ஆரிய திராவிட பாகுபாடு

Must read

இனவாதமா? பிரிவினைவாதமா?

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

தமிழகத்தின் சமீப கால வரலாற்றில், பண்பாடு, சமயம், அரசியல் ஆகியவற்றில் பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்தது ஆரிய திராவிட இனவாதமாகும். அம்மாற்றம் ஆன்மீகத்தையும் அசைத்துப் பார்த்ததால், ஆன்மீகத்தை ஏற்பவர்கள் உட்பட பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஆரியன் என்னும் சொல்லின்மீது ஒரு வெறுப்பு இருந்து வருகிறது என்பதால், அதற்கு முறையான பதிலளிக்கும் பொருட்டு, ஆரிய திராவிட பாகுபாடு என்பது இனவாதமா பிரிவினைவாதமா என்னும் மாபெரும் ஆராய்ச்சியினை சுருக்கமாக இக்கட்டுரையில் ஆய்வோம்.

நாம் வரலாற்றில் படித்தவை

கைபர்-போலன் கனவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்து வந்த ஆரியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவினர் என நாம் பாடப் புத்தகங்களில் படித்தது நினைவிருக்கலாம். பாரதத்தின் பூர்வீக குடிமக்கள் திராவிடர்கள் மட்டுமே என்றும், அவர்கள் ஆரியர்களின் வரவிற்குப் பின் தென்பாரதத்திற்கு குடிபெயர்ந்தனர் என்றும் கேள்விப்பட்டுள்ளோம். ஆரியர்கள் வெண்மையான சருமம், நெடிய தேகம், நீண்ட கேசம், மற்றும் நீண்ட மூக்கும் உடையவர்கள் என்றும், திராவிடர்கள் கறுமையான சருமம், குட்டையான தேகம், சுருண்ட கேசம், மற்றும் அகண்ட மூக்கும் உடையவர்கள் என்றும் படித்துள்ளதை யாரும் மறந்திருக்க முடியாது.

படித்தவை உண்மையல்ல!

மேற்குறிப்பிட்ட கருத்துகளுக்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை என்பதைத் தெரியப்படுத்த யாம் கடமைப்பட்டுள்ளோம். அக்கருத்துகள் யாவும் இந்திய மக்களை அடக்கியாள விரும்பிய ஐரோப்பியர்களால் புனையப்பட்டவை என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றன.

ஆரியர்கள் கைபர்-போலன் கனவாய் வழியாக ஊடுருவியவர்கள் என்னும் கால்டுவேலின் யூகத்தினை உண்மையாக ஏற்றால், அவர்களுக்கென்று ஆரிய தேசம் என ஒன்று இந்தியாவிற்கு வெளியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றிலோ புராணங்களிலோ அவ்வாறு நாம் எதையும் எங்கும் காண்பதில்லை. இன்றைய பாரத தேச எல்லைக்கு வெளியே காந்தாரம், சாளுக்கியம் போன்ற தேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், ஆரிய தேசம் என்னும் ஒன்றினை பாரத தேசத்திற்கு வெளியே நாம் எங்கும் காண முடிவதில்லை.

ஆரியர்கள் என்போர் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவினுள் ஊடுருவியர்கள் அல்ல என்பது நிச்சயம். சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேத சாஸ்திரங்களிலும், சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களிலும் ஆரியர்களைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன; அவற்றில் ஒன்றில்கூட ஆரியர்கள் வெளியிலிருந்து ஊடுருவியவர்கள் என்று கூறப்படவில்லை. உண்மையில், ஆரியர் என்பதை ஓர் இனமாகக்கூட அவை கூறுவதில்லை.

ஆரியர்கள் என்றால் என்ன?

அறநெறிகளை அறிந்தவர்கள் “ஆரியர்கள்” என்று அழைக்கப்படுவதை நாம் சாஸ்திரங்களின் வாயிலாக அறியலாம். மனித வாழ்வின் மதிப்பை உணர்ந்து, ஆன்மீகத் தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்ட நாகரிகத்தை உடையவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்படுவதாக ஸ்ரீல பிரபுபாதர் தனது பகவத் கீதை உண்மையுருவில் நூலின் பொருளுரையில் (2.2) கூறியுள்ளார்.

மனிதர்களை மிருகங்களிலிருந்து வேறுபடுத்துவது சமய நெறிகளே, அவையனைத்தும் வேத சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றுவோர் ஆரியர்கள் (வளர்ச்சியடைந்த மனிதர்கள்) என்றும், அதன்படி கடமையைச் செய்ய தவறுபவர்கள் ஆரியர் அல்லாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். உதாரணமாக, தனது கடமையைச் செய்வதில் தயக்கம் கொண்டிருந்த அர்ஜுனனை அனார்ய, “ஆரியன் அல்ல” என்று கிருஷ்ணர் கண்டிப்பதை கீதையில் (2.2) காண்கிறோம்.

திராவிடன் என்பவன் யார்?

வேத இலக்கியங்கள் இமயம் முதல் சேதுபந்தம், வங்காளம் முதல் குஜராத் வரையான பகுதிகளை, விந்திய மலைத்தொடரை அடிப்படையாக வைத்து, கௌட தேசம், திராவிட தேசம் என இருபிரிவுகளாக பிரித்துள்ளன. விந்திய மலைக்கு மேல் இமயம் வரையுள்ள நிலப்பரப்பினை ஐந்து பிரிவுகளாக பிரித்து, “பஞ்ச-கௌட” என அழைத்து வந்தனர். விந்தியம் முதல் தென்கடல் வரையான நிலப்பரப்புகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, “பஞ்ச-திராவிட” அல்லது “தக்ஷிணாத்தியம்” என அழைக்கப்பட்டு வந்துள்ளது.

எனவே, விந்திய மலைக்குத் தெற்கே வாழ்பவர்கள் திராவிடர்கள் எனப்படுகின்றனர். இஃது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்பவர்களை அடையாளப்படுத்துவதற்காக, தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி என்று அழைப்பதைப் போன்ற ஓர் அடையாளமாகும். இதனை நாம் ஏன் இன வாதமாக ஏற்க வேண்டும்?

ஆரிய, திராவிட வேற்றுமை–ஒரு பார்வை

மருத்துவக் கல்வியைப் பயின்றவர்கள் உலகின் எந்தப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்களை மருத்துவர்கள் என்று அழைப்பதைப் போலவே, ஆரியர் என்னும் பெயர் உலகின் எந்தப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தகுதிகளின் அடிப்படையில் அழைக்கப்படும் பெயராகும். ஆன்மீகக் கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குபவர்களை ஆரியர்கள் என்று குறிப்பிடலாம். திராவிடன் வங்காளியாகவோ காஷ்மீரியாகவோ மாற முடியாது, ஆனால் யார் வேண்டுமானாலும் மருத்துவராகலாம்; அதுபோல, திராவிடன், வங்காளி, காஷ்மீரி என யார் வேண்டுமானாலும் ஆரியராகலாம்.

திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட நிலம் சார்ந்த மக்களைக் குறிக்கும் சொல், ஆரியர் என்பது வாழ்வின் நோக்கத்தை அறிந்த மக்களைக் குறிக்கும் சொல், இதைப் புரிந்துகொள்வது அவசியம். சில நேரங்களில், விந்திய மலைக்கு மேலே இமயம் வரையுள்ள பகுதி “ஆர்யாவர்த்தம்” என அழைக்கப்பட்டதையும் அறிகிறோம் (மனு ஸ்மிருதி 2.22). வாழ்வின் நோக்கம் அறிந்த ஆன்றோர்கள், பாரதத்தின் புனித ஸ்தலங்களில் தங்களின் வாழ்க்கையை அமைப்பதற்காக, பகவானின் லீலைகளோடு தொடர்புடைய புண்ணிய நதிகளான கங்கையும் யமுனையும் பாயக்கூடிய நிலப்பரப்புகளிலும் இமயமலையிலும் தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டனர். இதனால் சில நேரங்களில், அப்பகுதிகள் ஆர்யாவர்த்தம் என அழைக்கப்படுகின்றன. ஆனால் ஆரியர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ இனத்தையோ சார்ந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை.

ஆரிய திராவிட இனப் பாகுபாடு என்பது உண்மையாக இருந்திருந்தால், ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் ஏதேனும் ஒரு போராவது வரலாற்றில் நிகழ்ந்திருக்க வேண்டும்: ஆனால் அதுபற்றிய எந்தவொரு குறிப்பையும் நாம் எங்கும் காண்பதில்லை. மாறாக, முகலாயர்கள் வந்தபோதும் ஆங்கிலேயர்கள் வந்தபோதும் பல்வேறு போர்கள் நிகழ்ந்துள்ளதைக் காண்கிறோம்.

பொய்யான கருத்துகள் ஏன், எப்படி வந்தன?

ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலிருந்து பல்வேறு உயர் மதிப்புடைய பொருட்களை இறக்குமதி செய்துவந்த காரணத்தினால், 18ஆம் நூற்றாண்டில், தொன்மையான பொற்கால வரலாற்றினை இந்தியாவில் கண்டறிய முடியுமென பல ஐரோப்பிய அறிஞர்கள் கருதினர். இதனால் ஆரம்பத்தில் இந்தியர்களை மிகவுயர்ந்த ஸ்தானத்தில் வைத்த ஐரோப்பியர்கள், காலப்போக்கில், இந்தியர்களை அடக்கியாள விரும்பியபோது, அந்த உயர்ந்த ஸ்தானம் தங்களிடமிருந்து வந்ததாக (இந்தோ-ஆரியன்) படிப்படியாக கட்டுக்கதைகளை அவிழ்க்கத் தொடங்கினர்.

ஐரோப்பாவில் வேரூன்றிக் கிடந்த இன அடையாளத்தினை (ஜெர்மானியம், யூத வெறுப்பு, இன அறிவியல் ஆகியவற்றினை) இந்திய மக்களுடன் தொடர்புபடுத்தி, இந்தியாவின் புனித இலக்கியங்களை திரித்துப் பொருள்கூறத் தொடங்கினர். இந்தோ-ஆரிய இனக் கோட்பாடு ஜெர்மனியில் நாஸிகளின் காலத்தில் பேரழிவினை உண்டாக்கியது. இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர், இதனை ஒழிக்க ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பெரும் பிரயத்தனம் செய்தனர்.

ஆரிய என்பது சமஸ்கிருத இலக்கியங்கள் நன்றாக அறிந்திருந்த ஒரு சொல்; 18ஆம் நூற்றாண்டின் இறுதியில், மாக்ஸ்முல்லர் (1823-1900) அதனை ஒரு குறிப்பிட்ட மொழிக் குடும்பத்தை குறிக்கும் சொல்லாகவும், அவற்றைப் பேசும் மக்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தினார். ஆனால் வெகு விரைவில் மொழியியல் என்பது இனவாதத்தின் ஊற்றுக்கண்ணாக மாறி, ஆரிய இனமாக காலனிய ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து பாரம்பரியமான இந்திய சமுதாயத்தினை பிரிக்கும் முயற்சியை அவர்கள் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இயங்கிய மதப் பிரச்சார அமைப்புகள் திராவிட இன அடையாளத்தை உருவாக்கி, தமிழ்ப் பண்பாட்டை பாரத பாரம்பரியத்திலிருந்து வலுக்கட்டாயமாக துண்டித்தனர்.

இந்து, முஸ்லிம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் போலவே, இந்த ஆரிய, திராவிட இனவாதம், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டபோது, பாரத மக்களை பிரித்தாளும் காரணத்திற்காக ஆங்கிலேயர்களால் கையாளப்பட்ட ஒரு சூழ்ச்சியாகும்; ஆரியர்களால் அடக்கியாளப்பட்டவர்கள் என்றும், வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றும் கூறி திராவிடர்களுக்கு பரிந்துபேசுவதுபோல பேசி, ஆங்கில ஏகாதிபத்திய வாதிகள் மக்களை வஞ்சிக்க முயன்றனர்.

பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் ஆரிய திராவிட இனவாதத்திற்கு எதிரான ஆதாரங்களை தெளிவாக வழங்கியுள்ள போதிலும், பல்வேறு தலைவர்கள் தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வலுசேர்க்கும்பொருட்டு, இனவாதத்தினை இன்றும் மக்களின் மனங்களில் விதைத்து வருகின்றனர். ஆரியர்கள் இன்றைய ஜாதி அடிப்படையிலான பிராமணர்கள் என்றும், திராவிடர்கள் பிராமணர் அல்லாதவர்கள் என்றும் நாஸ்திகர்கள் கூறி வருகின்றனர்.

திராவிடர்களை ஆரியர்கள் தென்னிந்தியாவிற்கு விரட்டினர் என்பதும் ஆரியர் என்பது உயர்ஜாதியைக் குறிக்கும் சொல் என்பதும் உண்மையாக இருந்தால், வட இந்தியா முழுவதும் உயர்ஜாதியினர் மட்டுமே இருக்க வேண்டும்; ஆனால் அங்கும் சமுதாய வேற்றுமைகள் இருப்பது ஏன்? பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் சமுதாய வேறுபாடுகள் பாரதம் முழுவதும் (உண்மையில் உலகம் முழுவதும்) இருந்தன என்பதே உண்மை.

இவை ஒருபுறம் இருக்க, திராவிடர்களும் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களே என்றும், அவர்கள் மத்திய தரைக் கடற் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும், குமரிக் கண்டமே திராவிடர்களின் தாயகம் என்றும், வெவ்வேறு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. ஒவ்வொருவரும் அவரவர்கள் கற்பனையில் தோன்றியதைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழர்களிடம் கொண்டு வரப்பட்ட திராவிடக் கருத்துகள்

1838இல் மதப் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்து, அதே பிரச்சாரத்திற்காக தமிழ் மொழியைக் கற்ற ராபர்ட் கால்டுவேல் என்பவருக்கு முன்பாக, இந்தியாவைச் சார்ந்த ஆச்சாரியர்களோ மேக்ஸ்முல்லரைப் போன்ற அறிஞர்களோ, யாரும் திராவிட இனவாதம் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் சார்ந்த மொழிகளையும் அதன் மக்களையும் திராவிட என்னும் இன அடையாளத்தினால் முதன்முதலாக பிரித்தவர் அவரே என்று விக்கிபீடியா கூறுகிறது, அவரது ஆய்வுகளும் பெரும் சர்ச்சைக்குரியவை.

தமிழக வரலாற்றினையும் திராவிட எண்ணங்கள் எவ்வாறு மக்களிடையே வந்தன என்பதையும் யாரேனும் சற்று ஆராய்ந்தால், இவையனைத்தும் அரசியல் சுயநலனிற்காக கொண்டு வரப்பட்டவை என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

தோமாவைப் பார்த்த பின்னரே தமிழ் மக்கள் உடையணியத் தொடங்கினர் என்றுகூறி தமிழர்களைக் கேவலப்படுத்தும் கால்டுவேலை மதித்துப் போற்றும் தமிழறிஞர்கள், திராவிட வேதம் என்று அறியப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தினையும் கவிதைகளில் எல்லாம் தலைசிறந்ததான கம்ப இராமாயணத்தையும் புறக்கணிக் கின்றனர்; இதிலிருந்து இவர்களின் எண்ணம் இனவாதம் அல்ல, மதவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் திணிப்பதற் காக எடுக்கப்பட்ட இனவாத யுக்தி என்பதை அறியலாம். தமிழ்மீது உண்மையான பற்று இருந்தால், ஏன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தினையும் கம்ப இராமாயணத்தையும் போற்றுவதில்லை? 10,000க்கும் மேற்பட்ட செய்யுள்களைக் கொண்டதும் தலைசிறந்த தமிழறிஞர்களால் இணையற்ற இலக்கியமாகக் கருதப்படுவதுமான கம்ப இராமாயணத்தை இயற்றிய கம்பரின் பெருமைகள் வெளியே வருவதில்லை; அவரை திட்டமிட்டு மறைக்கின்றனர், சிலர் நிந்திக்கவும் செய்கின்றனர். ஏன்? முழு தென்னிந்தியாவும் திராவிட தேசம் என்னும் பட்சத்தில், தமிழர்களை மட்டும் திராவிடர்களாக கருதி, தமிழ்நாட்டில் மட்டும் இன வேறுபாடு பார்க்கப்படுவது ஏன்?

வேத கலாசாரமும் ஆரிய பண்பாடும் இந்தியா முழுவதும், உண்மையில் உலகம் முழுவதும் இருந்து வந்துள்ளது. ஆரியர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்னும் வாதம் முற்றிலும் பொய்யானதாகும். மாறாக, பாரதத்தில் வாழ்ந்த ஆரியர்களே சில காலக்கட்டங்களில் ஐரோப்பாவிற்குச் சென்றதாக, அதாவது, மன்னர் யயாதியின் மகன்களில் ஒருவர் கிரேக்க நாட்டிற்கும் மற்றொருவர் துருக்கி நாட்டிற்கும் சென்றதாக நாம் மஹாபாரதத்திலிருந்து (ஆதி பர்வம் 85.34) அறிகிறோம்.

தலைசிறந்த தமிழறிஞர்களால் இணையற்ற இலக்கியமாகக் கருதப்படும் கம்ப இராமாயணத்தை இயற்றிய கம்பரின் பெருமைகள் திட்டமிட்டு மறைக்கப்படுவது ஏன்?

வேத நூல்களில் திராவிடக் குறிப்புகள்

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதி திராவிட தேசம் என்று அறியப்பட்டு வந்ததை பல்வேறு வேத இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. யோ ஸௌ ஸத்யவ்ரதோ நாம ராஜர்ஷிர் த்ரவிடேஸ்வர:, “சத்தியவிரதன் திராவிட தேசத்தின் சீரிய மன்னராவார்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (9.1.2) கூறுகிறது. மேலும், விஷ்ணுவின் மத்ஸ்ய அவதாரம், வைகை நதியிலிருந்து உருவெடுத்ததாக ஸ்ரீமத் பாகவதம் (8.24.12) கூறுகிறது. விஷ்ணுவினால் முதலையிடமிருந்து விடுவிக்கப்பட்ட கஜேந்திரன், பூர்வீகத்தில் ஒரு வைஷ்ணவர், பாண்டிய நாட்டு அரசர், அவரது நாடு திராவிட தேசத்தில் உள்ளது, மற்றும் பூர்வீக வாழ்வில் அவரது பெயர் மாமன்னர் இந்திரத்யும்னர் என்று ஸ்ரீமத் பாகவதம் (8.4.7) கூறுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டத்தில் (10.79.11–15), பகவான் பலராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது, தென்பகுதியிலுள்ள திராவிட தேசத்தின் வேங்கடமலை, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ரிஷபமலை, தென்மதுரை, சேதுபந்தம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து, காவேரி நதியில் நீராடியதாக கூறப்படுகிறது. மேலும், கலி யுகத்தில் பல்வேறு நாராயண பக்தர்கள் திராவிட தேசத்தில் தோன்றுவர் என்றும், திராவிட தேசத்து புண்ணிய நதிகளான தாமிரபரணி, கிருதமாலா (வைகை), பயஸ்வினி (பாலாறு), காவேரி, மகாநதி ஆகிய நதிகளின் நீர்களை பருகுபவர்கள் கிருஷ்ணரின் தூய பக்தர்களாக மாறுவர் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (11.5.38–40) உரைக்கின்றது.

திராவிடன் என்னும் பெயர் ஆரியர்களுக்கு உரித்தானதல்ல என்றால், கிருஷ்ணருடைய மகன்களில் ஒருவருக்கும் நவயோகேந்திரரில் ஒருவருக்கும் திராவிடன் என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்? ஸ்ரீல பிரபுபாதரும் தனது சீடர்களில் இருவருக்கு திராவிடன் என்று பெயர் சூட்டியுள்ளார் (பஞ்ச-திராவிட ஸ்வாமி, திராவிட தாஸ்). இந்தியாவின் பல்வேறு பகுதிகளைப் பட்டியலிட்டு தேசிய கீதம் இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் திராவிடத்தினை (உத்கலம், பஞ்சாப் போன்ற இதர பகுதிகளுடன் இணைத்து) ஒரு பகுதியாகவே குறிப்பிடுகிறார், இனமாக அல்ல.

தமிழ் நூல்களில் ஆரியக் குறிப்புகள்

ஆரியர் என்னும் சொல், சங்க இலக்கியம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, தமிழ் சமுதாயத்தில் எவ்வித இனரீதியிலான பொருளும் இல்லாமலே பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில உதாரணங்கள் இங்கே:

திருமூலர் திருமந்திரத்தில் (1.118), சிவபெருமானை ஞானகுருவாக ஏத்திப் பாடுகையில், ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே என்கிறார். மாணிக்கவாசகரும் திருவாசகத்தில், பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் என்று சிவபெருமானைப் புகழ்கிறார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிக முக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர், தீண்டத்தகாதோர் என ஒடுக்கப்பட்ட குலத்தில் பிறந்த ஆழ்வாரான திருப்பாணாழ்வாரை “வேதாந்த ஆரியன்” என அழைக்கிறார். திருப்பாணாழ்வார் பாடிய பத்துப் பாடல்களில் வேதத்தின் சாரமே அடங்கிவிட்டதாக அவர் கூறுகிறார்.

மேலும், சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழ் சமுதாயத்தின் ஆன்மீகத் தன்மை, வேதப் பண்பாட்டினையே மையமாகக் கொண்டுள்ளது. சங்க இலக்கியமான புறநானூறு, வேதங்கள் நான்கு என்றும், அவை ஆறு அங்கங்கள் கொண்டவை என்றும், சிவபெருமானின் நாவினை விட்டு நீங்குவதே இல்லை என்றும் கூறுகின்றது (புறநானூறு, 166.1).

மற்றொரு சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சி, பழமையான தமிழ் நகரங்களில் அந்தணர்கள் வேதங்களை இசையுடன் பாடியதைச் சுட்டிக் காட்டுகிறது (மதுரைக் காஞ்சி, 655-6). வேதங்களைப் பேணியதால் அந்தணர்கள் தமிழகத்தில் மதிக்கப்பட்டனர் என்று பரிபாடல் (9:12-13) உரைக்கிறது.

கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் செல்லும் வழியில், ஓர் அந்தணரைச் சந்தித்ததையும், அவர் முக்திக்கான பல்வேறு க்ஷேத்திரங்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்ததையும், நாராயணரை வழிபடுவதற்கான அஷ்டாக்ஷர மந்திரத்தினை வழங்கியதையும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். திராவிட தேசத்தின் அந்தணர் வீடுகளில் வளர்க்கப்பட்ட கிளிகள்கூட வேத உச்சாடனம் செய்வதை பெரும்பாணாற்றுபடை (300-1) விவரிக்கின்றது:

வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்

மறைகாப்பாளர் உறை பதி

வேத வேள்வியின் உருவமாகவும் செயல்வடிவமாகவும் பகவான் விஷ்ணுவை விவரிக்கும் அழகிய பாடல் ஒன்று பரிபாடலில் (2:60 68) உள்ளது. இருங்கோவேள் எனும் அரசனின் குலத்தில் முதலில் தோன்றிய மன்னன் வேள்விக் குண்டத்திலிருந்து தோன்றியதாக புறநானூறு (201:8 12) கூறுகிறது.

திராவிட பூமியின் பெருமைகள்

வரலாற்றை நாம் உற்றுநோக்கினால், புகழ்பெற்ற நான்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆச்சாரியர்களான இராமானுஜர், மத்வர், நிம்பார்கர், விஷ்ணு ஸ்வாமி ஆகியோர் உட்பட ஆதிசங்கரரும் திராவிட தேசத்தில் தோன்றியவர்கள் என்பதை உணரலாம். அவர்கள் யாரும் இந்த ஆரிய திராவிட இனப் பாகுபாட்டினைக் கொண்டு வரவில்லையே! ஆரியப் பண்பாடு என்று இன்றைய திராவிட மக்களால் கூறப்படும் வேதப் பண்பாட்டினை இந்தியா முழுவதும் பரப்பிய ஆச்சாரியர்கள் அனைவரும் திராவிட தேசத்தைச் சார்ந்தவர்கள். இத்தகு ஆச்சாரியர்களை திராவிட தேசத்தின் மணிமகுடங்களாக ஏற்று புகழ்வதற்கு பதிலாக, அவர்களையும் ஆரியர்கள் என்று கூறி ஒதுக்க முயற்சி செய்யும் இன்றைய நாஸ்திக பிரிவினைவாதிகளை என்னவென்று கூறுவது!

பக்தி தேவியையும் திராவிட தேசத்தில் பிறந்தவளாக ஸ்ரீமத் பாகவத மஹாத்மியம் விவரிக்கின்றது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவரும் திராவிட மன்னர்கள் என்று அறியப்படுகின்றனர்; அவர்கள் ஆரிய திராவிட இனப் பாகுபாட்டினைப் பார்த்திருந்தால், இன்றைய பிரிவினைவாதிகளால் ஆரியப் பண்பாடு என்று கருதப்படும் பற்பல கோயில்களைக் கட்டியிருப்பார்களா? உண்மையாகப் பார்த்தால், வடஇந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகமான அளவில் பிரம்மாண்டமான கோயில்கள் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளன. கோயில்களைக் கட்டியது மட்டுமின்றி, அன்னிய படையெடுப்புகளிலிருந்து அக்கோயில்களை காத்தும் இருக்கிறார்கள். கோயில்கள் ஆரிய பண்பாடு, அது நமக்குத் தேவையில்லை என்றால், அவர்கள் அவற்றைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? நாம் அவர்களைவிட அறிவில் முதிர்ச்சியடைந்தவர்களா? அல்லது அறிவுகுறைந்தவர்கள் நம்மை ஆண்டு வந்தார்களா? அல்லது அந்த மன்னர்கள் அனைவரையும் ஆரியர்கள் என்று கூறி ஒதுக்கிவிடலாமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஆரிய திராவிட வேற்றுமைகள் முன்பு இருக்கவில்லை

ஆரிய திராவிட வேற்றுமைகள் மக்கள் மத்தியில் இருந்ததில்லை; பாரதம் முழுவதும் ஒரே பண்பாடு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் வளர்ந்துள்ள ஆரிய திராவிட இனப்பாகுபாடு, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் தொன்றுதொட்டு இருந்துவந்த தத்துவ ரீதியிலான வாத விவாதங்களை மாற்றி, சிவபெருமான் திராவிடக் கடவுள், விஷ்ணு ஆரியக் கடவுள் என்றெல்லாம் பிதற்றும் அளவிற்கு இனவாதமாக மாற்றிவிட்டது.

தமிழ் மன்னர்கள் தம்மை விஷ்ணு வழியில் வந்தவர்கள் அல்லது விஷ்ணு அம்சம் கொண்டவர்களாகக் கருதினர் என்று பெரும்பாணாற்றுப்படை (29-30) கூறுகிறது. விஷ்ணு சக்கரதாரியாகவும் கருடனைத் தமது கொடியாகவும் வாகனமாகவும் கொண்டவராக பரிபாடலில் (29 30, 3:15 18) காட்டப்படுகிறார். கலித்தொகையில் (103:74 75, 104:78) திருமாலின் மகிமைகளைக் கூறி ஆய்மகளிர் நடத்திய கலைநிகழ்ச்சிகளும் விவரிக்கப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் விஷ்ணுவின் பல அவதாரங்கள் பேசப்படுகின்றன. வராஹ அவதாரத்தின் மூலமாக விஷ்ணு உலகை காப்பாற்றியதைப் பரிபாடல் (2:16 19) புகழ்கிறது. வாமனராகத் தோன்றிய திருமால் உலகை அளந்த நிகழ்ச்சியினை முல்லைப்பாட்டு (3) கூறுகிறது. நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவைக் கொன்று பிரகலாதனைக் காப்பாற்றியதும் பரிபாடலில் (4:10 21) பாடப்பட்டுள்ளது. அறப் பண்பாடுகளை நிறைவேற்றத் தவறிய அரசர்களை பரசுராமர் கொன்றதை அகநானூறு (220:5 9) புகழ்கிறது. இராமாயணம் குறித்தும் மஹாபாரதம் குறித்தும் பல்வேறு குறிப்புகள் எங்கும் காணப்படுகின்றன, இக்காவியங்கள் சங்க காலந்தொட்டு தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளன என்பதை இது நமக்கு நன்றாகப் புலப்படுத்துகிறது.

குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மஹாபாரத யுத்தத்தில், சேர அரசன் உதியஞ் சேரலாதன் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பெருஞ்சோறு அளித்தான் எனும் செய்தி புறநானூற்றில் (2:13 16) கூறப்படுகிறது, இனபேதங்கள் இருக்கவில்லை என்பதற்கு இதைக் காட்டிலும் சான்று வேண்டுமோ! அங்கே, முரஞ்சியூர் முடிநாகராயர் கூறுகிறார்:

ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்து ஒழிய

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

சேரன் இரும்பொறையை குறுங்கோழியூர் கிழார் பாடும்போது, அவனது முன்னோர்கள் இந்த தேசத்தை ஒரு குடையின்கீழ் ஆண்ட சூரிய வம்ச அரசர்களின் வாரிசுகள் என்று குறிப்பிடுகிறார் (புறநானூறு 17:18).

நள-தமயந்தி, சிபிச் சக்கரவர்த்தி என பல இதர வரலாறுகளும் வேத இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் என இரண்டிலும் காணப்படுகின்றன.

வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் கங்கையும் அதைச் சார்ந்த காட்சிகளும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணப்படும் காட்சிகள். இராமேஸ்வரம் எனும் கோடித்துறைக்கு புனித யாத்திரிகர்கள் வருவதும் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது (அகநானூறு 70:13 14). குமரியையும் இமயத்தையும் இணைத்தே பேசுவது சங்க இலக்கியத்தில் (புறநானூறு – 67:6 7; 380:12) ஒரு சொலவடையாகவே இருப்பதைக் காண்கிறோம்:

தென்குமரி வடவெருங்கல்

குணகுட கடலா எல்லை

இவ்வாறாக, ஆரிய திராவிட இனப் பாகுபாடு என்பது, தமிழ் வரலாற்றிலோ சமுதாயத்திலோ இல்லை என்பதையும், திராவிடர்கள் ஆரியப் பண்பாட்டிலிருந்து பிரித்தெடுக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருந்தனர் என்பதையும் நாம் அறிகிறோம். இல்லாத இனப் பாகுபாட்டினை மேற்கத்திய நாட்டினரின் வழியில், நவீன தமிழ் ஆர்வலர்களும் நாஸ்திகர்களும் இன்றும்கூட நம்மீது திணித்துக் கொண்டுள்ளனர்.

பாகுபாடுகளைத் தவிர்ப்போம்

இனப் பாகுபாடு மட்டுமின்றி, இதர பாகுபாடுகளையும் பார்ப்பவர்கள் அனைவரையும் யாம் பகவத் கீதையின் பக்கம் சற்று பார்க்குமாறு வேண்டுகிறோம். திராவிட தேசம் உட்பட பாரதமெங்கும் பரந்துவிரிந்திருந்த வேத பண்பாட்டின் சீரிய அறநூலான பகவத் கீதை, “நாம் இந்த உடலல்ல, ஆன்மீக ஆத்மாக்கள், கிருஷ்ணருடைய நித்திய சேவகர்கள்,” என்னும் அறிவுரையினை நமக்கு வழங்குகின்றது. உடல் ரீதியிலான எல்லாவித அடையாளங்களையும் கைவிட்டு செய்யப்படும் பக்தியே தூய பக்தி என்று நாரத பஞ்சராத்ரம் குறிப்பிடுகிறது. மேலும், உலகின் எந்த இனத்தைச் சார்ந்தவரும் எந்த ஜாதியைச் சார்ந்தவரும், கிருஷ்ண பக்தியில் ஈடுபடுவதால் பக்குவமடைய முடியும் என்று கிருஷ்ணர் கீதையில் (9.32) உறுதியளிக்கின்றார்.

எனவே, இனக் குறைபாடுகள் இருந்தால்கூட பக்குவமடையலாம் என்று கீதை கூறும்பட்சத்தில், இல்லாத இன வேறுபாட்டின் அடிப்படையில், நாம் ஏன் நம்மைப் பிரித்துக்கொள்ள வேண்டும்? ஏழை, பணக்காரன், உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி, படித்தவன், படிக்காதவன் என அனைவரும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடலாம், கிருஷ்ணரின் திருநாமத்தினை உச்சரிக்கலாம், வாழ்வின் மிகவுயர்ந்த முன்னேறிய நிலையான ஆரிய நிலையினை அடையலாம்.

“எம்பெருமானே, நாயுண்ணும் சண்டாளனைப் போன்ற இழிவான குலத்தில் பிறந்திருப்பினும், உமது நாமத்தை சொல்பவன், தன்னுணர்வின் மிகவுயர்ந்த நிலையில் இருக்கிறான். அத்தகையவன், ஏற்கனவே எல்லாப் புனித ஸ்தலங்களில் நீராடி, எல்லா வேத இலக்கியங்களையும் பன்முறை கற்று, வேத சடங்குகளின்படி எல்லாவித யாகங்களையும் தவங்களையும் செய்து முடித்தவனாகவே இருக்கவேண்டும். அத்தகையோன் ஆரிய பரம்பரையில் மிகச் சிறந்தவனாக கருதப்படுகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.33.7)

ஆரியன் என்பது ஜாதி முறைக்கு உட்பட்டதாகவோ இனப் பாகுபாடிற்கு உட்பட்டதாகவோ இருந்தால், ஸ்ரீமத் பாகவதம் சண்டாளக் குலத்தில் பிறந்தவனை ஆரிய பரம்பரையில் சிறந்தவன் என்று ஏன் உரைக்க வேண்டும்? தான் பிறந்த தேசம், அல்லது இனத்தின் அடிப்படையில் ஒருவன் தன்னை மதிப்பு மிக்கவனாக நினைத்தால், அவன் கழுதையைக் காட்டிலும் உயர்ந்தவன் அல்ல என்று ஸ்ரீமத் பாகவதம் (10.84.13) கண்டிக்கின்றது. அவ்வாறு இருக்கையில், ஆரியன் என்பது ஓர் இனமாக இருந்திருந்தால், கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனிடம் ஆரியனாகச் செயல்படும்படி கூறுகிறார்?

எனவே, நவீன வரலாற்று ஆய்வாளர்களின் கற்பனைக் கருத்துகளை அணுகாமல், சாஸ்திரங்களின் கூற்றினை ஏற்பது சாலச் சிறந்ததாகும். பெரும்பாலான மக்கள் வாழ்வின் உண்மையான குறிக்கோள் பூரண உண்மையான விஷ்ணுவை உணர்வதே என்பதை அறிவதில்லை. இதனை அறிந்தவர்கள் ஆரியர் என்றும், அறியாதவர்கள் ஆரியர் அல்லாதோர் என்றும் அழைக்கப்படுவதை உணர்ந்து, நாமும் வாழ்வின் குறிக்கோளை அறிவதற்கு முயற்சி செய்வோம்.

ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளும் உடல் சார்ந்த அடையாளங்களாகும்; ஆத்மாக்களான நாம் இந்த அடையாளங்களிலிருந்து விடுபடுவோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives