எல்லா கிரகங்களிலும் உயிர்வாழிகள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஸ்ரீல பிரபுபாதர்: சூரியனிலும் சந்திரனிலும் கூட உயிரினங்கள் வாழ்கின்றன. இதுபற்றி விஞ்ஞானிகள் என்ன நினைக்கிறார்கள்?

 

டாக்டர் சிங்: அங்கு உயிர் வாழ்க்கை இல்லையென அவர்கள் கூறுகிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அது அபத்தமான பேச்சு. அங்கும் உயிர்கள் உள்ளன.

 

டாக்டர் சிங்: சந்திரனில் உயிர் வாழ்வதற்கான எந்த சூழ்நிலையையும் காணாததால், அங்கு உயிர்கள் இல்லை என்கிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் ஏன் அப்படி நினைக்க வேண்டும்? சந்திர கிரகம் தூசியால் மூடப்பட்டுள்ளது. அந்தத் தூசியின் உள்ளே உயிர்கள் வாழக்கூடும். ஒவ்வொரு சூழலும் உயிர் வாழ்வதற்குத் தகுதியானதாகும், உயிர்கள் எந்தச் சூழலிலும் வாழும் தன்மை கொண்டதாகும். எனவே, வேதங்கள் உயிரினங்களை ஸர்வகத:, அதாவது, எல்லாச் சூழ்நிலைகளிலும் இருப்பது என்று வர்ணிக்கின்றன. உயிரினம் ஜடப்பொருள் அல்ல. அது ஜடவுடலில் அடைக்கப்பட்டிருந்தாலும் ஜடமல்ல. நாம் வெவ்வேறான சூழல்கள் என்று சொல்லும்போது வெவ்வேறான ஜடச் சூழ்நிலைகளைக் குறிப்பிடுகிறோம்.

 

கரந்தரர்: சந்திரனின் சூழ்நிலை உயிர் வாழ்வதற்கு உகந்ததல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த உயிரினங்கள் அங்கு வாழ முடியாது என்று மட்டுமே அவர்கள் நியாயமாகக் கூற வேண்டும்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: உயிர்வாழிக்கும் ஜடச்சூழலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று வேதங்கள் கூறுகின்றன. உயிர் வாழியை எரிக்கவோ வெட்டவோ உலர்த்தவோ ஈரப்படுத்தவோ முடியாது. இது பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

டாக்டர் சிங்: இந்த கிரகத்தில் வாழும் உயிரினங்களைப் பற்றிய தங்களது அறிவு மற்ற கிரகங்களுக்கும் பொருந்துமென விஞ்ஞானிகள் எண்ணுகிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அவர்கள் எப்போதும் தங்களது அளவிலேயே சிந்திக்கிறார்கள், குறுகிய வட்டத்தில் தங்களின் வரம்பிற்கு உள்ளேயே சிந்திக்கிறார்கள். இதைத்தான் நாம் டாக்டர் தவளையின் தத்துவம் என்கிறோம் (சிரிக்கின்றார்).

 

ஒரு கிணற்றில் ஒரு தவளை இருந்தது. ஒருநாள் அதன் நண்பன் அட்லாண்டிக் மகா சமுத்திரம் என்று ஒன்று இருக்கிறது என்று கூறியபோது, “ஒ! அட்லாண்டிக் மகா சமுத்திரம் என்றால் என்ன?” என்று தவளை கேட்டது.

 

“அது மிகவும் விசாலமான நீர்ப்பரப்பு” என்றான் நண்பன்.

 

“எவ்வளவு விசாலமானது? இந்தக் கிணற்றைப்போல் இரண்டு மடங்கு இருக்குமா?”

 

“இல்லையில்லை, அது மிகமிகப் பெரியது” என்று நண்பன் கூறினான்.

 

“எவ்வளவு பெரியது? இதைப் போல் பத்து மடங்கு இருக்குமா?”

 

இப்படியே தவளை கணக்கிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இந்த வழியில் சமுத்திரத்தின் அளவை எப்படிக் கணக்கிட முடியும்? நமது அறிவுத் திறனும் அனுபவமும் எண்ணும் திறனும் வரம்பிற்குட்பட்டவை என்பதால், விஞ்ஞானிகளின் அனுமானங்களெல்லாம் இப்படிப்பட்ட தவளை தத்துவங்களையே தோற்றுவிக்கின்றன.

 

கரந்தரர்: அவர்களின் நேர்முக அனுபவத்திற்கு உட்பட்டவற்றை அவர்கள் விஞ்ஞான உண்மை என்கிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் உங்கள் அனுபவத்தைப் பற்றிப் பேசலாம். நான் என் அனுபவத்தைப் பற்றிப் பேசலாம். ஆனால் உங்கள் அனுபவத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? நீங்கள் ஒரு முட்டாளாக இருக்கலாம். அதற்காக நானும் முட்டாளாக இருக்க வேண்டுமா? நீங்கள் தவளையாக இருக்கலாம், ஆனால் நான் திமிங்கலமாக இருந்தால்? உங்கள்

கிணறே எல்லாம் என்று நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கு நீங்கள் ஒரு வழியைக் கையாள்கிறீர்கள். எனக்கு என் வழி இருக்கிறது.

 

டாக்டர் சிங்: சந்திரனின் மேல் பரப்பில் நீர் காணப்படாததால், அங்கு உயிர்வாழ்வது சாத்தியமில்லையென்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்துள்ளார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: சந்திரன் முழுவதையும் அவர்கள் பார்க்கவில்லை. வேறொரு கிரகத்திலிருந்து ஒருவர் இங்கு வந்து அரேபிய பாலைவனத்தில் இறங்கி விட்டு மீண்டும் தம் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இந்தப் பூமி முழுவதையும் பற்றி அவர் எப்படி முடிவு செய்ய முடியும்? பூமி பற்றிய அவரின் அறிவு முழுமையாக இருக்காது.

 

கரந்தரர்: நீரைக் கண்டறியும் கருவி ஒன்று அவர்களிடம் உள்ளது. அதைச் சந்திரனைச் சுற்றி வட்டமிடச் செய்து, அதிலிருந்து சந்திரனில் நீர் இல்லையென்று முடிவுசெய்து, அதனால் அங்கு வாழ்வது சாத்தியமில்லையென்று தீர்மானித்திருக்கிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: சூரியனை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு நீர் இல்லையெனத் தோன்றினாலும் அங்கும் உயிரினங்கள் உள்ளன. நீர் இல்லாததுபோல் தோன்றும் பாலைவனத்தில் கற்றாழை எப்படி உயிர் வாழ்கிறது?

 

கரந்தரர்: அது சுற்றுச் சூழலிலிருந்து நீரைப் பெறுகிறது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். எப்படியெனில், சுற்றுச் சூழலில் உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லா ஆதாரப் பொருட்களும் உள்ளன: மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயவெளி–ஜடப்பொருளான எதிலும் இந்த மூலப் பொருட்கள் எல்லாம் உள்ளன. உதாரணமாக, என் உடலில், நீங்கள் காண முடியாவிட்டாலும், நீர் இருக்கிறது. அதுபோலவே, உடலில் நீங்கள் நெருப்பைக் காண முடியாது என்றாலும் உடலில் வெப்பம் உள்ளது. இந்த வெப்பம் எங்கிருந்து வருகிறது? உடலில் நெருப்பு எங்கும் காணப்படவில்லை. என் உடலில் எங்காவது நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்களா? அப்படியானால் இந்த வெப்பம் எப்படி ஏற்படுகிறது? இதற்கு என்ன விடை?

 

டாக்டர் சிங்: விண்வெளிப் பயணிகள் சந்திரனிலிருந்து பூமிக்கு இறங்கியபோது இதர விஞ்ஞானிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தார்கள். அவர்கள் இதுவரை அறியப்படாத கிருமிகளைக் கொண்டு வந்திருக்கக்கூடுமென்று அஞ்சினர். எனவே, பயணிகளைப் பரிசோதிப்பதற்காகத் தனியே வைத்திருந்தார்கள்…

 

ஸ்ரீல பிரபுபாதர்: முதலில், அவர்கள் சந்திரனுக்குச் சென்றார்களா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு நிச்சயமில்லை. பதினாறு ஆண்டுகட்கு முன்பு நான், பிற கிரகங்களுக்கு எளிதான பயணம் என்ற நூலை எழுதியபோது, விஞ்ஞானிகளின் விண்வெளிப் பயண முயற்சி குழந்தைத்தனமானது. அவர்கள் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். பல ஆண்டுகட்குப் பிறகு, நான் ஸான்பிரான்ஸிஸ்கோவிற்குச் சென்றபோது, ஒரு நிருபர், “நிலவுப் பயணம் பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டபோது, “அது வெறும் கால விரயமும் பண விரயமுமே” என்று நான் பதிலளித்தேன்.

 

கிருஷ்ணகாந்த்: அந்தப் பயணத் திட்டத்தில் சமீபத்தில் ஒரு தோல்வி ஏற்பட்டது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அஃது அடிக்கடி ஏற்படக்கூடியதுதானே. இப்போது என்ன நடந்தது?

 

கிருஷ்ணகாந்த்: விண்வெளியில் ஒரு தளம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு விண்கலத்தை பூமியைச் சுற்றிவர அனுப்பினார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்கான செலவு இரண்டு பில்லியன் டாலர்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: நேரத்தையும் பணத்தையும் ஏன் இப்படி விரயம் செய்கிறார்கள்?

கிருஷ்ணகாந்த்: பத்திரிகைகள் அதைக் கண்டித்தன.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் குழந்தைத்தனமான முட்டாள்கள். அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள் இத்தனை ஆண்டுகளாக? சந்திரனுக்குச் செல்ல அவர்கள் எத்தனை ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள்?

 

டாக்டர் சிங்: ரஷ்யா 1957இல் ஸ்புட்னிக்கோடு ஆரம்பித்தது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் அதற்குப் பல வருடங்களுக்கு முன்பிருந்தே முயற்சித்து வருகிறார்கள். எனவே, இருபத்தைந்து ஆண்டுகளாக என்று சொல்லலாம். அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் தூசியைத் தவிர வேறெதுவுமில்லை. அப்படியிருப்பினும் இவர்கள் இன்னும் முயற்சிக்கிறார்கள். எவ்வளவு பிடிவாதம்! விண்வெளித் திட்டம் ஒரு போதும் வெற்றி பெறாது.

 

டாக்டர் சிங்: வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல வேண்டுமென்று விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தைப் பற்றிப் பேசுவதால் அவர்கள் “பெரிய மனிதர்கள்” என்று கருதப்படுகிறார்கள்.

 

டாக்டர் சிங்: இன்னும் பத்து ஆண்டுகளில் அது நடக்கும் என்கிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஓராண்டில் என்றுதான் சொல்லட்டுமே? பத்து ஆண்டுகளில் அல்லது ஓராண்டில் என்று சொன்னாலும், நாம் இத்தகைய கணக்குகளை ஒப்புக்கொள்வதில்லை. இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நாம் காண விரும்புகிறோம்.

 

டாக்டர் சிங்: சிறிய அளவில் மாதிரிகளை அமைத்துத் தொழில்திறனை அபிவிருத்தி செய்து வருகிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். நான் குழந்தையாயிருந்தபோது ட்ராம் வண்டிகள் இரயில் பாதையில் செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். “ஒரு குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு மேலுள்ள கம்பியைத் தொட்டால் நானும் தண்டவாளத்தின் மேல் போகலாம்” என்று எண்ணுவேன். விஞ்ஞானிகளிடம் பெரிய திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் செயல் குழந்தைத்தனமானது. அவர்கள் அவ்வளவு பணத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள், ஆனால் அதன் நோக்கமென்ன? அவர்களின் முயற்சிகள் வீணானவை; ஏனெனில், அவர்கள் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறியார்கள்.

 

விஞ்ஞானிகள் பெரிய அளவில் பணத்தைச் செலவிடுகிறார்கள். அரசியல்வாதிகள் அவர்களுக்கு பணம் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் பலன் பூஜ்யம். இது ஒரு குறிப்பிட்ட நோயைப் பற்றி அறியாத வைத்தியர் ஒருவர் நோயாளியிடம், “சரி, முதலில் இந்த மாத்திரையைச் சாப்பிட்டுப் பாருங்கள்” என்று சொல்வதைப் போல் இருக்கிறது. நோய்க்கான சரியான மருந்து எது என்பது தனக்குத் தெரியாது என்பதை வைத்தியர் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். விஞ்ஞானிகள் பொய் சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். வாழ்வின் உண்மையான பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றிற்கான தீர்வு அவர்களுக்குத் தெரியாது. எனவே, அவர்களின் திட்டங்களெல்லாம் கற்பனைத் தளத்தில் நடைபெறுகிறது. இதை சமஸ்கிருதத்தில் ஆகாஷ-புஷ்பம் என்பார்கள். ஆகாஷ-புஷ்பம் என்றால் ஆகாயத்திலிருந்து வரும் மலர் என்று பொருள். விண்வெளியில் ஆராய்ச்சிகள் நடத்தி உண்மையை அறிய அவர்கள் முயற்சிப்பது, ஆகாயத்திலிருந்து மலரைப் பறிக்க முயற்சிப்பது போலாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives