வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று, பகவத் கீதை பேசப்பட்டதன் 5,151வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள், பகவத் கீதையில் அனைவரின் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் உரிய பதில் உள்ளது என்றும், இதனை பிரதமர் மோடி பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

வாழ்வின் விஞ்ஞானத்தை எடுத்துரைக்கும் தன்னிகரற்ற நூலான பகவத் கீதையினை பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்னும் விருப்பம் நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த விருப்பம் நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் ஒன்று நிச்சயமாக நடக்கின்றது: சுஷ்மா சுவராஜ்ஜின் கருத்தினால் இன்று பலரும் பகவத் கீதையைப் பற்றி விவாதிக்கின்றனர். கீதையில் என்னதான் உள்ளது என்று சற்றேனும் யோசிக்கின்றனர்.

பல்வேறு தரப்பினைச் சார்ந்த நபர்கள், கீதையைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல், தொலைக்காட்சியிலும் இதர மீடியாக்களிலும் கீதையைப் பற்றி பேசி வருவதைப் பார்க்கின்றோம். எனவே, இதுகுறித்து மக்கள் அறிய வேண்டிய சில அடிப்படைத் தகவல்களை பகவத் தரிசனம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பகவத் கீதை இந்துக்களுடைய புனித நூல்

இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு என்றும், இந்துக்களுடைய புனித நூலான பகவத் கீதையினை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது என்றும், இதர மதத்தினரின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்துரைக்கின்றனர்.

 

இவர்கள் கவனிக்கத் தவறிய தகவல் என்னவெனில், 5,151 வருடங்களுக்கு முன்பாக பகவத் கீதை பேசப்பட்டபோது, கிருஸ்துவம், இஸ்லாம், பௌத்தம், சீக்கியம் என எந்தவொரு மதமும் இருக்கவில்லை; உண்மையில், இந்து மதம் என்றுகூட ஏதும் இருக்கவில்லை. கிருஷ்ணர் கீதையில் ஸநாதன தர்மத்தைப் பற்றி பேசுகிறார். ஸநாதன தர்மம் அல்லது ஸநாதன மதம் என்பது எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.

 

பகவத் கீதை அடிப்படைப் பாடம்: நாம் உடலல்ல, ஆத்மா. ஆனால் இன்றைய உலகில் உடல் ரீதியாக தங்களை அடையாளம் கொள்ளும் மக்கள், அதன் அடிப்படையில் தங்களை கிருஸ்துவன், முஸ்லிம், இந்து, இந்தியன், அமெரிக்கன் என்று அடையாளம் காண்கின்றனர். இந்த அடையாளங்கள் அனைத்தும் போலியானவை. நாம் அனைவரும் ஆத்மாக்கள், கடவுளின் நித்திய சேவகர்கள்–இதுவே உண்மை. இஃது எல்லா மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். பகவத் கீதை என்பது ஆன்மீக விஞ்ஞானத்தை எடுத்துரைக்கும் நூல், இதனை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது என்று கூறுவது அறியாமையின் உச்சகட்டமாகும்.

 

ஒவ்வொருவரும் தத்தமது மத நம்பிக்கைகளை பயிற்சி செய்வதை யாரும் தடுக்கப் போவதில்லை, பரந்த மனதுடன் ஒவ்வொருவரும் இந்தியாவின் அறிவுப் பொக்கிஷத்தினை தெரிந்துகொள்ள முன்வர வேண்டும்.

 

இந்த மாபெரும் ஆன்மீக விஞ்ஞானம் இந்திய திருநாட்டில் உபதேசிக்கப்பட்டு பன்நெடுங்காலமாக சான்றோர்கள் பலரால் உபதேசிக்கப்பட்டு வந்துள்ளது என்பது நிச்சயம் நாம் பெருமைபட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மதச் சாயம் பூசுவோர் நிச்சயம் அறிவிலிகளே. (மேலும் விபரங்களுக்கு, பகவத் தரிசனத்தின் ஆகஸ்ட் 2014 இதழில் வெளிவந்த கிருஷ்ணர் எந்த மதத்தைச் சார்ந்தவர்? என்னும் கட்டுரையைப் படிக்கவும்.)

ஏன் பகவத் கீதை?

வேறு சிலரோ, எத்தனையோ வேத இலக்கியங்கள் இருக்கும் பட்சத்தில், ஏன் நாம் பகவத் கீதையை குறிப்பிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், இதிகாசங்கள் என பரந்து விரிந்துள்ள வேத இலக்கியங்களிலிருந்து ஒரே ஒரு நூலை மட்டும் எடுத்து, அதற்கு விசேஷ மதிப்பு கொடுத்தால், அது மற்றவற்றை குறைந்து மதிப்பிட்டதாக ஆகிவிடும் என்பது இவர்களின் வாதம்.

வேத இலக்கியங்கள் பரந்து விரிந்தவை என்பதும், பகவத் கீதை என்பது அதன் மிகச்சிறிய பகுதியே என்பதும் உண்மையே. இருப்பினும், எல்லா வேத இலக்கியங்களிலும் பகவத் கீதை மிகவும் விசேஷமானதாக திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வேத இலக்கியங்கள் மிகவும் விரிவானவை, அவை அனைத்தையும் படித்து அதிலுள்ள நுணுக்கமான விஷயங்களைப் புரிந்துகொள்வது என்பது கலி யுகத்திலுள்ள மக்களுக்கு இயலாத காரியம் என்பதால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கருணையுடன் பகவத் கீதையினை வழங்கியுள்ளார். எல்லா உபநிஷத்துகளின் சாரமான பகவத் கீதை ஒரு பசுவைப் போன்றது. கிருஷ்ணரால் கறக்கப்படும் இந்த அமிர்தப் பால், அறிவு சான்ற தூய பக்தர்களால் அருந்தப்படக் கூடியது என்று கூறப்படுகிறது.

மேலும், கீதை என்னும் ஒருநூல் போதும் என்றும், பரம புருஷ பகவான் நேரடியாக உபதேசித்திருப்பதால், வேறு எந்த நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெளிவாக சாஸ்திரங்கள் உரைக்கின்றன. (இதுகுறித்த விரிவான கட்டுரையினை வெகு விரைவில் பகவத் தரிசனத்தில் காணலாம்.)

அரசியலமைப்பே இந்தியாவின் தேசிய நூல்

இந்துக்கள், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகிய அனைவரின் ஓட்டு வங்கியையும் பாதுகாக்க நினைக்கும் அரசியல்வாதிகள், எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்ற எண்ணத்துடன், நம்மிடம் ஏற்கனவே “இந்திய அரசியலமைப்பு” என்னும் பெயரில் தேசிய நூல் இருப்பதாகவும், புதிதாக ஒரு தேசிய நூலை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றும் கருத்துரைக்கின்றனர்.

 

இந்திய அரசியலமைப்பினை நமது தேசிய நூலாக ஏற்பது என்பது ஏட்டளவில் வேண்டுமானால் இருக்கலாம்; நடைமுறையில் அது தேசிய நூலா என்பது மாபெரும் கேள்வி. இந்த அரசியலமைப்பின் சட்டங்கள் மனிதரால் இயற்றப்பட்டவை; மேலும், எப்போது வேண்டுமானாலும் மனிதரால் மாற்றப்படத்தக்கவை. அவ்வப்போது மாற்றப்பெறும் நூலுடன் மாற்றமில்லா பகவத் கீதையினை ஒப்பிடுவது முற்றிலும் முட்டாள்தனமானதாகும்.

 

ஏற்கனவே ஒரு தேசிய நூல் உள்ளது என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், பகவத் கீதையை தேசிய நூலாக அல்லாமல், தேசிய பொக்கிஷமாக அறிவிக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தால், ஏற்க முன்வருவார்களா?

 

பல்வேறு அரசியல் காரணங்களினால், பகவத் கீதையினை தேசிய நூலாக அறிவிக்க இயலாவிடில், குறைந்தபட்சம் பாரதத்தின் பாரம்பரிய பொக்கிஷமாக அறிவிக்கலாம் என்று இஸ்கானின் மூத்த சந்நியாசிகளில் ஒருவரான தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

கீதை ஜாதியைப் பரப்புகிறது

கீதை ஜாதியைப் பரப்புவதால், கீதை வேண்டாம்–இது ஜாதிய அரசியல் தோன்றிய நாளிலிருந்து யாம் கேட்கக்கூடிய வாதம்.

 

பகவத் கீதையில், கிருஷ்ணர் குணம் மற்றும் தொழிலின் அடிப்படையிலான நான்கு சமுதாயப் பிரிவுகளைப் பற்றி எடுத்துரைக்கின்றார். பிரிவுகள் என்பது எல்லா சமுதாயத்திலும் உள்ளது; இதனை யாராலும் மறுக்க இயலாது. பிரிவுகள் அற்ற சமுதாயத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ நாடுகளில்கூட, பிரிவுகள் உள்ளன என்பதே உண்மை. கிருஷ்ணரால் கொடுக்கப்பட்டுள்ள சமுதாய அமைப்பினைப் பின்பற்றாமல், நாமே ஏதேனும் ஓர் அமைப்பினை ஏற்படுத்தினால், நிச்சயம் அது பிரச்சனையில்தான் முடியும் என்பதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். கடந்த இருநூறு ஆண்டுகளில் மனித சமுதாயத்தில், பல்வேறு சமுதாய அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு மாற்றியமைப்பட்டுள்ளன. ஆனால் கிருஷ்ணரால் வழங்கப்பட்ட வர்ணாஷ்ரம அமைப்பானது சமுதாயத்திலுள்ள அனைவருக்கும் மிக உகந்த அமைப்பாகும்.

 

இந்த வர்ணாஷ்ரமத்தினை பிறப்பின் அடிப்படையிலான இன்றைய ஜாதி அமைப்புடன் ஒப்பிடுவோர் நிச்சயமாக கீதையை அறியாதவர்களாவர். மருத்துவருக்கு மகனாக பிறந்த காரணத்தினாலேயே, யாரும் மருத்துவனாகிவிட முடியாது; அதுபோலவே, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் யாரும் அந்த வகுப்பினராகிவிட முடியாது. ஒருவரின் குறிப்பிட்ட வகுப்பானது அவரது குணத்தையும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்டதே தவிர, பிறப்பினை அல்ல. இதனை கிருஷ்ணர் கீதையில் தெளிவாக குறிப்பிடுகிறார். ஆனால் கீதையைப் படிக்காத மூடர்கள், எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளைப் போல, கீதையைப் பற்றி கருத்து கூறுவது கேலிக்கூத்தாகும். (மேலும் விபரங்களுக்கு, பகவத் தரிசனத்தின் டிசம்பர் 2011 இதழில் வெளிவந்த பகவத் கீதையும் ஜாதியும் என்னும் கட்டுரையைப் படிக்கவும்.)

தேசிய நூலாக அறிவிப்பதால் என்ன பயன்?

தேசிய விஷயங்களாக சிலவற்றை அறிவிப்பதால் என்ன பயன் என்றும் சிலர் கருத்து கூறுகின்றனர். இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், தேசிய விளையாட்டு ஹாக்கி. இப்படி தேசிய அடையாளமாக இருப்பதால், புலி, மயில், ஹாக்கி ஆகியவை ஏதேனும் சிறப்பைப் பெற்றுள்ளனவா? நிச்சயமாக இல்லை. பிறகு ஏன் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?

 

இது சற்று ஏற்கத்தக்க வாதமே. கீதையை தேசிய நூலாக அறிவிப்பதால் கீதைக்கு எந்தவொரு சிறப்பும் வரப்போவதில்லை; ஏனெனில், நம்முடைய அங்கீகாரத்தின் மூலமாக சிறப்பு பெறும் நிலை கீதைக்கு கிடையாது. பகவத் கீதை என்றென்றும் சிறப்பு மிக்க நூலாகும். 5,150 வருடத்திற்கு முன்பாக உபதேசிக்கப்பட்ட அறிவுப் பொக்கிஷம் பகவத் கீதை. இதனை தேசிய நூலாக, அல்லது தேசிய பொக்கிஷமாக அங்கீகரிப்பது என்பது நமது நாட்டிற்கு பெருமை தரும் விஷயமே தவிர, இதனால் கீதையைப் பொருத்தமட்டில் அஃது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல.

 

அரசியல்வாதிகளால் வழங்கப்படும் அங்கீகாரம் கீதைக்கு அவசியமல்ல என்பது உண்மையே. இருப்பினும், சமுதாயத்தின் தலைவர்கள் செய்யும் காரியங்களை மக்கள் பின்பற்றுவர் என்று கீதையிலேயே கிருஷ்ணர் கூறுகிறார். அதன் அடிப்படையில், தலைவர்கள் கீதையினைப் பின்பற்றினால், நிச்சயம் மக்களும் பின்பற்றுவர்.

 

பகவத் கீதை உலகம் முழுமைக்கும் பொதுவான நூல், இஃது இந்துக்களுக்கோ இந்தியர்களுக்கோ மட்டும் உரித்தானதல்ல. இருப்பினும், இந்த அறிவுப் பொக்கிஷம் பாரத நாட்டில் உபதேசிக்கப்பட்டது என்பதை அங்கீகரித்து, இதனை தேசிய நூலாக அறிவித்தால், அது நிச்சயம் மக்களிடையே ஓர் ஆன்மீக விழிப்புணர்விற்கு வழிவகுக்கும்.

 

பகவத் கீதையினை மக்களிடையே விநியோகம் செய்யும் மாபெரும் சமூக சேவையை இஸ்கான் இயக்கத்தின் பக்தர்கள் உலகெங்கிலும் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர். அத்தருணங்களில் சில மதிகெட்ட மடையர்கள், கீதையை எலக்காரமாக பேசுவதையும் செருப்பைத் தூக்கி காட்டுவதையும் யாம் காண்கிறோம். கீதையை அவமானப்படுத்திவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால் பாவத்தை சேர்த்துக் கொண்டோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஒருவேளை கீதை தேசிய நூலாக அறிவிக்கப்பட்டால், தேசிய சின்னத்திற்கான அவமரியாதை தண்டனைக்குரிய குற்றம் என்னும் காரணத்தினால், இந்த கயவர்கள் கீதையை அவமதிக்கும் செயலைத் தவிர்ப்பர். அதன் மூலம் அவர்கள் பாவங்களைச் செய்வதிலிருந்து தடுக்கப்படுவர்.

எந்த பகவத் கீதையை அறிவிப்பது?

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதில் உள்ள மற்றொரு சர்ச்சை: கீதைக்கு பல்வேறு விளக்கவுரைகள் உள்ளன, அவற்றில் எந்த நூலை தேசிய நூலாக அறிவிப்பது?

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பவர்கள் பெரும்பாலும் அதன் மூல ஸ்லோகங்களை மட்டுமே குறிப்பிடுவர். விளக்கவுரைகளை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், பகவத் கீதையின் விளக்கவுரையானது கீதையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, முறையான குரு சீடப் பரம்பரையின் மூலமாக பெறப்பட வேண்டும். முறையான குரு சீடப் பரம்பரையில் வராதவர்களும், தனது மனம்போன போக்கில் விளக்கவுரை எழுதுபவர்களும், கீதைக்கு விளக்கவுரை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இது மிகவும் அவசியமானதாகும். பல்வேறு நபர்கள் பகவத் கீதை என்ற பெயரில், தங்களது சொந்த கருத்துகளை இடையில் சொருகியும், கீதையின் கருத்துகளை அதிலிருந்து வெளியேற்றியும் கீதைக்கு விளக்கமளிக்கின்றனர் என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

மேற்கூறிய காரணங்களினால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தான் எழுதிய கீதையின் விளக்கவுரைக்கு பகவத் கீதை உண்மையுருவில் என்று பெயரிட்டார். கிருஷ்ணரிலிருந்து தொடங்கும் குரு சீடப் பரம்பரையில் வந்த ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ணர் கீதையில் கூறியவற்றை அர்ஜுனன் புரிந்து கொண்டமை, அப்படியே உள்ளது உள்ளபடி வெளியிட்டுள்ளார். இக்காரணத்தினால், பகவத் கீதை உண்மையுருவில் நூலானது உலகெங்கிலும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வினை மாற்றியமைத் துள்ளது. வேறெந்த விளக்கவுரையும் உலகில் இதுபோன்ற தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவான ஒன்றாகும். (மேலும் விபரங்களுக்கு, பகவத் தரிசனத்தின் டிசம்பர் 2009 இதழில் வெளிவந்த ஏன் பகவத் கீதை உண்மையுருவில்? என்னும் கட்டுரையைப் படிக்கவும்.)

1975இல் ஸ்ரீல பிரபுபாதர் அன்றைய பாரத பிரதமரான திருமதி. இந்திரா காந்தியை சந்திக்கச் சென்றபோது, பத்து கோரிக்கைகளை முன்வைக்க விரும்பினார். அவற்றில் ஒன்று: பகவத் கீதை உண்மையுருவில் தவிர வேறெதுவும் இருக்கக் கூடாது என்பதாகும். இதர உரைகள் மக்களை கிருஷ்ணருக்கு அருகில் அழைத்துச் செல்வதற்கு பதிலாக, கிருஷ்ணரிடமிருந்து விலக்குகின்றன என்பதே இதற்கான காரணமாகும்.

எனவே, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விளக்கவுரையினை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமெனில், பகவத் கீதை உண்மையுருவில் மட்டுமே அதற்குத் தகுந்த நூலாகும்.