பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் பதினேழு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில், இறுதி அத்தியாயமான பதினெட்டாம் அத்தியாயத்தைக் காணலாம்.

பதினேழாம் அத்தியாயத்தின் சுருக்கம்

சாஸ்திரங்களில் இல்லாத விதிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களின் நிலையைப் பற்றி அர்ஜுனன் கேள்வி எழுப்பினான். அவர்களின் நம்பிக்கை ஸத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையிலானது என்று பதிலளித்த கிருஷ்ணர், தேவர்களை வழிபடுதல் ஸத்வ குணம் என்றும், மனிதர்களை வழிபடுதல் ரஜோ குணம் என்றும், பேய்களை வழிபடுதல் தமோ குணம் என்றும் விளக்கினார். வழிபாடு மட்டுமின்றி, உணவு, யாகம், தவம், தானம் ஆகியவற்றிலும் உள்ள முக்குண வேறுபாடுகளை கிருஷ்ணர் எடுத்துரைத்தார். இவை எல்லாவற்றிலும் தோஷங்கள் இருப்பதால், முழுமுதற் கடவுளைக் குறிக்கும் ஓம் தத் ஸத் என்னும் வார்த்தைகளுடன் அச்செயல்கள் செய்யப்படுகின்றன.

17ஆம் அத்தியாயத்திற்கும் 18ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

உண்மையில் பகவத் கீதையின் உபதேசங்கள் 17ஆம் அத்தியாயத்துடன் நிறைவுறுகின்றன. பதினெட்டாம் அத்தியாயம் என்பது இதுவரை விவாதிக்கப்பட்ட விஷயங்களின் சுருக்கமான பகுதியாகும். கீதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பரம புருஷ பகவானுக்கு பக்தித் தொண்டாற்றுவதே வாழ்வின் இறுதி நோக்கம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கருத்து, ஞானத்தின் மிகவும் இரகசியமான பாதையாக பதினெட்டாம் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கீதையின் சுருக்கத்தை வெளிக் கொண்டு வரும் பொருட்டு, ஆரம்பத்தில் கிருஷ்ணர் கூறியவற்றிலிருந்து ஒரு சந்தேகத்தை அர்ஜுனன் எழுப்புகின்றான்: தியாகம் மற்றும் சந்நியாசத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள அர்ஜுனன் விருப்பம் தெரிவிப்பதுடன் இந்த அத்தியாயம் ஆரம்பமாகிறது.

கர்ம யோகத்தின் சுருக்கம்

ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத் துறத்தல் சந்நியாசம் என்றும், செயல்களின் பலன்களைத் துறத்தல் தியாகம் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். எல்லா செயல்களையும் துறக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர்; வேறு சிலரோ யாகம், தானம், மற்றும் தவத்தினை என்றும் துறக்கக் கூடாது என்கின்றனர். அச்செயல்கள் மிகச்சிறந்த ஆத்மாக்களையும் தூய்மைப்படுத்து வதாகக் கூறிய கிருஷ்ணர் அவற்றை என்றும் துறக்கக் கூடாது என்றும், அவை பற்றுதலின்றி பலனை எதிர்பார்க்காமல் செய்யப்பட வேண்டும் என்று முடிவு கூறினார்.

ஒருவன் தனது கடமைகளை மயக்கத்தினால் துறந்தால், அது தமோ குண துறவு எனப்படும்; தொல்லைகளாலும் பயத்தினாலும் கடமைகளைத் துறப்பது ரஜோ குண துறவாகும்; கடமைகளைச் செய்த வண்ணம் பௌதிக சங்கத்தையும் பலனுக்கான பற்றுதலையும் முழுமையாகத் துறத்தல் ஸத்வ குண துறவு எனப்படுகிறது. ஸத்வ குணத்தில் நிலைபெற்றோர் அமங்களமான செயல்களை வெறுப்பதில்லை, மங்களமான செயல்களில் பற்றுக் கொள்வதும் இல்லை. உடலை உடையவன் எல்லா செயல்களையும் துறத்தல் என்பது சாத்தியமல்ல; எனவே, செயலின் பலன்களைத் துறப்பவன் உண்மையான துறவி எனப்படுகிறான்.

செய்யப்படும் எல்லா செயல்களும் நிச்சயம் விளைவுகளைக் கொடுக்கும் என்பதால், விளைவுகளிலிருந்து விடுபட்டிருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். கர்ம யோகத்தின் உபதேசங்களை சுருக்கமாகக் கூறிவிட்ட கிருஷ்ணர், விளைவுகளிலிருந்து விடுபடுவது குறித்து ஞானத்தின் பார்வையிலிருந்து விளக்குகிறார்.

ஞான யோகத்தின் சுருக்கம்

பந்தப்படாமல் செயல்படுவது குறித்து விளக்குவதற்காக கிருஷ்ணர் வேதாந்தத்தினை மேற்கோள் காட்டுகிறார். வேதாந்தத்தின்படி எல்லா செயல்களுக்கும் ஐந்து காரணிகள் உள்ளன: (1) செயலுக்கான இடம் (உடல்), (2) செய்பவன், (3) புலன்கள், (4) பலதரப்பட்ட முயற்சிகள், மற்றும் (5) பரமாத்மா. மனிதன் தன்னுடைய உடல், மனம், மற்றும் வார்த்தைகளால் எந்த செயலைச் செய்தாலும், அதற்கு இந்த ஐந்தும் காரணங்களாக அமைகின்றன. ஐந்து காரணங்களையும் பார்க்காமல் தன்னை மட்டுமே காரணமாகக் கருதுபவன் அறிவாளி அல்ல. யாருடைய நோக்கம் அஹங்காரமின்றி உள்ளதோ, யாருடைய புத்தி பற்றுதலிலிருந்து விடுபட்டுள்ளதோ, அவன் தனது செயல்களால் பந்தப்படுவதில்லை.

 

எல்லா செயல்களையும் கட்டுப்படுத்தும் குணங்கள்

ஐந்து காரணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருவனின் செயல்கள் இயற்கையின் முக்குணங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அறிவு, செயல்கள், செய்பவன், புத்தி, மனவுறுதி, மகிழ்ச்சி ஆகியவை அனைத்தும் முக்குணங்களைச் சார்ந்துள்ளன என்பதை அறிய வேண்டும். இவற்றை விரிவாக எடுத்துரைத்த கிருஷ்ணர், இவ்வுலகிலோ தேவர்களின் மத்தியிலோ, இம்மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்கள் எவருமில்லை என்று எடுத்துரைத்தார். அப்படியெனில், இவற்றிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்?

கடமையைச் செய்து விடுதலை பெறுதல்

விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்வதால் குணங்களிலிருந்து விடுபட முடியும். சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் தத்தமது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களின் அடிப்படையில், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிக்கப்படுகின்றனர்.

அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகியவை பிராமணரின் தன்மைகள். சூரத்தனம், வலிமை, மனவுறுதி, வளமை, போரில் தைரியம், கொடை, ஆளும் தன்மை ஆகியவை சத்திரியரின் தன்மைகள். விவசாயம், பசுக்களைப் பராமரித்தல், வியாபாரம் ஆகியவை வைசியர்களின் தன்மைகள். மற்றவர்களுக்கு தொண்டு செய்தல் சூத்திரர்களின் தன்மை.

தத்தமது குணத்திற்கு தகுந்த கடமையைச் செய்து, முழுமுதற் கடவுளை வழிபடுவதன் மூலமாக ஒவ்வொரு மனிதனும் பக்குவமடைய முடியும். மற்றவரது கடமையை ஏற்று அதனைப் பக்குவமாகச் செய்வதைவிட, முறையாக செய்யாவிட்டாலும் தனது சொந்த கடமைகளில் ஈடுபட்டிருப்பதே சிறந்தது. அவ்வாறு கடமைகளைச் செய்பவன் பாவ விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை. நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதுபோல, எல்லா செயல்களிலும் ஏதேனும் தோஷம் இருக்கும்; அதற்காக ஒருவன் தனது தொழிலை துறக்கக் கூடாது.

 

ஒவ்வொருவரும் தத்தமது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களின் அடிப்படையில், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிக்கப்படுகின்றனர்.

இரகசியமான அறிவு

பற்றுதல் ஏதுமின்றி கர்ம யோகத்தை பயிற்சி செய்பவன், தான் உடலல்ல என்னும் அறிவைப் பெற்று ஸத்வ குணத்தின் தளத்திற்கு வருகிறான். ஸத்வ குணத்தின் தளத்தை அடைந்த பின்னர், அவன் தனது புத்தியினால் தூய்மையடைந்து, உறுதியுடன் மனதைக் கட்டுப்படுத்தி, புலனுகர்ச்சிப் பொருட்களைத் துறந்து, தனியிடத்தில் வாழ்ந்து, குறைவாக உண்டு, உடல், மனம், மற்றும் பேச்சினைக் கட்டுப்படுத்தி, எப்போதும் தியானத்தில் ஆழ்ந்து, பற்றுதலின்றி, அஹங்காரம், பொய்யான வலிமை, பொய்யான பெருமை, காமம், கோபம், மற்றும் ஜடப் பொருட்களை ஏற்பதிலிருந்து விடுபட்டு, உரிமை உயர்வின்றி, அமைதியாக இருந்து தன்னுணர்வின் நிலைக்கு உயர்கிறான். அந்நிலை பிரம்மனை உணர்ந்த நிலை எனப்படும்.

ஆன்மீக தன்னுணர்வின் முதல்படி பிரம்மனை உணர்வதாகும். இந்நிலையை அடைந்தவன், இன்பம் நிறைந்தவனாக, கவலைகளும் ஏக்கமும் இல்லாதவனாக, எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டவனாக ஆகிறான். அத்தகு உயர்நிலையில் ஒருவன் கிருஷ்ணரின் மீதான தூய பக்தித் தொண்டை அடைகிறான்.

 

தூய பக்தித் தொண்டில் செயல்படுதல்

பக்தித் தொண்டினால் மட்டுமே கிருஷ்ணரை உள்ளபடி அறிந்துகொள்ள முடியும். கிருஷ்ண பக்தியில் பக்குவமடையும்போது அவரது திருநாட்டிற்குள் நுழைய முடியும். கிருஷ்ண பக்தன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், கிருஷ்ணரின் நேரடிப் பாதுகாப்பில் இருப்பதால், அவரது கருணையால், நித்தியமான அழிவற்ற அந்த ஆன்மீக உலகை அவனால் எளிதாக அடைய முடியும். கிருஷ்ணரின் பாதுகாப்பின்கீழ் இருப்பதால் கிருஷ்ண பக்தனுக்கு எந்தவொரு அச்சமும் இல்லை, ஆனால் அவரது பேச்சைக் கேட்காமல் அஹங்காரத்துடன் செயல்படுபவர்கள் அழிந்துவிடுவார்கள்.

கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட மறுப்பவர்கள், குணங்களினால் வழிநடத்தப்படுவர். அர்ஜுனன் போர் புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் விருப்பம்; அதை அவன் ஏற்க மறுத்தால்கூட அவனது சத்திரிய சுபாவத்தினால் போர் செய்யும்படி தூண்டப்படுவான். இயற்கையினால் தூண்டப்பட்டு செயல்படுவதைக் காட்டிலும், கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் செயல்படுதல் சாலச் சிறந்தது அப்போது அவன் பந்தப்பட மாட்டான்.

மிக இரகசியமான அறிவு

ஆன்மீகத் தன்னுணர்வின் இரண்டாம் நிலை, பரமாத்மாவை உணர்தல்; இது பிரம்மனை உணர்வதைக் காட்டிலும் இரகசியமானதாகும். உடல் என்பது ஜட சக்தியால் செய்யப்பட்ட ஓர் இயந்திரம் போன்றது; அந்த இயந்திரத்தில் அமர்ந்துள்ள ஜீவனுடன் இணைந்து அவனது பயணத்தை வழிநடத்துபவராக விளங்குபவர் பரமாத்மா. பரம புருஷ பகவானான கிருஷ்ணர் பரமாத்மாவின் வடிவில் எல்லாரின் இதயத்திலும் அமர்ந்துள்ளார்.

உயிர்வாழி என்னும் ஓட்டுநர் ஒரே மாதிரியாக இருந்தாலும், வெகு விரைவாகச் செல்லும் காரில் அமர்ந்திருப்பவன் மெதுவான காரில் அமர்ந்திருப்பவனைக் காட்டிலும் வேகமாக பயணம் செய்கிறான். அதுபோல, ஒரு குறிப்பிட்ட ஜீவாத்மா, தனது கடந்த கால விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் பொருட்டு, ஜட இயற்கை ஒரு குறிப்பிட்ட உடலை பரமாத்மாவின் கட்டளைப்படி தயார் செய்கின்றது. எனவே, உயிர்வாழி சுதந்திரமானவன் அல்ல என்பதையும் பகவானின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பரமாத்மாவிடம் சரணடைவதால் அவரது கருணையைப் பெற்று வைகுண்ட லோகத்தை அடைய முடியும்.

எல்லாவித தர்மங்களையும் துறந்து கிருஷ்ணரிடம் மட்டும் சரணடைய வேண்டும் என்பதே கீதையின் மிகமிக முக்கியமான சாரம்.

மிகமிக இரகசியமான அறிவு

ஆன்மீகத் தன்னுணர்வின் மூன்றாம் நிலை, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை நேரடியாக உணர்தல்; இது பரமாத்மாவை உணர்வதைக் காட்டிலும் இரகசியமானதாகும். அர்ஜுனன் தனக்கு பிரியமான நண்பன் என்பதால், தன்னுடைய அறிவுரைகளில் மிகவும் உன்னதமான, எல்லாவற்றிலும் மிகமிக இரகசியமான ஞானத்தை கிருஷ்ணர் அவனுக்குக் கூறினார். இரண்டு ஸ்லோகங்களில் அவர் கூறிய அந்த மிகமிக இரகசியமான ஞானம், கீதையின் சாரமாக விளங்குகின்றது.

மன்-மனா பவ மத்-பக்தோ  மத்-யாஜீ மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே  ப்ரதிஜானே ப்ரியோ  மே

“எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கிறேன்.” (18.65)

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய  மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ  மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

“எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடை வாயாக. உன்னை எல்லா பாவ விளைவு களிலிருந்தும் நாம் விடுவிக்கின்றேன், பயப்படாதே.” (18.66) 

கிருஷ்ணரின் பக்தனாக அவரை மட்டுமே சரணடைந்தவனாக வாழ்வதே வாழ்வின் மிகமிக உன்னதமான பக்குவநிலை. இதுவே கீதையின் சாரம்.

கீதையை பிரச்சாரம் செய்தல்

இந்த மிகமிக இரகசியமான அறிவை தவமில்லாதவர், பக்தியில்லாதவர், பக்தித் தொண்டில் ஈடுபடாதவர், மற்றும் கிருஷ்ணர் மீது பொறமை கொண்டவருக்கு ஒருபோதும் விளக்கக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் இந்த பரம இரகசியத்தை கிருஷ்ண பக்தர்களிடம் விளக்குபவர்களுக்கு தூய பக்தித் தொண்டினை கிருஷ்ணர் உறுதிப்படுத்துகின்றார்; மேலும், இறுதியில் அவர் நிச்சயமாக கிருஷ்ணரை அடைவார். அவ்வாறு பிரச்சாரம் செய்யும் பக்தனைக் காட்டிலும் தனக்கு பிரியமானவர் இந்த உலகில் வேறு யாரும் இல்லை என்றும், அவனைவிட பிரியமானவனாக யாரும் ஆக முடியாது என்றும் கூறி, கீதையை பிரச்சாரம் செய்வதன் மகிமையை கிருஷ்ணர் எடுத்துரைக்கின்றார். பகவத் கீதை என்னும் இந்த புனிதமான உரையாடலைக் கேட்டால்கூட ஒருவன் கிருஷ்ண பக்தியை அடைய முடியும். நம்பிக்கையுடனும் பொறாமையின்றியும் இதனைக் கேட்பவன், நிச்சயம் தனது பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு மங்களமான நிலையை அடைவான்.

கீதையை பொறாமையுடைய நபர்களுக்கு எடுத்துரைப்பதை கிருஷ்ணர் பகிரங்கமாகத் தடுத்துள்ளார். வேறு விதமாகக் கூறினால், கீதை என்பது பக்தர்களுக்கு மட்டுமே. ஆனால், சில சமயங்களில் பக்தர்கள் உபன்யாஸம் வழங்கும்போதும் பகவத் கீதையை விநியோகம் செய்யும்போதும், அதைப் பெறுபவர்கள் அனைவரும் பக்தர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கீதையைப் பெறுபவர்களில் கிருஷ்ணரின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உடனடி பலனை அடைவர்; நம்பிக்கையற்றவர்கள் பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பினால் படிப்படியாக நம்பிக்கையை அடைவர். எனவே, பகவத் கீதையை விநியோகம் செய்தல், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான செயல் என்பதில் சந்தேகமில்லை.

பகவத் கீதையை பிரச்சாரம் செய்யும் பக்தரைக் காட்டிலும் கிருஷ்ணருக்கு பிரியமானவர் எவரும் இல்லை. (படம்: கீதையை விநியோகிக்கும் பக்தர்)

அர்ஜுனனின் உறுதி

இவ்வாறாக, கர்ம யோகம், ஞான யோகம், தியான யோகம், பக்தி யோகம் என எல்லாவற்றையும் பதினெட்டாம் அத்தியாத்தில் எடுத்துரைத்து, தன்னிடம் சரணடையும்படி அறிவுறுத்திய கிருஷ்ணர், அதன் பின்னர், “நான் கூறியவற்றை எல்லாம் கவனத்துடன் கேட்டாயா? உனது அறியாமையும் மயக்கமும் நீங்கிவிட்டதா?” என்று அர்ஜுனனிடம் கேட்டார்.

இந்த கேள்வியின் மூலமாக முழுமுதற் கடவுள் யாரையும் எதற்காகவும் கட்டாயப்படுத்துவது இல்லை என்பதை நாம் உணரலாம். ஜீவன்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் அவர் தலையிடுவதில்லை. அவர் உபதேசங்களை அருள்கிறார்; அதனை ஏற்பதும் ஏற்காததும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம். தமது உண்மை நலனில் அக்கறை கொண்டோர், கிருஷ்ணரின் செய்தியை ஏற்கின்றனர்–சிலர் புறக்கணிக்கவும் செய்யலாம். ஆனால் அர்ஜுனனோ அதுபோன்று முட்டாளாக இருக்கவில்லை, அவன் கிருஷ்ணரின் கட்டளையை முழுமையாக ஏற்றான்.

தனது மயக்கம் நீங்கிவிட்டது என்றும், சுய நினைவை பெற்று விட்டேன் என்றும், எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு விட்டேன் என்றும் கூறிய அர்ஜுனன் கிருஷ்ணரின் ஆணையின்படி செயல்பட தயாரானான்; அதாவது போரிடத் தயாரானான். கீதையைப் படிக்கும் பலர், கீதையைக் கேட்ட பின்னர் அர்ஜுனன் தனது கடமையை செய்ததாக நினைக்கின்றனர். ஆனால் கீதையைக் கேட்ட பின்னர், அர்ஜுனன் கிருஷ்ணரின் கட்டளையைப் பின்பற்றினான் என்பதே உண்மை. கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்த அர்ஜுனன் அவரது விருப்பத்தின்படி போர் புரிய ஒப்புக் கொண்டான், அது தனது கடமை என்பதற்காக அல்ல. கடமைக்காக செயலாற்றுவதற்கும் கிருஷ்ணரை திருப்தி செய்வதற்காக செயலாற்றுவதற்கும் பெருத்த வேற்றுமை உண்டு.

சஞ்ஜயனின் இறுதி வார்த்தைகள்

கிருஷ்ணர், அர்ஜுனன் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த அந்த உன்னத உரையாடலைக் கேட்கும் பேறு பெற்ற (திருதராஷ்டிரரின் காரியதரிசியான) சஞ்ஜயன் பெரும் பரவசத்தை உணர்ந்தான். சஞ்ஜயன் வியாஸதேவரின் சீடன். தனது குருவின் கருணையாலேயே இந்த உரையாடலைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றதாக பெருமிதம் கொண்டான். அதனை மீண்டும் மீண்டும் நினைத்து ஒவ்வொரு கணமும் இன்பமடைந்தான். அர்ஜுனனுக்குக் காட்டப்பட்ட விஸ்வரூபத்தையும் சஞ்சயனால் காண முடிந்தது, அதை நினைத்து மேன்மேலும் வியப்பில் மூழ்கி இன்பமடைந்தான்.

இறுதியாக, தனது மகன்களின் வெற்றியை எதிர்பார்த்திருந்த திருதராஷ்டிரரிடம் அது சாத்தியமல்ல என்பதை சஞ்ஜயன் பின்வரும் வார்த்தைகளால் கூறினான்.

“யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாக செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.”

தனது இந்த அபிப்பிராயத்தை வழங்கியதன் மூலமாக, அர்ஜுனனின் தரப்பினர் தர்மத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்களே போரில் வெற்றி பெறுவர் என்பதையும் சஞ்ஜயன் தனது எஜமானரிடம் கூறினான். சஞ்ஜனின் அந்த இறுதி வார்த்தைகளுடன் பகவத் கீதை முடிவுறுகின்றது.

பதினெட்டாம் அத்தியாயத்தின் பதினோரு பகுதிகள்

(1) கர்ம யோகத்தின் சுருக்கம் (18.1-12)

உண்மையான சந்நியாசி செயல்களைத் துறப்பதில்லை, செயல்களின் பலன்களில் பற்றின்றி செயல்படுகிறான்.

(2) ஞான யோகத்தின் சுருக்கம் (18.13-18)

வேதாந்தத்தின் அடிப்படையிலான ஐந்து காரணங்கள்

(3) எல்லா செயல்களையும் கட்டுப்படுத்தும் குணங்கள் (18.19-40)

உலகின் அனைத்து செயல்களும் குணங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன

(4) கடமையைச் செய்து விடுதலை பெறுதல் (18.41-48)

(5) இரகசியமான அறிவு (18.49-55)

பிரம்மனை உணர்தல்

பிரம்மனை உணர்ந்தவன் பக்தியில் ஈடுபடுவான்

(6) தூய பக்தித் தொண்டில் செயல்படுதல் (18.56-60)

கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் செயல்படுவதால் குணங்களைக் கடக்கலாம்

(7) மிக இரகசியமான அறிவு (18.61-63)

பரமாத்மா பற்றிய ஞானம் – பிரம்மனைக் காட்டிலும் சிறந்தது

(8) மிகமிக இரகசியமான அறிவு (18.64-66)

கிருஷ்ண பக்தி பற்றிய ஞானம் – பரமாத்ம ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது.

மன்-மனா…; ஸர்வ தர்மான்…

(9) கீதையை பிரச்சாரம் செய்தல் (18.67-71)

பக்தி இல்லாதவர்களுக்கு கூடாது

பக்தர்களிடம் பிரச்சாரம் செய்பவன் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவன்

(10) அர்ஜுனனின் உறுதி (18.72-73)

கிருஷ்ணரின் ஆணைப்படி செயல்பட அர்ஜுனன் ஒப்புக் கொள்ளுதல்

(11) சஞ்ஜயனின் இறுதி வார்த்தைகள் (18.74-78)

குருவின் கருணையால் இந்த மாபெரும் பாக்கியம் கிட்டியது

நினைத்து நினைத்து மகிழ்ச்சி

பாண்டவர்களுக்கே வெற்றி

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment