அலர்நாத்

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

பக்தி உணர்ச்சியை தூண்டக்கூடிய சின்னஞ்சிறிய இக்கோயில் ஆன்மீக ஏக்கத்தின் இருப்பிடமாகத் திகழ்கிறது.

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

அலர்நாத், அதிகம் அறியப்படாத புண்ணிய ஸ்தலம்; ஆயினும், அங்கு செல்வதற்கு நான் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஜகந்நாத் புரியில் வருடாந்திர ரத யாத்திரைக்கு முன்பாக பகவான் ஜகந்நாதர் இரண்டு வாரம் ஓய்வெடுக்கும் காலம் அனவஸர எனப்படும். அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அலர்நாத்தில் தங்கியிருப்பார். தனது அன்பிற்குரிய ஜகந்நாதரின் தரிசனமின்றி பகவான் சைதன்யரால் புரியில் தனிமையில் வசிக்க இயலாது. பகவானை பிரிந்த ஏக்கத்தால் எழும் உயர்ந்த ஆன்மீக உணர்ச்சிகளை அவர் அலர்நாத்தில் வெளிப்படுத்துவார்.

அலர்நாத் திருக்கோயில் புரிக்குப் பதினேழு கிலோ மீட்டர் மேற்கில், கடலுக்கு ஐந்து கிலோ மீட்டர் உட்புற நிலத்தில் அமைந்துள்ளது. அலர்நாத் கோயிலுக்கு அருகிலுள்ள பென்ட்புர் என்னும் கிராமத்திற்கு ஐந்து பேர் கொண்ட குழுவுடன் நான் பயணம் மேற்கொண்டேன். அலர்நாத் செல்வதற்கு பகவான் சைதன்யர் கடற்கரையின் ஓரமாக நடந்து செல்வார், ஆனால் இன்று பெரும்பாலான யாத்திரிகள் பேருந்தில் செல்கின்றனர்.

நாங்கள் ஜீப்பில் பயணம் செய்தோம், வழியெங்கும் சமவெளியில் பல வளைவுகள் கொண்ட சாலையின் இருபுறமும் விவசாய நிலங்களும் தென்னை மற்றும் பனந்தோப்புகளும் அழகாகக் காட்சியளிக்கின்றன.  கடற்கரையை ஒட்டிய சமவெளியில் உள்ள செழுமையான நிலம் பலருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. ஒருமணி நேரப் பயணத்தில் நாங்கள் சில கிராமங்களைக் கடந்து சென்றோம். அப்போது காலை மணி ஏழு; மக்கள் அனைவரும் எழுந்து ஆயிரக்கணக்கான வருட பழக்கத்தின்படி ஆறுகளிலும் குளங்களிலும் நீராடிக் கொண்டிருந்தனர்.

வழியில் பகவானின் விக்ரஹங்களைத் தாங்கிய பல்லக்குகள் பலவும் கிராமங்களிலிருந்து வருவதைக் கண்டோம். பென்ட்புரில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவிற்காக அந்த விக்ரஹங்கள் எடுத்துவரப்படுகின்றன. மஹாபாரதக் காவியத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும் பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தர்களுமான பஞ்ச பாண்டவர்களின் விக்ரஹங்களும் இங்கே கொண்டு வரப்படுகின்றன. இந்த விக்ரஹங்கள் ஒவ்வொன்றும் தொலைவில் இருப்பதால், அவற்றை ஒரே நாளில் தரிசனம் செய்ய இயலாது. இருப்பினும், அவ்வாறு தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர் என்பது மக்களின் நம்பிக்கை. முற்காலத்தில் மன்னர் ஒருவர் குதிரையில் ஏறி அவற்றை தரிசனம் செய்ய முயன்று தோல்வியடைந்தார். தற்போது ஆண்டுக்கு ஒருமுறை ஐந்து விக்ரஹங்களும் பென்ட்புருக்குக் கொண்டு வரப்படுகின்றன. மேலும், அங்கு வரும் யாத்திரிகள் அனைவரும் தங்களது கிராமங்களிலுள்ள தத்தமது விக்ரஹங்களைக் கொண்டு வருகின்றனர். ராதா-கிருஷ்ணர், சிவபெருமான், இதர தேவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட விக்ரஹங்கள் வருடாந்திர திருவிழாவிற்கு வந்து சேருகின்றன.

பென்ட்புரின் கடைத்தெரு இந்தியாவிற்கே உரிய கடைத் தெருவைப் போன்று சினிமா பாடலின் பலத்த ஓசையுடன் இருந்தது. இஃது ஒரு சிறிய கிராமம், இங்கே சில நூறு வீடுகளே உள்ளன. அது காலை நேரமானாலும், வியாபாரிகள் கடைகளைத் திறந்து வணிகத்தைத் தொடங்கிவிட்டனர்–தானியங்கள், பயறுகள், வாசனைப் பொருட்கள் துணி, இரும்பு சாமான்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், கடாய் என தேவையானவை அனைத்தும் இங்கு விற்கப்படுகின்றன.

அலர்நாதருடைய திருக்கோயிலின் முகப்புத் தோற்றம். புரியில் பகவான் ஜகந்நாதரை தரிசிக்க இயலாதபோது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இங்குதான் வருவார்.

இக்கட்டுரையின் ஆசிரியரும் அவரது குழுவைச் சார்ந்த இருவரும் கோயிலின் குளத்திற்கு நடந்து செல்கின்றனர்.

அலர்நாத் கோவில்

சுமார் நூறு கெஜம் தொலைவில் உள்ள அலர்நாத் கோயிலுக்கு நாங்கள் நடந்து செல்கிறோம். அங்கே தென்றல் காற்றில் அசைந்தாடும் பனை மரங்களுக்கு மத்தியில் அமைதி தவழும் ரம்மியமான இடத்தில் எங்களைக் கண்டோம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தங்கியிருந்தபோது (ஒலிப்பெருக்கிகள் இல்லாத காலத்தில்) இவ்விடம் எப்படி இருந்திருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்து பார்த்தோம்.

புரி ஜகந்நாதர் கோயிலைப் போலவே இந்த கோயிலிலும் அலர்நாதரை தரிசிப்பதற்கு அயல்நாட்டினர் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், இக்கோயில் மிகவும் சிறியதாக இருப்பதால், தெளிவாக இல்லாவிட்டாலும் பகவானை எங்களால் ஓரளவு தரிசிக்க முடிந்தது. பகவான் அலர்நாதர் நான்கு கரங்களுடைய மஹாவிஷ்ணுவாக வீற்றுள்ளார், அவரது வாகனமான கருடன் கைகூப்பி குனிந்து அவரது பாதத்தில் பிரார்த்தனை செய்கிறார், அவரது துணைவியர்களான ஸ்ரீதேவியும் பூதேவியும் உடனுறைந்துள்ளனர். இங்கே கிருஷ்ணரின் இராணிகளான ருக்மிணியும் சத்யபாமாவும்கூட சிறிய விக்ரஹத்தில் காட்சியளிக்கின்றனர். மூலஸ்தானத்திற்குச் செல்லும் கூடத்தின் ஒரு கூரையை பிரம்மதேவர் மற்றும் சிவபெருமானின் வண்ண ஒவியங்கள் அலங்கரிக்கின்றன.

பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் இராமருடனான பகவான் சைதன்யரின் ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்ரீ சைதன்யரின் ஷட்-புஜ விக்ரஹம் ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இந்த விக்ரஹத்திற்கு முன்புறமுள்ள கல்லில் பகவான் சைதன்யரின் உடல் அங்கங்கள் பதிந்த அடையாளம் காணப்படுகிறது. பகவான் அலர்நாதரின் முன்பு பகவான் சைதன்யர் முதன்முதலாக விழுந்து வணங்கியபோது, அவரது பரவசத்தினால் அந்த கல் உருகியுள்ளது.

ஒடிஸா அரசால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் ஐம்பது குடும்பங்களைச் சார்ந்த பிராமணர்கள் சுழற்சி முறையில் பகவானுக்கு சேவை புரிகின்றனர். பரம்பரை பரம்பரையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் பகவானுக்கான ஒரு குறிப்பிட்ட சேவையில் நிபுணர்களாக விளங்கி வருகின்றனர். சிலர் பகவானுக்கு உணவு தயாரிக்கின்றனர், சிலர் சமைத்த உணவைப் படைக்கின்றனர், வேறு சிலரோ, வழிபடுதல், அலங்காரம் செய்தல் போன்ற சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கென்று அறுபது ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது, சில நிலங்கள் பகவானுக்கும் சில நிலங்கள் அவரது சேவகர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அலர்நாத் கோயிலுக்கு அருகில் 1926இல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் நிறுவப்பட்ட பிரம்ம கௌடீய மடம் உள்ளது. இங்குள்ள கோயிலில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ராதா-கிருஷ்ணர் (கோபீ-கோபிநாதர்), மற்றும் சிறிய அளவிலான பகவான் அலர்நாதர் ஆகிய விக்ரஹங்கள் உள்ளன. அலர்நாதரின் அந்த சிறிய விக்ரஹம் பூமியைத் தோண்டியபோது அலர்நாத் கோயிலின் பூஜாரி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டதாகும். அவர் அந்த விக்ரஹத்தை அலர்நாத் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்தார். ஒருநாள் இரவில் தலைமை பூஜாரியின் கனவில் தோன்றிய பகவான் தான் பக்திசித்தாந்த சரஸ்வதியால் வழிபடப்பட விரும்புவதாகக் கூறினார். அடுத்த நாளே அந்த பூஜாரி அவ்விக்ரஹத்தினை அப்போது கௌடீய மடத்தில் தங்கியிருந்த ஸ்ரீல பக்திசித்தாந்தரிடம் ஒப்படைத்தார்.

புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு சமமானது என்றும் அவர் கூறினார். அந்த ஏரியின் கரையில் சைதன்ய மஹாபிரபு ஓய்வெடுப்பதுண்டு. 1929இல் ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத் கோயிலைப் புதுப்பிப்பதற்கும் சுற்றுசுவர் கட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். இப்பணியை முடிப்பதில் அவர் எந்த அளவிற்கு பெரும் ஆர்வம் கொண்டார் என்றால், அதற்காக அவர் அங்கு வேலை செய்தவர்களுக்கு பீடி சுருட்டிக் கொடுத்துள்ளார். மேலும், வாமனர், நரசிம்மர், மற்றும் வராஹரின் சிற்பங்களை அவர் கோயிலின் வெளிச்சுவற்றில் பதித்தார்.

வருடாந்திர சந்தன யாத்திரை திருவிழாவிற்காக திருமேனி முழுவதும் சந்தனம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ள பகவான் அலர்நாதர்.

இடது: பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் கட்டளைப்படி கோயிலின் வெளிச் சுற்றுச் சுவரில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்றான பகவான் நரசிம்மதேவர். நடுவே: சைதன்யர், இராமர், கிருஷ்ணர் ஆகிய மூவரும் இணைந்தபடி காணப்படும் ஷட்-புஜ விக்ரஹம்.

விக்ரஹத்திற்கு முன்பு உள்ள கல்லில் ஸ்ரீ சைதன்யரது திருமேனியின் அச்சு பதிந்துள்ளது. வலது: கௌடீய மடத்தின் கோயிலிலுள்ள பூஜாரி, பூமியைத் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட பகவான் அலர்நாதரின் சிலையைக் காட்டுகிறார்.

இராமானந்த ராயரின் இல்லம்

அலர்நாத் கோயிலையும் பிரம்ம கௌடீய மடத்தையும் விஜயம் செய்த பின்னர், பென்ட்புர் கிராமத்தின் மறுகோடியிலுள்ள இராமானந்த ராயரின் பிறப்பிடத்திற்குச் சென்றோம். இராமானந்த ராயர் பகவான் சைதன்யரின் முக்கிய சகாக்களில் ஒருவராவார். இராமானந்த ராயரின் சகோதரரான கோபிநாத பட்நாயக்கின் வழித் தோன்றலான திரு. பி.கே. பட்நாயக்கரை நாங்கள் சந்தித்தோம்.

திரு.பட்நாயக்கரும் அவரது குடும்பத்தாரும் ஆளுநராக பணியாற்றிய இராமானந்த ராயரின் பதவியை வெளிப்படுத்தும் சிறப்பு வாய்ந்த வாளையும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட பழங்கால அரசிதழ்களையும் காண்பித்தனர்.

பட்நாயக்கரின் இல்லத்திற்கு மறுபக்கத்தில் இராமானந்த ராயரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கோதாவரி நதிக்கரையில் சந்தித்ததைச் சித்தரிக்கும் கோயில் ஒன்று உள்ளது.

ஒரு காலத்தில் இராமானந்த ராயருக்குச் சொந்தமாக இருந்த உடைவாளை இக்கட்டுரையின் ஆசிரியர் தனது கையில் பிடித்திருக்கிறார்.

ஒரு முக்கிய ஸ்தலம்

அலர்நாத் ஒன்றும் புகழ்பெற்ற புனித ஸ்தலம் அல்ல, அவ்வாறு மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தோன்ற வில்லை. ஆயினும், பகவான் சைதன்யரைப் பின்பற்றும் கௌடீய வைஷ்ணவர்கள், அவரது லீலா ஸ்தலங்கள் அனைத்தையும் முக்கிய ஸ்தலங்களாக மதிக்கின்றனர். சிறந்த கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான பக்திவினோத தாகூர் பாடியுள்ளார்: கௌர ஆமார, ஜே ஸப ஸ்தானே, கரலோ ப்ரமண ரங்கே, ஜே-ஸப ஸ்தானே ஹேரிபோ ஆமி, ப்ரணயி-பகத-ஸங்கே, “பகவான் சைதன்யர் விஜயம் செய்த எல்லா ஸ்தலங்களையும்  பக்தர்களின் சங்கத்தில் தரிசிக்க நான் பேராவல் கொண்டுள்ளேன்.” ஸ்ரீல பிரபுபாதரும் எழுதுகிறார்: “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு லீலைகள் புரிந்த அனைத்து ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்ய வேண்டும் என்பதை அவரது பக்தன் முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும். உண்மையில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய பக்தர்கள், அவர் சில நேரம் அல்லது நிமிடங்கள் விஜயம் செய்த ஸ்தலங்களைக்கூட காண விரும்புகின்றனர்.” அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தனது அன்பிற்குரிய கிருஷ்ணரின் பிரிவினால் எழும் ஆழ்ந்த மனோநிலையில், பகவான் சைதன்யர் ஒவ்வொரு வருடமும் தங்கியிருந்த இந்த ஸ்தலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது!

பகவான் அலர்நாதர்: நான்கு கரங்களுடையவரா இரண்டு கரங்களுடையவரா?

பகவான் அலர்நாதரை பகவான் சைதன்யர் தரிசிக்கும்போது, அவரை விஷ்ணுவாகவோ நாராயணராகவோ காண்பதில்லை, குழலூதும் கிருஷ்ணராகவே காண்பார். ஆகவே, பகவான் சைதன்யரின் வழிவந்த பக்தர்கள் பகவான் அலர்நாதரை இரு கரங்களுடைய கிருஷ்ணராகவே காண்கின்றனர்.

பகவான் அலர்நாதரை இவ்வாறு தரிசிப்பதால் ஸ்ரீ சைதன்யருக்கு ஏற்படும் பரவசம் ராதா-கிருஷ்ணரின் லீலையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒருமுறை விருந்தாவனத்தில் ராதையுடனும் மற்ற கோபியருடனும் அனுபவித்துக் கொண்டிருந்த பகவான் கிருஷ்ணர் விளையாட்டிற்காக அவர்களிடமிருந்து ஒளிந்து கொண்டார். கோபியர்கள் (ராதையைத் தவிர) அவரைக் கண்டபோது, அவர் சதுர்புஜ வடிவில் மாறுவேடம் பூண்டு காட்சியளித்தார். அவரை அடையாளம் காண இயலாத கோபியர்கள் அவரை தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் ராதை அவரைக் கண்டபோது, அவள் மீதான பிரேமையால் அவரால் தன்னை மறைத்துக் கொள்ள இயலவில்லை. ராதையின் தூய பக்திக்கு உரிய ரூபமான இரு கைகளுடைய குழலூதும் வசீகரமான கிருஷ்ணராக அவர் மீண்டும் தம்மை மாற்றிக் கொண்டார்.

நாராயணரின் உருவில் ஒளிந்திருந்த கிருஷ்ணரை ராதை கண்டுபிடித்தல்.

ஆழ்வார்களின் பகவான்

அலர்நாதரின் வரலாறு இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஐதீகம். நான்கு யுகங்களில் முதல் யுகமான ஸத்ய யுகத்தில், பிரம்மதேவரிடம் ஆகாயத்திலிருந்து பேசிய பகவான் நாராயணர், எத்தகைய விக்ரஹத்தை வடித்து வழிபட வேண்டும் என்பதற்கான விளக்கத்தை வழங்கினார்.

“நீங்கள் என்னை இங்கே வழிபட்டதால், இந்த ஸ்தலம் பிரம்மகிரி (பிரம்மாவின் மலை) என்று அழைக்கப்படும்,” என பகவான் நாராயணர் கூறினார்.

காலப்போக்கில், பிரம்மகிரியானது அலர்நாத் என்று அறியப்படத் தொடங்கியது. தற்போதைய கோயில் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தமிழகத்தைச் சார்ந்த ஆழ்வார்களின் வழியில் வந்த சில பிராமணர்களால் வழிபடப்பட்டதால், இங்குள்ள பகவான், ஆழ்வார்நாதர் (ஆழ்வார்களின் இறைவன்) என்று அழைக்கப்பட்டார், அப்பெயர் காலப்போக்கில் அலர்நாத் என்று மருவியது. இன்று இந்த ஸ்தலம் பிரம்மகிரி என்றும் பொதுவாகச் சொல்லப்படுகிறது.

பென்ட்புரின் இஸ்கானால் நிறுவப்பட்டுள்ள பிரதான வாயிலில் உள்ள புடைப்புச் சிற்பம்.

சிறுவனின் திருப்திக்காக உணவு உண்ட இறைவன்

ஒருசமயம், அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பிராமணர், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மது என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பகவானின் முன்பு உணவை வைத்துவிட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார்.

முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, பகவானுக்கு உணவு கொண்டு வந்த மது, அதனை படைத்து விட்டு, “எனதன்பு பகவானே, இந்த படையலை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சிறுவன் என்பதால் படையலை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது” என்று கூறி பிரார்த்தித்தான்.

அதன் பிறகு, மது தனது நண்பர்களுடன் விளையாடு வதற்காக வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான்.

“பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்பட்டால், அவர் என் மீது கோபப்படுவார். தயவுசெய்து சாப்பிடுங்கள்,” என்று அவன் வேண்டினான்.

மீண்டும் வெளியே சென்று திரும்பி வந்த மது, தட்டில் உணவு இன்னமும் அப்படியே இருப்பதைக் கண்டான். அதை உண்ணுமாறு அவன் மீண்டும் பகவானை கண்ணீர் மல்க வேண்டினான்.

மூன்றாவது முறையாக மது திரும்பி வந்தபோது, பகவானின் முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டு காலியாக இருந்தது.

அந்த காலித்தட்டை மது மகிழ்ச்சியுடன் தனது தாயாரிடம் எடுத்துச் சென்றான்.

“பிரசாதம் எங்கே?” அவள் கேட்டாள்.

“அலர்நாதர் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்!” என்று மது பதிலுரைத்தான்.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மதுவும் அவனது குடும்பத்தினரும் பட்டினியாக இருந்தனர்; ஏனெனில், மது எப்போது உணவு படைத்தாலும் பகவான் அதனை முழுவதுமாக சாப்பிட்டு வந்தார்.

ஸ்ரீ கேதனன் திரும்பி வந்து நடப்பவற்றை அறிந்தபோது, தனது மகனைக் கடிந்து கொண்டார்.

“பகவான் அலர்நாதரின் பிரசாதத்தை நீ என்ன செய்தாய்?”

“அவர் சாப்பிட்டு விடுகிறார் தந்தையே. தாங்கள் சொல்லித் தந்தபடியே நான் அவருக்குப் படைத்தேன்.”

“அவர் சாப்பிட்டிருக்க முடியாது. அவர் ஒரு கற்சிலை,” என்று ஸ்ரீ கேதனன் பதிலுரைத்தார்.

இருப்பினும், என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஸ்ரீ கேதனன் விரும்பினார். எனவே, தனது மகன் பகவானுக்கு உணவு படைத்தபோது, அவர் ஒரு தூணிற்குப் பின்னால் மறைந்து கொண்டார். மது சென்ற பின்பு, பகவான் கீழே குனிந்து பாயாசம் இருந்த கிண்ணத்தை எடுப்பதை ஸ்ரீ கேதனன் மறைந்தபடி பார்த்தார். தூணின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ கேதனன், பகவானின் கையைப் பிடிக்க, சூடாக இருந்த பாயாசம் அவரது திருமேனியில் சிந்தியது.

“நிறுத்துங்கள்!” ஸ்ரீ கேதனன் கூக்குரலிட்டார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விக்ரஹம் உணவு உண்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? நீங்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டால், நாங்கள் எவ்வாறு வாழ முடியும்?”

அலர்நாதர் பதிலுரைத்தார்: “பிராமணனின் போர்வையில் உள்ள லௌகீகவாதியே, உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாத மனிதனால் படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. எளிமையான முறையில் அன்புடன் அர்ப்பணித்த காரணத்தினால், மது கொடுத்த உணவை நான் ஏற்று வந்தேன்.”

சூடான பாயாசம் பட்டதால், பகவான் அலர்நாதரின் உடலில் ஏற்பட்ட தழும்புகளை கோயிலில் உள்ள பிராமணர்கள் இன்றும் நமக்குக் காட்டுகின்றனர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives