனும் பாதி காதுடன் பிறந்த சிறுவனும்

மரணத்தை நெருங்கிய அனுபவங்கள்

வேறு சில விஞ்ஞானிகள் மரணத்தை நெருங்கிய அனுபவங்களை ஆராய்ந்து வருகின்றனர். விபத்தினாலோ அறுவை சிகிச்சையினாலோ மக்கள் சில நேரங்களில், மரணத்திற்கு அருகில் செல்கின்றனர்; இதயம் நின்றுவிடுகிறது, மூளையும் அதனுடைய நரம்புகளும் நின்றுவிடுகின்றன. சில நிமிடங்கள், சில மணி நேரம், அல்லது சில நாள்கள்கூட அப்படியே இருந்துவிட்டு, மீண்டும் உயிர் பிழைத்த சம்பவங்கள் பல உள்ளன. கார் விபத்தில் மரணமடைந்த ரஷ்ய மருத்துவர் ஒருவர், திடீரென்று உயிர் பிழைக்க, அவரது மூளையில் எந்தவொரு பாதிப்புமே இல்லை. உடலிலிருந்து வெளிப்பட்டு அந்தரத்தில் மிதத்தல், நீண்ட குழாய் மூலம் பயணம் செய்தல், குழாயின் மறுபக்கத்தில் வெளிச்சத்தைப் பார்த்தல், அந்த வலியற்ற அற்புதமான அமைதியான மறு உலகத்தில் நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்தல் போன்றவற்றை பலர் அனுபவித்துள்ளனர். சில சமயங்களில், அவர்கள், ஆன்மீக நபர்களையும், ஏன் கடவுளையும்கூட சந்திக் கின்றனர்; வாழ்க்கையின் மொத்த விஷயங்களையும் கண்ணோட்டமாக பார்க்கின்றனர். எனவே, இத்தகு ஆராய்ச்சிகளை நடத்திய மருத்துவர்கள், நாம் இந்த உடலல்ல என்னும் முடிவிற்கு வர வேண்டியுள்ளது. மரணத்தை நெருங்கிய அனுபவங்களை ஆராய்ச்சி செய்வதில் நிபுணராக விளங்கிய டாக்டர் கெனத்திரிங் அவர்களின் கூற்றுப்படி, இத்தகு அனுபவத்திலிருந்து மீண்டு வந்தவர்கள், மரணத்தோடு வாழ்க்கை முடிந்துவிடுவது அல்ல என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறார்.

சூட்சும உடலின் தாக்கம்

நாம் இந்த உடலல்ல. ஆத்மா என்னும் இதே உண்மையைத்தான் பகவத் கீதையிலும் கிருஷ்ணர் நமக்குத் தெரிவிக்கின்றார். மேலும், பகவத் கீதையிலிருந்து சூட்சும உடல் ஒன்று இருப்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம். சாஸ்திரங்களின் படி நாம் மூன்று நிலைகளில் உயிர் வாழ்கிறோம்: (1) நமது கண்களுக்குப் புலப்படும் பஞ்ச பூதங்களால் ஆன உடல், (2) அந்த உடலுக்கு உள்ளே நம்மால் பார்க்க இயலாத, மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றால் ஆன சூட்சும உடல், மற்றும் (3) இந்த இரு உடலுக்குள்ளும் இருக்கும் ஆத்மா.

நாம் உயிர் வாழ்கிறோம் என்றால், அதற்கு இந்த மூன்றும் இணைந்திருக்க வேண்டும். மரணமடையும் போது, பஞ்ச பூதங்களாலான இந்த உடலை விட்டு சூட்சும சரீரமும் ஆத்மாவும் வெளியே செல்கின்றன. இந்த வெளிப்புற உடல் எவ்வாறு மிகவும் நுட்பமானதாக உள்ளதோ, அதுபோலவே சூட்சும உடலும் மிகவும் நுட்பமானதாகும். இந்த சூட்சும உடலில் நிறைய அடுக்குகள் உள்ளன; பல்வேறு அடுக்குகளில் பல்வேறு தகவல்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன. ஒரு அடுக்கில் விருப்பு வெறுப்புகளும், இன்னொன்றில் உடலமைப்புகளைப் பற்றிய தகவல்களும், மற்றொன்றில் கர்ம வினைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. நாம் மரணமடைந்து வெளியே செல்லும்பொழுது, சூட்சும சரீரத்தோடு செல்வதால், விருப்பு வெறுப்புகளையும் தாங்கிக் கொண்டு அடுத்த உடலுக்குள் செல்கிறோம். எனவே, ஒரு பிறவியில் தண்ணீரில் மூழ்கி இறந்திருந்தால், அடுத்த பிறவியில் தண்ணீர் என்றாலே ஒருவித நடுக்கமும் பயமும் இருக்கும்.

100 வருடம் கடந்தும் பின்தொடரும் பதிவுகள்

தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஜெஃப்ரிகேன் என்பவர், சுமார் 100 வருடங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது தான் ஒரு தளபதியாக இருந்ததை (தனது பூர்வ ஜன்மத்தை) நினைவுகூர்ந்துள்ளார்.இருவரது முகபாவனையும் ஒரே மாதிரி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், 100 வருடங்கள் கழித்து அவர் மட்டும் வந்துள்ளார் என்பதல்ல, அவருடன் அவரது நண்பராக இருந்த மற்றொருவரும் வந்துள்ளார். தற்போதும் நண்பர்களாக உள்ள இவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் எவ்வித குடும்ப உறவுகளும் கிடையாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சூட்சும சரீரத்தில் இருக்கக்கூடிய பதிவுகளே 100 வருடங்கள் கடந்தும் இத்தகைய உருவ ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன. முகபாவனைகள் மட்டுமின்றி, நடத்தையும் கையெழுத்தும் கூட ஒரே மாதிரியாக இருந்தன. இந்த நினைவுகள் சூட்சும சரீரத்தில் வைக்கப்படுகின்றன. அவை எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். அதுபோலவே கர்மங்களும் சூட்சும உடலில் வைக்கப்படுவதால், அவை நம்முடன் வருபவை.

கர்மாவிலிருந்து விடுதலை பெறுதல்

கர்மங்களை ஒரே ஜன்மத்தில் தொலைத்து விட முடியாது என்பதால், அவை அடுத்தடுத்த ஜன்மங்களுக்கு தொடர்கின்றன. கர்மாவானது சூட்சும உடலுடன் தொடர்புடையது என்பதால், அது நம்முடன் வந்துகொண்டே இருக்கும். எனவே, கர்மாவிலிருந்து நம்மால் எப்போதுமே தப்பிக்க முடியாது. நாம் ஏதாவது ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அடுத்த பிறவியிலும் அதே விஷயத்தால் பாதிக்கப்படலாம். மாமிசம் என்னும் சொல் இங்கிருந்துதான் உண்டானது. சில மக்கள் அசைவ உணவை உண்கின்றனர், சமஸ்கிருதத் தில், மாம் என்றால் “நான்”, என்றும் என்றால் “அது” என்றும் பொருள்படும். அதாவது, நான் இந்த பிறவியில் அதை சாப்பிடுகிறேன், அஃது அடுத்த பிறவியில் என்னை சாப்பிடட்டும் என்னும் ஒப்பந்தமே மாமிச என்பதன் பொருளாகும். நான் உடலல்ல, ஆத்மா என்பதை ஒருவன் உணரும்போது, சூட்சும உடலுடன் வரக்கூடிய கர்ம வினைகளை அழித்து, நம்மால் அமைதியை அடைய முடியும். பிறப்பு, இறப்பு என்பதை விட்டு வெளியேறி முக்தியும் அடைய இயலும். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, நான் ஓர் ஆத்மா என்பதைப் புரிந்துகொள்வதற்கு நிறைய தடங்கல்கள் உள்ளன. நம்மை அறியாமையை நோக்கி இழுத்துச் செல்லும் புலன்கள், மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவை அத்தகு தடங்கல்களாகும்.

பல்வேறு யோக முறைகள்

புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கு சாஸ்திரங்கள் பல்வேறு வழிகளைக் கற்றுத் தருகின்றன. ஆரம்ப நிலையில், தர்மத்தின் விதிமுறைகளைக் கொண்டு புலன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன; அது கர்ம யோகம் எனப்படுகிறது. கர்ம யோகத்தில் வர்ணங்களும் ஆஸ்ரமங்களும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. ஓரளவு தூய்மையடைந்து ஸத்வ குணத்திற்கு உயர்ந்தவுடன் நாம் ஞானயோகத்திற்கு ஏற்றம் பெறுகிறோம். ஞானயோக நிலையில், வேதாந்தத்தைப் படித்து, நாம் இந்த உடலல்ல, ஆத்மா என்பதை உணர்கிறோம். மேலும், தவங்கள் செய்து புலன்களைக் கட்டுப்படுத்துகின்றோம். மற்றுமொரு பயிற்சி, அஷ்டாங்க யோகம் எனப்படும். அங்கே மனதையும் புலன்களையும் பிராணயாமம், தியானம் போன்றவற்றின் மூலம் கட்டுபடுத்த முயற்சி செய்கின்றோம். நம்முடைய மனதின் செயல்கள் அங்கே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இறுதியில், இறைவனுக்கு நேரடியாக தொண்டு செய்யும் பக்தி யோக வழிமுறையை அடைகின்றோம்.

பக்தியின் உயர்நிலை

பகவானின் மீதுள்ள அன்பு, பக்தியைக் கடைப்பிடிப்பதற்குக் காரணமாக அமைகிறது. பகவானுடைய திருநாமங்களைக் கேட்டல், அவருடைய திருநாமங்களை உச்சரித்தல், அவரது விக்ரஹங்களுக்கு சேவை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியதே பக்தித் தொண்டு. ஞான யோகத்திலும் அஷ்டாங்க யோகத்திலும் மனம் செயல்படாமல் இருக்க பயிற்சி செய்கின்றனர். ஆனால் பக்தியின் வழிமுறை சற்று வேறுபட்டது. இங்கே புலன்களின் செயல்களையோ மனதின் செயல்களையோ நிறுத்த வேண்டியதில்லை. மாறாக, அவற்றை கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துகிறோம். கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுவதே ஆத்மாவின் உண்மை நிலை என்பதால், அத்தகு தொண்டின் மூலம் அறியாமையிலிருந்து எளிதில் விடுபடுகிறோம். எத்தனை வழிமுறைகள் இருந்தாலும் பக்தியோகமே சிறந்தது என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

பக்தியோக பயிற்சிகள்

நமது காதுகளைக் கொண்டு பகவானின் திருநாமம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைக் கேட்டு ரசிக்கலாம். கண்களைக் கொண்டு பகவானின் அழகிய விக்ரஹங்களைக் கண்டு களிக்கலாம். வாயினால் பகவானின் கீர்த்தனத்தைப் பாடி மகிழலாம். மூக்கினால் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊதுபத்தியின் நறுமணத்தை நுகரலாம். நாக்கினால் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தினைச் சுவைக்கலாம். முழு உடலையும் பகவானுக்காக நடனம் ஆடுவதில் பயன்படுத்தலாம். இவ்வாறாக, நம்முடைய மனம், புத்தி, புலன்கள் என எல்லாவற்றையும் பக்தியோகத்தில் உபயோகப்படுத்தலாம்.

நாம் யார் என்பதை பகவத் கீதையின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி பிறப்பையும் இறப்பையும் நிறுத்த முடியும். எல்லாவிதமான தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் சரணடையுமாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் நம்மால் செல்ல முடியும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் செல்வது ஒன்றும் கடினமானதல்ல. பகவத் கீதையிலிருந்து இதனைக் கற்றுக்கொள்ள முடியும். பக்தியோகத்தின் மூலம் ஆத்மாவையும் கடவுளையும் புரிந்துகொண்டு, பிறப்பையும் இறப்பையும் கடந்து செல்ல முடியும்.

About the Author:

Leave A Comment