தாங்கள் பயணம் செய்பவரா?

கிருஷ்ணருக்குத் தொண்டு செய்ய இதோ ஒரு வழிமுறை

வழங்கியவர்: கோவிந்த தாஸ்

ஜட வாழ்வின் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முக்கியமான கட்டளைகளுள் ஒன்று, அவரது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விநியோகம் செய்வதாகும். அக்கட்டளையை நிறைவேற்ற பல்வேறு பக்தர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீடுகள், கடைவீதிகள், திருவிழாக்கள், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற இடங்களை பல்வேறு யுக்திகளுடன் அணுகி, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.

இக்கட்டுரையில் நமது அன்றாட பயணங்களின்போது புத்தகங்களை விநியோகம் செய்வது குறித்து காணலாம்.

நாம் தினமும் அலுவலகம் செல்கிறோம், வேறு ஊர்களுக்கும் செல்கிறோம், மேலும் பலவிதமான காரணங்களுக்காக பேருந்து, புகைவண்டி போன்ற பொது வாகனங்களை உபயோகிக்கின்றோம். அச்சமயங்களில் கையிலெடுத்துச் செல்வதற்கு எளிமையாக, ஸ்ரீல பிரபுபாதரின் சிறிய புத்தகங்களில் சிலவற்றையும் பகவத் தரிசனம் பத்திரிகையையும் கொண்டு சென்றோ மானால், நமது சக பிரயாணிகளிடம் அப்புத்தகங்களைக் காண்பித்து படிக்கச் சொல்லலாம்.

இந்த எண்ணம் திரு. இராம விலாஸ பிரபு அவர்களுடன் அலுவலகம் செல்லும்போது நான் கற்றுக் கொண்டதாகும். அலுவலகத்திற்குச் செல்லும்போது சில சிறிய புத்தகங்களை அவர் தனது பையில் கொண்டு செல்வார். எனக்கும் சில புத்தகங்களைக் கொடுப்பார். நாங்கள் இருவரும் பேருந்தில் வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்து, அருகில் இருப்பவர்களிடம் “படிக்கிறீர்களா? நல்ல புத்தகம்!” என்று கூறுவோம். பெரும்பாலான மக்கள் புத்தகங்களைக் கையில் வாங்குவர். அதுவே மனிதனின் இயற்கை. மேலும், பகவானின் அழகிய படங்களைப் பார்த்த பின்னர், யாருக்குத்தான் அந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற இச்சை வராது?

அவர்கள் புத்தகங்களைக் கையில் வாங்கிய பின்னர், நாங்கள் அவர்களைப் படிக்கச் சொல்வோம். அவர்களும் ஆர்வத்துடன் படிப்பர்; நாங்களோ அவர்களோ இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்குச் சற்று முன்பாக, “இப்புத்தகத்தை வாங்கிக் கொள்வதற்கு விரும்புகிறீர்களா?” என்று அவர்களிடம் கேட்போம். விருப்பமுள்ள சிலர் வாங்கிக் கொள்வர், சிலர் வேண்டாம் என்பர். அதைக் கண்டு நாங்கள் வருந்துவதில்லை. “வேண்டாம்” என்று சொல்பவர்களும் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களை சில நிமிடமாவது படித்தார்களே! எண்ணிலடங்காத பிறவிகளாகப் பல்வேறு உடல்களில் சுற்றித் திரிந்த ஜீவன்கள், உன்னத நன்மையை வழங்கக்கூடிய ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றனரே! புத்தகங்களை வாங்கி, முழுமையாகப் படித்து அவர்கள் பயன்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்பும்போதிலும், குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது இதைப் படித்தனரே என்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவோம். மேலும், அவர்களிடம் திருநாமத்தின் மகிமை, அருகிலிருக்கும் இஸ்கான் கோவில் போன்றவற்றைப் பற்றி எடுத்துரைப்போம்.

இந்த சேவை எனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக உள்ளது. நாம் பிரபுபாதரிடம் பிரார்த்தனை செய்து, இம்முயற்சியை மேற்கொண்டால், வெற்றி நிச்சயம். தினமும் பிரபுபாதரின் புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்னும் எனது நீண்ட நாள் ஆசையை நடைமுறைக்குக் கொண்டு வந்த இராம விலாஸ பிரபுவிற்கு நன்றி. நாம் தினமும் 3-5 சிறிய புத்தகங்களையும் சில பகவத் தரிசனங்களையும் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு மேல் கொண்டு சென்றோமெனில், ஓரிரு நாட்கள் மட்டுமே செய்வோம், பின்னர் சோம்பலாக இருந்து விடுவோம்.

ஸ்ரீதாம் மாயாபூரில் பிரபுபாதரின் சந்நியாச சீடர் ஒருவர் தனது சொற்பொழிவில், “நாம் தினமும் பல்வேறு நபர்களைக் கடந்துச் செல்கிறோம். ஆனால் அவர்கள் நம்மைத் தவிர வேறொரு பக்தரைத் தங்களது வாழ்வில் சந்திப்பார்களா என்பதை நாம் அறியோம். அதனால் கிருஷ்ண பக்தியை அவர்களுக்குக் கொடுப்பது நமது கடமை,” என்று கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தமாயின. பிரபுபாதரின் புத்தகங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதே கிருஷ்ணரைக் கொடுப்பதற் கான எளிதான வழி என்று நான் கருதுகிறேன்.

இந்த சேவை குறித்து நான் மேலும் சிந்தித்தேன். ஒரு நாளில் நாம் ஒவ்வொருவரும் ஐந்து நபர்களை (அலுவலகம் செல்வது, திரும்பி வருவது உட்பட) சந்திக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாதத்தில் (26×5=130) 130 புதிய நபர்கள், நம் ஒவ்வொருவரின் மூலமாகவும் கிருஷ்ணரைப் பற்றி அறிவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.

பத்து பக்தர்கள் இவ்வாறு செய்தால், (10×130=1300) 1,300க்கும் மேற்பட்ட நபர்கள் புதிதாக கிருஷ்ணரைப் பற்றியும் இஸ்கானைப் பற்றியும் அறிய இயலும். இதில் சிலர் புத்தகங்களையும் வாங்கியிருப்பர். தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று ஆயிரம் பக்தர்கள் செய்தால், 1,30,000க்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொரு மாதமும் பயன் பெறுவர். அலுவலகத்திற்குச் செல்வது மட்டுமல்லாமல், நாம் எப்போதெல்லாம் பொது வாகனங்களை பயன்படுத்துகின்றோமோ, அப்போதெல்லாம் இந்த சேவையை செய்யலாம். அது மட்டுமல்லாமல், இந்த சேவை, அந்தந்த ஊர்களிலுள்ள இஸ்கான் கோவில்களையும் சிறிய பிரச்சார மையங்களையும் வீடுகளில் நடைபெறும் கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகளையும் பற்றி விளம்பரப்படுத்துவதற்கு வசதியாக அமையும். மேலும், இந்த சேவையினால், நமது பயணங்கள் சோர்வின்றி விறுவிறுப்பாகத் திகழும்.

தனது வெளியூர் பயணத்தின்போது தான் சந்தித்த கடைக்காரரிடம் ஸ்ரீல பிரபுபாதரின் சிறிய புத்தகம் ஒன்றினைக் கொடுக்கும் பக்தர்

 

இந்த சேவையின் சிறப்பம்சம்

பொதுவாக நாம் புத்தக விநியோகம் செய்ய வேண்டுமெனில், அதற்கென்று நேரம், இடம், மக்கள் வருவார்களா என்று பலவற்றை சரிபார்க்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த முறையில், பேருந்து என்னும் இடத்தில், பயண நேரம் என்னும் நேரத்தில், இறைவனின் ஏற்பாட்டில், மக்களை எப்போதும் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்வது நமது விருப்பம். அண்மையில் இதுபோன்ற ஒரு பயணத்தின்போது, 60-65 வயதான பெரியவர் ஒருவரிடம், தன்னையறியும் விஞ்ஞானம் புத்தகத்தைக் காண்பித்தேன். அவர், “ஹரே கிருஷ்ண இயக்கத்தில் என்ன உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நான் இந்த புத்தகத்தை வாங்குகிறேன்,” என்று கூறி வாங்கிக் கொண்டார்.

பல்வேறு வார இதழ்களையும் மாத இதழ்களையும் தங்களது பயணத்தின்போது படித்துப் பழக்கப்பட்ட மக்கள், மாத இதழாக வெளிவரும் பகவத் தரிசனத்தினை கண்டிப்பாக படிக்க விரும்புவர். படிப்பதற்கு அவர்கள் தயார், கொடுப்பதற்கு நீங்கள் தயாரா?

 

கடைத்தெருவில் அன்பர் ஒருவருக்கு பகவத் தரிசனம் பத்திரிகையை விநியோகம் செய்யும் பக்தை

 

2016-12-09T13:20:30+00:00May, 2011|பொது|0 Comments

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment