உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான கோயிலினுள் ஒரு பயணம்

நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்நத இக்கோயிலின் பெரும்பகுதி சிதிலமடைந்துள்ளது. இருப்பினும், கட்டிடக் கலைக்கும் இதை அமைத்தவர்களின் பக்திக்கும் சான்றாக விளங்குகின்றது.

வழங்கியவர்: அத்புத ஹரி தாஸ்

பயணத் திட்டம்

நான் பாங்காக் நகரில் சில காலம் வசித்தபோது, காலாவதியாகும் எனது விசாவினைப் புதுப்பிக்க தாய்லாந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து மியான்மர், மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்தபோது, கம்போடியா செல்லலாமே என்றும், அங்குள்ள உலகிலேயே மிகப்பெரிய கோயிலான அங்கோர் வாட் பகுதிக்குச் சென்றால், என்னுடைய பயணம் மகிழ்ச்சியானதாக அமையுமே என்றும் தோன்றியது.

கம்போடியா மிகவும் ஆபத்தான பகுதி என்று நண்பர்கள் என்னை எச்சரித்தனர். அங்குள்ள கிராமங்களில் கொலையும் கொள்ளையும் சகஜம் என்று கூறினர். சற்றே தயங்கினேன், ஏமாற்றத்தை உணர்ந்தேன், திட்டத்தை மாற்ற வேண்டுமோ என்று திகைத்தேன். ஆனால் தெளிவு பிறந்தது. ஓரிரு நாள்கள் கழித்து, பாங்காக்கில் வாழ்ந்து வந்த சில அமெரிக்கர்களைக் கண்டேன். அவர்கள் சமீபத்தில்தான் அங்கோர் வாட் கோயிலை தரிசித்து வந்திருந்தனர்.

அவர்களிடமிருந்து, அங்கோர் வாட் கோயிலுக்கு அருகிலுள்ள சியாம் ரீப் எனும் இடம் பாதுகாப்பானது என்ற தகவலைப் பெற்றேன். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் ஆபத்தாக இருந்த இடங்கள், தற்போது அதிகரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் சற்று பாதுகாப்பானதாக மாறியுள்ளதைக் கேள்விப்பட்டேன். உள்ளம் மகிழ்ந்தது.

மழித்த தலையுடனும் வைஷ்ணவ உடையுடனும் பயணிக்கும் என்னை கொலையாளிகளும் கொள்ளையர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நம்பினேன். பாங்காக் மக்களைப் போன்றே அவர்களும் அன்புடன் பழகுவர் என எதிர்பார்த்தேன். பாங்காக்கின் உள்ளூர் பேருந்துகளில் சாதுக்களுக்கு இலவச பயணம் என்பதால், வைஷ்ணவ சாதுவான என்னால் இலவசமாக பயணம் செய்ய முடிந்தது, கம்போடியாவிலும் அதுபோலவே நடத்தப்படுவேன் என்று எண்ணினேன்.

அங்கோர் வாட் பகுதியிலுள்ள மாபெரும் கோயிலான மஹாவிஷ்ணு கோவிலின் பக்கத் தோற்றம். இங்குள்ள குளம் பெரும்பாலும் தாமரை, அல்லி போன்ற பூக்களால் நிறைந்திருக்கும்.

சிரமமான பயணம்

ஏழு மணி நேர இரயில் பயணத்திற்குப் பிறகு கம்போடியா நாட்டின் எல்லையை அடைந்தேன். சில சுற்றுலா பயணிகளுடன் இணைந்து ஒரு லாரியில் ஏற்றப்பட்டு, சியாம் ரீப் நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன். என்னுடன் வேறு சில வெளிநாட்டவர்களும் இருந்தது சற்று நிம்மதியைக் கொடுத்தது. நான் எதிர்பார்த்தபடி கம்போடியா ஆபத்தானதாக இல்லை. இருப்பினும், உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளும் தாழ்வான பொருளாதாரமும் எங்கும் காணப்பட்டது. மழைநீர் தேங்கியதும் மேடுபள்ளம் நிறைந்ததுமான சாலையில் நாங்கள் மேற்கொண்ட பயணம், அமேசான் காட்டில் செல்வதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. கம்போடியா எல்லைக்கும் சியாம் ரீப்பிற்கும் இடையேயான தூரம் 150 கிலோமீட்டர், ஆனால் அதைக் கடப்பதற்கு எட்டு மணி நேர கடின பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதில் அரை மணி நேரம் மட்டுமே இடையில் வாகனம் நிறுத்தப்பட்டது. அந்நேரத்தில் கடல் அலையைப் போன்று எங்களை நோக்கி விரைந்துவந்த குழந்தைகள், குளிர்பானங்கள், பிரட், பிஸ்கட்டுகள் போன்றவற்றை விற்க முயற்சித்தனர்.

சிரமமான பயணத்தைத் தாண்டி சியாம் ரீப்பை நள்ளிரவில் அடைந்தோம். வாகன ஓட்டுநருடன் வந்த இளைஞர் ஒருவர் தனது விடுதியில் தங்கும்படி எங்களை கேட்டுக் கொண்டார். நானும் என்னுடன் லாரியில் வந்த ஒரு ஜப்பானியரும் அவரது அழைப்பை ஏற்று அங்கு தங்கினோம்.

எழுபது கோயில்கள்

மறுநாள், சொபீக் என்ற பத்தொன்பது வயது இளைஞரை வழிகாட்டியாகப் பெற்றேன். அவர் தனது மோட்டர் சைக்கிளில் என்னை அங்கோர் வாட்டின் எழுபது கோயில்களில் சில வற்றிற்கு அழைத்துச் சென்றார்.

இஃது ஒரு கோயில் நகரம், இதன் முக்கிய கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மஹாவிஷ்ணுவின் திருக்கோயில். இருப்பினும், பௌத்த மதத்தின் ஆதிக்கத்தினால், விஷ்ணு கோயிலைச் சுற்றி பல்வேறு பௌத்த மத கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், காலப்போக்கில் இவ்வெல்லா கோயில்களும் பராமரிப்பின்றி பல்வேறு பிரச்சனைகளால் கைவிடப்பட்டன. கம்போடியாவின் தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள அங்கோர் வாட் மீண்டும் பிரபலமடைந்து வருகிறது. 1986 முதல் 1992 வரை இந்திய தொல்பொருள் ஆய்வகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து தற்போது இவ்விடம் பல்வேறு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

நாங்கள் இருவரும் அங்கோர் வாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஒருநாள் பயணச் சீட்டை வாங்கிய பின்னர், பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்ட பௌத்த மத கோயிலுக்கு முதலில் சென்றோம். அங்கு இருநூறுக்கும் மேற்பட்ட அவலோகிதேஷ்வரின் சிலைகளையும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும் சிற்பங்களையும் காண முடிந்தது.

அதன் பிரதான கோபுரத்தை நோக்கி நாங்கள் ஏறும்போது இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பேராசிரியரைச் சந்தித்தோம். கம்போடியாவில் ஒரு கிருஷ்ண பக்தரைச் சந்தித்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அங்கோர் வாட் பற்றி அவருக்கு அதிகம் தெரியாததால், அவருடன் சில தகவல்களைப் பரிமாறிக் கொண்டேன். அங்கோர் வாட்டின் பிரதான கோயில் மகாவிஷ்ணுவிற்காக கட்டப்பட்டது என்பதைக் கேட்டு அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார். வேத கலாசாரம் தென்கிழக்கு ஆசியாவின் இந்தகோடி வரை வளர்ச்சியடைந்திருந்தது அவருக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் இன்றும் பிரம்மதேவர், சிவபெருமான், கணபதி, கருடர் போன்ற தேவர்களை வழிபடுகின்றனர் என்ற தகவலையும் அவருக்கு எடுத்துரைத்தேன். தென்கிழக்கு ஆசியாவில் இன்றும் பிரபலமாக இருக்கும் இராமாயணம் உட்பட, ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களில், வேதப் பண்பாடு உலகம் முழுவதும் பரவியிருந்தது” என்று கூறப்படுவதை அங்கோர் வாட் வருபவர்கள் கண்கூடாக காண முடிகிறது.

அடுத்ததாக, பபுவோன் என்ற பெயரில் மேரு மலையை பிரதிபலிப்பதற்காக கூம்பு வடிவில் இரண்டாம் உதயாதித்தவர்மன் எனும் மன்னனால் எழுப்பப்பட்ட கோயிலையும், போகோங் என்ற பெயரில் சிவபெருமானுக்காக முதலாம் இந்திரவர்ம மன்னன் எழுப்பிய கோயிலையும் தரிசித்தோம்.

அதைத் தொடர்ந்து, சில புத்தர் கோயில்களையும் காணச் சென்றோம். புத்தர் கோயில் ஒன்றில் நான்கு புத்த மத துறவிகளை நான் சந்தித்தபோது, என்னையும் புத்த மத துறவியாக நினைத்து நான் பௌத்த மதத்தின் எந்தப் பிரிவை சேர்ந்தவன் என்று அறிய முயற்சித்தனர்.

அங்கிருந்து, அங்கோர் தோம் என்னும் கோட்டை நகரத்தினுள் இருக்கும் சில கோயில்களை தரிசிப்பதற்குச் சென்றோம். ஐந்து முக்கிய வாயில்களை கடந்து வந்தபோது, அவை ஒவ்வொன்றிலும் நான்கு அவலோகிதேஷ்வரின் சாந்தமான முகங்களைக் காண முடிந்தது. உத்சவங்களின்போது உபயோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள யானை, கருடன், மற்றும் சிம்ம வாகனங்கள் சிற்ப அலங்காரங்களுடன் மிகவும் அழகாகக் காட்சியளித்தன. மற்றோர் இடத்தில் சிவபெருமானின் சிலையையும், அதன் முன்புற சுவரில் தேவலோக மங்கையர்களான அப்சரஸ்களின் சிலைகளையும் கண்டோம்.

ஒரே நாளில் எழுபது கோயில்களையும் தரிசிக்க முடியாது என்பதாலும் அத்தகு முயற்சி அவசியம் இல்லை என்பதாலும், அங்கோர் வாட் நகரின் பிரதான கோயிலான மஹாவிஷ்ணு கோயிலை நோக்கிச் சென்றோம்.

மஹாவிஷ்ணு கோயிலின் முன்பக்கத் தோற்றம்.

மஹாவிஷ்ணுவின் திருக்கோயில்

இந்நகரில் எழுபது கோயில்கள் இருந்தாலும், பிரதானமாக இருப்பது மஹாவிஷ்ணு கோயிலே. கோயில்களால் நிரம்பிய அங்கோர் வாட் நகரத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் வருகை தரும் ஒரே கோயில் இது மட்டுமே. இக்கோயிலை அடைவதற்கு முன்பாக, 1.5 கிலோமீட்டர் நீளமும் 1.3 கிலோமீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான அகழியை கடந்து சென்றோம், பார்ப்பதற்கே பிரமிப்பூட்டுவதாக இருந்தது. மூன்று தளங்களுடன் அறுபது மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை தூரத்திலிருந்தே காண முடிந்தது. கோயிலின் நுழைவாயிலில் சுமார் 800 மீட்டர் நீளத்தில் செதுக்கப்பட்டிருந்த பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் (கல்லோடு செதுக்கப்பட்ட சிற்பங்கள்) இக்கோயிலின் அழகிற்கு அழகு சேர்த்தன. இடது பக்கம் அசுரர்களும் வலது பக்கம் தேவர்களும் கூடிநின்று பாற்கடலைக் கடைவதையும், பல்வேறு இராம லீலைகளையும் தத்ரூபமாக செதுக்கியுள்ளனர்.

பகவான் மஹாவிஷ்ணு வீற்றுள்ள பிரதான கோபுரத்தை அடைவதற்கு நீண்ட தாழ்வாரத்தை யும் குறுகலான படிகளையும் கடக்க வேண்டியிருந்தது. கடந்துசென்றபோது, வாழ்வில் மறக்கவியலாத எம்பெருமானின் தரிசனம் அனைத்து இன்னல்களையும் மறக்கச் செய்தது. இரண்டரை மீட்டர் உயரத்தில் எட்டு கரங்களைக் கொண்ட மஹாவிஷ்ணு காவி நிற துணியால் உடுத்தப்பட்டு கம்பீரமாக காட்சியளித்தார். வெளிநாட்டினர் சிலர் அவரிடம் பிரார்த்தனை செய்வதையும் தரையில் விழுந்து வணங்குவதையும் பார்த்து சற்று ஆச்சரியமடைந்தேன். அங்கிருந்த இரண்டு மூதாட்டிகள், வண்ணமயமான அரை மீட்டர் நீளமுள்ள நறுமணம் நிறைந்த ஊதுபத்திகளை விற்றுக் கொண்டிருந்தனர். நானும் சில ஊதுபத்திகளை வாங்கி விஷ்ணுவிற்கு அர்ப்பணித்தேன்.

அங்கோர் வாட் நகரில் பெரிய பெரிய கோயில்கள் பல உள்ளன, உலகில் இதுபோன்ற நகரம் வேறெங்கும் இல்லை. உண்மையில், இவ்வூரின் பெருமையை எடுத்துரைக்க மஹாவிஷ்ணுவின் இந்த பிரதான கோயில் ஒன்று போதும். இங்கிருக்கும் மற்ற கோயில்களைப் போலவே, மஹாவிஷ்ணு கோயிலிலும் விமரிசையான வழிபாடுகள் இல்லை, முறையான பூஜைகள் இல்லை, திருவிழாக்கள் இல்லை; மாறாக, ஒரு சுற்றுலாதலமாக மாறிவிட்டது. இருப்பினும், மஹாவிஷ்ணுவை தரிசிக்கும்போது இயற்கையான பக்தி மக்களிடம் வெளிப்படுவது மறுக்க முடியாத உண்மை.

எல்லா மன்னர்களிலும் தானே சிறந்தவன் என்று பெயர் பெற போராடிய இரண்டாம் சூரியவர்மன் எனும் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. இவர் தனது நாட்டிற்கு கிழக்கிலிருந்த வியட்நாமுடன் போரிட்டார், அருகிலிருந்த சம்பா இராஜ்ஜியத்தையும் வென்றார். மேலும், அங்கோரிய மன்னர்களிலேயே சீனாவுடன் அரசியல் தொடர்பு வைத்திருந்த ஒரே மன்னர் இவரே.

இக்கோயிலின் எல்லா பகுதிகளும் சிற்பங்களால் நிறைந் துள்ளன. சுவர்கள், தூண்கள், நடைபாதைகள், மேல்தளங்கள் என எங்கு பார்த்தாலும் சிற்பங்களே. சில சிற்பங்களில் இருக்கும் துளைகள், அவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த மதிப்புடைய கவசங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

இக்கோயில் தொல்பொருள் ஆராய்ச்சியினருக்கும் வானசாஸ்திர வல்லுநர்களுக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாகும். நவீன விஞ்ஞானத்தின் சாயல் துளியும் இல்லாத காலகட்டத்தில், பல்வேறு கிரக அமைப்புகளைப் பற்றி வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளை வைத்து இது கட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, இக்கோயிலின் நுழைவாயிலுக்கும் பிரதான கோபுரத்திற்கும் இடையிலுள்ள நீளம், நான்கு யுகங்களின் கால அளவைக் குறிக்கின்றது.

கோடை காலத்தின் ஒரு குறிப்பிட்ட தினத்தில், கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து நோக்கினால், பிரதான கோபுரத்தின் மேலிருந்து சூரியன் உதயமாவதைக் காணலாம். அந்த நாள், ஜுன் 21, இந்திய சாஸ்திரிகளின் கூற்றுப்படி சூரிய வருடத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மேலும், மன்னர் சூரியவர்மன் (சூரியவர்மன் என்றால் சூரியனால் பாதுகாக்கப்படுபவன்” என்று பொருள்) இந்த நாளை புனிதமான நாளாக கருதினார். மிகச்சிறந்த விஷ்ணு பக்தரான இவர், கி.பி. 1112ஆம் ஆண்டில் தனது ஆட்சிக்காலத்தின்போது இக்கோயிலைக் கட்ட ஆரம்பித்தார். இறுதியில், அவரது மரணத்திற்கு பிறகு கி.பி. 1150ஆம் ஆண்டு இது கட்டி முடிக்கப்பட்டது. இங்குள்ள மஹாவிஷ்ணுவின் விக்ரஹம் கி.பி. 1131ஆம் ஆண்டு ஜுலை மாதம் சூரியவர்மனின் முப்பத்தி மூன்றாம் வயதில் (வேத வானவியலில் விசேஷ எண்ணாக கருதப்படுவது) பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

 

ஹெலிகாப்டரிலிருந்து மஹாவிஷ்ணு கோயிலின் தோற்றம். நீண்ட செவ்வக அகழியை இதில் எளிதில் காணலாம்.

இதுபோன்ற முகங்களை இங்குள்ள பல்வேறு பௌத்த கோயில்களிலும் கோவில்களின் கோபுரத்திலும் காண முடியும்.

சிதிலமடைந்துள்ள பௌத்த கோயில் ஒன்றினுள் ஆல மரம் கட்டிடத்தின் மேலேயே வேர் விட்டு வளர்ந்துள்ளது.

கம்போடிய நாட்டின் பாரம்பரிய நடனங்கள் அங்கோர் வாட்டில் அடிக்கடி அரங்கேற்றப்படுகின்றன. நடனத்திற்கு தயாராகும் நிலையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர்.

வேதப் பண்பாடும் கம்போடியாவும்

சிறப்புமிக்க இத்திருக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், பல்வேறு சமஸ்கிருத பாடல்களில் அங்கோர் வாட்டின் சரித்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதப் பண்பாடு, சமஸ்கிருதம் போன்றவற்றிற்கும் அங்கோர் வாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கு ஆட்சி புரிந்த மன்னர்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத பெயர்களாகவே உள்ளன. அங்கோர் என்னும் பெயர்கூட நகர (நகரம்) எனும் சமஸ்கிருத சொல்லிலிருந்தே தோன்றியது. கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளில், கம்போடியா நாடு கம்புஜா தேசம் என்று அழைக்கப்பட்டதையும், அக்காலக்கட்டத்தில் தென் கிழக்கு ஆசியாவிலேயே வலிமை மிக்க நாடாக கம்போடியா திகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கம்போடிய நாட்டின் மன்னர்கள் வேதப் பண்பாட்டினைப் பின்பற்றியவர்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, 889ஆம் ஆண்டிலிருந்து 910ஆம் ஆண்டு வரை ஸ்ரீ யசோதபுரம் எனும் செழிப்பான நகரத்தை நிர்மாணித்து ஆட்சிபுரிந்த ஜசோவர்மன் எனும் மன்னர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் விஷ்ணு, சிவபெருமான், புத்தர் போன்றவர்களுக்கு கோயில்களை எழுப்பினார். இவரது கால கல்வெட்டுகளிலிருந்து, இவர் பாரதப் பண்பாட்டினைப் பெரிதும் விரும்பியவர் என்பதையும், மத சகிப்புத் தன்மை கொண்டவர் என்பதையும் அறிய முடிகிறது. வேதங்கள் அவரது கண்கள், அவரது புகழ் சிங்கத்தின் கர்ஜனையைப் போல எல்லா திசைகளிலும் பரவியிருந்தது, அவரது நேர்மை அவருடைய பெயரை நிலைநாட்டியது,” போன்ற வாசகங்கள் குறிப்பிடத்தக்கவை.

மாலை வேளையில் நாங்கள் மீண்டும் சியாம் ரீப்பிற்கு திரும்பினோம். இரண்டாம் சூரியவர்ம மன்னர் எத்தகைய பெரும் செல்வத்துடனும் பக்தியுடனும் பகவான் விஷ்ணுவிற்காக இத்தகைய கோயிலைக் கட்டியுள்ளார் என்பதை நினைத்து நினைத்து வியப்படைந்தேன். அங்கோர் வாட் கோயிலின் பெருமை தற்போது உலகம் முழுவதும் பரவி, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

கம்போடியாவின் பாரம்பரியம் மிக்க பண்பாடு தற்போது ஏறக்குறைய தொலைந்துவிட்டது, முற்றிலும் பௌதிகத் தன்மை கொண்ட கடவுள் நம்பிக்கையற்ற சமுதாயமாக மாறி விட்டது. இவர்கள் மீண்டும் வேதப் பண்பாட்டை அடைய வேண்டும், விஷ்ணு வழிபாட்டில் செழித்தோங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் புதிய விசாவைக் கையில் வாங்கிவிட்டு பாங்காக் திரும்பினேன்.

அத்புத ஹரி தாஸ் அவர்கள் 1994ஆம் ஆண்டு ஐரோப்பாவின் குரேஷிய நாட்டில் இஸ்கானில் சேர்ந்தார். தனது ஆன்மீக குருவான ஸ்ரீதர சுவாமியின் உதவியாளராக பல வருடங்கள் சேவை செய்த இவர், தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். (தமிழாக்கம்: மோகன ரெங்கன்)

பாற்கடலைக் கடையும் லீலையை வெளிப்படுத்தும் புடைப்புச் சிற்பத்தின் ஒரு பகுதி.

அங்கோர் வாட்டில் எழுந்தருளியிருக்கும் பகவான் மஹாவிஷ்ணு

மஹாவிஷ்ணு கோயிலின் நான்கு மூலைகளிலும் காணப்படும் கோபுரங்களில் ஒன்று.