வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

பக்தனை சம்சாரக் கடலிலிருந்து கிருஷ்ணரே நேரில் விடுவிக்கிறார்.

ஆன்மீக உலகமானது அறிவு நிறைந்த, அழிவற்ற, நித்திய ஆனந்தமயமான இடமாகும், அங்கு செல்வதே வாழ்வின் குறிக்கோள் என்று வேத இலக்கியங்கள் பலவற்றிலும் குறிப்பாக பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது.

பிரம்ம சம்ஹிதை (56-57) அந்த தெய்வீக இடத்தினை பின்வருமாறு வர்ணிக்கின்றது: அங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டதைத் தரும் அதிசய மரம், அது சிந்தாமணிக் கற்களால் உருவான பூமி. அங்கே தண்ணீர் எல்லாம் அமிர்தம், ஒவ்வோர் அசைவும் அபிநயம், வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் சொரிந்து தள்ளுகின்றன. காலம் அசையாமல் ஸ்தம்பித்து நிற்கின்றது, ஆகையால், எதிர்காலம் இல்லை. அரை நொடிகூட இங்கு கழிவதில்லை அந்த லோகம் கோலோகம்.

அந்த ஆன்மீக உலகைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் (10.14.58) பின்வருமாறு கூறுகின்றது:

ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்லவம்

மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே:

பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம்

பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம்

முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின் பாத கமலங்கள் என்னும் படகை ஏற்றுக் கொண்டவனுக்கு பௌதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில் தேங்கிய நீரைப் போன்றதாகும். அவனது நோக்கம் பௌதிகத் துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) – ஒவ்வோர் அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இந்த உலகமல்ல. 

அங்கு எவ்வாறு செல்வது என்பதைப் பற்றி பகவத் கீதையில் (12.7) ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

தேஷாம் அஹம் ஸமுத்தர்தா

ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்

பவாமி ந சிராத் பார்த

மய்யாவேஷித-சேதஸாம்

மனதை என்னில் நிறுத்தி எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு, என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.” 

அந்த ஆன்மீக உலகத்தையும் பௌதிக உலகத்தையும் ஒப்பிட்டு கிருஷ்ணர் மேலும் கூறுகிறார் (பகவத் கீதை 8.16):

ஆப்ரஹ்ம புவனால் லோகா:புனர் ஆவர்தினோ

மாம் உபேத்ய து கௌந்தேயபுனர் ஜன்ம ந வித்யதே

ஜடவுலகின் மிகவுயர்ந்த பிரம்ம லோகத்திலிருந்து தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே, ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தையடைந்தவர் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை,”

அந்த மறுபிறவியில்லா உலகிற்குச் செல்வதே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும், இதை மேலும் பற்பல இடங்களில் பகவத் கீதை எடுத்துரைக்கிறது.

இதே கருத்தினை திருவள்ளுவரும் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளைப் அடைந்தவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும், மற்றவர்களால் அதனைக் கடக்க முடியாது.” (திருக்குறள் 10)