ஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

யதாஜ்ஞஸ் தமஸா யுக்த உபாஸ்தே வ்யக்தம் ஏவ ஹி

ந வேத பூர்வம் அபரம்  நஷ்ட-ஜன்ம-ஸ்ம்ருதிஸ் ததா

உறக்கத்தில் இருக்கும் மனிதன் தனது கனவில் தோன்றும் உடலை வைத்து தன்னை எவ்வாறு அடையாளம்கொள்கிறானோ, அவ்வாறே முந்தைய பாவ புண்ணியத்தினால் அவன் பெற்றுள்ள தற்போதைய உடலும் ஓர் அடையாளமே. இதில் அவனால் தனது முந்தைய வாழ்வையோ வருங்கால வாழ்வையோ அறிய முடிவதில்லை.” (ஸ்ரீமத் பாகவதம் 6.1.49)

தன்னை உணர்தல்

பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் காண்பவற்றை மறந்துவிடுகிறோம்.

அதுபோலவே, நமது முந்தைய பிறவிகளையும் நம்மால் நினைவில்கொள்ள இயலாது, அடுத்த பிறவியில் என்னவாக மாறப்போகிறோம் என்பதையும் அறிய இயலாது. ஆத்மாவாகிய நாம் கடந்த காலத்தில் இருந்தோம், நிகழ்காலத்தில் இருக்கின்றோம், இனி வருங்காலத்திலும் இருப்போம். இவ்வாறாக, ஆத்மாவாகிய நாம் நித்தியமாக இருக்கின்றோம் என்பது மட்டும் நிச்சயம். இதனையே கிருஷ்ணர் கீதையில், அர்ஜுனா, நான், நீ உட்பட இங்கே போர்க்களத்தில் கூடியிருக்கும் அனைவரும் கடந்த காலத்தில் இருந்தோம், நிகழ்காலத்தில் இருக்கின்றோம், இனி எதிர்காலத்திலும் இருப்போம்,” என்று கூறுகிறார். நான் நித்தியமானவன்” என்பதை அறிவதே ஆன்மீக வாழ்வின் அடிப்படையாகும்.

ஆத்மாவாகிய நாம் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை (ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்). உடல் அழிக்கப்படும்போது நாம் அழிக்கப்படுவதும் இல்லை (ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே).  உடலின் அழிவானது ஏற்கனவே நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. நமது குழந்தையான உடல் அழிந்துவிட்டது, அவ்வுடலை தற்போது உங்களால் காண இயலாது; வாலிப உடலும் அழிந்துவிட்டது, அதையும் இனி காண இயலாது; அதுபோலவே, நமது தற்போதைய உடல் அழிவடையும்போது நாம் வேறோர் உடலை பெறுகின்றோம். (ததா தேஹாந்தர ப்ராப்தி:).

முன்வினைப் பயனே நமது உடல்

ஆத்மா உடலைவிட்டுச் செல்லும்போது ஸ்தூல உடல் அழிந்துவிடுகிறது. ஸ்தூல உடலானது பௌதிகப் பொருட்களால் ஆனது, பௌதிகப் பொருட்களாலான அனைத்தும் இறுதியில் அழிவிற்குள்ளாகின்றது. இதுவே பௌதிகத்தின் தன்மையாகும். ஆனால் ஆத்மாவோ என்றும் அழிவுறுவதில்லை.

நாம் ஒவ்வோர் உடலாக மாற்றிக் கொண்டுள்ளோம். ஏன் பல்வேறு விதமான உடல்கள் இருக்கின்றன? ஆத்மாவாகிய நாம் பௌதிக குணங்களுடன் தொடர்புகொள்ளும்போது, அதன் ஆதிக்கத்தின் கீழ் வருகிறோம், குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப நாம் பல்வேறு உடல்களைப் பெறுகிறோம்.

நமது தற்போதைய உடலானது நமது கடந்த கால கர்மங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளது. கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர் தேஹோபபத்தயே, ஒருவன் தனது கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட வகையான உடலைப் பெறுகிறான். நமது கர்மவினைகளுக்கேற்ப இயற்கை நம்மீது செயல்படுகின்றது. இயற்கை நமது கர்மத்திற்கு ஏற்ப சுயமாகச் செயல்படுகிறது. ஒரு தொற்றுநோயுடன் தொடர்புகொள்ள நேர்ந்தால், நீங்கள் எவ்வாறு அந்நோயை வளர்த்து துன்பப்படுவீர்களோ, அவ்வாறே முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் நாமும் அதற்கேற்ற செயல்களைப் புரிகிறோம், அச்செயல்களுக்கு ஏற்ப பல்வேறு உடல்களை ஏற்கின்றோம். இதனை இயற்கை மிகவும் பக்குவமான முறையில் செய்கின்றது.

நாம் மாயையில் இருப்பதால், பிரச்சனைகளை இன்பமாக எண்ணுகிறோம். இல்லாதவொன்றை இருப்பதாக எண்ணுதல் மாயை எனப்படுகிறது. நாம் இன்புறுவதாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் துன்புறவே செய்கிறோம். பௌதிக உடலினால் நாம் துன்பத்தைப் பெறுகிறோம். கடும் குளிர், கடும் வெப்பம் இவை அனைத்தையும் நாம் இந்த உடலினால் உணருகின்றோம், சில சூழ்நிலைகளில் நாம் இன்பத்தையும் அனுபவிக்கின்றோம். ஆனால் கிருஷ்ணர் கீதையில் (2.14) கூறுகிறார்,

மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய

ஷீதோஷ்ண-ஸுக-து:க-தா:

ஆகமாபாயினோ நித்யாஸ்

தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத 

நாம் பௌதிக உலகில் இருக்கும்வரை, இன்பமும் துன்பமும் வருவதும் போவதுமாகவே இருக்கும் என்றும், அவற்றினால் நாம் தொந்தரவடையக் கூடாது என்றும் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். தன்னை உணர்வதே நமது உண்மையான பணி. தன்னை உணர்தலுக்கான முயற்சியை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. தன்னை உணர்தலே மனித வாழ்வின் குறிக்கோள். நான் இந்த உடலல்ல; ஆத்மா.” என்றும், இந்த உடலானது எனது கர்மத்தின் பலனாக வழங்கப்பட்டுள்ளது,” என்றும் உணர்வதே ஞானமாகும்.

துன்பத்தை இன்பமாக எண்ணுதல்

நான் இந்த உடலல்ல, இந்த உடலானது என்னைச் சுற்றியுள்ள ஆடையைப் போன்றது,” என்பதை உணர்ந்து, இந்த பிறப்பு இறப்பு எனும் தொடர் சுழற்சியை நிறுத்துவது எவ்வாறு என்பதுகுறித்து ஒருவன் வினவ வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன கால மக்கள் இத்தகைய வினாக்களை எழுப்புவதில்லை. அவர்கள் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி, புலனின்பத்தின் பின்னால் பித்துபிடித்து அலைகின்றனர்.

புலனின்பத்தில் பித்துப்பிடித்தவர்கள் அனைத்துவித அபத்தங்களையும் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களது தொடர்ச்சியான பிறப்பு இறப்பினை உறுதி செய்வதோடு, அனைத்துவித துன்பத்திற்கும் உள்ளாகின்றனர்.

உடலானது எப்போதும் துன்பத்தைத் தருகின்றது, ஆனால் இதனை நாம் புரிந்துகொள்வதில்லை. சில நேரங்களில் நாம் இன்பத்தை உணர்ந்தாலும், உண்மையில் இந்த உடலானது துன்பத்தின் இருப்பிடமாகும். இது தொடர்பான ஒப்புமை ஒன்று உள்ளது. முன்பெல்லாம் அரசாங்க அதிகாரிகள் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அவர்களது கைகளைக் கட்டி தலையை நீரில்

மூழ்கடிப்பர். அவன் நன்கு மூழ்கியவுடன் தலைமுடியைப் பிடித்து அவனை நீரிலிருந்து வெளியே எடுத்து சிறிது ஓய்வளிப்பர். பின்னர் மீண்டும் நீரினுள் அமிழ்த்துவர். இஃது ஒரு வகையான தண்டனை.

நாம் இங்கு பெறும் சிறுசிறு இன்பங்கள் எல்லாம், நீரில் அமிழ்த்தப்பட்ட குற்றவாளி நீரிலிருந்து வெளியே வரும்போது பெறக்கூடிய தற்காலிக இன்பத்தைப் போன்றதாகும். அதிக நேர துன்பங்களும் சில நொடி இன்பங்களுமே இந்த பௌதிக உலகின் இயல்பாகும்.

அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்தாலும் சரி, தெருவில் வாழும் மனிதனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்பதே உண்மை. நீங்கள் பெற்ற உடல் உங்களுக்கு துன்பத்தை வழங்குகிறது, தற்போது நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு மற்றோர் உடலை வழங்கும். முந்தைய பிறவியில் புலனின்பத்தில் ஈடுபட்ட காரணமாக, தற்போது இந்தப் பிறவியில் நீங்கள் துன்பத்தை அனுபவிக்கின்றீர்கள். இப்பிறவியிலும் உங்களை உயர்த்திக்கொள்வதற்கு முயலாமல் புலனின்பத்திலேயே ஈடுபடுவீர்களெனில், நீங்கள் அடுத்த உடலை ஏற்று துன்புற வேண்டியிருக்கும்.

கருவறை எனும் சிறை

இறப்பின்போது உங்களுடைய மனநிலை எவ்வாறு உள்ளதோ, அதற்கேற்ப இயற்கை உங்களுக்கு வேறு உடலை வழங்குகிறது. நீங்கள் மறுவுடலை ஏற்றவுடன் உங்களது துன்பங்கள் தொடர்கின்றன. தாயின் கருப்பையில் இருக்கும்போதுகூட நாம் துன்பத்தை அனுபவிக்கிறோம். கைகளும் கால்களும் கட்டுண்டுள்ள நிலையில் எங்கும் நகரவியலாதபடி ஒரு பைக்குள் பல மாதங்களுக்கு அடைபட்டுக் கிடப்பதும் துன்பகரமானதே. அதுவும் இந்நாள்களில் கருவிலேயே கொல்லப்படும் அபாயமும் நிலவுகின்றது. அதிலிருந்து தப்பித்தாலும் வெளியில் வந்தவுடன் துன்பம்தான். ஆகவே, புத்திசாலி மனிதன் தான் ஏன் துன்புறுகிறேன்? இத்துன்பத்திலிருந்து மீள்வதற்கு வழி என்ன? என்பனவற்றை வினவ வேண்டும். இத்தகைய வினாக்களை எழுப்பாத வரை ஒருவன் மிருகமாகவே கருதப்படுகிறான்.

நமது துன்பத்திற்கான காரணத்தை வினவுவது, ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா, பூரண உண்மையைப் பற்றி வினவுதல்” எனப்படுகிறது. அதாதோ ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா, மனிதப் பிறவியைப் பெற்றுள்ள ஒருவன் பிரம்மன் எனப்படும் பூரண உண்மையைப் பற்றி வினவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, நாம் மனிதப் பிறவியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், துன்பத்தைப் போக்குவதற்கான வழியைக் கண்டறியாமல், மிருகத்தைப் போன்று நாம் வாழக் கூடாது.

 

புலனின்பம் கானல் நீர் போன்றது

வாழ்க்கைக்கான போராட்டத்தில் கடினமாக உழைத்து அதன் மூலம் நாம் நமது துன்பத்தைப் போக்கிக்கொள்ள முற்படுகிறோம். அனைவரும் பணத்தைப் பெற கடுமையாக உழைக்கின்றனர். எதற்காக? ஏனெனில், பணத்தின் மூலம் துன்பம் குறைக்கப்படும் என்று நாம் நினைக்கின்றோம். வாழ்க்கை போராட்டமானது இவ்வாறு தொடர்ந்து கொண்டுள்ளது. அனைவரும் புலனின்பத்தின் மூலம் மகிழ்ச்சியடைய முயல்கின்றனர். ஆனால் புலனின்பம் உண்மையான மகிழ்ச்சியல்ல; ஆன்மீக இன்பமே உண்மையான இன்பம், அது பகவான் கிருஷ்ணருக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கின்றது. அதுவே ஆனந்தம். பௌதிக இன்பமானது வெறும் திரிபடைந்த இன்பமே.

பௌதிக இன்பமானது பாலைவனத்தில் காணப்படும் கானல் நீரைப் போன்றதாகும். பாலைவனத்தில் நீர் இருப்பதில்லை, தாகத்தினால் தவிக்கும் விலங்கானது கானல் நீரை தண்ணீர்” என எண்ணி அதனை நோக்கி வேகமாக ஓடி இறுதியில் மடிகின்றது. பாலைவனத்தில் நீர் இல்லை என்பதையும் அங்கு நீர் போன்று காட்சியளிப்பது சூரியஒளியின் பிம்பம் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் விலங்குகளுக்கு அது தெரியாது. அதுபோலவே, மனித வாழ்க்கையில் காணப்படும் இன்பமானது பாலைவனத்தில் காணப்படும் கானல் நீரைப் போன்றது; புலனின்பத்தினால் அடையப்படும் இன்பம் துறப்பதற்கானது; ஆன்மீக இன்பம் அனுபவிப்பதற்கானது. பௌதிக இன்பமும் துன்பமும் உடலாலேயே ஏற்படுகின்றன. அவை பருவ மாற்றத்தைப் போல வந்து போகக்கூடியவை. ஆகவே, அவற்றினால் தொந்தரவிற்கு உள்ளாகாமல் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

 

தன்னை உணர்தல் வேண்டும்

பௌதிக உலகில் இருக்கும்வரை இன்பமும் துன்பமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அவற்றினால் தொந்தரவிற்கு நாம் உள்ளாகாது தன்னை உணர்வதில் ஈடுபட வேண்டும். அதுவே நமது பணி. பெயரளவிலான இன்பமும் துன்பமும் இந்த ஜடவுடல் இருக்கும்வரை வந்து கொண்டுதான் இருக்கும். ஆகவே, நாம் இந்த உடலல்ல, ஆத்மா என்பதை உணரும் தளத்திற்கு நாம் வர வேண்டும்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபமானது நம்மை பௌதிக உலகின் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடியது. பௌதிக ஆசையால் களங்கமடைந்துள்ள நமது இதயத்தைத் தூய்மைப்படுத்தக்கூடியது. இந்த பௌதிக ஆசையானது நம்மை புலனின்பத்திற்காகச் செயல்படுமாறு தூண்டுகிறது; நமக்கு துன்பத்தைத் தருகிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதே இந்த யுகத்தில் நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை, இது மிகவும் எளிமையானது. இந்த ஹரே கிருஷ்ண மந்திரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நமக்களித்த வரப்பிரசாதமாகும். ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பிறப்பு இறப்பின் தொடர் சுழற்சியிலிருந்து விடுதலையடைவீர்கள். இது ஜாதி, மதம், இனம், நிறம், நாடு, சமூகம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. கடவுளின் கருணையால் அனைவருக்கும் வாயும் நாக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அனைவரும் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று பகவானின் திருநாமத்தை உச்சரிப்போமாக!

மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment