உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பசு மாமிசம் உண்ணுதல், மதுவிலக்கு போராட்டங்கள், ஜல்லிக்கட்டிற்கான தடை, ஐய்யப்பன் கோயிலில் பெண்கள், கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு ஆகியவை சமீபத்திய செய்தித்தாள்களை ஆக்கிரமித்த செய்திகளில் சில. இவற்றை உதாரணமாகக் கொண்டு மக்களிடையே இழையோடும் நாஸ்திகத்தைச் சுட்டிக்காட்டும் கட்டுரை.

கடவுளின் இருப்பை மறுப்பதே நாஸ்திகம் என்று பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். அஃது உண்மையே என்றபோதிலும், நாஸ்திகத்தின் உணர்வுகள் நவீன கால மக்களின் இரத்தத்தில் பல்வேறு போர்வைகளில் ஒன்றோடொன்றாக கலந்துள்ளன. அத்தகு போர்வைகளை நாம் அடையாளம் காணாவிடில், காலப்போக்கில் நாஸ்திகம் மேன்மேலும் வலுப்பெற்று விடும். அத்தகு போர்வைகளில் ஒன்று: உரிமைகள்.

உரிமைகள் என்றால் என்ன?

உரிமைகள் என்பது நியாயத்தின் அடிப்படையில் ஒருவருக்கு மரபு ரீதியாக அனுமதிக்கப்படும் விஷயங்களைக் குறிக்கின்றன. தற்போதைய உலகில், மரபுகள் அனைத்தும் சட்டங்களாக மாற்றப்பட்டு வருவதால், சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுபவையும் உரிமைகளின் பிரிவில் அடங்குகின்றன. உதாரணமாக, தந்தையின் சொத்தினை அனுபவிப்பதற்கான உரிமை மகனுக்கு மரபு ரீதியாக வந்து கொண்டுள்ளது. நவீன காலத்தில், (இந்தியாவில்) 18 வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தத்தமது பணியினை சிறப்பாக ஆற்றுவதற்கும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் மற்றவர்களின் தொல்லையின்றி நடமாடுவதற்கும் இந்த உரிமைகள் உதவி செய்கின்றன.

உரிமைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதிலும் அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் இன்றைய உலகம் வரைமுறையற்ற உரிமைகளுக்காக போராடி வருகிறது. மனித சமுதாயம் தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்டு வாழ வேண்டும் என்றும் அத்தகு தர்மம் மனித சமுதாயத்தில் இல்லையெனில் அது மிருக சமுதாயத்திற்கு சமம் என்றும் யாம் பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, புலனின்பமே பிரதானம் என்று வாழும் இன்றைய நவீன சமுதாயம், உரிமைகள் என்ற பெயரில் எல்லாத் தரப்பட்ட புலனின்ப விஷயங்களையும் ஊக்குவிக்கின்றது. இதன் விளைவாக, ஒவ்வொரு நாட்டிலும் உரிமைகள் வேறுபடுகின்றன. அதாவது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் உரிமையாக கருதப்படும் ஒரு செயல், மற்றொரு நாட்டில் குற்றமாக கருதப்படுகின்றது. உதாரணமாக, ஓரினச் சேர்க்கை என்பது சில நாடுகளில் உரிமையாகவும் சில நாடுகளில் குற்றமாகவும் கருதப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருப்பதால், இந்த உரிமைகளை யார் நிர்ணயிப்பது என்பதை நாம் யோசித்தாக வேண்டும்.

உரிமைகளை நிர்ணயிப்பது யார்?

நவீன சமுதாயம் “அனைவருக்கும் சம உரிமை” என்னும் பொய்யான முழக்கத்துடன் உரிமையுணர்வினை மனித சமுதாயத்தில் தூண்டி வருகிறது. இதன் காரணத்தினால், ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் நன்மையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தன்னுடைய சொந்த காரியம் நிறைவேறினால் போதும் என்ற மனப்பான்மையில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களுடைய உரிமை என்னவென்றே அறியாமல் போராடி வருகின்றனர். ஒருவனுடைய உரிமை என்ன என்பதை பகவத் கீதையில் (2.47) கிருஷ்ணர் கூறுகிறார், கர்மண்யேவாதிகாரஸ் தே, “உனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமையைச் செய்வதற்கு உனக்கு உரிமை உண்டு.”

வேறு விதமாகக் கூறினால், நமக்கு நாமே ஒரு விஷயத்தை முடிவு செய்து அதனை உரிமை என்று நிர்ணயித்தால், அஃது உண்மையில் உரிமையாகாது. நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய சமுதாயம் மற்றும் ஆன்மீக நிலைகளுக்கு ஏற்றாற்போல, பல்வேறு கடமைகள் சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. உண்மையில், மேற்குறிப்பிட்ட ஸ்லோகத்தின் அடுத்த பகுதியில், அந்த கடமைகளின் விளைவுகளில்கூட நமக்கு உரிமை கிடையாது என்று கிருஷ்ணர் கூறுகிறார், மா பலேஷு கதாசன, “ஆனால், செயல்களின் பலன்களில் உனக்கு உரிமை இல்லை.” இவ்வாறாக, கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன, கடமைகளைப் புறக்கணிப்பதற்காக அல்ல.

அதாவது, பிராமணர்களுக்கென்று சில கடமைகள், சூத்திரர்களுக்கென்று சில கடமைகள், பெண்களுக்கென்று சில கடமைகள், சந்நியாசிகளுக்கென்று சில கடமைகள், கிருஹஸ்தர்களுக்கென்று சில கடமைகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட கடமைகள் சாஸ்திரங்களில் (குறிப்பாக, மனு ஸம்ஹிதையில்) விதிக்கப்பட்டுள்ளன. அந்த கடமைகளிலிருந்து விலகுவோர் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாது. உதாரணமாக, சந்நியாசியாக வாழும் ஒருவர் புலன் கட்டுப்பாடு என்ற கடமையுடன் வாழ வேண்டும்; “பாலுறவில் ஈடுபட எனக்கும் உரிமை உள்ளது” என்று கூறி, அந்த சந்நியாசி அத்தகு உறவில் ஈடுபட்டால், அஃது எவ்வகையில் நியாயம்? அனைவரும் அறிந்த இந்த உதாரணத்தின் மூலமாக, யாம் தெரிவிப்பது என்னவெனில், உரிமைகள் என்பது அனைவருக்கும் சமமானதல்ல; ஒவ்வொருவரின் சமுதாய மற்றும் ஆன்மீக நிலைகளுக்குத் தகுந்தாற்போல உரிமைகள் வகுக்கப்படுகின்றன. ஒரு கிருஹஸ்தன் பாலுறவில் (தனது மனைவியுடன்) ஈடுபடுவதற்கு உரிமை உண்டு, ஆனால் அதே உரிமை சந்நியாசிக்குக் கிடையாது.

கடமைகளின் அடிப்படையில் உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக, நவீன சமுதாயம் பல்வேறு போர்வைகளில் உரிமைகளை வழங்கி வருகிறது. இத்தகைய உரிமைகள், குறிப்பாக நவீன இந்திய சமுதாயத்தில் பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி வருகின்றன. மக்களுடைய பணத்தைச் சுரண்ட நினைக்கும் முதலைகளாக இருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் உரிமைகள் என்ற பெயரில் நாஸ்திகத்தை வளர்த்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. இன்றைய மக்கள் தங்களுடைய “உரிமைகள்” என்று நினைப்பவற்றில் பெரும்பாலானவை, இந்த நிறுவனங்களால் மனதளவில் கொடுக்கப்பட்ட உரிமைகளே, உண்மையான உரிமைகள் அல்ல.

 மாபெரும் பாவச் செயல்களை தனிமனித உரிமை என்ற பெயரில் ஊக்குவித்தல் நாஸ்திகத்திற்கு வழிவகுக்கின்றது.

தனிமனித உரிமையில் நாஸ்திகம்

மேலே யாம் விளக்கியபடி, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குறிப்பிட்ட கடமைகளும் உரிமைகளும் உள்ளன. ஆனால் இன்றைய சமுதாயத்திலோ, தனிமனித உரிமை என்ற பெயரில் அந்த தனிமனிதன் தனக்குத் தானே தீமை தரக்கூடிய செயல்களைச் செய்கிறான். இன்றைய சமுதாயம் முழுவதும் அசுர சமுதாயமாக மாறியிருப்பதால், செய்யக்கூடியவை யாவை, செய்யக்கூடாதவை யாவை என்பதை அறியாமல் இருக்கின்றனர் (பகவத் கீதை 16.7). பாவ புண்ணியங்கள், நல்லது கெட்டது, மறுபிறவி, கர்ம வினைகள் போன்றவற்றைப் பற்றிய அறிவு இத்தகைய தனிமனித உரிமையின் பேச்சுகளால் மறைக்கப்படுகின்றது, மக்களும் சற்றும் அறிவற்ற மூடர்களாகவே வாழ்கின்றனர்.

முதல் உதாரணம், பசு மாமிசம் உண்ணுதல். மாமிசம் சாப்பிடுபவர்கள் நரகத்திற்குச் செல்வர் என்பதும் அதிலும் குறிப்பாக (தாயைப் போன்று மதிக்கத்தக்க விலங்கான) பசுவின் மாமிசத்தைச் சாப்பிடுபவர்கள் கொடிய நரகத்தில் நீண்ட காலம் வைக்கப்படுவர் என்பதும் சாஸ்திரங்கள் உரைக்கும் உண்மை. ஆனால் இந்த உண்மையை மறைத்து மக்களை நாஸ்திகத்தின் இருண்ட கிணற்றில் தள்ளுவதற்காக தனிமனித உரிமை வலியுறுத்தப்படுகிறது. “எனது தட்டில் எந்த உணவு இருக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க வேண்டும்” என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் இது நடைமுறைக்கு உதவாது. தனக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறியாத ஒரு குழந்தை தனது தட்டில் “இது வேண்டும், அது வேண்டும்” என்று அடம் பிடிக்கலாம், ஆனால் குழந்தையின் நலனை விரும்பும் பெற்றோர்கள் சில உணவுகளைத் தடை செய்ய வேண்டியது அவசியம். அதுபோலவே அறியா குழந்தையைப் போன்ற மக்களின் தட்டுகளில் வைக்கப்படும் உணவினை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. பிரச்சனை என்னவெனில், சில வளர்ந்த முட்டாள்கள் தங்களுடைய குழந்தைத்தனத்தை “தனிமனித உரிமை” என்று நினைக்கின்றனர்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்: மனிதனின் உரிமையைப் பற்றி மட்டும் பேசுகின்றனர், அந்த மனிதனால் கொல்லப்படும் விலங்கிற்கு உரிமை ஏதும் இல்லையா? அந்த விலங்கிற்கு வாழ்வுரிமை கிடையாதா? என்னே விந்தை! உரிமை என்ற பெயரில் என்னே கபடத்தனம்! மாடுகளுடன் கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்குத் தடை, ஆனால் அதே மாடுகளைக் கொலை செய்து சாப்பிடுவது தனிமனித உரிமை! என்னவென்று சொல்வது!

இரண்டாவது உதாரணம், குடிப்பழக்கம். “குடி குடியைக் கெடுக்கும்” என்று எழுதி வைக்கின்றனர், குடியின் கேடுகள் என்ன என்பதை திருவள்ளுவரும் கள்ளுண்ணாமை என்னும் அத்தியாயத்தில் கூறுகிறார் (இந்த அத்தியாயமும் ஊன் உண்ணாமை என்னும் அத்தியாயமும் இன்றைய பாடப் புத்தகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன), சாஸ்திரங்களும் குடியின் விளைவுகளைப் பட்டியலிடுகின்றன. ஆனால் தங்களுடைய கஜானாவை நிரப்ப நினைக்கும் சில தொழிலதிபர்கள் மக்களைக் கெடுத்து சொத்து சேகரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், குடிப்பழக்கம் தனிமனித உரிமை என்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் குடியுங்கள் என்றும் விளம்பரம் செய்கின்றனர். மக்களும் மதிமயங்கி குடித்து குடித்து அறிவை இழக்கின்றனர்.

மூன்றாவது உதாரணம், நீலப் படங்களைப் பார்த்தல். பெரும்பாலான இளைஞர்களின் கையில் ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் அலைபேசி கருவி உள்ளது. அதில் பார்க்கக்கூடாத படங்களைப் பலரும் பார்த்து சீரழிந்து வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அங்கே மீண்டும் தனிமனித உரிமை என்று குரல் கொடுக்கின்றனர். தகாத படங்களைப் பார்த்தல் தகாத பாலுறவிற்கு வழிவகுக்கின்றன என்பதும், தகாத உறவினால் சமுதாயம் சீரழியும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள் (பார்க்க பகவத் கீதை அத்தியாயம் 1). ஆனால் நீலப் படங்களைத் தயாரிப்பதை தொழிலாகக் கொண்டவர்களும் அதை மற்றவர்கள் பார்ப்பதால் கோடிகளை அள்ளுபவர்களும், தனிமனித உரிமை என்று குரல் கொடுத்து அவற்றை அனைவரும் பார்ப்பதற்கு வழிவகுக்கின்றனர். நீலப் படங்களை அனுமதிக்கலாமா கூடாதா என்று பட்டிமன்றம் வைத்து வாதிடுகின்றனர், அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதிடுகின்றனர். ஆனால் இவர்களுடைய வாதங்கள் அனைத்தும் தனிமனித உரிமை என்பதைச் சார்ந்தே அமைகின்றன, யாரும் மனிதனின் உண்மையான நன்மையைக் கருத்தில் கொள்வதில்லை. வாதிடுபவர்களுக்கும் சரி, அந்த வாதங்களைக் கேட்பவர்களுக்கும் சரி–யாருக்குமே எந்தவோர் அடிப்படைக் கொள்கையோ தத்துவமோ கோட்பாடோ இல்லை என்பதுதான் வெட்கக்கேடு.

பசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.

பேச்சுரிமையில் நாஸ்திகம்

பேச்சுரிமையில் நாஸ்திகம் குறித்து யாம் அதிகம் கூற வேண்டிய அவசியமில்லை. வாய்க்கு வந்ததை யார் வேண்டுமானாலும் உளறலாம், கேட்டால் “பேச்சுரிமை” என்று பதில் சொல்வர். நாஸ்திகர்கள் இந்துக் கடவுள்களை நினைத்தபடி திட்டலாம், அதற்குத்தான் பேச்சுரிமை உள்ளதே. இந்த நாஸ்திகர்கள் யாரும் (குறிப்பாக தமிழ்நாட்டில்) அல்லாவைப் பற்றியோ இயேசுவைப் பற்றியோ கொஞ்சம்கூட வாய் திறக்க மாட்டார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை. ஆனால் இந்துக் கடவுள்களைத் திட்டும் அந்த நாஸ்திகனை யாரேனும் ஓர் ஆஸ்திகன் திட்டிவிட்டால், அங்கு தனிமனித உரிமை மீறல் வழக்கு வரும், பேச்சுரிமை என்பது காணாமல் போய்விடும். திட்டுபவனுக்கு பேச்சுரிமை உண்டு, திட்டுபவனைத் தட்டிக் கேட்பதற்கு பேச்சுரிமை கிடையாது.

 விதிக்கப்பட்ட கடமையைச் செய்வதே ஒருவனது உரிமை என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கின்றார்.

பெண்ணுரிமையில் நாஸ்திகம்

முன்னரே கூறியபடி, வேத பாரம்பரிய வழக்கத்தில் பெண்களுக்கென்று சில குறிப்பிட்ட கடமைகள் உள்ளன, அந்த கடமைகளைச் செய்வதற்கு பெண்களுக்கு உரிமைகளும் உள்ளன. ஆண்களின் செயல்களைப் பெண்களால் செய்ய இயலாது என்பதும் பெண்களின் செயல்களை ஆண்களால் செய்ய இயலாது என்பதும் இறைவனின் படைப்பில் இருக்கும் நிரந்தர தன்மை. ஆனால் சில செயல்களை இரு பாலராலும் செய்ய முடிகிறது என்பதால், எல்லா விதத்திலும் ஆண்களின் செயல்களுக்குப் போட்டியாக பெண்களைக் கொண்டு வர சிலர் நினைக்கின்றனர். பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்களை ஊக்குவித்து அவர்களை சூட்சுமமாக அனுபவிப்பவர்கள் பலர்.

இதுகுறித்து ஏராளமான கருத்துகளைச் சொல்லலாம் என்றபோதிலும், பெண்ணுரிமை என்ற பெயரில் புகுத்தப்படும் நாஸ்திகத்தை மட்டும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ஐய்யப்பன் கோயிலில் ஏன் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதும் மஹாராஷ்டிராவில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்பதும் தற்போது சர்ச்சைகளாக இருக்கும் விஷயங்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் சில குறிப்பிட்ட ஐதீக விதிமுறைகள் உள்ளன, அவற்றைப் புறக்கணித்தல் என்பது அந்த கோயிலின் வழிபாட்டு முறையையே புறக்கணிப்பதைப் போன்றதாகும். வேறு விதமாகக் கூறினால், கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுபவர்கள், அந்த சாமியிடம் பணிவுடன் இருக்க வேண்டுமே தவிர, உரிமை என்று கூக்குரல் எழுப்புவதால் எந்த நன்மையும் நிகழ்ந்துவிடாது. கடவுளையே நம்பாதவர்கள் கடவுளின் வழிபாடு இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது நியாயமா? இங்கே பெண்ணுரிமை என்று குரல் கொடுப்பவர்கள் பெரும்பாலும் கடவுளையே நம்பாத நாஸ்திகர்கள் என்பது கேவலமான உண்மை!

உரிமைகளைப் பற்றி பொருட்படுத்தாமல், ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைச் செய்தபடி, கிருஷ்ண பக்தியில் ஈடுபட வேண்டும்.

வழிபாட்டு உரிமையில் நாஸ்திகம்

கோயில்களுக்கு வருபவர்கள் கோயிலில் உள்ள விக்ரஹத்தில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காக, பாரம்பரிய உடையுடன் கோயிலுக்கு வருதல் சிறந்தது என்று எடுத்துரைத்து அதனை நெறிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தனிமனித உரிமை என்ற பெயரில், நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகவும் சிலர் வழக்கு தொடுத்து, கோயில்களில் பாரம்பரிய உடை என்னும் கட்டுப்பாட்டிற்கு தடை வாங்கியுள்ளனர். அதாவது, கடவுளை நாங்கள் எந்த உடையில் வேண்டுமானாலும் வந்து வழிபட எங்களுக்கு உரிமை உண்டு என்று குரல் கொடுக்கின்றனர்.

கடவுளுக்குப் பிடித்த மாதிரி கடவுளை வணங்குதல் ஆஸ்திகம். அதை விடுத்து உரிமை கோரி வழிபடுதல் சற்றும் நன்றன்று. இந்த மனப்பான்மை தடுத்து நிறுத்தப்படாவிடில், நாளை நாஸ்திகம் பல மடங்கு அதிகரித்து விடும். செருப்பு அணிந்து கோயிலுக்கு வர அனுமதி வேண்டும் என்று உரிமை கோருவர், குடித்து விட்டு கோயிலுக்கு வர அனுமதி வேண்டும் என்று உரிமை கோருவர், ஆணும் பெண்ணும் கட்டியணைத்தபடி வருவதற்கு உரிமை கோருவர், கோயிலில் கூத்தாட்டத்திற்கு அனுமதி வேண்டும் என்று உரிமை கூறுவர், இன்னும் எதற்கெல்லாம் உரிமை கோருவர் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது.

உரிமையிலிருந்து கடமைக்கு மாறுவோம்

உரிமைகளுக்கு மதிப்பு உண்டு, ஆனால் கடமைகள் உரிமைகளைக் காட்டிலும் உயர்ந்தவை. எந்தவொரு தனிமனிதனும் தனியாக வாழ்வதில்லை. நாம் அனைவரும் கூட்டாக சமுதாயத்தில் வாழ்கிறோம். இங்கே உரிமைகள் வலியுறுத்தப்பட்டால், உறவுகள் விரிசல் அடையும். பலமான சப்தத்துடன் டிவியைப் பார்க்க ஒருவருக்கு உரிமை இருக்கலாம், ஆனால் அது நம் வீட்டில் அல்லது அக்கம்பக்கத்து வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்றால், ஒருவர் தனது உரிமையை அங்கே உபயோகிக்கக் கூடாது. அமைதியாக வாழ்வதற்கு அக்கம்பக்கத்தினருக்கும் உரிமை உண்டு. அனைவரின் உரிமையையும் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த சமுதாயத்தின் நன்மைக்காக ஒவ்வொருவரும் தத்தமது கடமையை அறிந்து செயல்படுதல் உசிதமானதாகும்.

மக்களின் மிகவுயர்ந்த கடமை முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடுவதே என்று ஸ்ரீமத் பாகவதம் (1.2.6) தெளிவாக உரைக்கின்றது. அவரை வழிபடுவதற்கும் அதனால் உயர்ந்த கதியை அடைவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஸ்ரீமத் பாகவதம் (10.14.3) நம்மை பின்வருமாறு அறிவுறுத்துகின்றது: ஸ்தானே ஸ்திதா: ஷ்ருதி-கதாம் தனு-வாங்-மனோபிர், ஒவ்வொருவரும் தத்தமது சமூக நிலையில் இருந்தபடி (அதாவது, தமக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்தபடி), தமது உடல், மனம் மற்றும் வார்த்தைகளினால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு தூய பக்தித் தொண்டினை ஆற்ற வேண்டும், அதன் மூலமாக அந்த முழுமுதற் கடவுளையே நம்மால் வசியப்படுத்த முடியும்.

மேலும் பார்க்க :

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives