ஆனந்தமான ஆன்மீக உலகை அடைதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பெரியோர்களே, தாய்மார்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு பெற வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இறைவனின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்ல அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். நமது இலக்கு, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் இருப்பிடமான கோலோக விருந்தாவனத்திற்குச் செல்வதே. அங்கு கிருஷ்ணர் தனது துணைவி ராதாராணியுடன் வசிக்கின்றார். கிருஷ்ணரே தலையாய காதலர், ராதாராணி அவரது துணைவியாவாள். இவ்வுலகில் ஆணும் பெண்ணும் காதலை அனுபவிக்க முயல்கின்றனர், ஆனால் உன்னத காதலானது கிருஷ்ணருக்கும் ராதைக்கும் இடையே இருக்கின்றது, அந்த உறவின் திரிபடைந்த தோற்றமே இவ்வுலகில் காணப்படுகிறது.

 

விருந்தாவனத்தின் தன்மைகள்

ஜய ராதா-மாதவ குஞ்ஜ-பிஹாரி. விருந்தாவன குஞ்ஜங்களில் (புதர்களில்) ராதையும் கிருஷ்ணரும் லீலைகள் புரிகின்றனர். கிருஷ்ணர் கோபி-ஜன-வல்லப, கோபர்களுக்கும் கோபியர்களுக்கும் பிரியமானவர். கோபியர்கள் ஆயர்குலப் பெண்கள், கோபர்கள் ஆயர்குல ஆடவர்கள் மற்றும் சிறுவர்கள். விருந்தாவனம் ஒரு கிராமம்; அது லாஸ் ஏஞ்ஜல்ஸ் போன்ற மாநகரம் கிடையாது. அஃது ஒரு கிராமம். கிருஷ்ணர் எப்போதும் யமுனைத் துறையில் ஆனந்தத்தை அனுபவிக்கின்றார். (யாமுன-தீர-வன-சாரி)

அழகிய தோட்டங்கள் விருந்தாவனத்தில் உள்ளன, விருந்தாவனத்தில் ஆபத்து என்ற கேள்விக்கே இடமில்லை. அஃது ஆனந்தம் நிறைந்த உன்னத ஸ்தலம். கிருஷ்ணர் இவ்வுலகிற்கு இறங்கி வரும்போது தனது விருந்தாவன தாமத்தையும் தன்னுடன் அழைத்து வருகிறார். அந்த விருந்தாவனம் இப்புவியில் இந்தியாவில் டில்லியிலிருந்து 90 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அது மூல விருந்தாவனத்தை ஒத்தது, பௌதிக உலகில் இருக்கின்ற காரணத்தினால் சில சமயங்களில் அங்கே ஆபத்துகள் இருப்பதுபோலத் தோன்றும். கிருஷ்ணர் புவியில் தோன்றும்போது சில அபாயங்கள் விருந்தாவனத்தில் இருந்தன. உண்மையில், கிருஷ்ணர் இருப்பதால் அபாயம் என்று ஏதுமில்லை, ஆனால் அபாயம் இருப்பது போன்றதொரு தோற்றம் இருந்தது.

கிருஷ்ணர், இந்திரனை வழிபடுவதிலிருந்து கோபர்களைத் தடுத்தார். இதனால் கோபமுற்ற இந்திரன், ஏழு நாள்களுக்குத் தொடர்ந்து பலத்த மழையைப் பெய்வித்தான். கிருஷ்ணர், உடனடியாக தனது சுண்டு விரலால் கோவர்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்து, விருந்தாவனவாசிகளைக் காத்தார். இதனால் கிருஷ்ணர் கிரி-வர-தாரி, கோவர்தன மலையைத் தூக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். கிருஷ்ணர் சாதாரண மானிட குழந்தையைப் போன்று லீலை புரிந்தாலும், தேவைப்படும்போது தனது தெய்வீக சக்தியைக் காட்டவும் செய்தார். விருந்தாவனவாசிகளைக் காக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது, உலகின் பார்வையில் ஏழு வயதே நிறைந்த சிறுவனாக இருந்தபோதிலும், அவர் அப்பெரிய மலையைக் குடையாகத் தூக்கினார்.

 

கிருஷ்ணர் சாதாரண மானிட குழந்தையைப் போன்று லீலை புரிந்தாலும், தேவைப்படும்போது தனது தெய்வீக சக்தியை காட்டவும் செய்தார்.

கானல் நீர் எனும் மாயத்தோற்றம்

மூல விருந்தாவனத்தில் இந்திரனின் கடுங்கோபமோ பெருமழையால் ஏற்படும் வெள்ளம் போன்ற அபாயமோ இருப்பதில்லை. அங்கு அனைத்தும் ஆனந்தமயமானது, தெய்வீகமானது, நித்தியமானது. இந்த ஜடவுலகில் நம்மிடம் இருப்பது அத்தகு ஆனந்தத்தின் சிறு மாதிரி மாத்திரமே. ஏனெனில், இங்கு நம்மிடம் உள்ளவை அனைத்தும் அந்த அசலின் நிழலே. பாலைவனத்தில் சில சமயங்களில் சமுத்திரம் இருப்பதுபோன்ற தோற்றம் ஏற்படுவதுண்டு. ஆனால், உண்மையில் அதுபோன்று ஏதும் இருப்பதில்லை. ஆனால் விலங்குகள் அத்தகு கானல் நீரால் அடிக்கடி ஏமாற்றப்படுவதுண்டு. மிகுந்த தாகத்தில் இருக்கும் விலங்குகள், பாலைவனத்தில் நீர் இருப்பதாக நினைக்கின்றன, அந்நீரை நோக்கி ஓடுகின்றன. அவை முன்னேறிச் செல்லச்செல்ல கானல் நீரும் முன்னேறிச் செல்கிறது. இவ்வாறாக விலங்குகள் களைப்படைந்து இறுதியில் இறக்கின்றன.

பௌதிக உலகிலுள்ள நமது சூழ்நிலையை இந்த உதாரணம் சித்தரிக்கின்றது. நாம் இன்பம் எனும் நீரைத்தேடி அலைகின்றோம். தாகத்தால் தவிக்கும் நாம் இந்த பெயரளவிலான இன்பம் எனும் கானல் நீரால் தவறாக வழிநடத்தப்படுகிறோம். நான் இங்கு வரும்பொழுது நெடுஞ்சாலையின் இருபுறமும் நவீன நாகரிகத்தின் தோற்றங்களைக் கண்டேன்; மின் சக்தி நிலையங்கள், பெரிய பெட்ரோல் நிலையங்கள், பெரியபெரிய மோட்டார் வாகனங்கள், விளக்குகள், ஓட்டல்கள், மோட்டல்கள், மற்றும் பல. இவையெல்லாம் நமக்கு நிவாரணம் கொடுத்து தாகத்தைத் தணிக்கும் என்றும் நமது தேடல் பூர்த்தியாகும் என்றும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அம்முயற்சியில் அவர்கள் தோல்வியடைகின்றனர்.

கானல் நீர் நமக்கு உதவாது. ஆனால் கானல் நீரை வைத்து உண்மையான நீர் இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும். கானல் நீரே எல்லாம் என்றில்லை. உண்மையான நீரும் இருக்கிறது, ஆனால் அது பாலைவனத்தில் இல்லை. பாலைவனத்தின் கானல் நீர் உங்கள் தாகத்தைத் தணிப்பதற்கு உதவாது. உண்மையான நீரினை பாலைவனத்தில் தேடுவதை விடுத்து வேறிடத்தில் தேட வேண்டும்.

உண்மை நீரை,” உண்மையான இன்பத்தை எங்கே தேடுவது, தாகத்தை எவ்வாறு தணிப்பது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அந்த அறிவை கிருஷ்ண பக்தி இயக்கம் வழங்குகிறது (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31):

ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும்

துராஷயா யே பஹிர்-அர்த-மானின:

அந்தா யதாந்தைர் உபநீயமானாஸ்

தே  உரு-தாம்னி பத்தா: 

மக்கள் தங்களது வாழ்வின் இறுதிக் குறிக்கோள் என்ன, உண்மையான நலன் என்ன முதலியவற்றை அறிவதில்லை. நிச்சயமாக அனைவரும் தன்னலத்தில் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் உண்மையான தன்னலம் என்னவென்று யாரும் அறிவதில்லை. வாழ்வின் இறுதிக் குறிக்கோள் குறித்த கல்வி அவர்களிடம் இல்லை. பௌதிக இயற்கையை சற்று மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்ந்து தங்களை திருப்தி செய்ய முயல்கின்றனர்.

பகவானின் சக்திகள்

பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ரூயதே. பரம புருஷர் பல்வேறு சக்திகளைக் கொண்டுள்ளதாக நாம் வேதங்களிலிருந்து அறிகிறோம். நாம் காணும் அனைத்தும் அவரது சக்திகளின் தோற்றங்களே. மின் சக்தியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள், அது மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வருகிறது, அதை உபயோகிப்பதன் மூலம் நாம் பல்வேறு பணிகளைச் செய்கின்றோம். ஹீட்டர், கூலர், மைக், டேப் ரிக்கார்டர் போன்று பல சாதனங்களை இயக்குகிறோம். இவ்வனைத்து வேலைகளும் அந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்திலிருந்தே நடைபெறுகின்றன. அதுபோலவே, இவ்வுலகில் நாம் காணும் அற்புதங்கள் அனைத்தும் கடவுளின் பலவகைப்பட்ட சக்திகளின் செயல்பாடுகளே.

பகவானிற்கு இரு சக்திகள் உள்ளன. ஒன்று பௌதிக சக்தி, மற்றொன்று ஆன்மீக சக்தி. பௌதிகம், ஆன்மீகம் ஆகிய இரு சக்திகளில், ஆன்மீக சக்தி உயர்ந்தது, பௌதிக சக்தி தாழ்ந்தது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தால் ஆனது பௌதிக சக்தி. ஆன்மீக சக்தியானது உயிருள்ளதாகும். நாம் அனைவரும் இவ்விரு சக்திகளின் கலவைகளே. இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: யயேதம் தார்யதே ஜகத். இந்த மொத்த உலகமும் இவ்விரு சக்திகளால் இயங்குகிறது. வெப்பமும் ஒளியும் சூரியனிலிருந்து வருவதைப் போல இவ்விரு சக்திகளும் ஒரே மூலத்திலிருந்து வருகின்றன.

ஜட சக்தியின் தோற்றமான ஜடவுலகத்திலிருந்து ஆன்மீக சக்தி நிறைந்த ஆன்மீக உலகிற்கு நம்மை மாற்றம் செய்வதே மனித வாழ்வின் நோக்கமாகும். இந்த மனித வாழ்க்கையானது உயர்ந்த வாழ்க்கையாகும், விலங்குகள், மரங்கள், நீர்வாழ்வன, ஊர்வன, பூச்சிகள், போன்றவை தாழ்ந்த வாழ்வினங்களாகும். 84,00,000 வகையான பிறவிகளில், மனிதப் பிறவி அதிலும் குறிப்பாக நாகரிகமுடைய மனிதப் பிறவி சிறந்ததாகும். நீர்வாழ்வன, மரம், செடி, கொடி, பூனை, நாய் போன்றவற்றின் உணர்வுகளைவிட மனிதனின் உணர்வு வளர்ச்சியடைந்ததாகும்.

 

உயர்ந்த உணர்வை வீணாக்குதல்

ஆனால் தற்போதைய வாழ்வில் இந்த உயர்ந்த உணர்வானது மிருக வாழ்வை நோக்கி தவறாக பயன்படுத்தப்படுகிறது. புலன்களை இன்னும் எவ்வாறு நன்கு அனுபவிப்பது என்பதே நவீன விஞ்ஞானம் மற்றும் தத்துவ கற்பனையின் குறிக்கோளாக இருக்கின்றது. உங்களது பௌதிக வாழ்வை எவ்வளவு மேம்படுத்தினாலும் அது புலனின்ப வாழ்வே. புலனின்பத்தில் உயர்ந்த புலனின்பம், தாழ்ந்த புலனின்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவன் தங்கக் குடுவையில் நீர் அருந்தினாலும் மண் குடுவையில் நீர் அருந்தினாலும் நீர் என்பது ஒன்றுதான். தங்கக் குடுவையில் நீரை ஊற்றிவிடுவதால் நீரின் சுவை அதிகரித்துவிடும் என்பது கிடையாது. அதுபோல, நாய் வாழ்வோ மனித வாழ்வோஶீஉண்பது, உறங்குவது, பாலுறவு, தற்காத்தல் போன்ற சுவைகளில் மாற்றம் ஏதும் இருப்பதில்லை.

கடற்கரைக்கு நான் மோட்டார் வாகனத்தில் வருவதாக வைத்துக்கொள்வோம். நான் வேறு வாகனத்திலும் வரலாம், மாட்டு வண்டியிலோ நடைப் பயணமாகவோகூட வரலாம். கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும், அவ்வளவே; மற்றபடி எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால், மாட்டு வண்டிக்கு பதிலாக கார் வைத்திருப்பதால் நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறோம். இது தவறாகும். மாட்டு வண்டியில் பயணித்தாலும் காரில் பயணித்தாலும் உங்களது குறிக்கோள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்வதே. கார் உங்களது நேரத்தை கொஞ்சம் மிச்சப்படுத்தலாம், அஃது உங்களுக்கு கொஞ்சம் மகிழ்வைத் தரலாம். ஆனால் காரைவிட மாட்டு வண்டியே சிறந்தது. ஏனெனில், கார்களால் எந்நேரத்திலும் விபத்து ஏற்படலாம், எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருப்பீர்கள்.

மானிடப் பிறவியின் நோக்கம்

பௌதிக முன்னேற்றமானது, ஒருபுறம் சௌகரியத்தை ஏற்படுத்தி மற்றொரு புறம் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. இது கண்கூடான உண்மை. நீங்கள் ஒருபுறம் மோட்டார் வாகனங்களை உருவாக்கி மறுபுறம் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளீர்கள். உங்களது நாட்டில் வருடத்திற்கு ஐம்பதாயிரம் பேர் சாலை விபத்தில் இறப்பதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

எந்த அளவிற்கு நீங்கள் பௌதிகத்தில் முன்னேறுகிறீர்களோ அந்த அளவிற்கு அதில் பலமாக சிக்கிக்கொள்வீர்கள். இவ்வழியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இறைவனிடம் திரும்பிச் செல்வதே வாழ்வின் குறிக்கோளாகும்.

ஆனால் நாமோ உயர்ந்த அறிவையும் உணர்வையும் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்வதில் வீணடித்து, முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என கர்வப்படுகிறோம். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, அந்தா யதாந்தைர் உபநீயமானாஸ் தே ’பீஷ-தந்த்ர்யாம் உரு-தாம்னி பத்தா:, மக்கள் குருட்டுத் தலைவர்களால் வழிநடத்தப்பட்டுள்ளனர். பௌதிகத் தலைவர்களான, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், தொழில்நுட்பவாதிகள் என அனைவரும் குருடர்களாக உள்ளனர். மக்கள் குருடர்களால் வழிநடத்தப்படுகின்றனர். இதன் விளைவு பேரழிவு.

பார்வையுள்ள ஒருவன் பார்வையற்ற ஆயிரம் பேருக்கு வழிகாட்டலாம்: வாருங்கள், சாலையைக் கடப்பதற்கு நான் உதவுகிறேன்.” ஆனால் தலைவன் குருடனாக இருந்து அவனைப் பின்பற்றுபவர்களும் குருடர்களாக இருந்தால், அவர்கள் படுகுழியில் விழ வேண்டியதுதான். அதுவே தற்போது நடக்கின்றது. உடல் சௌகரியம், புலனின்பம் ஆகியவற்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தலைவர்களும் மக்களும் நினைக்கின்றனர். ஆனால் அது சாத்தியமில்லை.

 

மாட்டு வண்டிக்குப் பதிலாக மோட்டார் வண்டியில் வருவதால், நாம் முன்னேறிவிடவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை

இந்த இயக்கம் விஞ்ஞானபூர்வமானது, அங்கீகரிக்கப்பட்டது. ஏனெனில், நாம் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடமிருந்து பகவத் கீதையின் மூலம் நேரடியாக உபதேசங்களைப் பெறுகிறோம். எந்தவித அபத்தமான கருத்துகளும் இன்றி நாங்கள் பகவத் கீதையை உண்மையுருவில் வழங்குகிறோம். தானே முழுமுதற் கடவுள் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். நாங்களும் அதையே கூறுகிறோம்ஶீகிருஷ்ணரே முழுமுதற் கடவுள். கிருஷ்ணர் கீதையில், எனது பக்தனாகி எப்போதும் என்னை நினைத்து என்னை வழிபடுவாயாக. உனது வந்தனங்களை எனக்கு அர்ப்பணிப்பாயாக” என்று கூறுகிறார். நாங்கள் அனைவரையும், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரித்து கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக் கொண்டிருங்கள் என்று கூறுகிறோம். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் எப்போதும் கிருஷ்ணரை நினைப்பீர்கள்.

எங்களுடைய வழிமுறை மிகவும் எளியது. புதிதாக எந்தவொரு வழிமுறையையும் நாங்கள் உருவாக்குவதில்லை. உயர்ந்த ஆச்சாரியர்களால் (ஆன்மீக குருமார்களால்) பக்குவமான வழிமுறை என ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ள பழைய உயர்ந்த வழிமுறை இருக்கும்போது, புதிதாக ஒன்றை எதற்காக உருவாக்க வேண்டும்? நாம் எதை உருவாக்கினாலும் அது குறைபாடுகளோடுதான் இருக்கும். பக்குவமான வழிமுறையை எளிமையாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அப்போது நாம் பக்குவம் பெறுவோம், இதுவே எமது வழிமுறை.

இங்கு கூடியிருக்கும் அனைவரும் பகவத் கீதையின் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு கிருஷ்ணரின் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வதன் மூலம் உங்கள் வாழ்வை வெற்றியடையச் செய்ய வேண்டும் என நான் விரும்பி கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

 

 

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment