எல்லா செய்திகளும் இரண்டே வார்த்தைகளில்

வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

இன்றைய சமுதாயத்தில் தினசரி செய்தித்தாள்கள், வார மற்றும் மாத இதழ்கள் தினந்தோறும் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. முன்பெல்லாம் கடைகளில் இரண்டு அல்லது மூன்று செய்தித்தாள்களும் ஐந்து முதல் பத்து வார இதழ்களும் மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது சுமார் பதினைந்து செய்தித்தாள்களும் நூற்றுக்கும் மேற்பட்ட வார மாத இதழ்களையும் நம்மால் காண முடிகிறது. இவையெல்லாம் என்னதான் சொல்கின்றன என்பதையும், பகவான் கிருஷ்ணர் இதற்கு வழங்கும் சான்றிதழைப் பற்றியும் காண்போம்.

மக்களைக் கவரும் செய்தித்தாள்கள்

இன்று செய்தித்தாள்களும் இதர இதழ்களும் அதிகரிப்பதற்கு நவீன விஞ்ஞான வசதிகளும் தொழில்நுட்பங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன, எல்லா மொழிகளிலும் தினசரி செய்தித்தாள்கள் கண்டிப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உலகின் மூலை முடுக்குகளிலுள்ள நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இன்டர்நெட், வாட்ஸ்-அப், மின்னஞ்சல் என நவீன விஞ்ஞான வசதிகள் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கின்றன. காலையில் எழுந்தவுடன் மிகவும் இன்றியமையாத தேவை: ஒரு கையில் காபி, மறு கையில் செய்தித்தாள். பாமரன் முதல் பணக்காரன் வரை செய்தித்தாளைப் படிக்காமல் இருப்பவர் எவரும் இலர். எனவே, இன்றைய சமுதாயத்தில் செய்தித்தாள் மனித வாழ்க்கையுடன் மிகவும் ஒன்றிவிட்டது என்றால் அது மிகையாகாது.

செய்தித்தாள்களில் வரும் செய்திகள்

மக்கள் செய்தித்தாள்களை அவ்வளவு ஆர்வமாக தினசரி படிக்கிறார்கள் என்றபோதிலும், அதிலுள்ள செய்திகளை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். முதலில் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பட்டியலிடுவோம்: வன்முறை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போர், அரசியல், ஊழல், விபத்துகள், கலவரம், விளையாட்டு, சினிமா முதலியவை. நீங்கள் படிக்கும் செய்தித்தாள்களில் மேலே சொன்ன விஷயங்களை தினசரி பார்த்திருப்பீர்கள்ஶீபெயர், ஊர், எண்ணிக்கை முதலிய விபரங்களில் மட்டுமே மாற்றம், செயல்களில் மாற்றமே இல்லை, அதே செயல்கள்தான் மீண்டும்மீண்டும் வழங்கப்படுகிறது. செய்தித்தாள்களை நாம் “இன்றைய நியூஸ் பேப்பர், நாளைய வேஸ்ட் பேப்பர்,” என்று கூறினால், முற்றிலும் தகும்.

ஜடவுலக மகிழ்ச்சி என்பது பாலைவனத்தில் கிடைக்கும் ஒரு சொட்டு நீரைப் போன்றது.

கிருஷ்ணரால் படைக்கப்பட்ட சக்தியை முறையாக பயன்படுத்துதல்

செய்தித்தாள் அச்சடிக்க தேவைப்படும் காகிதங்களை தயாரிப்பதற்காக பெருமளவில் மரங்கள் அழிக்கப்பட்டு, இயற்கை சீரழிகிறது. ஆனால் அதே காகிதங்கள் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டால், அது மிகவும் பயனுள்ளதாக அமையும். கிருஷ்ணருடைய செய்திகளை பிரச்சாரம் செய்வதற்காக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் அதிகமான அளவில் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பல்வேறு நூல்களை அச்சடித்து விநியோகம் செய்து வருகின்றது. இதன் மூலம் பல்வேறு நபர்கள் கிருஷ்ண பக்தியை ஏற்று தூய்மையடைகின்றனர், ஆனால் மேலே கூறிய செய்தித்தாள்களில் வரும் குப்பைகளை (செய்திகளை) படிக்கும்போது மனம் களங்கமடைகின்றது.

எல்லா செய்திகளும் இரண்டே வார்த்தைகளில்

பகவத் கீதையில் (8.15) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த மொத்த ஜடவுலகத்தின் தன்மையினை “துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது” என்று இரண்டே வார்த்தைகளில் கூறுகிறார்–து:காலயம்  அஷாஷ்வதம். இந்த இரண்டு வரிகளில் அனைத்து செய்திகளும் அடங்கி விடுகின்றன. ஏனெனில், எந்த செய்தியை நாம் படித்தாலும் அவை இரண்டு வகையில் அடங்குகின்றன: (1) துன்பகரமான சூழ்நிலை, (2) தற்காலிக இன்பம். பகவான் கிருஷ்ணர் இந்த ஜடவுலகத்திற்கு கொடுக்கும் சான்றிதழ் இதுவே. பகவான் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள், அவருடைய வாக்கு என்றும் பொய்க்கப்போவதே இல்லை. ஆனால் இதை அறியாத ஜீவன் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று போராடுவது எந்த விதத்தில் நியாயம்?

மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க வேண்டும், இந்த உலகம் துன்பகரமானது என்றும் தற்காலிகமானது என்றும் சாக்ஷாத் பகவானே கூறிய பிறகு, நிதான புத்தியுடைய எவரும் இத்தகு மகிழ்ச்சியை அடைவதற்கு முயல மாட்டார்கள். மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில், அவர்கள் நிதான புத்தியுடன் எதையும் செய்வதில்லை; எங்கும் எப்போதும் பரபரப்பு, வேகம், ஓட்டம். என்றாவது ஒருநாள் நிதானமாக வாழ்வின் நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தால், எவ்வளவு துன்பப்படுகிறோம் என்பதை அவர்களால் உணர முடியும்.

கலி யுகத்தில் ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனத்தினால் துன்பமயமான உலகிலிருந்து விடுபட முடியும்.

மாயையின் செயல்

 

கட்டுண்ட ஜீவன் தன்னுடைய இன்பத்திற்காக பல்வேறு செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் இத்தகைய செயல்கள் அவனுக்கு பெரிய அளவிற்கு இன்பத்தைக் கொடுப்பதில்லை. அதுமட்டுமின்றி, தான் இந்த அளவிற்கு துன்பப்படுகின்றோம் என்பதைக்கூட அறியாத அளவில், மாயை கட்டுண்ட ஜீவனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதை அடைந்தால் நான் இன்பமடைவேன், நல்ல மதிப்பெண் கிடைத்தால் இன்பம் கிடைக்கும், நல்ல வேலை கிடைத்தால் இன்பம் கிடைக்கும், நல்ல மனைவி கிடைத்தால் இன்பம் கிடைக்கும், நல்ல குழந்தைகள் பெற்றால் இன்பம் கிடைக்கும், நல்ல செல்வம் பெற்றால் இன்பம் கிடைக்கும் என்ற ஏக்கத்திலேயே கட்டுண்ட ஜீவனின் வாழ்க்கை ஓடுகிறது. இதற்காக பலவித போராட்டங்களை அவன் ஏற்கிறான், இன்பம் மட்டும் கிடைப்பதாக தெரியவில்லை. மிகப்பெரிய பாலைவனத்தில் கடும் தாகத்தில் தவிப்பனுக்கு ஒரு சொட்டு நீர் கிடைத்தால், அஃது எப்படி தாகத்தைத் தீர்க்காதோ, அதே போல் கட்டுண்ட ஜீவனால் ஜடவுலகச் செயல்களில் மகிழ்ச்சியடைய முடியாது. அவ்வாறு இருப்பினும், மாயையின் சக்தி மிகவும் வலிமையாக இருக்கின்ற காரணத்தினால், கட்டுண்ட ஜீவனுக்கு சோர்வு ஏற்படாதவாறு அவனை மயக்குகின்றது.

கட்டுண்ட ஜீவனின் கவர்ச்சி

கட்டுண்ட ஜீவன் இரண்டு முக்கியமான விஷயங்களில் இன்பம் கிடைப்பதாக நினைத்துக் கொண்டுள்ளான்: ஒன்று செல்வம், மற்றொன்று இனக்கவர்ச்சி. மொத்த மனித சமுதாயமே ஆண்-பெண் இனக்கவர்ச்சியின் மூலம்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகையாகாது. எதிர்பாலருக்கு இடையிலுள்ள இந்த கவர்ச்சி நாம் மீண்டும்மீண்டும் இந்த பௌதிக உலகில் பிறவியெடுப்பதற்கு காரணமாகிறது. ஆண்கள் பெண்களின் சரீரத்தின் மீதும், பெண்கள் ஆண்களின் சரீரத்தின் மீதும் கவர்ச்சியடைகின்றனர். ஒருவர் தனது உடலைக் கைவிடும் தறுவாயில், எதன்மீது அதிக பற்று வைக்கிறாரோ, அந்த உடலை அடுத்த பிறவியில் அவர் அடைகிறார். நவீன காலத்திலுள்ள மக்கள் யார் மீது அன்பு செலுத்துவது என்பதை அறியாமல், செல்லப் பிராணி என்ற பெயரில் நாய், பூனை முதலிய பிராணிகளிடம் அன்பை வளர்க்கின்றனர். மேலை நாடுகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய நடப்பது உண்டு, அவர்களைப் பின்பற்றி நம்முடைய நாட்டிலும் இத்தகைய கலாச்சாரம் பரவி வருகின்றது. இதுபோன்ற அன்பை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த பிறவியில் நாயின் உடல் கிடைப்பது உறுதி. துன்பம் என்பது மேன்மேலும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

தேவையற்ற நூல்கள் படிப்பதைத் தவிர்த்து நமது கவனத்தை கிருஷ்ண பக்தி நூல்களில் செலுத்தலாமே!

ஒவ்வொரு அடியிலும் ஆபத்து

இந்த உலகத்தில் ஒவ்வொரு அடியிலும் அபாயம் இருக்கிறது என்று பகவத் கீதை மட்டுமல்லாது ஸ்ரீமத் பாகவதமும் கூறுகிறது, பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம். இந்த விஷயத்தை நாம் எளிதில் உணரலாம், நமது வாழ்வில் நாம் எந்தவொரு இன்பத்தையும் அனுபவிப்பதாக தெரியவில்லை. நமது ஒவ்வொரு அடியும் துன்பம் நிறைந்ததாகவே உள்ளது. இந்த துன்பங்களை நிறுத்த முடியாதா? நமக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லையா? நாம் நிரந்தரமாக துன்புற வேண்டியதுதானா? முதலிய கேள்விகளை நாம் எழுப்ப வேண்டும். அவ்வாறு எழுப்பாவிடில், நாம் மனித உடலைப் பெற்றதே வீண். இத்தகைய கேள்விகள் எழும் பட்சத்தில், அதற்கான விடை சாஸ்திரத்தின் மூலமாகவோ அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் மூலமாகவோ அந்த ஜீவனுக்குக் கிடைப்பது உறுதி.

கிருஷ்ண பக்தியே இறுதி தீர்வு

பகவான் கிருஷ்ணர் இந்த உலகத்தை து:காலயம், அஷாஷ்வதம் என்று கூறுகிறார்; இருப்பினும், நாம் எப்போதும் இந்த துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைப்பதில்லை. நம் அனைவருக்கும் அவரே நிரந்தர தந்தை, தந்தை ஒருபோதும் தன்னுடைய மகன் தனியாக துன்பப்படுவதை விரும்ப மாட்டார், மகன் தன்னிடம் வருவதற்கே மிகவும் விரும்புகிறார். அதுபோல, கிருஷ்ணரும் நாம் அவரிடம் வர வேண்டும் என்றே விரும்புகிறார்.

பல்வேறு காலங்களுக்கேற்ற மருந்துகள் இருப்பதைப் போல, பல்வேறு யுகங்களுக்கு தகுந்தாற் போல, பல்வேறு வழிபாட்டு முறைகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. ஸத்ய யுகத்தில் தியானத்தின் மூலமாகவும், திரேதா யுகத்தில் யாகத்தின் மூலமாகவும், துவாபர யுகத்தில் விக்ரஹ வழிபாட்டின் மூலமாகவும், தற்போதைய கலி யுகத்தில் ஹரி நாமத்தின் மூலமாகவும் பகவான் கிருஷ்ணரை வணங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாம் வாழக்கூடிய கலி யுகம் மிகவும் மோசமான குணங்களைக் கொண்டது. காமம், கோபம், மயக்கம், பொறாமை, சண்டை சச்சரவுகள் போன்றவை நிறைந்த இந்த கலி யுகத்தில் மிக அரிதான ஒரு வாய்ப்பும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அஃது என்னவெனில், பகவானின் திருநாம உச்சாடனமான ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், நம்மால் முற்றிலும் துன்பமயமான இந்த ஜடவுலகிலிருந்து விடுபட இயலும். மேலும், கீதையில் (18.66) பகவான் கிருஷ்ணர் எல்லா விதமான தர்மங்களையும் துறந்து தன்னிடம் சரணடையும்படியும், எல்லா வித பாவ விளைவுகளிலிருந்தும் தான் காப்பாற்றுவதாகவும் கூறுகிறார்.

கிருஷ்ண பக்தி இலக்கியங்களைப் படிப்போம்

எனவே, வாழ்வின் நோக்கம் கிருஷ்ணரிடம் சரணடைவதே என்பதை உணர்ந்து, அதற்கு உகந்த செயல்களை நாம் சிரமேற்கொள்ள வேண்டும். சாதாரண பத்திரிகைகள், வார மாத இதழ்களைத் தவிர்த்து மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், பகவத் தரிசனம் முதலிய கிருஷ்ண பக்தியை வளர்க்கக்கூடிய நூல்களை மட்டும் படிப்போமாக. ஆன்மீக விஷயங்கள் என்றென்றும் புதிதானவை, என்றென்றும் ஆழமானவை. இதில் நாம் பெறும் அறிவிற்கு எல்லையே இல்லை. வாழ்நாள் முழுவதும் கீதையைப் படித்தால்கூட அதன் ஆழத்தை நம்மால் அறியவியலாது. ஆனால் காலை செய்தித்தாள்களை மாலையிலேயே அனைவரும் எறிந்து விடுகிறோம்.

எல்லா செய்தித்தாள்களிலும் நாம் பெறும் அறிவைக்காட்டிலும், பல மடங்கு உயர்ந்த அறிவினை நாம் கீதையில் பெறுகிறோம். மேலும், ஸ்ரீல பிரபுபாதரால் மொழிபெயர்க்கப்பட்ட பல்வேறு நூல்களும் இஸ்கான் கோயில்களில் கிடைக்கின்றன. நம் ஒவ்வொருவரின் வீட்டையும் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைக் கொண்டு நாம் அலங்கரிக்கும்போது, நம்முடைய மனித வாழ்வு உண்மையில் பயனுள்ளதாக அமையும். அதன் பின்னர், துன்பம் நிறைந்த இந்த தற்காலிக வாழ்விற்கு நாம் திரும்பி வர மாட்டோம். பெறற்கரிய இந்த மனிதப் பிறவியை கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்தி, துன்பகரமான தற்காலிக உலகினைக் கைவிட்டு நம்முடைய நிரந்தரமான ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்வோமாக.

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment