ஒவ்வோர் இல்லத்திலும் பகவத் தரிசனம்

வழங்கியர்: ஸத்ய நாராயண தாஸ்

தங்களது கைகளில் தற்போது தவழும் அற்புத மாத இதழான இந்த பகவத் தரிசனத்தினை ஒவ்வோர் இல்லத்திற்கும் எடுத்து செல்ல வேண்டும், ஒவ்வொரு தமிழனின் கரங்களிலும் பகவத் தரிசனம் இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களும் வழிகளும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

பகவத் தரிசனம், ஓர் அறிமுகம்

பகவத் தரிசனத்தினை தொடர்ந்து படிப்பவர்கள்கூட இதன் பாரம்பரியத்தையும் சிறப்பினையும் அறியாமல் இருக்கலாம் என்பதால், அவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.

ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்களின் கட்டளைப்படி, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், சுமார் 70 வருடங்களுக்கு முன்பு பேக்-டு-காட்ஹெட்(Back to Godhead) என்ற பெயரில் ஓர் ஆங்கில பத்திரிகையைத் தொடங்கினார். அஃது இன்றுவரை அவரைப் பின்பற்றுபவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அப்பத்திரிகைக்கு அவரளித்த வழிகாட்டுதலைப் பின்பற்றி தமிழில் வெளிவருவதே பகவத் தரிசனம். 1944ஆம் ஆண்டு பேக்-டு-காட்ஹெட் பத்திரிகையை ஸ்ரீல பிரபுபாதர் தொடங்கியபோது, அதன் அனைத்து பணிகளையும் அவரே செய்தார்; அவரே எழுதினார், டைப் செய்தார், பிழை திருத்தினார், அச்சடித்தார், விநியோகமும் செய்தார். பலவிதமான சோதனைகளுக்கு இடையிலும் ஸ்ரீல பிரபுபாதர் அதனை அவ்வப்போது நடத்தி வந்தார்.

பிரபுபாதருடைய ஆங்கில புலமையின் காரணமாக, அவரை மேலை நாடுகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்யுமாறும் பணம் கிடைத்தால் கிருஷ்ண பக்தி சம்பந்தமான புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுமாறும் அவரது குருநாதர் கட்டளையிட்டிருந்தார். அதன்படி, 1965இல் ஸ்ரீல பிரபுபாதர் ஜலதூதா என்னும் சரக்கு கப்பலில் பயணித்து அமெரிக்கா சென்று, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 1966இல் இஸ்கான் என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (International Society for Krishna Consciousness – ISKCON) நியுயார்க் நகரில் ஆரம்பித்தார்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் மகிமையினாலும் ஸ்ரீல பிரபுபாதரின் கருணையினாலும் கொஞ்சம் கொஞ்சமாக பல வெளிநாட்டினர் பிரபுபாதரின் சீடர்களாக மாறினர். விடுபட்டுப் போன பேக்-டு-காட்ஹெட் பத்திரிகையை தொடர்ந்து நடத்துமாறு ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய சீடர்களிடம் கேட்டுக் கொண்டார். அவரால் உற்சாகமளிக்கப்பட்ட அவரது சீடர்கள் எல்லா நாடுகளிலும் இந்த பத்திரிகையை பெரிய அளவில் உற்சாகத்துடன் விநியோகம் செய்தனர். உதாரணமாக, சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஒரு ரதயாத்திரை நிகழ்ச்சியில், ஒரே நாளில் பல இலட்சம் பிரதிகளை பக்தர்கள் விநியோகம் செய்தனர். தன்னுடைய குருவின் கட்டளையை நிறைவேற்ற உதவிய பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களை பெரு மகிழ்ச்சியுடன் வழங்கி வந்தார்.

பேக்-டு-காட்ஹெட் பத்திரிகையை இஸ்கான் இயக்கத்தின் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட ஸ்ரீல பிரபுபாதர், தன்னுடைய சீடர்களுடனான கடித பரிவர்த்தனையில் இப்பத்திரிகையின் விநியோகம் குறித்து எப்போதும் வலியுறுத்துவார். ஸ்ரீல பிரபுபாதருக்கு மிகவும் பிடித்தமானது புத்தக விநியோகம். ஏனெனில், அஃது அவருடைய குருநாதர் அவருக்களித்த கட்டளையாயிற்றே. கிருஷ்ண சம்பந்தமான புத்தகங்களையும் கட்டுரைகளையும் தன்னுடைய சீடர்களும் எழுத வேண்டும் என்பதும், உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தி நூல்களே இடம் பெற வேண்டும் என்பதும் பிரபுபாதரின் விருப்பம். கிருஷ்ணருடன் தொடர்பில்லாத நூல்கள் நம்மை இந்த பௌதிக பந்தத்தில் சிக்க வைக்கும் அபாயகரமானவை.

ஸ்ரீல பிரபுபாதரால் தொடங்கப்பட்ட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை, இன்று ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களையும் பேக்-டு-காட்ஹெட் பத்திரிகையையும் சுமார் 80 உலக மொழிகளில் அச்சடித்து, பல கோடி பிரதிகளை உலகெங்கிலும் விநியோகம் செய்து, உலகின் தலைசிறந்த ஆன்மீக பதிப்பகமாக திகழ்ந்து வருகிறது. இஸ்கான் கோயில்களில் கிடைக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தைப் படிப்பதாலும், www.tamilbtg.com என்னும் இணையதளத்தின் காணொளி பகுதியில் இருக்கும் நாடகத்தைப் பார்ப்பதாலும், பகவத் தரிசனத்தின் முக்கியத்துவத்தை அனைவராலும் எளிதில் உணர முடியும்.

தமிழில் பகவத் தரிசனம்

தமிழ் பக்தர்களின் நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், 2009ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி முதல், ஸ்ரீல பிரபுபாதரின் பேக்-டு-காட்ஹெட் பத்திரிகை தமிழில் வெளிவரத் தொடங்கியது. ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று வெளிவரத் தொடங்கிய இந்த இதழ், குறுகிய காலத்தில் மாத இதழாக மாறி, பலதரப்பட்ட மக்களின் பேராதரவைப் பெற்றது. கண்களைக் கவரும் அழகிய வண்ணப் படங்களுடன், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், உரையாடல்கள், இதர பக்தர்களின் கட்டுரைகள் என பல்வேறு சிறப்பான வழிகளில் கிருஷ்ண பக்தியினை வலியுறுத்தி வரும் பகவத் தரிசனம், பல தரப்பட்ட மக்களின் வாழ்வை மாற்றியமைத்து வருகிறது.

ஒரு வருட சந்தா, இரண்டு வருட சந்தா, ஐந்து வருட சந்தா என பல்வேறு பிரிவுகளின் கீழ் பொதுமக்களும் பக்தர்களும் இப்பத்திரிகையின் உறுப்பினர்களாக சேர்ந்து இதன் விநியோகத்தினை அதிகரித்துள்ளனர். ஆரம்பத்தில் சில ஆயிரங்கள் வெளிவந்த பகவத் தரிசனம், கிருஷ்ண பக்தர்களின் தொடர் உற்சாகத்தினால், இன்று 30,000 பிரதிகளுக்கு மேல் மாதந்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. “பகவத் தரிசனம் ஆயிரக்கணக்கில் அல்ல, இலட்சக்கணக்கில் விநியோகம் செய்யப்படும்போது மட்டுமே அஃது எனக்கு ஆறுதல் அளிக்கும்,” என்ற ஸ்ரீல பிரபுபாதரின் கூற்றின்படி, கிருஷ்ண பக்தர்கள் பகவத் தரிசனத்தின் விநியோகத்தினை இலட்சக்கணக்கில் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்விட்சர்லான்ட், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியாவின் இதர பகுதிகள் என தமிழர்கள் வசிக்கும் எல்லா இடங்களுக்கும் பகவத் தரிசனம் சென்று கொண்டிருக்கிறது. முறையான குரு சீடப் பரம்பரையில் பெறப்பட்ட செய்திகளை, சற்றும் பிறழாமல், நவீன உலகத்திற்கு ஏற்ற வகையில், சிந்திக்கத் தூண்டும் பல்வேறு கட்டுரைகளுடன் வெளியிடுவதால், அவை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வருகின்றன. பகவத் தரிசனம் தமிழர்களுக்கான ஒரு மாபெரும் வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. எந்த வித இலாப நோக்கமும் இன்றி, மக்களுக்கு உண்மையான ஆன்மீக ஞானத்தை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, பல்வேறு பக்தர்களின் சீரிய சேவை மனப்பான்மையுடன் இப்பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு செய்தித்தாள்கள், வாரப் பத்திரிகைகள், மாத பத்திரிகைகள் என எத்தனை எத்தனையோ அச்சடிக்கப்படுகின்றன, விற்கப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றினால் எந்தவொரு உண்மையான பயனும் இருப்பதில்லை. அவற்றைப் படித்த பின்னர், அவை நேராக குப்பைக்குச் செல்கின்றன. இன்றைய நியூஸ் பேப்பர், நாளைய வேஸ்ட் பேப்பர். ஆனால் கிருஷ்ணர் சம்பந்தமான செய்திகளைத் தாங்கி வரும் பகவத் தரிசனம் என்றும் எப்போதும் படித்து பாதுகாக்க வேண்டிய தகவல்களைக் கொண்டுள்ளது.

பகவத் தரிசனத்தினைப் பரப்புவோம்

பகவத் தரிசனத்தைப் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்: காரிருளில் மூழ்கியுள்ள மனித சமுதாயத்தினை பகவத் தத்துவ விஞ்ஞானத்தைக் கொண்டு மீட்கும் பகவத் தரிசனத்தினை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல உதவி செய்யுங்கள். தன்னைப் பற்றி பிரச்சாரம் செய்யும் பக்தனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்; அவனை விட தனக்கு மிகவும் பிரியமானவராக யாரும் ஆக முடியாது என்றும் கூறுகிறார். அதனால்தான் வைஷ்ணவர்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை, அதாவது பகவத் கீதை, பாகவதம் போன்றவற்றை மக்களிடையே பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறு பிரச்சாரம் செய்வதற்கான மிக முக்கிய வழிமுறை, பகவத் தரிசனத்தை ஒவ்வோர் இல்லத்திற்கும் எடுத்துச் செல்வதாகும்.

பகவத் தரிசன வாசகர்கள் அனைவரும் இந்த சேவையில் ஈடுபட முடியும். ஒவ்வோர் இல்லத்திலும் மாதந்தோறும் ஏற்படும் தேவையற்ற செலவுகள் பல. மாமிச உணவுகள், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல், சூதாட்டம், தகாத பாலுறவு என்று பணத்தை பலரும் விரயம் செய்கின்றனர். அத்தகு மகாபாவங்களில் ஈடுபடாதவர்கள்கூட, கேபிள் டிவி, செய்தித்தாள்கள், மாத இதழ்கள் (ஆன்மீக மாத இதழ் என்னும் பெயரில் வரும் இதழ்கள்கூட பெரும்பாலும் கற்பனைகளையே தாங்கி வருகின்றன), சினிமா, சுற்றுலா, ஆடம்பர பொருட்கள் என பல வழிகளில் பணத்தை விரயம் செய்கின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அளிக்கப்பட வேண்டிய செல்வத்தினை தேவையில்லா விஷயங்களில் ஈடுபடுத்தி, மக்கள் தங்களைத் தாங்களே நரகத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்த நிலையிலிருந்து அவர்களை விடுவிக்க விரும்புவோர், அவர்களுடைய பணத்தின் மிகச் சிறிய பகுதியினை எப்படியாவது அவர்களிடமிருந்து பெற்று, அவர்களுக்கு பகவத் தரிசனத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

தவறாக வழிநடத்தப்படும் இன்றைய சமுதாயத்தில் உண்மையான ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி மக்களை மிகப்பெரிய துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறச் செய்து, மீண்டும் நம்முடைய உண்மையான தந்தையான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆன்மீக லோகத்திற்குச் செல்ல, ஜாதி, மத, இன வேறுபாடுகள் ஏதுமின்றி (ஏனெனில், நாம் அனைவரும் ஆத்மாக்கள்; இதில் இந்து, முஸ்லீம், கிருஸ்துவன் என்ற பாகுபாடுகள் கிடையாது), இந்த பகவத் தரிசனம் ஒவ்வோர் இல்லத்திற்கும் செல்லும் சேவையில் அனைவரும் பங்கு கொள்ள அழைக்கின்றோம். நீங்கள் பெற்ற இந்த பொக்கிஷத்தை மற்றவர்களுக்கும் வழங்குதல் சிறந்ததன்றோ!

இல்லந்தோறும் பகவத் தரிசனம்-வழிகள்

ஆழமான தத்துவங்கள் தெரியாது என்று நினைக்கும் பகவத் தரிசன வாசகர்கள் கவலை கொள்ள வேண்டாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவருடைய தூய பக்தரான ஸ்ரீல பிரபுபாதருக்கும் சேவை செய்வதற்கு உங்களுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம், இந்த பகவத் தரிசனத்தை பரப்புவதற்கான வழிகள் பல, அவற்றில் நீங்களும் எளிதில் பங்கு கொள்ளத்தக்க சில எளிய வழிமுறைகளை இங்கு உங்களுக்கு வழங்குகிறோம்.

(1) முதலில், இந்த இதழைப் படிக்கும் வாசக அன்பர்கள் இதுவரை பகவத் தரிசனத்தின் சந்தாதாரராக ஆகவில்லையெனில், முதலில் உங்களை சந்தா உறுப்பினராக இணைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வாழ்வைப் பக்குவப்படுத்தி, மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார். எனவே, முதலில் நீங்கள் சந்தாதாரராக மாறுங்கள். அதனைத் தொடர்ந்து, உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர், உடன் பணிபுரிபவர்கள் என அனைவரையும் சந்தாதாரராக மாற்றுங்கள். இதன் மூலமாக மிகவும் எளிமையான வழியில், நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணைக்கு பாத்திரமாக ஆவீர்கள். மேலும், உங்களுடைய சந்தா எப்போது முடிவடைகிறது என்று தெரிந்துக் கொண்டு, அதனைப் புதுப்பித்து, பகவானின் செய்திகளைத் தொடர்ந்து கேட்டு மனித வாழ்வின் பயனை அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(2) பிறந்த நாள் விழா, திருமண விழா, உபநயன விழா போன்றவற்றில், தேங்காய், பழம் போன்றவை இலவசமாக கொடுக்கப்படுவது வழக்கம்; அவற்றுடன் இணைத்து பகவத் தரிசன இதழை தானமாக கொடுக்க முன் வாருங்கள். எல்லா தானங்களிலும் சிறந்தது சாஸ்திர தானம் என்பதால், சிறப்பு நிகழ்ச்சிகளின்போது, 100, 200, 500, 1,000 என்று பகவத் தரிசனத்தினை மொத்தமாக பெற்று அவற்றை தானம் செய்வதால், தாங்கள் மாபெரும் பலனை அடைவீர்கள். அல்லது, அத்தகு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நெருங்கிய உறவினர்களுக்கு பகவத் தரிசனத்தை சந்தாவின் மூலமாக அனுப்பி வையுங்கள், அதன் மூலமாக அந்த ஜீவன்களுக்கு மிகச்சிறந்த நன்மையை நீங்கள் அளிக்கிறீர்கள்.

(3) தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பெரும் கடைகள் போன்றவற்றை நீங்கள் நடத்துவதானால், உங்களது வாடிக்கையாளர்களுக்கு (குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்கள் வாங்கும்போது) சில அன்பளிப்புகளைக் கொடுப்பது உங்களது பழக்கமாக இருக்கலாம். நீங்கள் ஏன் பகவத் தரிசனத்தினை அத்தகு அன்பளிப்பாக மாற்றக் கூடாது? தினசரி அன்பளிப்புகள் வழங்காதவர்கள்கூட, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தங்களது தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பது வழக்கம். அதன் ஒரு சிறு பகுதியைக் கொண்டு உங்களுடைய நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அனைவரையும் நீங்கள் பகவத் தரிசன சந்தாதாரராக மாற்றலாம்.

(4) மாதம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பகவத் தரிசனத்தினை மக்களிடம் விநியோகம் செய்வதற்கான உறுதியையும் நீங்கள் ஏற்கலாம். உங்களில் பலர் இஸ்கான் கோயில்களிலிருந்து தொலைவில் வசிக்கலாம். உங்களுக் காகவே இந்த திட்டத்தை நாங்கள் அறிமுகப் படுத்தியுள்ளோம். உங்களால் முடிந்த அளவில், 25, அல்லது 50 என்ற எண்ணிக்கையில், பத்திரிகையைப்  பெற்று, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடையே விநியோகம் செய்யுங்கள். இருபது ரூபாய் இதழுக்காக பலரிடம் யாசகம் செய்ய வேண்டியிருப்பதாக நினைக்க வேண்டாம், கிருஷ்ணரின் கருணையை வழங்கும் சீரிய திருப்பணியில் ஈடுபட்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பகவத் தரிசனத்தினை பெரும்பாலும் யாரேனும் ஒரு பக்தரே உங்களது கையில் கொடுத்திருப்பார். நீங்கள் அவரிடம் முதலில் மறுப்பு தெரிவித்திருக்கலாம். எப்படி இருப்பினும், யாரோ ஒரு பக்தரின் கருணையால், இன்று இந்த உயர்ந்த இதழ் தங்களை வழிநடத்துகிறது. நீங்கள் ஏன் இதனை அதேபோன்று மற்றவர்களுக்கு வழங்கக் கூடாது?

தங்களைப் போன்ற பகவத் தரிசன வாசகர்கள் அனைவரும் இந்த சேவையில் ஈடுபட்டு, உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் இந்த இதழை கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

2017-01-20T15:00:34+00:00May, 2014|பொது|0 Comments

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment