அஜாமிளன்

ஹரி நாமத்தின் மகிமையை உணர்த்தும் ஒரு சிறுகதை

‘கான்ய குப்ஜ’ என்ற நகரத்தில் அஜாமிளன் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விலைமாதுவின் மீது மோகம் கொண்டதால் தனது நற்குணங்கள் அனைத்தையும் இழந்து ஆன்மீக வாழ்விலிருந்து விழுந்தான். பிராமணருக்கான கடமைகளைக் கைவிட்டு கொள்ளையிலும் சூதாட்டத்திலும் வாழ்க்கையை நடத்தி, ஜட இன்பத்தில் காலத்தைக் கடத்தி வந்தான். அந்த விலைமாதுவின் மூலம் எட்டு மகன்களுக்குத் தந்தையாகி இருந்தான். தனது இளைய மகனுக்கு முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றான நாராயணர் என்னும் பெயரைச் சூட்டியிருந்தான். அந்த மகனிடம் மிகுந்த பாசம் வைத்திருந்த அஜாமிளன், அவன் முதன்முதலாக நடக்கவும் பேசவும் முயற்சி செய்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனான்.

முட்டாள் அஜாமிளனுக்கு எண்பத்து எட்டு வயதானபோது, ஒருநாள், எவ்வித முன்னறிவிப்புமின்றி அவனை மரணம் நெருங்கியது. பயங்கர முகங்களுடனும் கொடிய உருவங்களுடனும் எம தூதர்கள் அவன் முன்பாகத் தோன்றினர், அவர்களைக் கண்ட அஜாமிளன் மிகவும் அச்சமுற்றான். மரண தேவனான எமராஜனின் நீதிமன்றத் திற்கு அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல கயிறுகளுடன் அவர்கள் வந்திருந்தனர். பிணம் தின்னும் உயிரினங்களைப் போல இருந்தவர்களைக் கண்ட அஜாமிளன் திகைத்துப் போனான். சற்று தொலைவில் விளையாடும் தனது குழந்தையின் மீது கொண்ட பாசத்தினால், அஜாமிளன், “நாராயண! நாராயண!” என்று உரக்கக் கத்தினான். பெரும் பாவியான அஜாமிளன், தனது மகனுக்காக கண்ணீர் விட்டு அழுதபடி, தன்னையறியாம லேயே நாராயணரின் திருநாமத்தை உச்சரித்து விட்டான்.

இறக்கும் தருவாயில் பகவானின் திருநாமத்தை அஜாமிளன் பெரும் வேதனையுடன் உச்சரித்ததைக் கேட்ட விஷ்ணு தூதர்கள், உடனடியாக அங்குத் தோன்றினர். அவர்கள் பகவான் விஷ்ணுவைப் போலவே தோற்றமளித்தனர், அவர்களது கண்கள் தாமரை மலர்களின் இதழ்களைப் போன்று இருந்தன, தங்கத்தால் மெருகூட்டப்பட்ட மகுடத்தையும் மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கும் பட்டாடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களது கச்சிதமான உடல்கள் நீலக் கற்களாலும், பால் போன்ற வெண் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் தூய்மையுடனும் இளமையுடனும் காட்சியளித்தனர். அவர்களது பிரகாசமான தோற்றம் மரண அறையின் இருட்டை நீக்கி ஒளிபெறச் செய்தது. அவர்கள் தங்களது கைகளில் வில்கள், அம்புகள், கத்திகள், சங்குகள், தடிகள், சக்கரம் மற்றும் தாமரை மலர்களை ஏந்தியிருந்தனர்.

அஜாமிளனின் இதயத்திலிருந்து எமதூதர்கள் ஆத்மாவைப் பறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த விஷ்ணு தூதர்கள், “நிறுத்துங்கள்!!!” என்று உரக்கக் கூறினார்கள்.

தங்களது செயல்களுக்கு ஒருபோதும் எதிர்ப்பைக் கண்டிராத எமதூதர்கள், விஷ்ணு தூதர்களின் கடுமையான ஆணையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தபடி, “நாங்கள் எமராஜரின் சேவகர்கள். நீங்கள் யார்? எங்களை ஏன் தடுக்க முயற்சி செய்கிறீர்கள்?” என்று வினவினர்.

புன்முறுவலிட்ட விஷ்ணு தூதர்கள் மழைமேகத்தின் பெரும் இடியோசையைப் போன்ற குரலில் பேசினர்: “நீங்கள் உண்மையில் எமராஜனின் சேவகர்களானால், பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியின் பொருளை எங்களுக்கு விளக்குங்கள். இச்சுழற்சிக்கு உட்பட்டவர்கள் யார், விடுபட்டவர்கள் யார்?”

எமதூதர்கள் பின்வருமாறு பதில் கூறினர்: “சூரியன், நெருப்பு, ஆகாயம், காற்று, தேவர்கள், சந்திரன், பகல், மாலை, இரவு, திசைகள், நீர், நிலம், பரமாத்மா ஆகிய அனைவரும் ஒவ்வொருவரின் செயல்களைக் கண்காணிக்கும் சாட்சிகளாவர். தர்மத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் என்று இந்த சாட்சிகளால் உறுதி செய்யப்படும் நபர்கள், பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியின் மூலமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஒருவன் தர்மம் சார்ந்த அல்லது தர்மத்திற்கு எதிரான செயல்களை தனது வாழ்க்கையில் எந்த அளவிற்குச் செய்திருக்கிறானோ, அதற்கேற்ப அவன் தனது அடுத்த பிறவியில் கர்மத்தின் எதிர்வினைகளால் இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிக்க வேண்டும்.

“இவ்வாறாக, கர்ம வினையின் காரணத்தினால், உயிர்வாழி மனித உடல், விலங்கு உடல், தேவனின் உடல் என்று பல்வேறு உடல்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறான். தேவனின் உடலைப் பெறும்போது அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்; மனித உடலைப் பெறும்போது சில நேரங்களில் மகிழ்ச்சியையும் சில நேரங்களில் வேதனையையும் அடைகிறான்; விலங்கின் உடலைப் பெறும்போது எப்போதும் பயத்துடன் இருக்கிறான். எப்படியிருப்பினும் இவ்வெல்லா உடல்களிலும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை அனுபவித்து அவன் பயமும் துன்பமும் அடைகிறான். அவனது இக்கொடுமையான நிலை ஸம்ஸார என்று அழைக்கப்படுகிறது.

“உடலைப் பெற்ற அறிவற்ற உயிர்வாழி, தனது புலன்களையும் மனதையும் அடக்க இயலாமல், ஜட இயற்கை குணங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு–தனது விருப்பத்திற்கு எதிராகக்கூட–செயல்படும்படி கட்டாயப்படுத்தப் படுகிறான். தனது உமிழ்நீரினால் கூட்டைக்கட்டி அதற்குள்ளேயே மாட்டிக்கொள்ளும் பட்டுப் புழுவைப்போல அவன் இருக்கிறான். கர்ம வினைகள் என்னும் தான் பின்னிய வலையில் தானே சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள எந்த வழியையும் அவனால் காண முடிவதில்லை. இவ்வாறு அவன் மீண்டும் மீண்டும் இறப்பதும் பிறப்பதுமாக இருக்கிறான். தனது தீவிரமான ஜட ஆசைகளின் காரணத்தினால், ஓர் உயிர்வாழி குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்து, தனது தாய் அல்லது தந்தையைப் போன்ற உடலைப் பெறுகிறான்.

“ஆரம்பத்தில் இந்த அஜாமிளன் வேத நூல்களைக் கற்று, நல்ல குணத்துடனும் நடத்தையுடனும் இருந்தான். அவன் எப்போதும் உண்மையாகவும், வேத மந்திரங்களை உச்சாடனம் செய்யும் முறையை அறிந்தவனாகவும், மிகவும் பரிசுத்தமானவனாகவும் இருந்தான். ஆன்மீக குரு, விருந்தினர்கள், குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் என அனைவருக்கும் எப்போதும் உரிய மரியாதையை அளித்து வந்தான். உண்மையில், அவன் கர்வத்திலிருந்து விடுபட்டவனாகவும், எல்லா உயிர் வாழிகளிடமும் இரக்கம் கொண்டவனாகவும், எவரிடமும் பொறாமை கொள்ளாதவனாகவும் இருந்தான்.

“ஆனால் ஒருமுறை இவன் தனது தந்தையின் கட்டளையை ஏற்று பழங்களையும்  பூக்களையும் சேகரித்து வரக் காட்டிற்குச் சென்றான். வீட்டிற்குத் திரும்பும் வழியில் காமவெறி பிடித்த கீழ்த்தரமான மனிதன் ஒருவன், ஒரு விலைமாதுவினை வெட்கமின்றி கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அம்மனிதன் தனது நடவடிக்கை சரியானது என்பதுபோல் சிரித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவனும் விலைமாதுவும் மது அருந்தியிருந்தனர். அவளது கண்கள் போதையில் சுழன்று கொண்டிருந்தன, ஆடை விலகி யிருந்தது. அவளைக் கண்டவுடன் அஜாமிளனின் இதயத்தில் உறங்கிக் கொண்டிருந்த காம இச்சை விழித்துக் கொண்டது. அவன் தனது இச்சையினால் மயக்கப்பட்டான். வேத அறிவுரைகளை நினைவுபடுத்த முயன்றான், பகுத்தறிவின் உதவியுடன் இச்சையைக் கட்டுப்படுத்த முயன்றான். ஆனால் காமதேவனின் வலிமையின் காரணத்தினால் அவனால் தனது மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளையே நினைத்தபடி வாழத் தொடங்கினான். குறுகிய காலத்திலேயே அவளைத் தனது வீட்டு வேலைக்காரியாக்கிக் கொண்டான். அதன்பின் அஜாமிளன் தனது எல்லா ஆன்மீகப் பயிற்சி களையும் கைவிட்டான். தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட பரம்பரைச் சொத்துக்கள் அனைத்தையும் அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது மட்டுமின்றி, கௌரவமான பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த தனது அழகான இளம் மனைவியையும் துறந்தான்.

இந்த அயோக்கிய அஜாமிளன் சட்டப்படியோ சட்டவிரோதமாகவோ, ஏதோ ஒரு வழியில் பணத்தை சம்பாதித்து, அதனை அந்த விலைமாதுவின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகச் செலவழித்தான். தான் செய்த பாவத்திற்கு இதுவரை இவன் எந்த பிராயசித்தமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவியை நாங்கள் எமராஜரின் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டும். அங்கே இவனது பாவச் செயல்களுக்கு ஏற்ற வகையில் தண்டிக்கப்பட்டு, இவனுக்கு ஏற்ற உடல் தரப்பட்டு, மீண்டும் இவ்வுலகிற்கு திருப்பி அனுப்பப்படுவான்.”

இறக்கும் தருவாயில் அஜாமிளன், “நாராயண” என்று அழைக்க, உடனடியாக அங்கு விஷ்ணு தூதர்கள் விரைந்தனர்.

எமதூதர்களின் வார்த்தைகளைக் கேட்ட பின்னர் தர்க்கத்திலும் வாதத்திலும் தேர்ச்சிபெற்றவர்களான பகவான் விஷ்ணுவின் தூதர்கள் எமதூதர்களின் கூற்றுகள்     அனைத்தையும் பின்வருமாறு முறியடித்தனர். “அந்தோ பரிதாபம்! தர்மத்தை நிலைநாட்டும் பொறுப்பிலுள்ள எமதூதர்கள் களங்கமற்ற நபரைத் தேவையின்றி தண்டிக்கின்றனரே! அஜாமிளன் தனது எல்லா பாவங்களுக்கும் ஏற்கனவே பிராயசித்தம் செய்து விட்டான். ஆதரவற்ற நிலையில், இறக்கும்போது, நாராயண என்னும் திருநாமத்தை உச்சரித்ததால், அவன் இப்பிறவியில் செய்த பாவங்களுக்கு மட்டுமின்றி, இதற்கு முந்தைய பல இலட்சம் பிறவிகளில் செய்த பாவங்களுக்கும் பிராயசித்தம் செய்துவிட்டான். அவன் தற்போது பரிசுத்தமானவனாகவும் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபடுவதற்குத் தகுதியுடையவனாகவும் இருக்கிறான்.

திருடன், குடிகாரன், நண்பனையோ உறவினரையோ காட்டிக் கொடுத்தவன், பிராமணனைக் கொன்றவன், குரு அல்லது உயர் அதிகாரியின் மனைவியுடன் புலனுகர்வில் ஈடுபட்டவன் என அனைத்து பாவிகளுக்கும் பகவான் விஷ்ணுவின் திருநாமத்தை உச்சாடனம் செய்வதே மிகச்சிறந்த பிராயசித்தமாகும். பெண்கள், அரசன், தந்தை, பசுக்களைக் கொன்றவன் உட்பட எல்லா பாவப்பட்ட மனிதர்களுக்கும்கூட இதுவே சிறந்த மருந்தாகும். இப்பாவிகள் பகவான் விஷ்ணுவின் திருநாமத்தை உச்சாடனம் செய்தால், முழுமுதற் கடவுளான அவரது கவனத்தைத் தம் பக்கம் இழுக்க முடியும். தனது திருநாமத்தை உச்சரித்தவனைக் காப்பது தனது கடமை என்று பகவான் கருதுகிறார்.

“பகவானின் திருநாமத்தைக் கேலியாகவோ பொழுதுபோக்கும் இசையாகவோ உச்சாடனம் செய்தால் கூட, ஒருவன் தான் செய்த அளவற்ற பாவங்களின் எதிர் வினைகளிலிருந்து விடுதலை பெறுகிறான். இது வேத நூல்களாலும் கற்றறிந்த பண்டிதர் களாலும் ஏற்கப்பட்டுள்ளது.

“பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சாடனம் செய்த பின்னர், விபத்தினாலோ, கொடிய விலங்கினாலோ, நோயாலோ, ஆயுதத் தாலோ ஒருவன் கொல்லப்பட்டால், அவன் மறுபிறவி எடுப்பதிலிருந்து உடனடியாக விடுதலை பெறுகிறான். வைக்கோலை நெருப்பு எரிப்பது போல கிருஷ்ணரின் திருநாமம் ஒருவனின் எல்லா கர்ம வினை களையும் எரித்துவிடுகிறது.

ஒரு மருந்தினைத் தெரிந்து உட்கொண்டாலும் தெரியாமல் உட்கொண்டாலும் வலுக்கட்டாயமாக உட்கொண்டாலும், அம்மருந்து நிச்சயமாகச் செயல்படும். அதுபோல, பகவானின் திருநாமத்தின் மகிமை யைத் தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, ஒருவன் அதனை உச்சரித்தால், அஃது அவனை மறுபிறவியிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்ட தாகும்.

“மரண நேரத்தில், அஜாமிளன் பகவான் நாராயணரின் திருநாமத்தை உச்சரித்தான். இஃது அவன் தனது வாழ்க்கையில் செய்த அனைத்து பாவங்களையும் போக்கி, மறுபிறவியிலிருந்து அவனை விடுவித்துவிட்டது. எனவே, இவனுக்கு மீண்டும் ஒருமுறை தண்டனைக் கொடுப்பதற்காக உங்களது அதிகாரியிடம் கூட்டிச் செல்ல வேண்டாம்.”

இவ்வாறு கூறிய பின்னர், எமதூதர்களின் கயிற்றிலிருந்து அஜாமிளனை விஷ்ணு தூதர்கள் விடுவித்தனர். தன்னுணர்வு பெற்ற அஜாமிளன், பயம் நீங்கி விஷ்ணு தூதர்களின் கால்களில் விழுந்து தனது இதயப்பூர்வமான மரியாதையைச் செலுத்தினான். அஜாமிளன் தங்களிடம் ஏதோ சொல்ல முயற்சிப்பதைக் கண்டபோதிலும் விஷ்ணு தூதர்கள் அவனது பார்வையிலிருந்து மறைந்தனர்.

“நான் கண்டது கனவா நிஜமா? பயங்கரமான சில மனிதர்கள் தங்களது கைகளில் கயிற்றுடன் என்னை வெளியே இழுத்துச் செல்ல வந்ததை நான் பார்த்தேன். அவர்கள் எங்கே சென்றனர்? என்னைக் காப்பாற்றிய அந்த நான்கு ஒளி பொருந்திய நபர்கள் எங்கே?” என்று அஜாமிளன் அதிசயித்தான்.

அஜாமிளன் தனது வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான். “புலன்களுக்கு அடிமையாகி நான் எவ்வளவு தரம் தாழ்ந்து போனேன்! புனிதமான பிராமணன் என்ற நிலையிலிருந்து வீழ்ந்துகிடந்தேனே! எனது பண்பாட்டையும் அழகான மனைவியையும் இழந்தேன், விலைமாதுவின் வயிற்றிலிருந்து பிள்ளைகளைப் பெற்றேன். எனது வயதான தாய் தந்தையரைக் கவனித்துக்கொள்ள நண்பர்களோ வேறு மகன்களோ இல்லாதபோதிலும், நான் அவர்களைக் கவனித்துக் கொள்ளாததால், அவர்கள் மிகுந்த வேதனையுடனும் சிரமத்துடனும் வாழ்ந்து வந்தனர். என்னைப் போன்ற பாவிகள் அடுத்த பிறவியில் நரக வேத னையை அனுபவிக்க வேண்டும் என்பது இப்போதுதான் எனக்குத் தெளிவாகிறது.

“நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி, இருப்பினும் எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் பிறப்பு, இறப்பு என்ற பாவகரமான சுழற்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும்” என்று அஜாமிளன் கூறிக் கொண்டான்.

உடனடியாகத் தனது உறவுகளைத் துறந்த அஜாமிளன், இமயமலையிலுள்ள புனித ஸ்தலமான ஹரிதுவாருக்குப் பயணமானான். அங்கு ஒரு விஷ்ணு கோவிலில் தங்கி, பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டான். அவனது மனமும் அறிவும் தியானத்தில் ஆழ்ந்து பகவானின் திருவுருவத்தில் நிலைபெற்ற பின்னர், அஜாமிளன் மீண்டும் அந்த நான்கு விஷ்ணு தூதர்களைக் கண்டான். எமதூதர்களிடமிருந்து தன்னைக் காத்த அதே விஷ்ணு தூதர்கள்தான் இவர்கள் என்பதை அடையாளம் கண்டுகொண்ட அவன் அவர்களுக்குத் தலை வணங்கினான்.

ஹரிதுவாரில், கங்கை நதிக் கரையில் தனது நிலையற்ற ஜடவுடலை நீத்த அஜாமிளன், நித்தியமான ஆன்மீக உடலைப் பெற்றான். விஷ்ணு தூதர்களுடன் தங்க விமானத்தில் ஏறி காற்று மண்டலத்தின் வழியாகப் பகவான் விஷ்ணுவின் லோகத்திற்கு நேரடியாகச் சென்றான். மீண்டும் அவன் ஜடவுலகில் பிறக்கப் போவதில்லை.

பக்தியில் பக்குவம் பெற்ற அஜாமிளனை விஷ்ணு தூதர்கள் வைகுண்டம் அழைத்துச் செல்லுதல்.

2017-01-25T15:44:25+00:00January, 2012|பக்தி கதைகள்|0 Comments

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment