ஆணாதிக்கத்திற்கு அப்பால்

ஆணாதிக்கத்திற்கு அப்பால்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் செய்தியாளருக்கும் இடையில் பிலடெல்பியாவில் ஜூலை 1975இல் நிகழ்ந்த உரையாடல்.

செய்தியாளர்: கிருஷ்ண பக்தர்களும் வேத சாஸ்திரங்களும் பெண்களின் தன்மை என்று சிலவற்றை வரையறுப்பதால், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை சிலர் ஆணாதிக்க சமுதாயமாகக் கருதலாம். எனக்கு இதைப் பற்றி ஏதும் தெரியாது என்பதால், இதுகுறித்து நீங்கள் கருத்துரைத்தால் நன்றாக இருக்கும். பெண்களுக்கு எதிரான இயக்கம் என்பது குற்றச்சாட்டு அல்ல, மாறாக, பெண்களின் இயல்பான பண்புகளை வைத்து அவர்களை ஆண்களைவிடத் தாழ்ந்த முறையில் இந்த இயக்கம் வரையறுப்பதாகத் தெரிகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் ஆன்மீக ரீதியில் அனைவருக்கும் சம உரிமை வழங்குகிறோம். பௌதிகமாகப் பார்த்தால், ஒருவர் உதவியாளராகவும் மற்றொருவர் மேலாளராகவும் உள்ளனர். இதை எவ்வாறு தவிர்க்க இயலும்? எல்லாரும் மேலாளர்களாக இருக்க வேண்டும், எவரும் உதவியாளர்களாக இருக்கக் கூடாது என்னும் சமத்துவத்தை பெளதிகமான முறையில் உங்களால் அடைய முடியுமா? பெளதிகமான முறையில், ஒருவர் பெற்றோராகவும் மற்றொருவர் குழந்தையாகவும் உள்ளார், ஒருவர் உதவியாளராகவும் மற்றொருவர் மேலாளராகவும் உள்ளார், ஒருவர் பெண்ணாகவும் மற்றொருவர் ஆணாகவும் உள்ளனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்? ஆயினும், ஆன்மீகமான முறையில் இவர்கள் அனைவரும் சமமானவர்கள்.

செய்தியாளர்: அப்படியெனில், பெளதிகமாக நடப்பவை முக்கியத்துவம் இல்லாதவையா?

ஸ்ரீல பிரபுபாதர்: விஷயம் என்னவெனில், நீங்கள் ஆன்மீகத் தளத்திற்கு வந்தால், ஒவ்வொரு
வருக்குள்ளும் ஆன்மீக ஆத்மா இருப்பதைக் காண முடியும். அப்போது சமத்துவம் பிறக்கும். உதாரணமாக, நீங்கள் சிவப்பு நிற உடையை அணிந்துள்ளீர், நான் வேறு விதமாக உடையணிந்துள்ளேன். உடையில் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். பல்வேறு ஆண்களும் பெண்களும் வெவ்வேறு விதமாக உடையணிந்துள்ளனர். அவர்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பொறுத்தவரை, அவர்களை சமமானவர்கள் என்று கூற இயலாது.

ஆயினும், அந்த ஆடைகளுக்குள் உள்ள ஆன்மீக உயிர்வாழிகளான அவர்கள் அனைவரும் சமமானவர்களே. ஆன்மீகப் பார்வையின் வாயிலாக, பண்டிதர், பசு, யானை, நாய், நாயை உண்பவன் என அனைவரையும் சமமானவராகக் காண முடியும் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். இருப்பினும், பெளதிக ரீதியில் எவ்வாறு அவர்கள் சமமாக இருக்க முடியும்?

நான் ஒரு பண்டிதரை அழைத்து, “இந்த நாயுடன் அமருங்கள்,” என்று கூறினால், அவர் மகிழ்ச்சியடைவாரா? தாம் அவமதிக்கப்பட்டதாக நினைத்து வருத்தப்படுவார். அந்த நாய்க்குள் ஆன்மீக ஆத்மா உள்ளது, பண்டிதருக்குள்ளும் ஆன்மீக ஆத்மா உள்ளது என்பதை என்னால் காண முடியலாம். ஆயினும், “உங்கள் இருவரையும் நான் சமமாகக் காண்கிறேன்,” என்று நான் கூறினால், அஃது அவரை அவமதிப்பதைப் போல இருக்கும். எனவே, வேறுபாடுகளுடன் இருக்கக்கூடிய பெளதிகச் சூழ்நிலையை நாம் தொந்தரவு செய்யக் கூடாது. ஆயினும், அதே நேரத்தில் ஆன்மீகச் சூழ்நிலையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

செயற்கையான முறையில், ஜடவுடலின் தளத்தில், ஆணையும் பெண்ணையும் நீங்கள் சமன் செய்ய முயலலாம், ஆனால் அஃது உண்மையல்ல.

பகவத் கீதையின் ஓரிடத்தில், “ஆன்மீகப் பார்வையைப் பெற்றவன் அனைவரையும் சமமாகக் காண்கிறான்” என்று கூறப்படுகிறது. மற்றோர் இடத்தில், ஸ்த்ரீஷூ துஷ்டாஸூ வார்ஷ்ணேய ஜாயதே வர்ண-ஸங்கர:, பெண்கள் பாதுகாக்கப்படாவிடில் கீழ்த்தரமான ஆண்கள் அவர்களைக் கெடுத்து விடுவர் என்றும், சமூகம் தேவையற்ற குழந்தைகளால் சுமையேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“பெண் விடுதலை” என்பது ஆண்களின் ஒரு தந்திரமே. இதன் மூலம் ஆண்களால் பெண்களை இலவசமாகப் பெற முடிகிறது. அவன் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, பிரிந்து செல்கிறான். அவளோ அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கிறாள் அல்லது கருவை கலைத்து விடுகிறாள். இது கேட்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், பெண் விடுதலை என்றால், ஆண்கள் பெண்களைத் தந்திரமாக ஏமாற்றி விட்டனர் என்பதே பொருள். எனவே, ஆன்மீக உணர்வை அடைவதற்கான பாதையில் முன்னேற வேண்டுமெனில், நாம் சில பெளதிக வேறுபாடுகளைப் பின்பற்றுதல் அவசியம். அதன்படி, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பெண்களை நாங்கள் உண்மையில் பாரபட்சமாக நடத்துவதாக இருந்தால், எங்களுடைய கோயிலில் எவ்வாறு அவர்களும் மகிழ்ச்சியாக ஒன்று சேர்ந்து வாழ்கின்றனர்? ஆன்மீகத் தளத்தில் இருப்பதால், நாங்கள் அனைவரும் சமமாக, மகிழ்ச்சியாக உள்ளோம். “நீங்கள் ஒரு பெண். உங்களால் பக்தராக முடியாது,” என்று நாங்கள் கூறுவதில்லை. நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். ஆன்மீகத் தளத்திற்கு வாருங்கள், எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று வேண்டுகிறோம். ஆன்மீக உணர்வைப் பெற்றவன் தனக்கும் பிறருக்கும் இடையே ஆன்மீக ரீதியாக வேறுபாடு இல்லை என்று தெரிந்துகொள்வதால், அவன் மகிழ்ச்சியடைகிறான்.

இங்கே எங்களது கோயிலில் இதனை நடைமுறையில் காண முடியும். மகன் நடனமாடுகிறான், தந்தை நடனமாடுகிறான், கறுப்பன் நடனமாடுகிறான், வெள்ளையன் நடனமாடுகிறான், இளைஞர்கள் நடனமாடுகின்றனர், முதியோர்கள் நடனமாடுகின்றனர், பெண் நடனமாடுகிறாள், ஆண் நடனமாடுகிறான், எல்லாரும் நடனமாடுகின்றனர். அவர்கள் செயற்கையாக நடனமாடவில்லை, ஆன்மீகப் பரவசத்தில் ஆடுகின்றனர், இயல்பாகவும் தன்னிச்சையாகவும் ஆடுகின்றனர்; ஏனென்றால், அவர்கள் அனைவரும் பகவானை உணர்ந்துள்ளனர், பகவானின் உறவில் உள்ளனர். “நாம் அனைவரும் கிருஷ்ணரின் சேவகர்கள்” என்ற பரவச நிலையை உணர்ந்துள்ளனர்.

இவை அனைத்தும் பெளதிக வேறுபாடுகளுக்கு மத்தியிலும் நிகழ்கின்றன. ஓர் ஆணின் உடலமைப்பும் ஒரு பெண்ணின் உடலமைப்பும் வேறுபட்டவை. அவை சமமானவை என்று எவ்வாறு கூற முடியும்? பெளதிகமாக ஆணும் பெண்ணும் சமமாக இருப்பின், ஆண் ஏன் கருத்தரிப்பதில்லை? இந்த வேறுபாடு இயற்கையாகவே உள்ளது. சில சமயங்களில் மக்கள் இந்த வேறுபாட்டை செயற்கையானது என்று நினைக்கின்றனர், ஆனால் அந்த வேறுபாடு ஏற்கனவே உள்ளது. இருப்பினும், கிருஷ்ணரின் தொடர்பில் இருக்கும்போது, “நான் ஆத்மா, பகவானுக்கு சேவை செய்வது எனது பணி” என்று நினைக்கும்போது அவர்கள் சமமானவர்களே.

நமது கருத்து என்னவெனில், செயற்கையான சமத்துவத்தை உண்டாக்க நாம் முயலக் கூடாது. அது தோல்வியில்தான் முடியும். இலண்டனில் நான் ஒரு பெண் காவல் அதிகாரியைக் கண்டேன். அந்த உரையாடலில் நான் கூறினேன், “நான் உங்களுடைய கையைப் பிடித்து இழுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? உரக்கக் கூவுவீர்கள். எனவே, நீங்கள் காவல் அதிகாரியாக இருந்து என்ன பயன்?” ஒரு காவல் அதிகாரிக்கு உடல் பலம் தேவைப்படுகிறது? அதிகாரி பலசாலியாக இருந்தால், அவனால் ஒரு கயவனை அடிக்கவோ பிடிக்கவோ முடியும். ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? எனவே, நாங்கள் நடைமுறைக்கு ஏற்ப வாழுங்கள் என்றும் செயற்கையான சமத்துவம் நீடிக்காது என்றும் அறிவுறுத்துகிறோம்.

நாம் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள் என்பதால், நாம் சமமானவர்கள், இதில் ஐயமில்லை. அஸ்மின் தேஹே, ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஆன்மீக ஆத்மா உள்ளது. முதலில் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு, அந்த ஆத்மாவின் தளத்தில் அறிவையும் புரிதலையும் வளர்த்துக் கொண்டால், பிறகு நாம் சமம் என்பதை உணர்ந்துகொள்வோம், அப்போது தொல்லைகள் ஏதும் இருக்காது, அனைவரும் அமைதியாக வாழ்வோம். நாம் சமமானவர்கள் என்று செயற்கையாகக் கூறினால், அஃது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. இந்த மையக் கருத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இஃது உலகெங்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.

கற்றறிந்த பண்டிதன் அனைவரையும் ஆன்மீக உயிர்வாழியாக (ஆத்மாவாக) காண்கிறான்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment