வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அர்ஜுனன் கூறினான்: என்னிடம் அதே காண்டீவ வில்லும் அதே அம்புகளும் அதே குதிரைகள் பூட்டப்பட்ட அதே ரதமும்தான் உள்ளன. மேலும், யாருக்கு எல்லா அரசர்களும் தகுந்த மரியாதை செலுத்தினார்களோ, அதே அர்ஜுனனாகிய நான் அவற்றை உபயோகிக்கிறேன். ஆனால், பகவான்  கிருஷ்ணர் இல்லாத காரணத்தினால், அவையனைத்தும் சாம்பலில் ஊற்றிய நெய் போலவும், மாய வித்தையினால் கிடைக்கும் பணத்தைப் போலவும், காய்ந்த நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப் போலவும் ஒரு நொடியில் பயனற்றுப் போயின.” (ஸ்ரீமத் பாகவதம் 1.15.21)

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்லோகம், கடவுளின்றி அனைத்தும் பயனற்றவை என்பதை விளக்குகின்றது. இறையுணர்வைத் தவிர மற்ற அனைத்தையும் பெற்றுள்ள இந்த நவீன நாகரிகம் எந்நேரத்திலும் முடிவிற்கு வரலாம். போர் அறிவிப்பு வந்தால், அமெரிக்கா ரஷ்யாவின் மீதும், ரஷ்யா அமெரிக்காவின் மீதும் உடனடியாக அணுகுண்டு தாக்குதல் நடத்தும். அமெரிக்கா, ரஷ்யா என இரு நாடுகளும் அழிந்துவிடும், எவருக்கும் வெற்றி கிட்டாது. இதுவே தற்போதைய சூழ்நிலை.

 

கிருஷ்ணரின்றி அனைத்தும் வீணே

நவீன சமுதாயத்தை நீங்கள் விஞ்ஞான முன்னேற்றத்துடனும் பொருளாதார வளர்ச்சியுடனும் உருவாக்கலாம். ஆனால் அச்சமுதாயம் கடவுள் உணர்வற்றதாக இருப்பின் எத்தருணத்திலும் அது முடிவிற்கு வரலாம். இராவணனும் ஹிரண்யகசிபுவும் இதற்கு சிறந்த உதாரணங்கள். அவர்கள் கடவுள் நம்பிக்கையற்ற அசுரர்கள். இராவணன் வேத அறிவில் பாண்டித்துவம் உடையவனாகவும், மிகுந்த சக்தி படைத்தவனாகவும் இருந்தான், தங்க நகரத்தை தலைநகரமாகக் கொண்டிருந்தான். பிராமணரின் மகனான அவன் அனைத்து வளங்களையும் பெற்றிருந்தான். ஆனால், பகவான் இராமரைப் பொருட்படுத்தாததே அவனிடமிருந்த ஒரே குறை. இராமரா? யார் அவர்? அவரை நான் கண்டுகொள்ள மாட்டேன். ஸ்வர்கம் செல்வதற்கு யாகங்கள், சடங்குகள் எதுவும் தேவையில்லை, நானே படிக்கட்டுகளைக் கட்டுகிறேன்,” என்று இராவணன் சவால் விட்டான்.

இராவணனைப் போன்றே நவீன கால மக்களும் கடவுளிடம் கவனம் செலுத்தாது, பௌதிக வசதிகள் அனைத்தையும் அனுபவிக்க முயல்கின்றனர். ஆனால், இத்தகு இறையற்ற தன்மையால் இராவணன் அழிவுற்றான் என்பதை மக்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இடையன் ஒருவனால் தோற்கடிக்கப்பட்ட அர்ஜுனன், குருக்ஷேத்திரத்தில் போரிடுவதற்கு நான் பயன்படுத்திய அதே வில்லும் அம்புகளுமே என்னிடம் உள்ளன. அப்போது பகவான் கிருஷ்ணர் எனது ரதத்தில் வீற்றிருந்த காரணத்தினால் நான் வெற்றி பெற்றேன். தற்போது என்னுடன் கிருஷ்ணர் இல்லாத காரணத்தினால் எனது ஆயுதங்கள் பயனற்று போயின,”என்று புலம்புகிறான். இதிலிருந்து நாம் அறிய வேண்டியது யாதெனில், கடவுளின்றி, பௌதிகப் பொருட்களுக்கும் செல்வங்களுக்கும் எத்தகைய மதிப்பும் இல்லை என்பதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானி. ஆயினும், சிறு பொறியான ஆத்மா அவரது உடலை விட்டுச் சென்றவுடன். அவரது

மூளை பயனற்றதாகி விட்டது. இறப்பிற்கு முன்பாக, அன்புள்ள மாணவர்களே, இறப்பின் தருவாயில் நான் இருக்கும்போது, இந்த மருந்தைச் செலுத்துங்கள், நான் அழகிய வாலிப உடலைப் பெறுவேன்,”என்று அவரால் கூற முடியவில்லை. அத்தகைய மருந்தை அவரால் கடைசி வரை கண்டுபிடிக்க இயலவே இல்லை.

 

விஞ்ஞானிகளுக்கு ஒரு சவால்

வாழ்வின் உண்மையானப் பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி முதலியவற்றிற்கான தீர்வை அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. விஞ்ஞானிகளுக்கு நான் சவால் விடுக்கின்றேன், இறப்பைத் தடுக்கக்கூடிய ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்! உங்களுடைய அற்புத கண்டுபிடிப்புகளான பல்வேறு மருந்துகளால் மருந்தகங்கள் நிரம்பியுள்ளன. எனினும், மனிதனை நோய் வாய்ப்படுவதிலிருந்து தடுக்கவோ மரணத்திலிருந்து காப்பாற்றவோ எந்தவொரு மருந்தாலும் இயலவில்லை.

ஆகவே, இறையற்ற நவீன நாகரிகத்தின் முன்னேற்றம் பிணத்திற்குச் செய்யும் அலங்காரத்தைப் போன்றது. வேத இலக்கியங்களில் இது பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

பகவத்-பக்தி-ஹீனஸ்யஜாதி: ஷாஸ்த்ரம் ஜபஸ் தப:

அப்ராணஸ்யைவ தேஹஸ்யமண்டனம் லோக-ரஞ்ஜனம்

கிருஷ்ண பக்தி இல்லாத பட்சத்தில், உயர்குடி பிறப்பு, மந்திர உச்சாடனம், வேத அறிவு, தவம் ஆகிய அனைத்தும் பிணத்திற்குச் செய்யும் அலங்காரமே.” 

உதாரணத்திற்கு அமெரிக்க மக்கள் மிகப்பெரிய தேசத்தைக் கொண்டுள்ளனர், உலகிலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் அதிகச் செயல்களைச் செய்து அமெரிக்காவை மிக அருமையாக வடிவமைத்துள்ளனர், அமெரிக்கா  திடீரென்று தானாக வந்துவிடவில்லை. ஆனால், உங்களது அரிய பெரிய செயல்கள் கிருஷ்ணருக்காகச் செய்யப்படாவிடில், அவையனைத்தும் வீணே.

அறிவியல் கண்டுபிடிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஆனால், அவற்றினால் என்ன பிரயோஜனம்? அத்தகைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் பிணத்திற்குச் செய்யப்படும் அலங்காரத்தைப் போன்றவையே. உயிரற்ற உடலை நல்ல ஆடையாலும் மாலையாலும் அலங்கரிக்கலாம், அது பொதுமக்களின் பார்வைக்கு நன்றாக இருக்கலாம். ஆனால், அது வெறும் உயிரற்ற உடலே. எனது தந்தையின் உடல் நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளது” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், கூர்ந்து ஆராய்ந்தால், அத்தகு அலங்காரங்களால் யாதொரு பயனும் இல்லை.

ஆத்மா இருப்பதனால் உடல் இயங்குகிறது, இல்லையேல் அது வெறும் பிணமே.

உடல் ஒரு ஜடமே

உண்மையில், நாம் வாழும் இந்த உடலானது இறந்த உடல் என்பதே உண்மை. ஆரம்பத்திலிருந்தே இந்த உடலானது இறந்த உடலாகும். ஏனெனில், இந்த உடல் ஒரு ஜடப் பொருள். ஜடத்திற்கு என்றுமே உயிர் கிடையாது. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றினால் உருவான இந்த ஸ்தூல சரீரம் உயிரற்ற ஜடமாகும். சிறிய ஆன்மீகப் பொறி என்னும் ஆத்மா இதனுள் இருக்கின்ற காரணத்தினால், அஃது உயிரோட்டத்துடன் இருக்கின்றது. இதையே நாம் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம், தேஹினோ  யதா தேஹே, உடலினுள் சிறிய ஆன்மீக பொறி உள்ளது. இதுவே, ஆன்மீக உணர்வின் முதற்படியாகும்.

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்த சமயத்தில், அர்ஜுனன் உடலை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். அர்ஜுனன் கிருஷ்ணரைத் தனது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டபோது கிருஷ்ணர் அவனிடம், கற்றறிந்த பண்டிதனைப் போலப் பேசுகிறாய், ஆனால் நீ கூறுபவை முட்டாள்தனமாக இருக்கின்றன” என்றார். (அஷோச்யான் அன்வஷோசஸ் த்வம் ப்ரஜ்ஞா-வாதாம்ஸ் ச பாஷஸே)

நமது விஞ்ஞானிகளும் இவ்வகையைச் சார்ந்தவர்களே. அவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் போலப் பேசினாலும் அவர்களுக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது. ஆத்மா என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. உடலையே எல்லாமாக அவர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். வேத ஞானத்தின்படி, உடலோடு தன்னை அடையாளப்படுத்துபவன் மிருகம் எனப்படுகிறான். அவன் எம்.ஏ., பி.ஏ., பிஎச்.டி. போன்ற பட்டங்களைப் பெற்றிருந்தாலும் மிருகமாகவே கருதப்படுகிறான்.

எனவே, ஆத்மா பற்றிய அறிவு இல்லையெனில், உங்களது பெயரளவிலான கல்வி அனைத்தும் வெறும் பிணத்திற்கான அலங்காரமே. அதனால் என்ன பலன் உண்டாகப் போகிறது? உடலினுள் இருக்கும் உயிர்வாழியைப் பற்றி அறியாது வெறுமனே உடலை அலங்கரித்துக் கொள்வதை சாதாரண மனிதன் வேண்டுமெனில் புகழலாம். ஆனால் அத்தகைய அலங்காரத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.

உடல் அழகின் இரகசியம்

உடலினுள் ஆத்மாவாகிய நாம் இருக்கின்ற காரணத்தினாலேயே இவ்வுடல் அழகாகத் தோற்றமளிக்கிறது. நீங்கள் மாபெரும் விஞ்ஞானியாக, தத்துவவாதியாக, அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால் ஆத்மா இல்லையெனில் இந்த உடல் உபயோகமற்ற சடலமே. பேரழகி ஒருத்தி தற்போது இறந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். அவளது சடலத்தை உங்களிடம் வழங்கி, இந்தப் பேரழகியின் உடலை எடுத்துக்கொள்ளுங்கள், விருப்பம்போல் உபயோகித்துக்கொள்ளுங்கள்,” என்று கூறினால், அதை ஏற்பீர்களா, நிச்சயம் இல்லை. ஏன்? அதே அழகிய உடல் அங்கு கிடத்தப்பட்டிருந்தாலும், அதனை நீங்கள் ஏன் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை? காரணம், அஃது இனிமேல் கவரக்கூடியதாக இல்லை.

இத்தருணத்தில் கதை ஒன்றைக் கூறுகிறேன். அழகிய பெண் ஒருத்தியைப் பின்தொடர்ந்த ஒருவன் நயமுடன் பேசி அவளைக் கவர முயற்சித்தான். கண்ணியமான அப்பெண் அவனது கோரிக்கையை ஏற்கவில்லை. ஆயினும், அவளைப் பின்தொடர்வதை அவன் நிறுத்தவில்லை. எனவே, ஒருநாள் அவனிடம், மூன்றுநாள் கழித்து வரவும். நான் உங்களை ஏற்றுக்கொள்கிறேன்,” என்றாள்.

அவள் வாந்தி, பேதிக்கான மருந்துகளை உட்கொண்டு இரவு பகலாக வாந்தி எடுத்தாள், வயிற்றுப்போக்கும் போனது. அவள் அவ்விரண்டையும் பாத்திரங்களில் சேமித்து வைத்தாள். மூன்று நாள் கழித்து வந்த ஆடவனால் அவளை அடையாளம் காண இயலவில்லை. அவள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் அழகற்று உருமாறியிருந்தாள். அவளிடம் சென்று, இங்கிருந்த அழகிய பெண்மணி எங்கே?” என்று வினவினான்.

அவள் பதிலளித்தாள், நானே அந்தப் பெண். என்னை அடையாளம் காண இயலவில்லையா?” என்றாள். இல்லை, இல்லை, நீ அப்பெண் அல்ல. அவள் மிகவும் அழகானவள், நீயோ அழகற்றவளாக இருக்கிறாய்,” என்றான்.

இல்லை, இல்லை, நீங்கள் கூறும் அந்த அழகிய பெண் நானே.”

அவ்வாறெனில், நீ ஏன் தற்போது அழகற்று காணப்படுகிறாய்?”

நான் அழகை தனியாகப் பிரித்து வைத்துள்ளேன்.”

என்ன, அழகைப் பிரித்து வைத்துள்ளாயா?”

ஆம், காட்டுகிறேன் வாருங்கள்.”

அவனை அழைத்துச் சென்று பாத்திரத்தில் சேமித்து வைத்திருந்த மலத்தையும் வாந்தியையும் அவனிடம் காட்டி, இதோ எனது அழகு. இதை மீண்டும் என்னுடன் சேர்த்துவிட்டால் மீண்டும் நான் எனது அழகைப் பெற்றுவிடுவேன்,” என்றாள்.

இஃது ஒரு நல்ல உபதேசம். சங்கராசாரியர் கூறுகிறார், ஏதம் மாம்ஸ-வஸதி விகரம், அழகிய பெண்ணின் மீது ஏன் கவர்ச்சியுறுகிறாய்? அவளது அழகானது மலம், மூத்திரம், சதை, எலும்பு ஆகியவற்றினால் ஆனது, இதுவே உண்மை ஞானம்.

 

அழகி தன்னைக் காதலித்தவனிடம் தான் சேமித்து வைத்திருந்த வாந்திபேதியைக் காண்பித்தல்.

அனைத்தையும் அழிக்கும் மரணம்

மக்கள் மாயையில் இருக்கின்றனர். மாயா என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக ஏற்றல். இப்பெயரளவிலான நாகரிக முன்னேற்றம் ஒரு மாயையே. எத்தருணத்திலும் இது முடிவிற்கு வரலாம். ஆனால் மக்கள் இதனை அறிவதில்லை. கீதையில் கிருஷ்ணர், ம்ருத்யு ஸர்வ-ஹரஸ் சாஹம், இறப்பின் வடிவில் நான் அனைத்தையும் எடுத்துக்கொள்கிறேன்” என்கிறார். நீங்கள் தத்துவவாதியாக, விஞ்ஞானியாக, பணக்காரனாக இருக்கலாம், ஆனால் இறப்பு வந்தவுடன் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள்.

கிருஷ்ணரிடம் பக்தி செய்வதை விடுத்து மக்கள் தங்களது நேரத்தை அபத்தமான விஷயங்களைத் தேடுவதில் விரயம் செய்கின்றனர். இதை அவர்கள் அறிவதில்லை. வாழ்வில் நாம் சேர்த்துள்ளவை அனைத்தும் இறப்பின்போது பயனற்றதாகிவிடுகின்றன. இன்றோ நாளையோ நாளை மறுநாளோ அனைத்தும் பயனற்றதாகிவிடும் என்றாலும், உண்மை விஷயமான ஆத்மாவில் நாம் கவனம் செலுத்துவதில்லை.

தவறான பாலுறவு, போதை வஸ்துக்கள், சூதாட்டம், புலால் உண்ணுதல் ஆகியவற்றைக் கைவிட்டு ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை மேற்கொள்ளும்படி எமது சீடர்களுக்கு யாம் அறிவுறுத்துகிறோம். இப்பாதையை ஏற்றால் நாம் முக்தி பெறுவோம். இந்தத் தகவலை இன்றைய நாகரிகம் அறியவில்லை. பல்வேறு பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் மாபெரும் பேராசிரியர்களும் விஞ்ஞானிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள்ஶீஇதனை நீங்கள் பிரகடனம் செய்யலாம். அவர்கள் நம்மிடம் வந்து வாதம் புரியட்டும். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குண. நாஸ்திகனிடம் எங்கே நற்குணம் உள்ளது?”

கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்வின் உண்மையான நோக்கம் என்னவென்பதை மக்கள் அறியார்கள். வாழ்வின் நோக்கம் இறைவனை உணர்வதே என்று அனைத்து சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது: பகவான் என்று ஒருவர் இருக்கிறார், அவரது பெயர் கிருஷ்ணர், அவரது விலாசம் வைகுண்டம், அவர் நிறைய நண்பர்களுடன் உள்ளார், அவருக்கு நிறைய காதலியர்களும் உள்ளனர் என அனைத்தும் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. இருந்தும், அயோக்கியர்கள் இதனை உணர மாட்டார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. கிருஷ்ணரே நேரடியாக வந்து, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, அனைத்து அபத்தங்களையும் கைவிட்டு என்னிடம் சரணடையுங்கள்,” எனப் பிரச்சாரம் செய்கிறார். ஆனாலும் மக்கள் அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடவுளே பிரச்சாரம் செய்கிறார், ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

நீங்கள் ஏன் மரணம் நெருங்குவதற்கு முன் கடவுளை அறியக் கூடாது? ஹரே கிருஷ்ண ஜபம் செய்யுங்கள், ராதா கிருஷ்ணரின் விக்ரஹங்களை தரிசனம் செய்யுங்கள், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே புத்திசாலித்தனம். முதல்தர புத்திசாலியே கிருஷ்ண பக்தியை ஏற்பான் என்று சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது. கடைநிலை மனிதர்களும் மூடர்களும் கிருஷ்ண பக்தியை ஏற்க இயலாது. கிருஷ்ணரின் கருணையால் நீங்கள் முதல்தர புத்திசாலியாக உள்ளீர்கள், கிருஷ்ண பக்தியை ஏற்றுள்ளீர்கள். இதனைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்து கிருஷ்ண உணர்வில் இருக்க முயற்சி செய்யுங்கள். அப்போது வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். நீங்கள் மகிழ்வடைவீர்கள். ஹரே கிருஷ்ண!