பலராமரின் மகிமைகள்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

பகவான் கிருஷ்ணரிடம் பெரும் பாசம் கொண்டுள்ள அண்ணனாக, கிருஷ்ணருக்கு சேவை செய்யும் சேவகராக, கிருஷ்ண லீலைகளில் இணைபிரியா நண்பராக என பல கோணங்களில் இருப்பவர் முழுமுதற் கடவுளான ஸ்ரீ பலராமர். அனைத்து அவதாரங்களுக்கும் ஆதிமூலமாக இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முதல் விரிவங்கமாக பலராமர் திகழ்கிறார். இவர்கள் இருவரும் ஒரே முழுமுதற் கடவுளாவர்; இவர்களிடம் உள்ள ஒரே வேறுபாடு, இவர்களின் திருமேனியின் நிறமாகும்.

பலராமரின் தோற்றம்

பலராமர் அன்னை தேவகியின் கருவினுள் ஏழாவது குழந்தையாக தோன்றியபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் அந்தரங்க சக்தியான யோக மாயையிடம், பலராமரை ரோகிணியின் கருவிற்கு மாற்றுமாறு கட்டளையிட்டார். இவ்வாறு ரோகிணியின் கருவிலிருந்து பிறந்த பலராமர், கோகுலத்தில் நந்த மகாராஜரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தெய்வீகக் குழந்தையின் அதீத சக்தியைக் கண்ட குல குருவான கர்கமுனி, அவருக்கு பலராமர் என்னும் திருநாமத்தைச் சூட்டினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலையில், பலராமர் தன்னை புனித க்ஷேத்திரமாகவும், கிருஷ்ணரின் கிரீடம், படுக்கை, வஸ்திரம், ஆசனம் மற்றும் ஆபரணங்களாகவும் விரிவடைந்து முதன்மையான சேவகனாக பங்காற்றுகிறார்.

நந்த மகாராஜரின் இல்லத்தில், கிருஷ்ண பலராமருக்கு கர்க முனிவர் பெயர் சூட்டுதல்

கிருஷ்ணரின் முதல் விரிவங்கம்

கிருஷ்ணரிடமிருந்து முதலாவதாக வெளிவந்த பூரண விரிவே பலராமர். பலராமரிடமிருந்தே இதர ரூபங்கள் தோன்றுகின்றனர். கிருஷ்ணரின் விருப்பப்படியே பலராமர் பௌதிக உலகைப் படைத்து ஆன்மீக உலகைப் பராமரிக்கிறார். பௌதிக உலகைப் படைப்பதற்காக பலராமர் முதலில் மஹா-ஸங்கர்ஷணராக விரிவடைகிறார். அவரிடமிருந்தே எல்லா புருஷ அவதாரங்களும் இதர அவதாரங்களும் வருகின்றன என்பதால், பலராமர் எல்லா அவதாரங்களுக்கும் மூலமாக அறியப்படுகிறார்.

படைப்புத் தொழிலில் சேவகனாகவும், இடையர் குலச் சிறுவன் என்கிற முறையில் நண்பனாகவும், மூத்த சகோதரன் என்கிற முறையில் வாத்ஸல்ய பக்தியிலும், பலராமர் கிருஷ்ணருக்கு சேவை செய்கிறார். பலராமர் எண்ணற்ற ரூபத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல்வேறு நிலையில் தொண்டு புரிகிறார்.

பலராமரின் கட்டளையை ஏற்க மறுத்த யமுனை, பலராமர் தனது சக்திகளை வெளிப்படுத்திய பின்னர், அவரிடம் சரணடைந்தாள்.

பலராமரின் திவ்ய லீலைகள்

பலராமர் விருந்தாவனத்தில் யமுனையில் நீராட முனைந்தபோது, யமுனா தேவி அருகில் வர மறுத்துவிட்டாள். அதன் காரணமாக சினம் கொண்ட பலராமர் தனது கலப்பையின் மூலமாக யமுனா நதியை பயமுறுத்தி, நூறு கூறுகளாகப் போட்டு அருகில் வரவழைத்தார். குரு வம்சத்திற்கும் யது வம்சத்திற்கும் உச்சகட்ட பிரச்சனை நிலவியபோது, மன்னர் உக்ரசேனரின் சார்பாக சாம்பாவை விடுவிக்க கௌரவர்களின் இருப்பிடத்திற்கு பலராமர் சென்றார். அங்கு கௌரவர்கள் பலராமரை அவமானப்படுத்தியபோது, கோபத்தில் ஹஸ்தினாபுர நகரத்தையே தன்னுடைய கலப்பையினால் யமுனையில் மூழ் கடிக்க பலராமர் முடிவு செய்தார். பலராமரின் இச்செயலால் அச்சம் கொண்ட கௌரவர்கள், உடனடியாக அவரிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டனர்.

பகடைக்காய் விளையாட்டில் தன்னை அவமானப்படுத்தி ஏமாற்ற நினைத்த ருக்மியை பலராமர் சபையிலேயே வதம் செய்தார். ரோமஹர்ஷணர் வியாஸ ஆசனத்தில் அமர்ந்து சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது, ஆதி குருவான பலராமர் அங்கு வருகை புரிந்தார். அங்கு கூடியிருந்த அனைத்து சாதுக்களும் எழுந்து ஆதிகுருவான பலராமரை வரவேற்ற நிலையில் ரோமஹர்ஷணர் மட்டும் வியாஸ ஆசனத்திலிருந்து எழவில்லை. இதனால் கடுங்கோபமடைந்த பலராமர் தர்ப்பைப் புல்லால் ரோமஹர்ஷணரை வதம் செய்தார். அங்கு கூடியிருந்த சாதுக்கள் ரோமஹர்ஷணருக்கு நீண்ட ஆயுளின் வரத்தை அளித்திருந்தபோதிலும், அதனை பலராமர் தவிடுபொடியாக்கினார். குருவை அவமரியாதை செய்தால், அனைத்து ஆசிர்வாதங்களும் வரமும் அழிந்து விடும் என்கிற பாடத்தை பலராமர் இச்சம்பவத்தின் மூலமாக உலக மக்களுக்கு புகட்டுகிறார்.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமநிலையில் பாசத்தைப் பொழிந்த பலராமர், துரியோதனனையும் பீமனையும் கதா யுத்த பயிற்சியில் தன் சீடர்களாக ஏற்றுக் கொண்டிருந்தார். ஆசிரியர் என்கிற முறையில் பீமனின் அசாத்திய வலிமையைவிட துரியோதனனின் நுணுக்கமான உத்தியை பலராமர் வெகுவாக பாராட்டுவார். மஹாபாரதப் போரின்போது எந்த தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்பட விரும்பாத பலராமர், அச்சமயத்தில் புனித யாத்திரையை மேற்கொண்டார்.

தர்ப்பைப் புல்லைக் கொண்டு பலராமர் ரோமஹர்ஷணரை வதம் செய்தல்

குரு தத்துவம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய தோழரான பலராமர், இராம லீலையில் லக்ஷ்மணராகவும், சைதன்ய லீலையில் நித்யானந்த பிரபுவாகவும் தோன்றுகிறார். ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய விரும்புவோர், முதலில் ஆதிகுருவான பலராமரிடம் கருணையைப் பெற வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிற்கும் ஞானத்திற்கும் பலராமர் சேவை செய்வதால், அவர் சேவை செய்யக்கூடிய பகவான் என்றும் அறியப்படுகிறார்.

பலராமர் குரு-தத்துவத்திற்கு மூலமாக இருப்பவர். குரு-தத்துவம் மிகவும் ஆழமானது என்றாலும், அதனின் அடிப்படை சாரத்தை ஆன்மீக பயிற்சியாளர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். பலராமரை அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் உருவத்தில் உணரலாம். ஸ்தூல உடலில் இருக்கும் ஆன்மீக குருவை வழிபடும்போது, அது குரு பரம்பரையின் வாயிலாக இறுதியாக ஆதிகுருவான பலராமரையே சென்றடையும். அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு, பலராமரின் பிரதிநிதியாகவோ ஸ்ரீமதி ராதாராணியின் நெருங்கிய சங்கத்தினராகவோ கருதப்பட வேண்டும்.

 

பலராமரின் அசுர வதம்

கிருஷ்ணரும் பலராமரும் பல அசுரர்களை வதம் செய்துள்ளனர். ஒவ்வோர் அசுரர்களும் நம் இதயத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத அசுர குணங்களுக்கும் அனர்த்தங்களுக்கும் உதாரணமாக கூறப்படுகின்றனர். கொக்கு வடிவில் இருந்த பகாசுரன் ஏமாற்றும் குணத்திற்கும், மலைப் பாம்பு வடிவில் இருந்த அகாசுரன் வெறுப்புணர்விற்கும் உதாரணங்களாகின்றனர். கிருஷ்ண பலராமரின் அசுர வதத்தினைப் பற்றி கேட்கும்போது, நம் இதயத்தில் இருக்கும் அசுர குணங்கள் படிப்படியாக மறைந்துவிடும்.

தேனுகாசுரனின் தோழர்கள், பிரலம்பாசுரன், த்விவிதா போன்ற அசுரர்கள் பலராமரால் வதம் செய்யப்பட்டவர்கள். தேனுகாசுரன் அறியாமை என்கிற குணத்திற்கும், பிரலம்பாசுரன் காம உணர்வுகளுக்கும், கொரில்லா குரங்கு வடிவில் இருந்த த்விவிதா சாதுக்களை நிந்திக்கும் குணத்திற்கும் ஒப்பிடப்படுகின்றனர். பலராமரின் அசுர வதங்களைத் தொடர்ந்து கேட்பதோடு, அந்த அசுர குணங்களை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என ஸ்ரீல பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். அஃதாவது, அறியாமையை நீக்குவதற்காக தினந்தோறும் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதத்தை படிக்க வேண்டும். காம உணர்விலிருந்து விடுபடுவதற்கு சஞ்சலமான மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல சாதுக்களை நிந்திக்காமல் இருப்பதற்கு எப்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தெய்வீக சுவைக்கு ஊற்றாகவும் திவ்யமான ஆனந்தத்திற்கு அடித்தளமாகவும் பலராமர் திகழ்கின்றார். ஜீவன்களின் நிலை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்வதே என்னும்போது, அந்த சிறந்த சேவை செய்யக்கூடிய மனப்பான்மையை பெறுவதற்கு, ஒவ்வொரு ஜீவன்களும் பலராமரிடம் அடைக்கலம் பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடம் ஒருவர் சரணடையும்போது பலராமரின் வழிபாடு முழுமை பெறுகிறது.

 

நண்பர்களின் உருவில் வந்து பலராமரைத் தூக்கிச் சென்ற பிரலம்பாசுரனை பலராமர் வதம் செய்தல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives